Sunday 23 February 2014

ஸ்ரீஹயக்ரீவர் அவதாரம்

காக்கும் கடவுளான திருமால் அசுரர்களான மது, கைடபர் என்ற இருவரையும் வதைத்த பின்னர் மேலும் பல அசுரர்களோடு, ஆயிரக்கணக்கான முறை போரிட்டு அவர்களை யெல்லாம் கொன்றார். இதனால் அவர் களைப்புற்றார். மிகவும் சோர்வுடன் பத்மாசனத்தில் அமர்ந்தவாரே, நாண் பூட்டிய தனது வில்லை பூமியில் ஊன்றி, கழுத்தை அதன் மீது சாய்த்து ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தார்.

திருமால் இவ்வாறு திடீரென்று தூக்கம் கொண்டபோது உலகமே செயலிழந்து போனது! தேவர்கள் கதி கலங்கி பிரம்மாவும், சிவனும் சேர்ந்து திருமாலின் தூக்கத்தை எப்படியேனும் கலைத்து அவரைத் துயிலெழச் செய்ய வேண்டுமென்று வேண்டினர்.

பிரம்மனால் படைக்கப்பட்ட பூச்சி இனங்களில் ஒன்றான கரையான் பூச்சி அந்த ஊன்றப்பட்ட வில்லின் நாண் நுனியினைக் கடித்து அரித்தால், நாண் அறுந்த அந்த ஓசையில் இறைவன் துயிலெழுந்து விடுவார் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். பிரம்மாவின் கட்டளைப்படி கரையான்கள் ஒன்று திரண்டு வில்லின் நுனியை அரிக்கத் தொடங்கின.

பேரொலியேடு நாண் அறுந்தது. அதே வேகத்தில் வில் திருமாலின் தலையை வெட்டி துண்டித்து விட்டது. இதைப் பார்த்து எல்லோரும் திடுக்கிட்டு போனார்கள். ஒருமுறை மகாவிஷ்ணு, லட்சுமியின் முகத்தைப் பார்த்து கேலி செய்ய, தேவியோ கோபம் அடைந்து தன்னைப் பரிகாசம் செய்த இறைவனின் தலை ஒரு சந்தர்ப்பதில் அறுந்து விழக் கடவது என்று சாபமிட்டாளாம்.

இந்த சாபத்தின்படியே திருமாலின் தலை அறுந்து போயிற்றாம். இதே நேரத்தில் சரஸ்வதி நதிக்கரையில் குதிரைத் தலையுடன் கூடிய ஹயக்ரீவன் என்ற அசுரன் ஒருவன் தேவி பராசக்தியை நோக்கி தவம் புரிந்து வந்தான். தேவி அவனுக்கு காட்சி அளித்தபோது, குதிரை முகம் படைத்த ஒருவனால் மட்டுமே தனக்கு மரணம் சம்பவிக்க வேண்டும் என்ற வரத்தைக் கேட்டுப் பெற்றான்.

பிறகு அனைத்து தேவர்களையும் துன்புறுத்தத் தொடங்கினான். இதற்கிடையே பிரம்மாவும் இதர தேவர்களும் திருமாலின் உடலில் வேறு ஒரு பொருத்தமான தலையை கண்டுபிடித்து பொருத்துமாறு தேவ சிற்பியான துவஷ்டாவை வேண்டினர். துவஷ்டாவும் ஓர் அழகிய ஆண் குதிரையின் தலையை வெட்டி கொண்டு வந்து திருமாலின் கழுத்தில் பொருத்தினார்.

இதன் மூலம் குதிரைத் தலையுடன் கூடிய ஸ்ரீஹயக்ரீவர் அவதாரம் எடுத்தார். ஸ்ரீஹயக்ரீவர் இந்திர னையும், தேவர்களையும் துன்புறுத்தி வந்த ஹயக்ரீ வாசுரனை வதம் செய்தார். ஸ்ரீ ஹயக்ரீவ அவதாரம் திருமாலின் பதினெட்டாவது அவதாரமாகக் கருதப்படுகிறது.

பின் வலக்கரத்தில் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தையும், இடக்கரத்தில் பாஞ்ச ஜன்யம் என்ற சங்கையும், முன் வலது கரத்தில் ஏடையும் ஏந்தி மக்களுக்கு ஞானத்தை போதிக்கும் ஞான சொரூபியாக ஸ்ரீஹயக்ரீவர் திகழ்கிறார். ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தி ஞானத்தின் உறைவிடம் என்றும் அவரைத் துதித்தால் முக்குணங்களிலிருந்தும் நமக்கு விடுதலை கிடைக்கும்.

தனது இடது தொடையில் ஸ்ரீமஹாலட்சுமியை ஏந்தி, ஸ்ரீஹயக்ரீவர், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவராகத் திகழ்கிறார். சிவபெருமானின் அஷ்டாஷ்ட (64) மூர்த்தி பேதங்களில் ஒன்றான தட்சிணாமூர்த்தி உருவத்தையே ஸ்ரீஹயக்ரீவரின் திருவுருவம் பிரதிபலிப்பதாக உள்ளது. தட்சிணாமூர்த்திக்கும் சிவபெருமானின் அக்னி,

மழுவோடு சின் முத்திரையும், ஏடும் கரங்களில் இருப்பது போலவே, ஸ்ரீஹயக்ரீவரருக்கு திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரத்தோடு, வியாக்கியான முத் திரை, ஏடு உள்ளன. இரண்டு அவதாரங்களுமே உலக மக்களுக்கு ஞானத்தையே போதிக்கின்றன.

ஸ்ரீஹயக்ரீவரின் வாய் சற்றுத் திறந்தது போல அமைக்கப்பட்டிருக்கிறது. இது அவர் எப்போதும் பிரணவ மந்திரமான `ஓம்' என்பதை எப்போதும் ஜெபித்துக் கொண்டிருப்பதை காட்டுகிறது. அசுரன் ஹயக்ரீவன் நான்கு வேதங்களையும் கடலுக்குள் கொண்டு சென்று ஒளித்து வைத்த போது, ஸ்ரீஹயக்ரீவர் அவனைக் கொன்று வேதங்களை மீட்டு வந்து வேத சொரூபமாக விளங்குகிறார்.

அவித்யையும், அஞ்ஞானத்தையும் அகற்றும் சந்திரனின் அழகிய ஒளிபோல ஸ்ரீஹயக்ரீவர் விளங்குவதால், அவர் சந்திரப் பிரபையில் அமைந்துள்ளது போல சித்திரிக்கப்படுகிறார்*

No comments:

Post a Comment