Monday 28 March 2016

சொல்லின் செல்வன் அனுமன்


Sri Prakash Sri Prakash's photo.

ராமபிரானும், லட்சுமணனும் சபரி சொன்ன வழியில் நடந்து, ரிஷியமூக மலையை அடைந்தனர். வாலிக்குப் பயந்து ஒளிந்துகொண்டிருந்த சுக்கிரீவன், இவர்கள் வாலியின் ஆட்கள் எனத் தவறாக எண்ணிக் குகையில் மறைய, அமைச்சனான அனுமன், சாதாரண வடிவில் சென்று உண்மையை அறிந்து வருகிறேன் என்று சுக்கிரீவனிடம் கூறிச் சென்றான்.
 
தொலைவிலிருந்து இருவரையும் கண்ட அனுமன், இவர்கள் திரிமூர்த்திகளோவென்று ஐயமுற்றான். இவர்களுக்கு நிழல் பரப்பிப் பறவைகளும் பறந்து வருகின்றன. கொடிய விலங்குகளும் சாந்தமாகி இவர்களைத் தொடர்ந்து வருகின்றன. இவர்களது திருவடி பட்ட அளவில் சுடுகற்களும் மலர்போலக் குளிர்ந்து மென்மையாகின்றன. கம்பீரத்தில் இந்திரனிலும், நல்லொழுக்கத்தில் தருமனிலும், வடிவழகில் மன்மதனிலும் மேம்பட்டு விளங்குகின்றனர். தம் மனதுக்கியைந்த ஒரு பொருளைத் தேடி வருகின்றனர்.

பிறவித் துன்பங்களைப் போக்கி, அவைகளுக்குக் காரணமான, அறியாமையால் உண்டாகிற பழைய கருமத்தை ஒழித்து, வீடுபேற்றை அடையச் செய்யும் தேவர்கள் இவர்கள். இவர்களைக் கண்டது முதல் எனக்கு எலும்பும் கரைகிறது. அளவில்லாத பக்தி மேன்மேலும் மிகுகின்றது. இவர்களிடம் எனக்கு உண்டாகும் அன்புக்கு எல்லை இல்லை என்று உணர்ந்தான்.
அன்பு அடையாளம் காட்டும் முன்னொரு சமயம் வாயு பகவான் தன் மைந்தனான அனுமனிடம், “நீ திருமாலுக்கு அடிமை செய்” என்று கூற, அனுமன், “திருமாலை நான் அறிவது எப்படி?” எனக் கேட்க, “உனக்கு எவரைக் கண்ட மாத்திரத்தில் அளவில்லாத அன்பு உண்டாகிறதோ, அவரே திருமால் என்பதை அறியலாம்” என்று உபதேசித்திருந்தார். அந்நிலை தற்போது அனுமனுக்கு ஏற்பட்டது.என்பு எனக்கு உருகுகின்றது இவர்கின்றது அளவில் காதல் அன்பினுக்கு அவதி இல்லை அடைவென் கொல் அறிதல் தேற்றேன்
(கிட்கிந்தா காண்டம் - அனுபவபடலம் 15.)என்று இதனைக் கம்பனும் குறிப்பிடுகிறார்.

சூரிய பகவானிடம் நவ வியாக்கிரணங்களையும் கற்ற நுட்ப அறிவினனாகிய அனுமன், இருவரையும் மேலும் நெருங்கி, அவர்களின் உள்ளக் கருத்தையும் ஆழ்ந்து அறிந்தான். அப்போது அவர்களைச் சந்தித்து, “உங்கள் வரவு நல்வரவாகக் கடவது” என்றான் அனுமன். அதற்கு ராமபிரான், “நீ எங்கிருந்து வருகிறாய்? நீ யார்?” எனக் கேட்டார்.

அதற்கு அனுமன், “நீர் கொண்ட காளமேகம் போன்ற அழகிய திருமேனியுடைய பெருமாளே! உன் திருக்கண்கள் உன்னைத் தவறாக நோக்கும் பெண்களுக்கு நஞ்சுபோல் உள்ளன. சாதாரணத் தாமரை மலர் காலையில் மலர்ந்து மாலையில் பனி வந்ததும் வாடிவிடும்; ஆனால் உன் திருக்கண்களோ இன்பம், துன்பம் எது நேர்ந்தாலும் வாடாதவையாக உள்ளன. அப்படிப்பட்ட பெருமைக்குரிய திருக்கண்களை உடையவனே! நான் வாயு தேவனுக்கு அஞ்சனாதேவியின் வயிற்றில் பிறந்தவன். என் பெயர் அனுமன் என்பதாம். இம்மலையில் வசிக்கும் சுக்கிரீவன் உங்கள் வருகையைப் பார்த்துக் கலக்கமுற்று, விசாரித்து வருமாறு ஏவினான். அதனால் நான் வந்தேன்” என்று பணிவுடன் கூறினான்.

அனுமன் கூறிய இந்த விடை செய்யுள் 17-ல் வருகிறது. இதன் முதல் மூன்று அடிகள்தான் அவனுக்குச் `சொல்லின் செல்வன்` என்னும் பட்டத்தை ஸ்ரீராமர் வழங்கக் காரணமாயிருந்தன.
இத்திரு துறந்து ஏகு
மஞ்சு எனத் திரண்ட கோல மேனிய மகளிர்க்கெல்லாம்
நஞ்சு எனத் தகையவாகி நளிர் இரும் பனிக்குத்தேம்பாக்
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண.
சூர்ப்பனகை காமநோக்குடன் ராமனை நோக்கினாள். அது அவளுக்கு நஞ்சாயிற்று.சாந்தம் என்னும் மெய்ப்பாடு தசரதன், `ராமா மெய்த்திருப்பதம் மேவு` என்றான். கைகேயி, `இத்திரு துறந்து ஏகு` என்றாள். இவ்விரு நிலையிலும், சாந்தம் என்னும் மெய்ப்பாடு தோன்ற நின்றான் ராமபிரான். சாதாரணத் தாமரை போல் காலையில் மலர்தலும், மாலையில் கூம்பலும் இன்றி இன்பம் வந்தபோது மகிழாமலும், துன்பம் வந்தபோது துவளாமலும் ராமன் இருந்தான்.
இவற்றையெல்லாம் நுட்பமாக உணர்ந்த அனுமன் தன்னைப் பற்றிக் கூறுவதைக் கேட்ட ராகவன், தம்பியைப் பார்த்து, “தம்பி, இவன் கல்லாத கலையும், வேதக்கடலும் உலகில் இல்லாதனவே. யார் கொல் இச் சொல்லின் செல்வன்” என்று வியந்து பாராட்டினான். கண்டதும் கணப்பொழுதில், ‘சொல்லின் செல்வன்’ என்று ராமனிடம் இருந்து விருது பெற்றவன் அஞ்சனையின் மைந்தன் அனுமன்.

No comments:

Post a Comment