Skip to main content

அநத்யயன காலமும் - அத்யயன உத்ஸவமும்




ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவ ஸத் ஸம்ப்ரதாயம் உபயவேதாந்தத்தைச் சார்ந்துள்ளது. உபய என்றால் ‘சேர்ந்து’ அல்லது ‘இரண்டும் சேர்ந்து’ என்றும், அந்தம் என்றால் முடிவு அதாவது வேதத்தின் முடிவு பகுதியே வேதாந்தம் என்றும் காண்கிறோம். ஸம்ஸ்க்ருத மொழியிலுள்ள ரிக், யஜுர், ஸாம அதர்வண வேதங்களும், உபநிஷத்துகளான வேதாந்தமும் சேர்ந்தே காண்பது போல், தமிழில் த்ராவிட வேதம் என்றழைக்கப்படும் திவ்ய ப்ரபந்தமும், அவற்றின் வ்யாக்யானமாக தமிழ் வேதாந்தத்தையும் சேர்த்தே நம் பூர்வாசார்யர்கள் போற்றினார்கள். உபய வேதாந்தமும் இரண்டு கண்களாகக் கருதப்படுகின்றன. எம்பெருமானால் ‘மயர்வற மதிநலம் அருளப் பெற்ற’ ஆழ்வார்கள், அற்புதமான திவ்ய ப்ரபந்தத்தை அருளிச்செய்து, அதன் மூலம் ஸம்ஸ்க்ருத வேதத்தின் ஸாரார்த்தத்தை தெளிவாக்கி, இவ்வுலகோர் உய்ய வழி காட்டியருளினார்கள். அவர்கள் மீது நம் ஆசார்யர்களும், நாமும் ப்ரேமத்தோடே பேணி அநுஸந்திக்க இதுவே காரணமாகத் தட்டில்லை.

அத்யயனம் என்றால் கற்றுக்கொள்வது, படிப்பது, பலமுறை சொல்லிப் பார்ப்பது. வேதத்தை நாம் ஆசார்யரிடமிருந்து செவிவழி கேட்டு, மறுபடியும் மறுபடியும் சொல்லிப் பார்த்து கற்றுக் கொள்வது. பிறகு நித்யாநுஷ்டான முறையில் கற்றுக்கொண்ட வேதத்தை அனுதினமும் ஒத வேண்டும். அநத்யயனம் என்றால் அத்யயனம் செய்யாமல் இருத்தல். வருடத்தில் சில காலங்கள் நாம் வேதம் ஒதுவதில்லை. இந்த சில காலங்களில் ஸ்ம்ருதி, இதிஹாஸ புராணங்கள் முதலியவற்றைக் கற்றுக்கொள்வர்கள் . மேலும், அமாவாசை, பௌர்ணமி, ப்ரதமை போன்ற நாட்கள் வேதம் கற்றுக் கொள்ள ஏற்றவையல்ல. த்ராவிட வேதமும் ஸம்ஸ்க்ருத வேதத்திற்கு இணையாகக் கருதப்படுவதால், இதற்கும் அநத்யயன காலம் உள்ளது. த்ராவிட வேதத்திற்கு எவ்வாறு இந்த அநத்யயன காலம் ஏற்பட்டது என்பதைப் பற்றி மேலே காண்போம்.
அநத்யயன காலத்திலேயே நாம் அத்யயன உத்ஸவம் கொண்டாடுவது வழக்கம். நம்மாழ்வார் பரமபதம் சென்ற நாளை அத்யயன உத்ஸவமாக போற்றிக் கொண்டாடுவது நம் ஸம்ப்ரதாய வழக்கம். ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் இவற்றுக்கு உண்டான விசேஷ தொடர்பு பற்றி  பெரியவாச்சான் பிள்ளை ‘கலியன் அருள் பாடு’ (http://srivaishnava-literature.blogspot.in/p/kaliyan-arul-padu.html) என்ற க்ரந்தத்தில் விரிவாக விளக்கியுள்ளார். இந்த புத்தகத்தை ‘பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூக்திமாலா மலர்-1′ என்ற இதழின் மூலமாக புத்தூர் க்ருஷ்ணஸ்வாமி ஐயங்கார் வெளியிட்டார்.
இந்த க்ரந்தத்தின் விரிவுக்கஞ்சி, நம் தலைப்பிற்குத் தொடர்பான சில முக்கிய விஷயங்களை மட்டும் நாம் மேலே பார்க்கலாம்.

  • பரம்பொருள் ஸ்ரீமந்நாராயணன், தன் நிர்ஹேதுக க்ருபையால் சகல ஜீவாத்மாக்களும் ஸம்ஸாரம் என்ற கரையைக் கடக்க, பரமபதத்திலிருந்து இறங்கி வந்து அர்ச்சாவதார திருமேனியுடன் அதாவது, எளியவர்களும் பார்க்கும்படியாகவும், கைங்கர்யம் செய்ய ஹேதுவாகவும் கோயில், திருமலை, பெருமாள் கோயில் என்று ப்ரஸித்தமாக போற்றப்படும், ஸ்ரீரங்கம், திருவேங்கடம், காஞ்சிபுரம் போன்ற இடங்களில் அவதரித்து அருள் செய்கின்றான்.


  • ஆழ்வார்களுள் கடைசியாக அவதரித்த திருமங்கையாழ்வார், எம்பெருமானால் திருத்திப் பணிகொள்ளப்பட்டு, பகவானின் அர்ச்சாமூர்த்திகளில் ஆழ்ந்து, மங்களாசாசனம் செய்து, ஸ்ரீரங்கம் சென்று சேர்ந்து பல கைங்கர்யங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இருந்தமிழ் நூல் (திருவாய்மொழி) புலவன் மங்கையாளன் என்று தன்னைப் பற்றிக் கூறியவர், ஆழ்வாரின் பாசுரங்களில் மிகவும் ஆழ்ந்து அநுபவித்து, ஸேவித்து வந்தார்.



  • பொதுவாக நாம் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நக்ஷத்ரத்தில், பௌர்ணமி திதி அன்று திருக்கார்த்திகை தீபம் கொண்டாடுகின்றோம். அப்படி ஒரு திருக்கார்த்திகை அன்று, நம்பெருமாளும் ஸ்ரீதேவி பூதேவி நாச்சிமார்களும் திருமஞ்சனம் கண்டருளி, ஸ்ரீ வைஷ்ணவ பக்த கோஷ்ட்டியில் எழுந்தருளியிருக்கும் காலத்தே, திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம் என்ற ப்ரபந்தத்தை இயற்றி, எம்பெருமானுக்கு இசையோடு பாடிக் காண்பித்தார். மேலும், திருவாய்மொழியிலிருந்தும் சில பாசுரங்களை திவ்யமான இசையோடு பாடினார்.


  • இதைக் கேட்ட நம்பெருமாள் மிகவும் உகந்து, உமக்கு ஏதேனும் விருப்பம் இருந்ததாகில் கேளும் அதை நாம் என்று திருமங்கையாழ்வாரிடம் கூறினார்.
  • திருமங்கையாழ்வார் தனக்கு இரண்டு விருப்பங்கள் என்று மேலே விண்ணப்பிக்கிறார்:
    • எம்பெருமான் வைகுண்ட ஏகாதசி, அதாவது, மார்கழி மாதம் சுக்ல பக்ஷம் அன்று அத்யயன உத்ஸவம் கொண்டருளும்போது வேத பாராயணத்துடன், திருவாய்மொழியை முழுவதுமாக கேட்டு அநுபவிக்க வேண்டும்.
    • திருவாய்மொழியை உலகோர் உணர ஸம்ஸ்க்ருத வேதத்திற்கு இணையானது என்று அறிவிக்க வேண்டும்

  • எம்பெருமான் திருவுள்ளம் உகந்து இரண்டு விருப்பங்களையும் நிறைவேற்றினார்.
  • கலியன் தொடர்ந்து பாடியாதால் அவருடைய குரல்வள சிரமத்தைக் கண்ட எம்பெருமான், திருக்கார்த்திகை தீபமன்று தன் திருமேனியில் சார்த்தியது போக உள்ள எண்ணெயை அவருக்கு கொடுக்க வேண்டும் என்று உடனடியாக உத்தரவு பிறப்பித்தார்.
  • மேலும், ஆழ்வார் திருநகரியில் உள்ள அர்ச்சா ரூபத்திலுள்ள ஸ்வாமி நம்மாழ்வாருக்குத் திருமுகம் (தகவல்) அனுப்பப்பட்டு, அவர் உடனடியாக கிளம்பி ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார்.
  • திருமங்கையாழ்வார், வைகுண்ட ஏகாதசி தொடக்கமாக தொடர்ந்து பத்து நாட்கள், காலையில் வேத பாராயணமும், மாலையில் திருவாய்மொழி கோஷ்டியும் நடந்தேற வழி செய்தார். உத்ஸவத்தின் கடைசி நாளன்று, ஆழ்வார் திருவடி தொழல், அதாவது, நம்மாழ்வார் நம்பெருமாளின் திருவடியைத் தன் திருமுடியால் தீண்டும் நன்னாளை பக்தியுடன் கொண்டாடும் ஸம்ப்ரதாயத்தை அன்று ஏற்படுத்தினார். பிறகு, நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.  இப்படிச் சிலகாலம் சென்றது.
  • கலியுகத்தின் கோலம், காலப் போக்கில் திவ்ய ப்ரபந்தம் தாற்காலிகமாக மறைந்து, ஆழ்வாரும் ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளுவது நின்றது.
  • நாதமுநிகள் அவதரித்து, எம்பெருமானின் க்ருபையால், ஆழ்வாரைப் பற்றியும் திவ்ய ப்ரபந்தத்தைப் பற்றியும் அறிந்து, ஆழ்வார் திருநகரி அடைந்து, மதுரகவியாழ்வாரின் ஆசார்ய பக்தி தெள்ளத் தெளிவாகத் தோற்றும் கண்ணிநுன் சிறுத்தாம்பை கற்றுக் கொண்டு, அதன் மூலம் நம்மாழ்வாரின் பரம க்ருபையைப் பெற்று, நாலாயிரமும் ஸம்ப்ரதாய அர்த்தத்துடன் கற்று நம்மையெல்லாம் உய்வித்தார்.


  • நாதமுநிகள் தன் சிஷ்யகோடிகளுக்கு அத்யயனம் செய்து வைத்து, ஸ்ரீரங்கத்தில் மறுபடியும் அத்யயன உத்ஸவத்தை ஆரம்பித்து வைத்தார். திவ்ய ப்ரபந்தத்தின் ஏற்றத்தையும், ஆழ்வார்களின் பெருமைகளையும் நம்மாழ்வார் மூலம் அறிந்த ஸ்ரீமந்நாதமுநிகள், நம்மாழ்வார் ஸ்ரீரங்கம் எழுந்தருளும்படி வழி செய்தார்.
  • வேதத்திற்கு இணையானது திருவாய்மொழி என்ற எம்பெருமானின் நியமனத்தை அநுசரித்து, நாதமுநிகள் திருவாய்மொழிக்கும் மற்ற ப்ரபந்தங்களுக்கும் அநத்யயன காலத்தை ஏற்படுத்தினார். திவ்ய ப்ரபந்தங்களுக்கு, அநத்யயன காலம் திருக்கார்த்திகை தீப நாளிலிருந்து  தொடங்கி அத்யயன உத்ஸவ நாளுக்கு முன்பாக முடியும். அத்யயன காலம் அத்யயன உத்ஸவ முதல் நாளில் தொடங்கித் திருக்கார்த்திகை தீபமன்று முடியும்.
  • நாதமுனிகள் நின்று போயிருந்த அத்யயன உத்ஸவத்தைத் தொடங்கும் பொருட்டு, எம்பெருமானிடம் இருந்து ஆழ்வாருக்கு ஸ்ரீமுகம் (தகவல்) செல்லும்படியும், பெரிய பெருமாள் ஆழ்வார் பாசுரங்களை அத்யயன உத்ஸவத்தில் கேட்டு முடிக்கும் வரை ஸ்ரீவைஷ்ணவர்கள் அவற்றை நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழியாமல் இருக்கும்படிக்கும் ஏற்பாடு செய்தார்.
  • மேலும், திருக்கார்த்திகை தீபம் அன்று எம்பெருமானுக்குச் சாத்திய எண்ணெய்க்காப்பு சேஷத்தை நம்மாழ்வார் தொடக்கமான மற்றைய ஆழ்வார் ஆசார்ய்களுக்குச் சாத்தி அந்த சேஷத்தை ஸ்ரீவைஷ்ணவர்களுக்குக் ப்ரசாதிக்குமாறு செய்தார்.
  • நம்மாழ்வாரின் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி நான்கு வேதங்களுக்கு ஸமமாகவும் மற்றைய ஆழ்வார்களின் திவ்ய ப்ரபந்தங்கள் வேதத்தின் அங்க (சீக்ஷா, கல்பம், வ்யாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜ்யோதிஷம்) உபாங்ககளாகவும் கருதப்படுகிறது. இந்த ப்ரபந்தங்கள் திருமந்திரம், த்வயம் மற்றும் சரம் ச்லோகத்தின் அர்த்தங்களையும் விளக்குகின்றன.
  • மேலும், நாதமுனிகள் பின்வரும் நியமனங்களைச் செய்தார்.
    • அத்யயன உத்ஸவத்தின் முதல் 10 நாட்கள் (அமாவாஸ்யை தொடங்கி வைகுண்ட ஏகாதசி வரை) முதலாயிரம் (திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி, திருச்சந்த விருத்தம், திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, அமனாதிபிரான், கண்ணிநுண் சிறுத் தாம்பு), பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் ஆகியவை) சேவிக்கப்படும்.
    • வைகுண்ட ஏகாதசி அன்று, திருவாய்மொழி தொடக்கம் செய்யப்படும்.
    • 10 நாட்களும், காலையில் வேத பாராயணமும் மாலையில் திருவாய்மொழியும் (ஒரு நாளைக்கு ஒரு பத்து வீதம்) சேவிக்கப்படும். கடைசி நாள் நம்மாழ்வார் திருவடி தொழல் உயர்ந்த சாற்றுமுறையுடன் கொண்டாடப்படும்.
    • 21ஆம் நாள் இயற்பா (முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி, நான்முகன் திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்) பூர்த்தியாகச் சேவிக்கப்படும். (குறிப்பு: இராமானுச நூற்றந்தாதி நம்பெருமாளின் ஆணையின் பேரில் எம்பெருமானார் காலத்திலேயே இயற்பாவில் சேர்க்கப்பட்டது. 21ஆம் நாள் அன்று இரவு புறப்பாட்டில் சேவிக்கப்படும்).
  • மேலும், நாதமுனிகள் எப்படி ப்ராஹ்மணன் தவறாமல் வேதம் கற்றுக்கொள்கிறானோ, அது போல ப்ரபந்நர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள் திவ்ய ப்ரபன்தங்களை அவசியம் கற்றுக் கொள்ளுதல் வேண்டும் என்று நியமிக்கிறார்.
  • மேலும், மார்கழி மாதத்தில், அதிகாலையில் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளியெழுச்சியும் ஆண்டாளின் திருப்பாவையும் சேவிக்கப்படுகிறது (அநத்யயன காலமாக இருந்தாலும் இந்த இரு ப்ரபந்தங்களும் முறையே பகவானையும் பாகவதர்களையும் துயிலெழுப்புவதால், இவற்றைச் சேவிக்கத் தடை ஏதும் இல்லை).
  • இவ்வாறு உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, ஆளவந்தார், பெரிய நம்பி மற்றும் எம்பெருமானாரின் காலம் வரை சென்றது. எம்பெருமானார் காலத்தில் ஒரு முறை ஏதோ சில காரணங்களினால் நம்மாழ்வார் ஸ்ரீரங்கம் எழுந்தருள முடியவில்லை. எம்பெருமானார் நம்மாழ்வாரின் அர்ச்சா திருமேனியையும் மற்றைய ஆழ்வார்களின் திருமேனிகளையும் எல்லா திவ்ய தேசங்களிலும் ப்ரதிஷ்டை பண்ணும்படி நியமித்தார். திருமலையே எம்பெருமானின் திருவுடம்பாகக் கருதப்படுவதால் ஆழ்வார்களை திருவேங்கட மலையடிவாரத்தில் ப்ரதிஷ்டை பண்ணச் செய்தார். மேலும் அனைத்து திவ்ய தேசங்களிலும் அத்யயன உத்ஸவம் சிறப்பாகக் கொண்டாடும்படி நியமித்தார்.

  • திருக்குருகைப்பிரான் பிள்ளான் எம்பெருமானாரின் நியமனத்துடன் திருவாய்மொழிக்கு ஒரு வ்யாக்யானம் எழுதி அவரிடம் சமர்ப்பிக்கிறார். எம்பெருமானார் மிகவும் உகந்து அனைவரும் ஸ்ரீ பாஷ்யத்துடன் இதையும் கற்கும்படி நியமிக்கிறார்.
  • எம்பெருமானார் ஸ்ரீரங்கத்தில் பலகாலம் ஸ்ரீவைஷ்நவர்களின் பெருந்திரளில் வாழ்ந்தார். அவர்களுக்கு ஸாரார்த்தங்களை விளக்கிக்கொண்டும் பெரிய பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்து கொண்டும் வாழ்ந்தார்.எம்பெருமானார் பரமபதத்துக்கு எழுந்தருளிய பிறகு, ஆழ்வானின் திருக்குமாரரும் பெரிய பெருமாள் மற்றும் பெரிய பிராட்டியின் ஸ்வீகார புத்ரரான பட்டர், எம்பெருமானாரின் அபிமான புத்ரரான பிள்ளான், அருளாளப் பெருமாள் எம்பெருமானார், எம்பார், கந்தாடை ஆந்டான், முதலியவர்கள் கூடி எம்பெருமானின் ஆணைக்கேற்ப எம்பெருமானாரின் அர்ச்சா விக்ரஹத்தை அனைத்துலகின் வாழ்ச்சிக்காக ஏற்படுத்தி வைத்தனர். இது போல அனைத்து திவ்ய தேசங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டது.
    நாதமுனிகள் கண்ணிநுண் சிறுத்தாம்பின் ஏற்றத்தை அறிந்து 4000 திய்வ ப்ரபந்தத்தில் அதைச் சேர்த்தார்போல் எம்பெருமானும் இராமானுச நூற்றந்தாதியை 4000 திவ்ய ப்ரபந்தத்தில் சேர்க்கும்படி ஆணையிடுகிறான். எப்படி ப்ராஹ்மணன் அநுதினமும் காயத்ரி ஜபம் செய்வது அவசியமோ அது போல ப்ரபந்நன் அநுதினமும் ப்ரபந்ந காயத்ரி என்று போற்றப்படும் இராமானுச நூற்றந்தாதியை ஒரு முறையேனும் சொல்லுதல் அவசியம்.
  • இவ்வாறு பிற்பட்ட ஆசார்யர்கள் எம்பெருமானார் உரைத்த ஸாரார்த்தங்களை அனைத்துலகும் வாழ உபதேசித்துப் போந்தார்கள். இவ்வாறாக கலியன் அருள் பாடு என்னும் க்ரந்தம் முடிவடைகிறது.
பின்பு, பராசர பட்டர் திருநாராயணபுரத்துக்குச் சென்று வேதாந்தியிடம் வாதம் செய்து, வாதத்தில் ஜெயித்து அவரை சிஷ்யராக ஏற்றுக் கொள்கிறார். வேதாந்தியும் பட்டரைத் தன் ஆசார்யனாக ஏற்றுக்கொண்டு சந்யாஸம் பெற்றுக் கொள்கிறார். பிற்காலத்தில் நஞ்ஜீயர் என்று ப்ரசித்தமாக அழைக்கப்படுகிறார். பட்டர் வேதாந்தியை வாதத்தில் வென்று அத்யயன உத்ஸவத்தின் முதல் நாள் ஸ்ரீரங்கத்தை அடைகிறார். பெரிய பெருமாள் பட்டரிடம் வாதத்தைப் பற்றி விசாரிக்க பட்டர் வேதாந்தியை திருமங்கை ஆழ்வாரின் திருநெடுந்தாண்டகம் திவ்ய ப்ரபந்தத்தை வைத்து வென்றேன் என்கிறார். பெரிய பெருமாள் மிகவும் திருவுள்ளம் உகந்து பட்டரை மிகவும் பெருமைப்படுத்தவேண்டும் என்று நியமிக்கிறார். மேலும் ஸ்ரீரங்கத்தில் அத்யயன உத்ஸவம் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்க வேண்டும் என்று நியமிக்கிறார். இவ்வாறு நம் ஸத் ஸம்ப்ரதாயத்தின் அத்யயன உத்ஸவத்தைச் சுருக்கமாக அனுபவித்தோம்.
 

பொதுவாக, பல திவ்ய தேசங்களில் அத்யயன உத்ஸவம் 21 நாட்களாகக் கொண்டாடப் படுகிறது.

  • எம்பெருமான், நாச்சியார்கள், ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யர்கள் 21 நாட்களும் பெரிய ஓலக்கத்தில் (சபையில்) எழுந்தருளியிருப்பர்கள்.
    • எம்பெருமானும் நாச்சியார்களும் ஓலக்கத்தின் நடுவில் வீற்றிருப்பர்கள். ஆழ்வார்களும் ஆசார்யர்களும் எம்பெருமானுக்கு இரு புறமும் எதிரெதிராக வீற்றிருப்பர்கள்.
    • பல திவ்ய தேசங்களில், நம்மாழ்வார் ஆழ்வார் கோஷ்டிக்கு முதல்வராக இருப்பார். அவருடன் திருமங்கை ஆழ்வாரும் எம்பெருமானாரும் எழுந்தருளியிருப்பர்கள் (ஸ்ரீவைஷ்ணவ ஸத் ஸம்ப்ரதாயத்திற்கு இவர்கள் செய்த பேருபகாரத்தை நினைவில் கொண்டு இவர்கள் முதலில் எழுந்தருளிருப்பர்). மற்றைய ஆழ்வார் ஆசார்யர்கள் தொடர்ந்து எழுந்தருளிருப்பர்.
    • வானமாமலை திருக்குறுங்குடி போன்ற சில திவ்ய தேசங்களி நம்மாழ்வாருக்குத் தனியாக அர்ச்சா விக்ரஹம் இல்லாததால் கலியனும் எம்பெருமானாரும் கொண்டாட்டங்களை முன்னின்று நடத்திப் போவர்கள்.
    • ஸ்ரீபெரும்பூதூரில் எம்பெருமானாருக்கு முக்கியத்துவம் உள்ளதாலும், ஆண்டாள் நாச்சியார் எம்பெருமானாரை “நம் கோயில் அண்ணர்” என்று அழைத்துத் தன் அண்ணனாக ஏற்றுக்கொண்டதாலும், அவர் எம்பெருமானாருக்கு அடுத்து ஆழ்வார் கோஷ்டியில் முதன்மையாக எழுந்தருளுகிறார்.
    • வைகுண்ட ஏகாதசி தொடங்கி மாலை வேளையில் பரமபத வாசல் திறக்கப்படும். நம்மாழ்வார் பரமபத வாசலுக்கு வெளிப்புறம் நின்று, வாசல் திறக்கும்போது எம்பெருமானுக்கு மங்களாசாஸனம் செய்து பின்பு எம்பெருமானுடன் புறப்பாடு கண்டருள்வர். சில திவ்ய தேசங்களில், மற்றைய ஆழ்வார் ஆசார்யர்களும் பரமபத வாசல் சேவைக்கு எழுந்தருளுகின்றனர்.
  • பகல் பத்து மற்றும் திருமொழித் திருநாள் எனப்படும் முதல் 10 நாட்கள் முதலாயிரமும் பெரிய திருமொழியும் சேவிக்கப்படும். திருவீதிப் புறப்பாடு இருக்கும் திவ்ய தேசங்களில் புறப்பாட்டின்போது உபதேச ரத்தின மாலை சேவிக்கப்படும்.
  • வைகுண்ட ஏகாதசி அன்று தொடங்கி 10 நாட்கள் இரவில் திருவாய்மொழி சேவிக்கப்படும். இந்தப் பத்து நாட்கள் இராப்பத்து என்றும் திருவாய்மொழித் திருநாள் என்றும் போற்றப்படுகிறது.
  • இருபதாவது நாள் ஆழ்வார் திருவடித் தொழல் மற்றும் திருவாய்மொழி சாற்றுமுறையுடன் இனிதே முடியும். திருவடித் தொழலின் போது நம்மாழ்வார் அர்ச்சகர்கள் நம்மாழ்வாரைக் கைத்தலமாக எம்பெருமானிடம் எழுந்தருளப்பண்ணிக்கொண்டு சென்று எம்பெருமானின் திருவடியில் ஆழ்வாரின் திருமுடி படும்படிச் சேர்த்து விடுவர். பின்பு ஆழ்வார் திருத்துழாயால் முழுவதும் மூடப்படுவர்.
  • 21ஆம் நாள்
    • மாலை – இயற்பா சேவிக்கப்படும்
    • இரவு – இராமானுச நூற்றந்தாதி கோஷ்டி மற்றும் இயல் சாற்றுடன் வீதி புறப்பாடு.
  • 22ஆம் நாள் – திருப்பல்லாண்டு தொடக்கம். இன்று முதல் ஸந்நிதிகளில் 4000 திவ்ய ப்ரபந்தம் சேவித்தல் ஆரம்பம்.

ஓரொரு திவ்ய தேசங்களில் அத்யயன உத்ஸவதில் சில விசேஷ அம்ஸங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை இப்பொது காண்போம்.

  • ஸ்ரீரங்கம்
    • 22 நாட்கள் கொண்டாட்டம் – பகல் பத்துக்கு முந்தைய நாள் திருநெடுந்தாண்டகம் சேவிக்கப்படும். தொடர்ந்து 21 நாட்கள் அத்யயன உத்ஸவம்.
    • பாசுரங்களை அரையர்களே அபிநயத்துடன் நாட்டிய நாடகம் போல நம்பெருமாள், நாச்சியார்கள் மற்றும் ஆழ்வார் ஆசார்யர்களின் ஓலக்கத்தில் சேவிக்கின்றனர்.
    • அரையர் ஸேவையின் போது நம்பெருமாளும் நாச்சியார்களும் உயர்ந்த மண்டபத்தில் வீற்றிருக்க ஆழ்வார் ஆசார்யர்கள் நம்பெருமாளை நோக்கிக் கொண்டு எழுந்தருளியிருப்பர்கள்.
  • ஆழ்வார் திருநகரி
    • அபிநயத்துடன் அரையர் சேவை. முதல் நாள் அரையர் சேவிப்பதை மறுநாள் அத்யாபகர்கள் கோஷ்டியாகச் சேவிப்பர்கள்.
    • பகல் பத்தில் 10ஆம் நாள் வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய தசமி அன்று நம்மாழ்வாரும் எம்பெருமானாரும் சேர்ந்து அற்புதமான ஒரு சேவை – நம்மாழ்வார் அழகிய மணவாளனாக சயன திருக்கோலத்திலும் எம்பெருமானார் ஸ்ரீ ரங்கநாச்சியாராக ஆழ்வாருடைய திருவடித் தாமரைகளிலும் எழுந்தருளியிருப்பர்.

நம்மாழ்வார் – எம்பெருமானார்

    • இராப்பத்து சாற்றுமுறை அன்று அனைத்து திவ்ய தேசங்களிலும் திருவடித் தொழல் அதாவது நம்மாழ்வார் எம்பெருமானின் திருவடித் தாமரைகளில் சென்று சேர்தல். ஆனால் இங்கு மட்டும் திருமுடித் தொழல் அதாவது அர்ச்சகர்கள் எம்பெருமானைக் கைத்தலமாக எழுந்தருளப் பண்ணிக்கொண்டு சென்று ஆழ்வாரின் திருமுடியில் எம்பெருமானின் திருவடியைப் பதிப்பர்கள். கண்கொள்ளாக் காட்சியான இது நம் ஸம்ப்ரதாயத்திற்கு உயிரான பரகத ஸ்வீகாரத்தை நேரே தெளிவாக உணர்த்துகிறது. பரகத ஸ்வீகாரமாவது எம்பெருமான் தான் விரும்பி ஜீவாத்மாவை தன்னுடன் சேர்த்துக் கொள்வது.
    • 22 நாட்கள் கொண்டாட்டம் – கடைசி நாளான்று “வீடு படைத் திருமஞ்சனம்” நடக்கும்.
    • இந்த நாளன்று, பொலிந்து நின்ற பிரான் நம்மாழ்வாரை அனைத்துலகின் உஜ்ஜீவனத்திற்காக லீலா விபூதியிலேயே இருக்குமாறு பணிக்கிறான்.
    • இதன் பின்பு வரும் முதல் திருவிசாகத்தன்று திருப்பல்லாண்டு தொடக்கம் செய்யப்படும்.
  • திருத்துலைவில்லிமங்கலம்
    • நம்மாழ்வார் திருவாய்மொழியில் தேவபிரான் எம்பெருமானே தனக்குத் தன்தை மற்றும் தாய் என்று கூறுகிறார். அவருக்கு தேவபிரானிடம் மிகுன்த ஈடுபாடு. முற்காலங்களில் ஆழ்வார் ஸ்ரீரங்கத்தில் இருந்து திரும்பும்போது துலைவில்லிமங்கலத்தை அடைந்து மாசி விசாகத்தின் வரை இங்கே இருந்துவிட்டு பின்பு ஆழ்வார் திருநகரிக்குத் திரும்புவர் என்று சொல்லப்படுகிறது.
    • இதன் நினைவாக, இன்றளவும் நம்மாழ்வார் மாசி விசாகத்தன்று (மாசி மாதம் 13 நாட்கள் ஆழ்வார் திருநகரியில் கொண்டடப்படும் உத்ஸவத்தின் இறுதியில்) இங்கே எழுந்தருளுகிறார். எம்பெருமானுடன் அன்று முழுதும் கூடி இருந்து திருமஞ்சனம், கோஷ்டி முதலியவை கண்டருளி மாலையில் எம்பெருமானிடம் பிரியா விடை பெற்றுச் செல்கிறார்.
    • இதன் மறுநாள் இங்கே திருப்பல்லாண்டு தொடக்கம் (அது வரை இங்கு அநத்யயன காலமே).
  • திருவாலி/திருநகரி மற்றும் திருநாங்கூர் திவ்ய தேசங்கள்
    • பொதுவாக திருக்கார்த்திகை தீபமும் கலியன் திருநக்ஷத்ரமான கார்திகையில் கார்திகையும் சேர்ந்தே வரும். ஆனால் சில சமயங்களில் கார்த்திகை மாதத்தில் இரு முறை கார்த்திகை நக்ஷத்ரம் இருந்தால் இரண்டாவது கார்த்திகையே திருமங்கை ஆழ்வார் திருநக்ஷத்ரமாகக் கொண்டாடப்படும். மற்றைய திவ்ய தேசங்களில் திருக்கார்த்திகை தீபத்தன்று அநத்யயன காலம் தொடங்கினாலும், இங்கே திருமங்கை ஆழ்வார் திருநக்ஷத்ரம் முடிந்த பிறகே தொடங்கப்படுகிறது. ஆழ்வார் திருநக்ஷத்ரத்துக்கு 4000 திவ்ய ப்ரபந்தம் சேவித்து சிறப்பாகக் கொண்டாடவே இந்த ஏற்பாடு.
  • திருமெய்யம்
    • மற்றைய திவ்ய தேசங்களில் நடக்கும் 21 நாட்கள் கொண்டாட்டத்துக்கு மேலாக, பகல் பத்தின் கடைசி நாள் கலியன் திருவதித் தொழல் உத்ஸவமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
  • ஸ்ரீபெரும்பூதூர்
    • குரு புஷ்யம் தை மாதம் பூசம் அன்று முடியும்படி 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீபெரும்பூதூரில் எம்பெருமானார் அர்ச்சா திருமேனி ப்ரதிஷ்டை பண்ணப்பட்ட நாளே இது. இது இங்கே முக்கியத்துவம் வாய்ந்தது. அத்யயன உத்ஸவமும் குரு புஷ்யமும் சேர்ந்து வந்தால் அத்யயன உத்ஸவம் முன்னதாகக் கொண்டாடப்படும்.
  • திருச்சேறை, திருமழிசை முதலிய திவ்ய தேசஙளிலும் ப்ரஹ்மோத்ஸவமோ ஆழ்வார் உத்ஸவமோ அத்யயன உத்ஸவ சமயத்தில் வந்தால் அத்யயன உத்ஸவம் முன்னதாகக் கொண்டாடப்படும்.

பொதுவாக கோயில்களில் இயற்பா சாற்றுமுறைக்கு மறுநாள் திருப்பல்லாண்டு சேவித்து வழக்கமான திவ்ய ப்ரபந்த சேவாகாலம் தொடங்கப்படும். பல திவ்ய தேசங்களில் மேலும் பல விசேஷ அநுஷ்டானங்கள் காணப்படுகிறது.
க்ருஹங்களில் அநத்யயன காலத்தில் திவ்ய ப்ரபந்த சேவாகால க்ரமம் திவ்ய தேசத்துக்கேற்ப மாறுபடுகிறது.

  • பல திவ்யதேசங்களில், க்ருஹங்களின் சேவாகாலம் கோயில் க்ரமத்தையே பின்பற்றுகிறது. அதாவது கோயில்களில் அநத்யயன காலம் தொடங்கிய பின் க்ருஹங்களில் திவ்ய ப்ரபந்தம் சேவிக்கப்ப் படுவதில்லை. கோயில்களில் என்று திருப்பல்லாண்டு தொடக்கம் ஆகிறதோ அன்றிலிருந்து க்ருஹங்களிலும் மீண்டும் திவ்ய ப்ரபந்தம் சேவிக்கப் படுகிறது.
  • கூரத்தாழ்வான் திருநக்ஷத்ரமான தை ஹஸ்தத்துக்குப் பிறகே க்ருஹங்களில் திய்வ ப்ரபந்தம் சேவிக்கப் படவேண்டும் என்று சிலர் கருதுகின்றனர். இதன் காரணம் – முற்காலங்களில் ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் ஸ்ரீரங்கத்தில் சென்று நம்பெருமாள் மற்றும் ஆழ்வாருடன் இருந்து அத்யயன உத்ஸவத்தைச் சேவித்து வருவர். உத்ஸவம் முடிந்து அவர்கள் தங்கள் க்ருஹங்களுக்குத் திரும்ப பல நாட்கள் ஆகும். இதன் நினைவாக, க்ருஹங்களில் தை ஹஸ்தத்தன்று திவ்ய ப்ரபந்தம் சேவித்தல் தொடக்கம் என்ற ஏற்பாடு.
அவரவர் தங்கள் தங்கள் பெரியோர்களிடம் கேட்டறிந்து தங்கள் திவ்ய தேசம் மற்றும் குடும்ப வழக்கத்தை நடைமுறைப் படுத்துதல் சாலச் சிறந்தது.
அநத்யயன காலத்தில் என்ன கற்றுக் கொள்ள மற்றும் சேவிக்க?
சில உபயோகமான குறிப்புகள்:
  • பொதுவாக கோயில்களில் அநத்யயன காலத்தில், திருப்பாவைக்கு பதில் உபதேச ரத்தின மாலையும் கோயில் திருவாய்மொழி மாற்றும் இராமானுச நூற்றந்தாதிக்கு பதில் திருவாய்மொழி நூற்றந்தாதியும் சேவிக்கபடும்.
  • மார்கழி மாதத்தில், திருப்பள்ளியெழுச்சி மற்றும் திருப்பாவை சேவித்தல் தொடரும்.
  • கோயில்களில், அத்யயன உத்ஸவத்தின் போது, 4000 பாசுரங்களும் ஒரு முறை பூர்த்தியாகச் சேவிக்கப்படும்.
  • க்ருஹங்களில் அநத்யயன காலத்தில் திருவாராதனத்தின்போது, 4000 திவ்ய ப்ரபந்த பாசுரங்கள் சேவிப்பதில்லை (மார்கழி மாதத்தில் கோயில்களில் போல திருப்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சி சேவிக்கலாம்).   
    • கோயில் ஆழ்வார் திருக்காப்பு நீக்கும்போது (திறக்கும் போது), ஜிதந்தே ஸ்தோத்ரம் (முதல் 2 ச்லோகங்கள்), “கௌஸல்யா ஸுப்ரஜா ராம” ச்லோகம், “கூர்மாதீந்” ச்லோகம் (இவை எல்லா காலங்களிலும் சேவிக்கப்படுகிறது) ஆகியவை சேவித்துக் கொண்டு திருக்காப்பு நீக்கவும். கதவைத் திறக்கும்போது ஆழ்வார்கள் பாசுரங்களை வாயால் சொல்லுவதில்லையே ஆயினும் மனதால் நினைக்கலாம் த்யானிக்கலாம்.
    • திருமஞ்சன காலங்களில், பொதுவாக ஸூக்தங்களை சேவித்தபின் “வெண்ணெய் அளைந்த குணுங்கும்” பதிகமும் சில பாசுரங்களும் சேவிப்பது வழக்கம். ஆனால் அநத்யயன காலத்தில் ஸூக்தங்களுடன் நிறுத்திக்கொள்ளவும்.
    • பொதுவாக மந்த்ர புஷ்பத்தின்போது, “சென்றால் குடையாம்” பாசுரம் சேவிக்கப்படும். அநத்யயன காலத்தில், “எம்பெருமானார் தரிசனம் என்றே” பாசுரம் சேவிக்கப்படும்.
    • பொதுவாக சாற்றுமுறையில், “சிற்றம் சிறுகாலே“, “வங்கக் கடல்” மற்றும் “பல்லாண்டு பல்லாண்டு” பாசுரங்கள் சேவிக்கப்படும். அநத்யயன காலத்தில், உபதேச ரத்தின மாலை மற்றும் திருவாய்மொழி நூற்றந்தாதி சாற்று பாசுரங்களைச் சேவிக்கவும். தொடர்ந்து “ஸர்வ தேச ஸதா காலே…” என்று தொடங்கி வாழி திருநாமங்கள் வரை சேவிக்கவும்.    
  • பூர்வாசார்ய ஸ்தோத்ர க்ரந்தங்களையும் அவர்களின் தமிழ் ப்ரபந்தங்களான ஞான ஸாரம், ப்ரமேய ஸாரம், ஸப்த காதை, உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி முதலியவைகளையும் கற்கவும் சேவிக்கவும் நல்ல சமயம். மேலும் பூர்வாசார்யர்களின் தனியன்கள் மற்றும் வாழி திருநாமங்களை கற்கவும் சேவிக்கவும் நல்ல சமயம்.
  • ரஹஸ்ய க்ரந்தங்களை கற்றுத் தேறவும் இது நல்ல சமயம்.
அநத்யயன காலத்தில் அருளிச் செயல் அந்வயம் இல்லாவிடினும் ஆனந்தப்படக்கூடிய (பகவத்) விஷயங்கள் பல உள்ளன. சிலவற்றை இங்கே காண்போம்:
  • அனைவராலும் எதிர்பார்க்கப்படும் அதி அற்புதமான அத்யயன உத்ஸவம் – இதுவே ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத் தலையான உத்ஸவம் – இருபதுக்கும் மேற்பட்ட அற்புதமான பகவத் அனுபவம் நிறைந்த நாட்கள்
  • அனைவராலும் எதிர்பார்க்கப்படும் அழகான மார்கழி மாதம் மற்றும் ஆண்டாள் நாச்சியாரின் அருளால் கிடைக்கும் திருப்பாவை அனுபவம்
  • சாஸ்த்ரத்தின் ஸாரார்த்தங்களை மிக எளிமையாக வெளியிடும் பூர்வாசார்யர்களின் ஸம்ஸ்க்ருத மற்றும் தமிழ் ஸ்ரீ ஸூக்திகளை கற்றுத் தேற ஒரு அரிய வாய்ப்பு.
இவ்வாறு பல ஏற்றங்களை உடைய அநத்யயன காலம் மற்றும் அத்யயன உத்ஸவத்தின் பெருமைகளை இந்தக் கட்டுரையில் அனுபவித்தோம்.
நம்மாழ்வாரின் பெருமைகளும் திருவாய்மொழியின் பெருமைகளும் உச்சத்தை எட்டியது மணவாள மாமுனிகளின் அவதரித்த பின்னே. திவ்ய ப்ரபந்தங்களில் உள்ள ஸாரமான அர்த்தங்களைப் பிறர்க்கு எடுத்து உரைத்து அனைவரையும் உஜ்ஜீவிப்பதிலேயே தன்னுடைய பொழுதைப் போக்கினார் மாமுனிகள். அது மட்டுமல்லாமல் ஆழ்வார் ஆசார்யர்களின் உயர்ந்த ஸ்ரீ ஸூக்திகளின் படி நடந்து ஒரு ஸ்ரீவைஷ்ணவன் எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்தும் காட்டியுள்ளார். இதனாலேயே நம்பெருமாள் தானே மாமுனிகளின் உயர்ந்த நிலையை அங்கீகரித்து, திருவாய்மொழிக்கு உண்டான நம்பிள்ளை ஈடு மற்றும் இதர வ்யாக்யானங்களையும் கொண்டு பகவத் விஷய காலக்ஷேபம் தன்னுடைய ஸந்நிதியின் முன்னே ஒரு வருட காலம் செய்யும்படி மாமுனிகளை நியமித்தார். காலக்ஷேப சாற்றுமுறை தினமான சிறந்த ஆனித் திருமூலத்தன்று, ஸ்ரீ ரங்கநாதன் ஒரு பாலகனாகத் தோன்றி மிக ஆச்சர்யமான “ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்” தனியனைச் சமர்ப்பித்து மாமுனிகளைத் தன் ஆசார்யனாக ஏற்றுக் கொண்டான்.


நாமும் விரைவில் தொடங்க இருக்கும் இந்த உயர்ந்த கொண்டாட்டங்களுக்கு நம்மைத் தயார் செய்து கொள்ளுவோம்.

Comments

Popular posts from this blog

Applications Open for Nithyapadi Thiruvarathanam Sponsors 🙏

🔹 Just one month of seva – once a year Daily two-time Aradhanam will be performed in all 6 sanctums of Sri Kannapiran Temple. 🔆 *Regular Weekly Services*   _Fridays – Thayar Tirumanjanam (Abhishekam)_   _Saturdays – Anjaneyar Tirumanjanam & Evening Thiruppavai Goshti_  🌟 *Monthly Star Abhishekams*   _Rohini – Rajagopala Swami_   _Uthiram – Mahalakshmi_   _Thiruvonam – Lakshmi Hayagreevar_   _Moolam – Anjaneyar_   _Sankatahara Chaturthi – Vijaya Ganapathi Tirumanjanam_  🙏 *Special Blessings for Sponsors*  ✔ *_Archana & Sankalpam in your name during every Tirumanjanam_* ✔ *Temple Prasadam will be sent during the annual Uriyadi festival & Homams*  👉 One month of offering… brings divine grace throughout the year! 📿 *Those who uphold Kannapiran*… *Kannapiran will uphold their family for a lifetime*. 📌 *For more details, contact*: 📞 9500264545 / 9942604383 / 8056901601 📌 ...

ஸ்ரீ ஆஞ்சநேய ஜெயந்தி மஹோത്സவ அழைப்பிதழ்

ஸ்ரீ கண்ணன் திருவருளாலும் ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமான் அனுக்ரஹத்தாலும் இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் புனிதமான ஸ்ரீ ஆஞ்சநேய ஜெயந்தி மஹோৎসவம் கீழ்க்கண்டவாறு நடைபெறுகிறது. 📅 நாள்: 20.12.2025, சனிக்கிழமை ⏰ நேரம்: காலை 7.00 மணி முதல் விசேஷ வழிபாடுகள்: ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஸ்நபன அபிஷேகம் ஸ்ரீ ஹனுமான் சாலிசா பாராயணம் ஸஹஸ்ரநாம அர்ச்சனை பக்தர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு வீர விஸ்வாச ஸ்வரூபியான ஸ்ரீ ஆஞ்சநேயரின் அபார கருணை கடாக்ஷத்தை பெற்று உய்யுமாறு பணிவுடன் அழைக்கிறோம். 🙏 இந்த மஹோৎসவம் சிறப்புற நடைபெற பக்தர்கள் தங்களால் இயன்ற கைங்கர்யங்களை செய்யவும் மிகவும் அவசியமாகும். இயன்ற வகையில் அனைவரும் பங்கெடுத்து திருப்பணியில் இணைந்து அருள்பெற வேண்டுகிறோம். நன்கொடை அல்லது ஏதேனும் உபயம் குறித்த தகவல்கள் பெற அழைக்கவும் 8056901601 9500264545 9942604383 ஸர்வே ஜனாஃ ஸுகினோ பவந்து ஜெய் ஸ்ரீ ராம் | ஜெய் ஹனுமான் 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 With the blessings of Sri Kannanapiran, Sri Hanuman Jayanti Festival is being celebrated at Elangadu Sri Kannan Thirukkovil 📅 Date: Saturday, 20 December 202...

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...