History

Sri Kannan Thirukkovil
(Sri Lakshmi Hayagreevar Prathana Sthalam)

முன்னுரை:

             சோழநாட்டு திவ்யதேசம் நாற்பதில் திருவரங்கம் திருக்கண்டியூர் போன்ற திவ்யதேசங்களுக்கு மத்தியிலும், காவேரி கரையின் இருமருங்கிலும் அரவணைத்துயிலும் திருவன்பில் மற்றும் திருப்பேர்நகர் போன்ற திவ்யதேசங்களின் அருகிலும், காவிரி மற்றும் வெண்ணாறு ஆகிய இரு நதிகளுக்கிடையேயும் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீகோவிந்த எதிராஜ ஜீயர் ஸ்வாமிகளாலும்,மன்னார்குடி ஸ்ரீமத் செண்டலங்கார செண்பகமன்னார் ஜீயராலும், ஸ்ரீரங்கம் ஆச்சார்யபுருஷர்களான ஸ்ரீபெரியநம்பி ஸ்வாமிகள் மற்றும் பராசரபட்டர் ஆகியோரின் வம்சாவழி சுந்தரவரதாச்சாரியர் பெரியநம்பி ஸ்வாமி, பத்ரி பட்டர் ஸ்வாமிகளாலும் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான சோழர்களின் தலைநகரான தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில்  இளங்காடு கிராமத்தில் ஸ்ரீ கண்ணன் திருக்கோயில் அமைந்துள்ளது.

வரலாறு:

              இளங்காடு வாலைவனம், இராஜகிரி மற்றும் வல்லநாடு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது.

வாலைவனம்:

வாலை என்றால் இளமை வனம் என்றால் காடு எனவே வாலைவனம் இளங்காடு என்றானது. இதற்குச்சான்றாக இவ்வூரில் சிவன் கோயிலில் இறைவன் திருநாமம் வாலைவனேஸ்வரர் ஆகும்

இராஜகேசரிபுரம்:

       இராஜகேசரி என்ற தன் பட்டத்தினை சோழ மன்னன் இவ்வூரின் பெயராக சூட்டினான் ஆகையால் இவ்வூர் இராசகேசரிபுரம் என்றானது. இது மருவி இராஜகிரி என அழைக்கப்படுகிறது. இதற்குச்சான்றாக வருவாய்த்துறையில் இன்றும் இராஜகிரி என்றே அழைக்கப்படுகின்றது.

வல்லநாடு:

       சோழமன்னர்கள் காலத்தில் இவ்வாலை வனத்தினை இங்குள்ள கள்ளர்களிடம் வீரத்திற்கு பரிசாய் கொடுத்துச்சென்றனர். இவ்வூருக்கு அருகில் தற்போது உள்ள கிராமங்களான முல்லைக்குடி,ஆற்காடு,நேமம் மற்றும் அரங்கநாதபுரம் போன்ற சிற்றூர்களுக்கு தலைநகராக இவ்வூர் வல்லநாடு என்ற பெயருடன் வழங்கி வந்துள்ளது. இதற்குச்சான்றாக தமிழ்த்திரு.ந.மு.வேங்கடசாமி அவர்களின் கள்ளர் சரித்திரம் என்ற நூலில் குறிப்பு உள்ளது.

நூறாண்டுகளுக்கு மேலாக சங்கம் வைத்து தமிழ் வளர்த்துக்கொண்டிருக்கும் இவ்வூரில் வைணவமும் சைவமும் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்தன. சைவத்தில் சமயக்குரவர் நால்வருக்கு மடங்கள் இருந்தன அதேவேளையில் வைணவத்திற்கு இராமானுஜ கூடம் இருந்தது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக இவ்வூரின் தென்திசையில் ஓடும் பிள்ளைவாய்கால் கரையில் நந்தவனம் அமைத்து, வைகாசி விசாகம் தோறும் குறைந்தது பத்து தினங்களாவது தொடர் உபன்யாசங்கள் நடத்தி தமிழையும் வைணவத்தையும் குறைவில்லாது வளர்த்து வந்தனர். மேலும் மார்கழி திங்கள் தோறும் திருப்பாவை சேவித்துக்கொண்டும் பஜனைகள் செய்துகொண்டும் திருவீதிகளில் ஸ்ரீவைணவர்கள் வலம் வந்தனர். திருவரங்கத்தில் இருந்து ஆச்சாரிய புருஷர்கள் எல்லாம் உபன்யாசம் நடத்தி பஞ்ச சமஸ்காரம் செய்து வைத்தார்கள், இவ்வாறு வைணவத்தில் வேரூன்றி இவ்வூர் விளங்கியது. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீகோவிந்த எதிராஜ ஜீயர் மடத்திற்கு சொந்தமான 42 ஏக்கர் விளை நிலம் இங்கு உள்ளது. இவ்வூரின் மக்கள் அதிகமாக திருவரங்கம் ஸ்ரீபராசரபட்டரின் சிஷ்யர்களாகவே இருந்து வருகின்றனர். மேலும்  திருவரங்கம் ஸ்ரீபெரியநம்பி திருமாளிகையாருடன் அபிமானமாகவும் இருந்து வருகின்றனர். மேலும் திருஅத்யயன உற்சவத்தில் வைகுண்ட ஏகாதசியன்று பெரியபெருமாளுக்கு இக்கிராமத்தில் உள்ள வைணவர்கள் ஸ்ரீ பராசரபட்டர் திருமாளிகையார் மூலம் அமுதுபடி செய்து வருகின்றனர். துவாதசியன்று காலை ஸ்ரீ உடையவர் சன்னதியில் நடைபெறும் திருப்பாவை கோஷ்டியின் போது ஸ்ரீஉடையவருக்கு அமுதுபடி கைங்கர்யம் செய்து, கோஷ்டியின் முடிவில் மரியாதையும் பெற்று வருகின்றனர்.மேலும் திருஅத்யயன சாற்றுமுறையின் போது நம்மாழ்வார் மோட்சம் அடைந்த திருப்பேர்நகர் திவ்யதேசத்தில் சாற்றுமுறை மண்டகபடி இக்கிராமத்தாரை சார்ந்தது. சித்திரை மாதத்தில் திருவன்பில்ஸ்ரீ சுந்தரராஜப்பெருமாள் கோயிலில் மதியம் பெருமாளுக்கு ததியன்னம் இக்கிராமத்தின் ஸ்ரீவைஷ்ணவர்கள் செய்து வந்தனர்.

திவ்யதேச கைங்கர்ய விபரங்கள்

வ.எண்

திவ்யதேசம்

கைங்கர்யம்

கைங்கர்யதாரர்கள்

1

திருவரங்கம்

 

வைகுந்த ஏகாதசி முதல் நாள் மாலை பெரியபெருமாள் அமுதுபடி சேர்த்தல்

ஸ்ரீமான்.இராஜகோபால லெக்கைய கொல்லத்தரையர்

வகையறா

(ஸ்ரீபராசரபட்டர் சிஷ்யர்கள்)

வைகுந்த ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி ஸ்ரீ உடையவர் சன்னதி காலை அமுதுபடி மற்றும் மரியாதை

ஸ்ரீமான்.இராஜகோபால லெக்கைய கொல்லத்தரையர்

வகையறா

(ஸ்ரீபராசரபட்டர்சிஷ்யர்கள்)

திருஅத்யயன உற்சவம் 20 நாட்கள் ததியாராதனை

ஸ்ரீமான்.இராஜகோபால லெக்கைய கொல்லத்தரையர்

வகையறா(ஸ்ரீபராசரபட்டர் சிஷ்யர்கள்)

2

திருப்பேர்நகர்

நம்மாழ்வார்மோட்சம் மண்டகபடி மற்றும் மரியாதை

ஸ்ரீமான்.கோவிந்தசாமி பாப்புரெட்டியார் / அரங்கராசன் கொல்லத்தரையர்

 (ஸ்ரீபராசரபட்டர் சிஷ்யர்கள்)

நித்யபடி திருமாலை

(புஷ்ப கைங்கர்யம்)

ஸ்ரீமான்.பாலகோதண்டபாணி சேதிராயர்

3

திருவன்பில்

அன்பில் ஸ்ரீசுந்தரராஜ பெருமாளுக்கு சித்திரை மாதம் முழுவதும் மதியம் தத்யோன்னம்    

ஸ்ரீமான்.ந.வேலு பாப்புரெட்டியார்

(ஸ்ரீபராசரபட்டர் சிஷ்யர்கள்)

 

4

திருக்கண்ணபுரம்

ப்ரம்மோற்சவம் ததியாராதனை

ஸ்ரீமான்.இராஜகோபால லெக்கைய கொல்லத்தரையர்

வகையறா

(ஸ்ரீ பராசரபட்டர்சிஷ்யர்கள்)

5

திருவில்லிபுத்தூர்

திருவாடிப்பூரம் ததியாராதனை

ஸ்ரீமான்.இராஜகோபால லெக்கைய கொல்லத்தரையர்

வகையறா

6

தஞ்சைமாமணிக் கோயில்

கருடசேவை ததியாராதனை

ஸ்ரீமான்.வெங்கடாச்சலம் சேதிராயர் & ஸ்ரீமான்.நல்லேந்திரன் நாட்டார்


இவர்கள் எல்லாம் வெளியில் உள்ள திவ்யதேசங்களுக்கு கைங்கர்யங்கள் செய்தாலும் ஸ்ரீமான்.பாலகோதண்டபாணி சேதிராயர் குடும்பத்தினர் இளங்காட்டிலேயே இராமானுஜ கூடம், நந்தவனம் அமைத்து அதிலே      ஸ்ரீ ஹயக்ரீவரை எழுந்தருளிச்செய்து திருவாய்மொழி கோஷ்டி என வைணவத்திற்கு பெரும் தொண்டாற்றினார்கள்.

சிலகாலம் கழித்து நந்தவனத்திலிருந்த ஸ்ரீஹயக்ரீவர் திருப்பேர்நகரில் அப்பக்குடத்தான் சன்னதிக்கு பின்புறம் எழுந்தருளினார். அங்கே ஒரு சிறிய நந்தவனமும் அமைக்கப்பட்டது,

காலம் கழிந்தது, திவ்யதேசங்களுக்கு செய்யும் கைங்கர்யம் மட்டும் நடைபெற்றது ஆனால் திவ்யபிரபந்த கோஷ்டி, வைணவர்கள் வணங்க ஒரு கோயில் கூட இல்லாத நிலை ஏற்பட்டது. ஸ்ரீவைணவர்கள் ஒன்றிணையவும் , பிரபந்தகோஷ்டிகள் உருவாகவும்,  ஆச்சாரியர்கள் மீண்டும் எழுந்தருளவும், அனைவரும் வழிபட ஒரு ஆலயம் தோன்ற இறைவன் திருவுள்ளம் கொண்டான்.

  இங்குள்ளோர்கள் மீண்டும் வைணவத்தில் தங்களை ஆட்படுத்திக்கொண்டு இங்கோர் ஆலயம் அமைத்தல் வேண்டும் என்று பகவான் சங்கல்பத்தோடு மேற்கூறிய ஸ்ரீவைணவர்களின் வாரிசுகள் 2007ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 5ஆம் நாள் திருவோண திருநட்சத்திரம் அன்று திருப்பேர்நகர் திருஅப்பக்குடத்தான் திருச்சன்னதி முன்பு இரவு எட்டு மணியளவில் இளங்காட்டை சார்ந்த எண்மரும் எம்பெருமான் திருமுன்பே அவன் திருவருளினை முன்னிட்டு “ஸ்ரீ கண்ணன் திருச்சபை” என்று ஒரு அமைப்பைத் தொடங்கினர். திருஅப்பகுடத்தான் கெளரி(பல்லி) மூலம் தன் ஆசியினை அளித்தார். திருச்சபையினர் அவன் திருவன்புடன் ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலுக்கானத் திருப்பணிகளைத் தொடங்கினர்.

ஒரு சிறிய மடம் நிறுவதான் எண்ணம் கொண்டு திருப்பணியினை துவங்கினர். ஆனால் இளங்காட்டின் அருகில் உள்ள அரங்கநாதபுரத்தில் உள்ள ஸ்ரீ இரகுநாத பட்டாச்சார் அவர்கள் திருச்சபையினருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து மடத்தினை ஆலயமாக அமைக்க வழிவகை கூறினார்.

மடம் துவங்க இருந்தது ஆலயமாக அமையப்போகின்றது என்ற அதீத மகிழ்வில் திருச்சபையினர் திருக்கோயில் அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்ய துவங்கினர். திருமதி.கமலவேணி சீனிவாசன் அவர்கள் தங்களுடைய இடத்தினை தானமாக ஆலயம் அமைக்க வழங்கினார்.

2008ஆம் ஆண்டு சித்திரை தமிழ் வருடபிறப்பு அன்று அருகில் உள்ள மாரனேரி என்ற கிராமத்தில் உள்ள திரு.ஆறுமுகம் என்ற ஆசாரியார் ஆலயம் அமைக்க மனை அளந்து கொடுத்தார். மூலஸ்தானம் அமையவிருக்கும் இடத்தில் ஒரே கருவேல மரங்களாக இருந்தன, ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக தற்போது மூலவர் எழுந்தருளி இருக்கும் இடத்தில் திருத்துழாய்ச்செடி இருந்து வழிகாட்டியது. மூலவராக கோமாதாவுடன் உள்ள கண்ணபிரான் எழுந்தருளினார்.

இளங்காட்டினை பூர்வீகமாக கொண்டு தஞ்சாவூரில் வசிக்கும் ஸ்ரீமான்.எதிராசன் சேதிராயர் அவர்கள் திருகுமாரன் ஸ்ரீமான்.குமரவேல் சேதிராயர் அவர்கள் தனது ப்ரார்த்தனைக்காக ஸ்ரீ லக்ஷ்மிஹயக்ரீவரை எழுந்தருளச்செய்ய வேண்டும் என்று கூறினார். இவ்ஊரை விட்டு சென்ற பரிமுகன் இவ்வூரார் மீதுபரிவு கொண்டு மீண்டும் இவ்வூரில் எழுந்தருளினார்.  எம்பெருமான் திருவருளாலும் ஊராரின் ஒத்துழைப்பாலும் ஸ்ரீ கண்ணன் திருக்கோயில் கட்டி முடிக்கப்பட்டது.

ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் 2009ஆம் வருடம் தைத்திங்கள் 19ஆம் நாள் திருவரங்கம் பெரியபெருமாளின் திருநட்சத்திரமான ரேவதி திருநட்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று (01.02.2009)   கடவுள்மங்களம் என்னும் திருக்குடமுழுக்கு நடைபெற்றது.

ப்ராத்தனை:

  • ü  விரும்பியதைத் தரும் காமதேனுவுடன் கண்ணபிரான் சேவை சாதிப்பதால் இங்கே தாங்கள் வேண்டுவன அனைத்தும் நிறைவேற சனிக்கிழமை தோறும் நெய் தீபமேற்றி திருத்துழாயால் அர்ச்சித்து வழிபட்டு வந்தால் விரும்பியவை கைகூடும்.
  • ü  புத்திர பாக்யம், திருமணம் கைகூட, மனை மற்றும் வீடு  ஆகியவைகள் உடனே கிட்ட இங்கு எழுந்தருளிருக்கும் ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணனை, மூலவருக்கு நடைபெறும் உரோகினி திருநட்சத்திர திருமஞ்சன காலங்களில்  வெண்ணையுடன் வழிபட்டு திருவருளைப் பெறலாம்.
  • ü  மார்கழி மாத புதன்கிழமையில் குசேலர் கண்ணபிரானுக்கு  அவல் படைத்து செல்வந்தரானது போல நீங்களும் இங்கு கண்ணபிரானுக்கு  அவல் படைத்து குபேரனாகலாம்.
  • ü  திருக்கோயில் துவங்கியதிலிருந்து அஷ்டமி திதி இக்கோயிலுடனே தொடர்ந்து வருகின்றது இங்கு அனைத்து விசேடங்களும் எதிர்பாராதவிதமாக அஷ்டமியிலேயே நடைபெறுகின்றன. ஆகவே அஷ்டமி திதியில் தவறாது அர்ச்சித்து வணங்கி அனைத்திலும் வெற்றி வாகை சூடலாம்.
  • ü  உரோகினி நட்சத்திரகாரர்கள் உரோகினி திருமஞ்சனங்களில் தவறாது கலந்து கொண்டு பகவானை சேவித்து அனைத்து தடைகளும் நீங்கப் பெறலாம்.
  • ü  கல்வி, நாவன்மை மேம்படவும் செல்வம் தழைத்தோங்கவும் மற்றும் வழக்குகளில் வெற்றி பெற இங்குள்ள ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் வரப்பிரசாதியாவார்.இவருக்கு வியாழக்கிழமையில் நெய் தீபம், ஏலக்காய் மாலை சாற்றி அர்ச்சனை செய்து பயனடைந்தோர் பலர்.
  • ü  நாக தோஷம் நீங்க கருடாழ்வாருக்கு இராகு காலங்களில் தீபமேற்றி வழிபட்டு பயன் அடையலாம்.
  • ü  பட்சி,நாக தோஷம் நீங்க ஆடி மாத கருட,நாக பஞ்சமியில் நடைபெறும் திருமஞ்சனத்தில் பங்கு கொண்டு அருள் பெறலாம்.

சிறப்புகள்:

  • v  கோமாதா இங்கு ஸ்ரீ கண்ணபிரானின் திருவடியை தனது நாக்கால் வருடி ஸ்ரீவைஷ்ணவத்தின் முக்கியமான சரணாகதி தத்துவத்தினை நமக்கு காட்டிக்கொடுக்கிறது. ஆகையால் இங்கு பஞ்ச சமஸ்காரம் செய்துகொள்வது விசேஷம்.
  • v  ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீகோவிந்த் எதிராஜ ஜீயர் ஸ்வாமிகள் வந்து வணங்கிய பெருமாள். அன்று முதல் மூலஸ்தான திருவிளக்கீடு கைங்கர்யம் இன்றளவும் இவருடையது.
  • v  வாரந்தோறும் சனிக்கிழமையில் மாலை வேதமனைத்திற்கும் வித்தாகும் திருப்பாவை கோஷ்டி சேவை நடைபெறும்.
  • v  ஆழ்வார்கள் அவதார திருநட்சத்திரங்களில் அவர்கள் அருளிச்செய்தவை பாராயணம் செய்யப்படும்.
  • v  ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளை போலவே ரேவதி தான் இக்கோயிழாழ்வான் திருநட்சத்திரமாகும்.
  • v  ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர் இங்கு பிரதிஷ்டை செய்தவுடனே இங்கு உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.மேலும் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றது.
  • v  மாசி மாதந்தோறும் ஸ்ரீஹயக்ரீவ ஹோமம் நடைபெறும்.
  • தை முதல் நாளும், ஸ்ரீஜெயந்தி அன்று வையாழி சேவை நடைபெறும்
  • v  உற்சவர்  எப்போது திருவீதி கண்டருளி மூலஸ்தானம் சேரும் முன்பு பன்னிருஆழ்வார்கள் பாசுரங்கள் ஆழ்வாருக்கு ஒன்று வீதம் கேட்டுக்கொண்டே பெருமாள் மூலஸ்தானம் சேருவார்.
  • v  நாக , பட்சி தோஷமுள்ளவர்கள் கருட,நாக பஞ்சமி திருமஞ்சனத்தில் பங்கு கொண்டு திருமணம் கைகூடியவர்கள் பலர்.

திருவிழாக்கள்:

  • தை முதல்நாள் தான் ஸ்ரீ கண்ணபிரான் சித்திர ரூபமாக திருவீதி கண்டருளினார். எனவே தைமுதல் நாள் மாலை உற்சவர் கோயிலின் கீழ வீதியில் வையாழி கண்டருளி, பாசுரங்கள் கேட்டருளி, மஹா மண்டபத்தில் ஊஞ்சல் சேவை கண்டருளுவார்.
  • சித்திரை முழுநிலவன்று மாலை ஸ்ரீ சத்யநாரயண பூசை நடைபெறும்.
  • ஸ்ரீஜெயந்தி உத்சவம் மூன்று நாள்கள் நடைபெறும்.
  • முதல்நாள் மாலை உபன்யாசங்கள்,வேதபாராயணம், இசைச்சொற்பொழிவு மற்றும் திவ்யபிரபந்த கோஷ்டி நடைபெறும்.
  • ஸ்ரீஜெயந்தியன்று காலை கோபூசையும், மஹா திருமஞ்சனம் திருவரங்கம் அருளிச்செயல் கோஷ்டியினரின் பெரியாழ்வார் திருமொழி கோஷ்டி சேவையுடன் நடைபெறும்.
  •  ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணன் மஹாமண்டபத்தில் தொட்டிலில் எழுந்தருளுவார்.
  •  மாலை உற்சவர் திருவீதி புறப்பாடு கண்டருளுவார்.
  •  வையாழி சேவை முடிந்து, உற்சவர் ஆழ்வார் பாசுரங்கள் கேட்டருளல்.
  • வாணவேடிக்கை மற்றும் உறியடித்தல்.
  •  சாற்றுமுறை
  •  மறுநாள் விடையாற்றி
  •  ஆவணி திருவோணம் ஸ்ரீஹயக்ரீவர் ஜெயந்தி சிறப்பாக நடைபெறும்.
  •   புரட்டாசி சனிக்கிழமை தோறும் திருமஞ்சனம் நடைபெறும்.
  •   மார்கழி மாதம் பரமபத வாசல் திறப்பு நடைபெறும்.
  •   நாச்சியார் திருக்கோலம் வைகுந்த ஏகாதசிக்கு முதல்நாள் நடைபெறும்.

பேருந்து வழித்தடம்:        

  • Ø  தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 51 என்ற பேருந்து மூலமாக நேரே கோயிலின் வாசலில் இறங்கி கொள்ளலாம்.
  • Ø  தஞ்சாவூரிலிருந்து கல்லணைக்கு அகரப்பேட்டை வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளிலும் இளங்காட்டுப்பாதை என்று இறங்கினால் 2கி.மீ தொலைவில் கோவிலை அடையலாம்.
  • Ø  திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 5கி.மீ தொலைவில் சிற்றுந்து மூலமாகவும் வந்து கோவிலை அடையலாம்.
  • Ø  திருச்சிராப்பள்ளியிலிருந்து கல்லணை வந்து,கல்லணையிலிருந்து அகரப்பேட்டை வழியாக தஞ்சாவூர் செல்லும் பேருந்தில் இளங்காட்டுப்பாதை என்று இறங்கினால் 2கி.மீ தொலைவில் கோயிலை அடையலாம்.







1 comment: