(இன்று மட்டுமாவது அனைவரும் இவ்திருப்பல்லாண்டினை தவறாது சேவிக்கவும்)
தனியன்கள்
குருமுகமநதீத்ய ப்ராஹ வேதாநசேஷாந்
நரபதி பரிக்லுப்தம் சுல்கமாதாது காம:
ச்வசுரமமர வந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷhத்
த்விஜகுல திலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி
மின்னார் தடமதிள்சூழ் வில்லிபுத்தூ ரென்றொருகால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தா னென்றுரைத்தோம்கீழ்மையினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து.
பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று
ஈண்டிய சங்க மெடுத்தூத - வேண்டிய
வேதங்க ளோதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று.
(பாசுரங்கள் தொடக்கம்)
* பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்விதிருக் காப்பு.
* அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்றமங்கையும் பல்லாண்டு
வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படையோர்புக்குமுழுங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.
வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்களிராக்கதர்வாழ், இலங்கை
பாழாளாகப்படைபொருதானுக்குப் பல்லாண்டுகூறுதுமே.
ஏடுநிலத்திலிடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்தொல்லைகூடுமினோ
நாடுநகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று
பாடுமனமுடைப்பத்தருள்ளீர் வந்துபல்லாண்டுகூறுமினே.
அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை
இண்டைக்குலத்தையெடுத்துக்களைந்த இருடீகேசன் தனக்குத்
தொண்டக்குலத்திலுள்ளீர்! வந்தடிதொழுது ஆயிரநாமம் சொல்லிப்
பண்டைக்குலத்தைத்தவிந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே.
எந்தைதந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி
வந்துவழிவழியாட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில்
அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தாவனைப்
பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதுமே.
தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின்
கோயிற்பொறியாலேயொற்றுண்டுநின்று குடிகுடியாட் செய்கின்;றோம்
மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும் பொழிகுருதி -
பாயச், சுழற்றியவாழிவல்லானுக்குப் பல்லாண்டுகூறுதுமே.
நெய்யெடைநல்லதோர்சோறும் நியதமும்மத்தாணிச்சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும்
மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல
பையுடைநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டுகூறுவனே.
உடுத்துக்களைந்தநின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்ததுழாய்மலர் சூடிக்களைந்தன சூடுமித்தொண்டர்களோம்
விடுத்ததிசைக்கருமம்திருதித் திருவோணத்திருவிழவில்
படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.
எந்நாளெம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட-
அந்நாளே, அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுய்ந்ததுகாண்
செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து, ஐந்தலைய -
பைந்நாகத்தலைப்பாய்ந்தவனே உன்னைப்பல்லாண்டுகூறுதுமே.
*அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன், அபிமானதுங்கன்
செல்வனைப்போலத் திருமாலே! நானுமுனக்குப்படிவடியேன்
நல்வகையால் நமோநாராயணாவென்று நாமம்பலபரவிப்
பல்வகையாலும் பவித்திரனே! உன்னைப்பல்லாண்டுகூறுவனே.
* பல்லாண்டென்றுபவித்திரனைப் பரமேட்டியைச், சார்ங்கமென்னும்
வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல்
பல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று
பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருதேத்துவர்பல்லாண்டே.
* இக்குறியிட்ட பாசுரங்கள்; இரண்டுமுறை சொல்லவேண்டும்
No comments:
Post a Comment