Sunday 23 February 2014

ஸ்ரீஹயக்ரீவரின் திருவிளையாடல்


தேசிகனின் உள்ளத்தில் பெரிய பெருமாளைச் சேவித்து உள்ளம் கலக்க வேண்டும் என்ற உத்வேகம் உண்டாயிற்று, காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் விடை கொண்டு, ஸ்ரீ ரங்கம் நோக்கி ஸ்வாமி பயணப்பட்டுச் செல்லும்போது, திருக்கோவிலூர் அருகே கடலை வியாபாரம் செய்யும் ஒரு வைசியரின் இல்லத்தின் வாசல் திண்ணையிலே ஓரிரவு தங்கும் படியாயிற்று.

அன்று திருவமுது செய்ய ஒன்றும் இல்லாதபடியால், தம் உபாசனா மூர்த்திக்கு தூய நீரை நைவேத்யமாக நிவேத்தித்து விட்டு தானும் உபவாசத்துடன் சற்றுக் கண்ணயர்ந்தார். இரவில் ஸ்ரீஹயக்ரீவரின் திருவிளையாடலாக ஒரு வெள்ளைக் குதிரை, கடலை வியாபாரம் செய்து வரும் அந்த வீட்டுக்காரருடைய வயலில் இறங்கி துவம்சம் செய்ய ஆரம்பித்தது.

காவலர்கள் எவ்வளவு விரட்டியும் அது போகவில்லை. வீட்டுக்காரர் தனது வீட்டின் திண்ணையில் படுத்திருக்கும் தேசாந்திரியின் குதிரையாக இது இருக்குமோவென்று நினைத்து தேசிகனை எழுப்பி, "உங்கள் குதிரையைச் சற்றுக் கட்டிப் போடுங்கள்'' எனக் கேட்டுக் கொண்டார்.

ஸ்வாமியும் உள்ளதுணர்ந்து சிறிது பால் கொண்டு வரச் சொல்லி தமது மூல ஆராதனை மூர்த்தியான ஸ்ரீஹயக்ரீவருக்கு நிவேதனம் செய்த பிராத்தனை செய்ய, அதுவரை வயலில் விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குதிரை மாயமாய் மறைந்தது. வணிகனும் ஸ்வாமியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

அது மட்டுமின்றி குதிரையின் கால் குளம்புகள் பட்ட இடத்தில் எல்லாம் சுவர்ணக் காசுகள் இருப்பதைக் கண்ணுற்ற வணிகர் ஸ்ரீ ஹயக்ரீவர் அருட்பெருமையையும், ஸ்வாமிகளின் ஏற்றத்தையும் உணர்ந்து மிகவும் ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்து மறுநாள் விருந்து படைத்து, ஆச்சார்யனை வழி அனுப்பி வைத்தார்

No comments:

Post a Comment