Sunday 23 February 2014

ஹயக்ரீவரை நேரில் தரிசித்த ஸ்ரீதேசிகர்

நான்கு வேதங்களையும் தொகுத்த ஸ்ரீவேத வியாசரின் முக்கிய சீடர்களில் ஒருவர் யாக்ஞவல்கியர். வியாசருக்கும் அவருக்கும் ஏற்பட்ட சிறு மனக்கசப்பு காரணமாக, தான் கற்ற யஜுர் வேதத்தை யாக்ஞ வல்கியர் மீண்டும் அசானுக்கே திரும்பத்தர நேரிட்டது.

தான் கற்றதை அப்படியே தன் வாய் வழியா வெளியே எறிந்து விட்டதாகவும், அப்போது வியாசரின் சீடர்கள் தித்திரி என்ற பறவைகளாக மாறி அவற்றை உண்டதாகவும், அவர்கள் மூலம் தெரிய வந்ததே தைத்திரிய ஸம்ஹிதை என்று கூறப்படுகிறது. யாக்ஞவல்கியர் வியாசரை விட்டுப் பிரிந்து கடுந்தவம் இயற்றினார்.

அவர் முன் சூரிய பகவான் குதிரை முகத்துடன் தோன்றி யஜுர் வேதத்தை இன்னொரு முறையில் கற்றுக் கொடுத்தார். வாஜி என்ற சொல் குதிரையைக் குறிக்கும். எனவே யஜுர் வேதத்தின் இப்பகுதிக்கு வாஜஸ்னேயி ஸம்ஹிதை என்றே பெயர். மேலும் தேவலோகத்து புனிதக் குதிரை யான ததிக்ரா சூரியனுடன் சம்பந்தப்பட்டது.

சூரியன், ஆதித்தர்கள், வசுக்கள் போன்றோரடன் சம்பந்தப்பட்ட இந்த ததிக்ரா என்ற புனிதக் குதிரை ஞானத்தின் திருவுரு என்று நம்பப்படுகிறது. காஞ்சீபுரத்துக்கு அருகில் உள்ள தூப்புல் என்ற கிராமத்தில் அனந்தசூரி தோத்தாரம்மா என்ற தம்பதியருக்கு அவதரித்தவர் (புரட்டாசி திருவோணம்) ஸ்ரீமத் நிகமாந்த மஹாதேசிகர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்த வைணவ பெரியார் திருமாலின் திருமணியாழ்வான் (கண்டா மணி) அம்சமாக அவதரித்தவர்.

எண்ணற்ற நூல்களையெல்லாம் கற்றுணர்ந்து தலை சிறந்த அறிவுக் கடலாக விளங்கிய ஸ்ரீதேசிகன் கடலூருக்கு அருகில் உள்ள திருவயிந்தபுரம் என்ற திருத்தலத்திற்குச் சென்று அங்கிருந்த ஒளஷதகிரி என்ற ஒரு சிறு குன்றின் மீது உள்ள அசுவத்த (அரச) மரத்தின் கீழ் அமர்ந்து கருட மந்திரத்தை ஜெபித்து கொண்டிருந்தார்.

ராமாயண காலத்தில் அனுமன் சஞ்சீவி மலைபை தூக்கி வந்த போது, விழுந்த அதன் ஒரு சிறு பகுதியே இந்த ஒளஷதகிரி என்றும் கூறப்படுகிறது. அவருக்கு கருட பகவான் பிரத்தியட்சமாகி ஸ்ரீஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்தாராம்.

ஸ்ரீதேசிகன் மீண்டும் தியானத்தில் ஆழ்ந்த ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தியைத் துதிக்க ஸ்ரீஹயக்ரீவரே அவர் முன் பிரத்யட்சமாகி தன் திருவாய் அமுதை அளித்தாராம். ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தியை நேரில் தரிசிக்கும் பேறுபெற்ற ஸ்ரீதேசிகன் ஞான பானுவாக விளங்கி `ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர்' என்ற மகத்தான பட்டத்தைப் பெற்று எண்ணற்ற கிரந்தங்களை நமக்கு அருளினார். 


thanks to maalaimalar

No comments:

Post a Comment