Friday, 7 June 2019

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.



ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

1. வானமாமலை ஜீயர்
(பொன்னடிக்கால் ஜீயர்)
2. பட்டர்-பிரான் ஜீயர்
3. திருவேங்கட ராமானுஜ ஜீயர்
4. கோவில் அண்ணா
5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா
6. எறும்பியப்பா
7. அப்பிள்ளை
8. அப்புள்ளார்

ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர்.

மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம்.

அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார்.

பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள்.

பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செய்தி) அனுப்பினார். அதனால், மணவாள மாமுனிகள் பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலைக்கு அனுப்பினார்.

 பொன்னடிக்கால் ஜீயர் வானமாமலைப் பெருமாளின் மாமனார் .

பொன்னடிக்கால் ஜீயர் தாம் நாச்சியார் விக்ரஹத்தை திருமலையிலிருந்து எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்து தெய்வனாயகப் பெருமாளுக்குக் திருக்கல்யாணம் செய்து கொடுத்தார். அவரே கன்னிகாதானம் செய்து கொடுத்ததால், வானமாமலை எம்பெருமானும் “பெரியாழ்வரைப் போன்று பொன்னடிக்கால் ஜீயரும் எமது மாமனாரே” என்று அறிவித்தார்.

மாமுனிகளின் ஆணையைக் கொண்டு, பாரத தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நம் சம்ப்ரதாயத்தை வளர்த்தார், பொன்னடிக்கால் ஜீயர். இறுதியாக, தன் ஆசார்யரான மணவாள மாமுனிகளின் திருவடித்தாமரைகளைத் த்யானித்துக்கொண்டே தம் சரமத்திருமேனியை விட்டு, பரமபதத்தை அடைந்தார்.

பெருமானிடமும் ஆசார்யரிடமும் அத்தகைய அபிமானத்தை வளர்த்துக் கொள்வதற்கு பொன்னடிக்கால் ஜீயர் ஸ்வாமியின் திருவடித்தாமரைகளை ப்ரார்த்திப்போம்.
___________________.   ___________________ 

கோயில் அண்ணன் :

 மாமுனிகளின் ஆப்தசிஷ்யராகவும், அஷ்டதிக்கஜங்களில் ஒருவராகவும் ஆனவர். அவரது வாழ்க்கையில் அவரை மாமுனிகளின் திருவடிக்கு கொண்டு சேர்த்த ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்தது.

முதலியாண்டானின் பரம்பரையில் பிறந்த கோயில் அண்ணனுக்கு, மாமுனிகளின் நிழலை ஏற்பதில் விருப்பம் இல்லை. இந்தச் சம்பவம் அவரை மணவாள மாமுனிகளின் திருவடித் தாமரைகளுக்குக் கொண்டு சேர்த்தது. கோயில் அண்ணன் ஸ்ரீரங்கத்தில் பல சிஷ்யர்களுடன் வாழ்ந்து வந்தார். ஸ்ரீ பாஷ்யகாரர் (ஸ்ரீ ராமானுஜர்) தாம் கோயில் அண்ணனை மணவாள மாமுனிகளின் சிஷ்யராகச் சொன்னார். முதலியாண்டானின் திருவடிச் சம்பந்தத்தை சரி வர உபயோகிக்குமாறு கோயில் அண்ணனைப் பணித்தார் அவர்.

எம்பெருமானார் அண்ணன் ஸ்வாமியின் கனவில் வந்து “நான் ஆதிசேஷன். மறுபடியும் மணவாள மாமுனிகளாய் பிறந்திருக்கிறேன்” என்று சொன்னார். நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களும் மாமுனிகளின் சீடர்களாகி உஜ்ஜீவனம் அடைவீர்களாக!” என்றார். கனவு கலைந்ததும் மிகுந்த அதிர்ச்சியுடன் எழுந்த அண்ணன் ஸ்வாமி தனது சகோதரர்களிடம் உணர்ச்சிபூர்வமாக நடந்ததை எடுத்துரைத்தார்.

அண்ணன் ஸ்வாமி மற்ற கந்தாடை குடும்பத்து ஆசார்ய புருஷர்களோடு ஜீயர் மடத்திற்குச் சென்று மாமுனிகளை ஆஸ்ரயித்தார். மாமுனிகள் வானமாமலை (பொன்னடிக்கால்) ஜீயரை அவர்களது பஞ்ச ஸம்ஸ்காரத்திற்கு தேவையானவற்றை தயார் செய்யுமாறு பணித்தார்.

கோயில் கந்தாடை அண்ணனின் சிறப்பான வாழ்க்கையிலிருந்து சில சம்பவங்களைப் பார்த்தோம். அவர் மாமுனிகளுக்கு மிகவும் பிரியமானவர். அவரைப் போன்ற ஆசார்ய அபிமானத்தைப் பெற அவரது திருவடித் தாமரைகளைத் தொழுவோம்.
________________.   ______________. ________

பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் :

என்ற பெயர் பெற்ற ‘மோர் முன்னார்’ ஜீயர் பற்றிப் பார்ப்போம். இவர் மாமுனிகளின் அஷ்டதிக்கஜங்களில் ஒருவர். எம்பார் எவ்வாறு எம்பெருமானாரோடு இருந்தாரோ, அவ்வாறே இவரும் மாமுனிகளை விட்டுப்பிரியாமலே இருந்தார்.

அவருக்கு ஏன் மோர் முன்னார் ஐயர் என்ற பெயர் வந்தது?

சுவாரஸ்யமாக இருக்கிறதல்லவா? தினமும் அவர் மாமுனிகள் சாப்பிட்ட சேஷப் பிரசாதத்தை (மிச்சத்தை) உண்ணுவார். மாமுனிகள் சாப்பிட்ட வாழை இலையிலேயே சாப்பிடுவார். மாமுனிகள் மோர் சாதத்துடன் முடிக்கும் பொழுது பட்டர்பிரான் ஜீயர் அந்த சுவை மாறாமல் இருப்பதற்காக மோர் சாதத்திலிருந்தே சாப்பிடத் தொடங்குவாராம். அதனால் அவர் மோர் முன்னர் ஐயர் என அழைக்கப்பட்டார்.

மாமுனிகளிடத்தே கைங்கர்யங்கள் பல செய்து சாஸ்த்ரார்த்தங்கள் அனைத்தையும் அவரிடம் கற்றார். மாமுனிகள் பரமபதித்த பின் அவர் திருமலையிலேயே தங்கி பல ஜீவாத்மாக்களை உஜ்ஜீவனம் அடையச் செய்தார். ஆசார்ய நிஷ்டை மிகுந்தவராதலால், “அந்திமோபாய நிஷ்டை” என்ற நூல் எழுதினார். அந்த க்ரந்தம் நமது ஆசார்ய பரம்பரையின் ஏற்றத்தையும், நமது பூர்வாசார்யர்கள் எவ்வாறு தத்தமது ஆசார்யர்களைச் சார்ந்தே இருந்தனர் என்றும் விளக்கவல்ல க்ரந்தமாகும். பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் மாமுனிகளுக்கு மிகவும் பிரியமான சீடராவார்.
___________  _________. _______  __________
எறும்பியப்பா:

தேவராஜன் என்ற இயற்பெயருடைய எறும்பியப்பா பாடல் பெற்ற நூற்றெட்டு திருத்தலங்களில் ஒன்றான திருக்கடிகை (சோளிங்கர்) என்ற திருத்தலத்தின் அருகே இருக்கும் ‘எறும்பி’ என்ற ஊரைச் சேர்ந்தவர். இவர் கோயில் கந்தாடை அண்ணனின் உறவினர் ஆவார்.

கோயில் அண்ணன் மணவாள மாமுனிகள் திருவடிகளை அடைந்து சில காலம் சென்றபின், ஒரு நாள் திருவரங்கத்திலிருந்து ஒரு ஸ்ரீவைணவர் எறும்பி வந்திருந்தபொழுது, எறும்பியப்பாவிடம் மணவாள மாமுனிகளைப் பற்றிக் கூறினார். இதனால் இன்புற்ற எறும்பியப்பா மணவாள மாமுனிகளை நேரில் சென்று வணங்க பெரிதும் விழைந்தார். தமது தகப்பனாரிடம் உத்தரவு பெற்று அந்த ஸ்ரீ வைணவருடன் திருவரங்கம் சென்றார்.

தமது உறவினரான கோயில் அண்ணனின் திருமாளிகையை (இல்லத்தை) எறும்பியப்பா அடைந்தார். கோயில் அண்ணனின் மகிழ்ச்சி எல்லையைத் தாண்டியது. இருவரும் மணவாள மாமுனிகளை விழுந்து வணங்கினர்.

மணவாள மாமுனிகளும் எறும்பியப்பாவைக் கண்டு மிகவும் மகிழ்ந்தார். எறும்பியப்பா பண்டிதர் என்பதால் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியில் “உயர்வற உயர்நலம்” பதிகத்தைப் பற்பல வடமொழி வேதங்கள், சாத்திரங்கள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி விளக்கினார்.

‘பூர்வ தினசர்யை’,’ உத்தர தினசர்யை’ (மாமுனிகளின் நித்யகர்மாக்களைப் பற்றிய வர்ணனை) என்ற இரண்டு க்ரந்தங்களை எழுதி மாமுனிகளுக்கு அளித்தார்.

இதைச் செவியுற்ற எறும்பியப்பா மிகவும் வியந்து “இவர் தென்மொழி வேதத்தில் விற்பன்னர் என்று மட்டுமே நினைத்திருந்தோம். வடமொழி சாத்திரங்களிலும் விற்பன்னராக இருக்கின்றார்!” என்று எண்ணினார்.

இந்த மகிழ்ச்சி நிரம்பிய சந்திப்பில் ஒரு தடங்கல் ஏற்பட்டது. மணவாள மாமுனிகள் எறும்பியப்பாவை இருந்து மடத்தில் பிரசாதம் (இறைவனுக்குப் படைக்கப்பட்டுப் பின் மடத்தின் அதிபதியான மணவாள மாமுனிகள் உண்ட பின் உள்ள உணவு) உண்ணும்படி வேண்டினார்.

இது எறும்பியப்பாவின் மனதிற்கு இசையவில்லை. ‘சன்யாசிகளால் தொடப்பட்ட அன்னம், அவர்கள் தொட்ட வட்டிலில் உள்ள அன்னம் ஆகியவற்றைப் புசித்தால் சாந்திராயண விரதம் அனுட்டிக்க வேண்டும்’ என்ற பொது தருமமே எறும்பியப்பாவின் உள்ளத்தில் நிலைநின்றிருந்தது.

அடியார்கள் எந்த வருணத்தைச் சேர்ந்தவராயினும் எந்த ஆசிரமத்தைச் சேர்ந்தவராயினும் அவர்கள் உண்ட பின் மீறும் உணவை வேண்டிப் பெறவேண்டும் என்ற சிறப்பான விதி அவருக்குச் சுவைக்கவில்லை.

இதனால் மணவாள மாமுனிகளிடமும் கோயில் அண்ணனிடமும் அவருக்கு வருத்தம் விஞ்சி மடத்திலும் உண்ணவில்லை; கோயில் அண்ணனின் இல்லத்திலும் உண்ணவில்லை. தமது ஊருக்குத் திரும்பிவிட்டார்.

எறும்பியப்பா மணவாள மாமுனிகள் திருவடிகளை அடையாமல் சென்றதால், கோயில் அண்ணன் மணவாள மாமுனிகளிடம் எறும்பியப்பாவைத் தமது கருணைக்கு இலக்காக்கும்படி வேண்டினார். மணவாள மாமுனிகள் இன்னருள் எறும்பியப்பாவிற்குக் கிடைத்ததால் இறைவன் ஒரு அதிசயத்தை நடத்தினான்.

எறும்பியப்பா அவரது இல்லம் திரும்பியதும் நீராடி, அவர் அனுதினம் பூசிக்கும் பெருமானான சக்கிரவர்த்தித் திருமகனுக்குத் (இராமபிரான்) திருவாராதனம் புரிய, அப்பெருமான் வீற்றிருக்கும் திருக்கோயிலாழ்வாரைத் (பூசைப் பெட்டியைத்) திறக்க முயன்றார். பலவகையில் எவ்வளவு முறை முயன்றாலும் திறக்கமுடியாமல் போக, அதிர்ந்து நொந்த நிலையில் எறும்பியப்பா எதுவும் உண்ணாமல் உறங்கினார்.

கனவில் அவர் வணங்கும் இராமபிரான் தோன்றினார்! “நீர் மணவாள மாமுனிகளை அவமதிக்கும் வண்ணம் நடந்துகொண்டீர். நாரத முனிவர் முதலில் ஒரு தாசியின் மகனாய்ப் பிறந்தது துறவிகள் ஆனாலும் எம்மடியார்களானவரின் பிராசதம் உண்டதனாலே மறுபிறவியில் தேவமுனிவராம் நாரதராகப் பிறந்தார் அன்றோ? மணவாள மாமுனிகளிடம் நீர் மன்னிப்பு வேண்டி அவருடைய திருவடிகளை அடைந்தபின்னால் மட்டுமே உம்முடைய கைகளால் திருவாராதனத்தை (பூசையை) ஏற்றுக்கொள்வோம்," என்றார்!

திடுக்கிட்ட எறும்பியப்பாவும் தமது தகப்பனாரை வேண்டி, வெகு விரைவில் திருவரங்கம் அடைந்து, மணவாள மாமுனிகள் மடத்தின் வாசலுக்கு மிக அருகில் வர, மணவாள மாமுனிகள் திருவரங்கனுக்குப் பல்லாண்டு பாட கோயிலுக்குச் செல்ல மடத்தைவிட்டு வெளியே வர. எண்ணிய பலன் எதிரே வரக்கண்ட எறும்பியப்பா வேரற்ற மரம் போல விழுந்து வணங்கினார்.

மணவாள மாமுனிகளும் திருவுள்ளம் (மனம்) மகிழ்ந்து அவரைத் திருக்கையால் தொட்டு எழுந்திருக்கச் சொல்ல அனைவரும் மடத்தின் உள்ளே சென்றார்.

எறும்பியப்பா மிகவும் துடித்து, மணவாள மாமுனிகளின் திருவடிகளில் விழுந்து வணங்கித் தம்மை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். மணவாள மாமுனிகளும் (கோயில் அண்ணன் முன்னிலையில்) எறும்பியப்பாவைத் தமது சீடராக ஏற்றுக்கொண்டு அருளினார்.
________________________.  ________________
பட்டர்பிரான் ஜீயர்:

வ்யாஸா. “விலக்ஷண மோக்ஷ அதிகாரி நிர்ணயம்” என்பது அவரது முக்கிய க்ரந்தமாகும். எறும்பியப்பாவிற்கும் சேனாபதியாழ்வான் போன்ற அவரது சிஷ்யர்களுக்கும் நடக்கும் உரையாடல்களின் தொகுப்பாகும் இந்த க்ரந்தம்.

இந்த க்ரந்தம் நாம் ஆழ்வார் ஆசார்யர்களின் ஸ்ரீசூக்திகளைப் படித்துத் தவறாக புரிந்து கொள்வதால் வரும் குழப்பங்களை நீக்க வல்லது. எறும்பியப்பா சம்சாரத்தில் வைராக்கியம் வளர்த்துக் கொள்வதின் முக்கியத்துவத்தைச் சொல்லிக் கொடுக்கிறார். பூர்வாசார்யர்களின் ஞானம் மற்றும் அனுஷ்டானம் ஆகியவற்றில் ஈடுபாடு கொள்ளுமாறும் பணித்து நம்மை வழி நடத்துகிறார்.
__________________ ____________ __________
ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா:

பற்றித் தெரிந்துகொள்ளலாம், வாருங்கள். ஹஸ்திகிரிநாதராகப் பிறந்தவர், காஞ்சிபுரத்தில் தன் இளையபிராயத்தில் வேதாந்தாசார்யரின் ஆசீர்வாதத்தைப் பெற்றவர். அவர் பெரிய வித்வானாகி மற்ற ஸம்ப்ரதாயத்து வித்வான்களை வென்றார்.

பின்னர் அவர் திருமலையில் தங்கி திருவேங்கடமுடையானுக்கு சேவை செய்யத் தொடங்கினார். மணவாளமாமுனிகளின் பெருமைகளைக் கேட்டவர், அவருக்கு சிஷ்யராக ஆசைப்பட்டார். ஸ்ரீரங்கத்தை வந்து மாமுனிகளின் மடத்தை அடைந்தார். அப்பொழுது மாமுனிகள் காலக்ஷேபம் செய்து கொண்டிருந்தார். அதனைக் கேட்ட அண்ணா பற்பல சாஸ்திரங்களில் மாமுனிகளுக்கு இருந்த அபார ஞானத்தை புரிந்து கொண்டார். மாமுனிகளிடம் சரணடைந்து அவரது சிஷ்யரானார்.

அண்ணன், எம்பெருமானின் மீதும் மாமுனிகளின் மீதும் பல க்ரந்தங்களைச் சாதித்தார். அவற்றில் வேங்கடேச சுப்ரபாதம், வேங்கடேச ப்ரபத்தி ஆகியவற்றை தனது ஆசார்யரின் மனம் மகிழுமாறு திருவேங்கடமுடையானுக்குச் சமர்ப்பித்தார்.
______________________   __________________
அப்பிள்ளை, அப்பிள்ளார்:

அவர்கள் மணவாள மாமுனிகளின் ஆப்தசிஷ்யர்களானார்கள். வட இந்தியாவில் பல வித்வான்களை வென்றார்கள் எனத் தெரிய வருகிறது.

அவர்கள் மாமுனிகளைப் பற்றித் தெரிந்திருந்தாலும், அவரிடம் அவர்களுக்கு எந்த அபிமானமும் ஏற்படவில்லை. பின்னர் அவரது பெருமைகளை கேள்விப்பட்டு , கந்தாடை அண்ணன், எறும்பியப்பா போன்றோர் மாமுனிகளை ஆச்ரயித்தனர் என்றும் கேள்விப்பட்டனர்.

எறும்பியப்பா தாம் மாமுனிகளிடம் அவர்கள் ஆசார்ய சம்பந்தத்திற்குத் தயார் என்று சொன்னார். பொன்னடிக்கால் ஜீயர் மாமுனிகளிடம் “அவர்கள் எறும்பியப்பாவிடம் நிறைய அர்த்தங்களைக் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் சிஷ்யர்களாவதற்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது” என்றார் . அவர்களும் மாமுனிகளிடம் தங்களை ஏற்றுக்கொள்ளும் படியாக கேட்டார்கள். மாமுனிகள் பின்னர் அப்பிள்ளை அப்பிள்ளார் ஆகியோர்க்குப் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்தார்.

அப்பிள்ளாருக்கு ஜீயர் மடத்தின் ததீயாதாராதனம் போன்ற நித்யகைங்கர்யங்களில் ஈடுபடும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. கிடாம்பி ஆச்சான் எவ்வாறு எம்பெருமானாருக்கு கைங்கர்யம் செய்தாரோ, அவ்வாறே மாமுனிகளின் மடத்துக்கு அப்பிள்ளார் கைங்கர்யம் செய்தார்.

அப்பிள்ளை திருவந்தாதிகளுக்கு மாமுனிகளின் திவ்ய ஆணையின் படி வ்யாக்யானம் அருளினார். மாமுனிகளுடன் அவரது பல திவ்யப்ரபந்தத்துடன் சம்பந்தப்பட்ட கைங்கர்யங்களில் ஈடுபட்டார்.

மாமுனிகளின் இறுதிக்காலத்தில், அப்பிள்ளார் அவரிடம் தனக்கு மாமுனிகளின் அர்ச்சா விகிரஹத்தை கொடுக்குமாறு வேண்டினார். மாமுனிகள் தான் தினமும் பயன்படுத்துகிறச் சொம்பினை கொடுத்து அதிலிருந்து இரு விக்ரஹங்களைச் செய்ய சொன்னார். அப்பிள்ளாருக்கும் அப்பிள்ளைக்கும் ஆளுக்கு ஒரு விக்ரஹத்தை அவர்களின் நித்யதிருவாராதனத்திற்கு அளிக்கச் சொன்னார்.

அவர்களைப் போல ஆசார்ய அபிமானத்தை பெற நாமும் அவர்களின் திருவடித்தாமரைகளில் வேண்டுவோம்.

No comments:

Post a Comment