மார்கழி மாத வளர்பிறை வரும் ஏகாதசியன்று இறைவன் பரமபத வாசலைத் திறந்து பக்தர்களுக்கு அருள் செய்வதால் இது வைகுந்த ஏகாதசி என்று சிறப்புப்பெயர் பெற்றது.
இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் எடுத்துரைக்கிறார். அதனை நாமும் காண்போம்.
யுதிஷ்டிரரின் வேண்டுகோளை கேட்ட பகவான் ஸ்ரீகிருஷ்ணர், “ஓ தர்மபுத்திரா !! முந்தைய ஏகாதசிகளின் பொது கடைபிடித்த நெறிமுறைகளின்படி இந்நாளிலும் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இந்நாளில் வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீமன் நாராயணன் ஆவார்.
இவ்வுலகில் புத்ரதா ஏகாதசிக்கு இணையான விரதம் ஏதுமில்லை. இவ்விரதம் மேற்கொள்வதால் கிடைக்கும் புண்ணிய பலனானது ஒருவரை தபஸ்வி, வித்வான் மற்றும் தனவான் ஆக்கும் வல்லமை பெற்றது. இந்த ஏகாதசியின் மகத்துவத்தை விளக்கும் கதையைக் கூறுகிறேன். கவனமாகக் கேள் !! என்றார்.
ஒருசமயம் பத்ராவதி நகரில் சுகேதுமான் என்னும் அரசன் அரசாண்டு வந்தான். அவனது மனைவியின் பெயர் ஷௌவ்யா. அவர்களுக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. எனவே இருவரும் அதை எண்ணியே சதாசர்வ காலமும் வருந்திக் கொண்டிருந்தனர். தனக்கும், தன்னுடைய முன்னோர்களுக்கும் யார் பிண்டதானம் அளிப்பார் என்று வேதனை கொண்டனர்.
எனவே இவர்களுடைய முன்னோர்களும் இவனுக்குப் பிறகு நமக்கு யார் பிண்டதானம் அளிப்பார் என்றெண்ணி அவன் வழங்கிய பிண்டத்தை அழுதுகொண்டே பெற்று கொண்டிருந்தனர். புத்திரன் இல்லாமல் தேவ கடனையும், பித்ரு கடனை போக்க இயலாது. எனவே நாம் நல்லுலகை அடைய இயலாது என்றெண்ணி வருந்தினர்.
ஒருநாள் இதே சிந்தனையில் ஆழ்ந்து குதிரையிலேறி வனத்தை நோக்கி பயணித்தான். வனத்தை அடைந்த அரசன் அங்கே விலங்குகள் கூட குடும்பத்துடன் இருப்பது கண்டு “தனக்கு மட்டும் ஏன் இந்த நிலை ?” என்று இன்னும் அவனுடைய துக்கம் அதிகமாயிற்று.
நேரம் போகப்போக அரசனுக்கு தாகம் அதிகமாயிற்று. குடிநீரைத் தேடிக்கொண்டே வந்தவனின் கண்களில் தாமரைப்பூக்கள் நிறைந்த அழகான 1 குளத்தைக் கண்டான். தடாகத்தை சுற்றி முனிவர்களின் குடில்கள் தென்பட்டது. அதைக் கண்டதும் அவனது வலக்கண் துடித்தது. அதை நற்சகுனமாகக் கருதி அங்கே வந்து அவர்களை நமஸ்கரித்து அவர்களை பற்றி விசாரித்தான்.
அதற்கு அவர்கள், “ஹே ராஜன் !! நாங்கள் அனைவரும் விஸ்வதேவர்கள் ஆவோம். இன்று சந்தான பாக்கியம் அருளும் புத்ரதா ஏகாதசி நன்னாள் ஆகும். மேலும் இந்தத் தடாகமே மானசரோவரம் ஆகும். எனவே இதில் புனிதநீராடவும் இங்கு வந்தோம் என்றுரைத்தனர்.
இதைக் கேட்ட அரசன், “முனிசிரேஷ்டரே !! நானும் புத்திரபாக்கியம் இல்லாமல் வருந்துகிறேன். என் மீது அருள்கொண்டு புத்ரபாக்கியம் கிடைக்கும் வரத்தை நல்க வேண்டும்” என்றான். அதனைக் கேட்டவர் அவனிடம், “அரசே !! இன்று இந்த புத்ரதா ஏகாதசி விரதத்தை முறைப்படி கடைபிடித்தால், இறைவன் ஸ்ரீமன் நாராயணனின் அருளால் நிச்சயம் உனக்கு மகன் பிறப்பான்” என்றார்.
அதன்படி அவர்களோடு சேர்ந்து அரசன் அங்கேயே புத்ரதா ஏகாதசியை முறைப்படி கடைபிடித்து துவாதசி நாளில் வெற்றிகரமாக முடித்து நாடு திரும்பினான். அவர் கூறியதைப் போலவே, சில காலத்திலேயே இறைவன் ஸ்ரீமன் நாராயணனின் கிருபாகடாக்ஷத்தால் உத்தமபுத்திரனை ஈன்றெடுத்தாள். அவன் வளர்ந்து தர்மசீலனாகவும், தனவானாகவும், பராக்ரமசாலியாகவும் மக்களை ரட்சிப்பவனுமாக விளங்கினான் என்று கூறி முடித்தார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.
மேலும், “ஓ யுதிஷ்டிரா !! எவரொருவர் பிள்ளைவரம் வேண்டுகிராரோ, அவர் நிச்சயம் இந்த புத்ரதா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். புத்திர பாக்கியம் அருளும் விரதங்களில் இதைவிட மேலானது எதுவுமில்லை” என்றார்.
அத்துடன், எவரொருவர் இந்த விரதத்தை அனுஷ்டிக்கிறாரோ, அல்லது இந்த விரதத்தின் மகாத்மியத்தை படிக்கிறாரோ / சொல்கிறாரோ / கேட்கிறாரோ, அவர் சர்வ நற்குணங்களும் கொண்ட நல்லதொரு புத்திரனைப் பெறுவதோடு மட்டுமின்றி, அஸ்வமேத யாகப்பலனையும் இறுதியில் மோட்சப் பிராப்தியும் அடைவர் என்று பவிஷ்ய புராணம் குறிப்பிடுகிறது.
~~~ ஓம் நமோ பகவதே வாசுதேவாய ~~~
No comments:
Post a Comment