Saturday 16 April 2016

வெள்ளைக்கார துரையை அதிர்ச்சியடைய வைத்த ஏரிகாத்த ராமர் கோவில்

ஸ்ரீ ராம ஜெயம்

செ ன்னை பேருந்துகளாலும், ரயில் போக்குவரத்தினாலும் வசதியாகச் செல்லுமாறு அமைந்த தலம். ஆதியில் வகுளாரண்யம் என்று பெயர் பெற்ற மகிழ மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாகத் திகழ்ந்தது. கிளியாறு என்ற ஆற்றின் கரையில் அமைந்துள்ள இது மதுராந்தகச் சோழரின் நினைவாக இப்பெயர் பெற்றதாகக் கூறுவர். மதுரமான (இனிமையான) பல புண்யதீர்த்தங்களையுடைய இடம் என்றும் பொருள் கொள்ளலாம். கல்வெட்டுக்களில் மதுராந்தக சதுர்வேதி மங்கலம் என்று குறிப்பிடப்பட்டுள்ள இவ்வூர் சோழ மன்னனால் வேதம் ஓதும் அந்தணர்களுக்கு மான்யமாக அளிக்கப்பட்டது.
விபண்டக மஹர்ஷி கிளியாற்றின் கரையில்
தவம் புரிந்தபோது ராமபிரான் வனவாசம் முடித்துத் திரும்பி அயோத்தி செல்லும் போது புஷ்பக விமானம் இத்தலத்தைக் கடக்க முடியாமல் நின்றது. ஸீதாபிராட்டியின் கையைப் பற்றி விமானத்திலிருந்து இறங்கி முனிவருக்கு ராமபிரான் காட்சி அளித்த இடமே இத்திருத்தலம். 5 நிலை கோபுரங்களுடன் கூடிய ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது இந்தத் தலம். ஆழ்வார்களில் பக்திசாரர் என்றழைக்கப்பட்ட திருமழிசை ஆழ்வார்முக்தி அடைந்த தலம் இதுவே. சுகர் என்ற மஹர்ஷியும் தவம் செய்த இடம் இதே மதுராந்தகம் தான்.
ஆசார்யர்களோடும் தொடர்பு பெற்று விளங்குகிறது இந்தத் தலம். வைணவ சித்தாந்தத்தின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டிய ஸ்ரீ ராமானுஜருக்கு வைஷ்ணவ தீ¬க்ஷயாகிய ஸம்ஸ்காரங்கள் செய்யப்பட்டது இத்தலத்தில் உள்ள மகிழ மரத்தடியில் தான். மகிழ மரமே இந்தத் தல வ்ருக்ஷம். இதற்கு அதனால் த்வயம் விளைந்த பூமி என்ற பெயரும் உண்டு. 1967-ம்ஆண்டில் இக்கோவிலில் திருப்பணிகள் நடந்தபோது ஒரு சுரங்கத்தில் நவநீதக் கண்ணமூர்த்தியும், பஞ்சபாத்திரங்களும் சங்கு சக்ரங்களும் கிடைத்தன. இவை ராமானுஜரின் பஞ்சஸமஸ்காரத்திற்கு அவரது ஆசாரியர் பெரிய நம்பியால் உபயோகப்படுத்தப்பட்டவையாகும் என்பதால் இன்றும் அவை ராமானுஜரின் ஸந்நிதியில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த மதுராந்தகத்தில் உள்ள பெரிய ஏரியானது மழைக் காலங்களில் உடைத்துக்கொண்டு பெருத்த சேதத்தை விளைவித்துவந்தது. கிழக்கு இந்தியக் கம்பெனி கலெக்டராக இருந்த லயனல் பிளேஸ் பலமுறை கரையைச் சீர்படுத்தியும் பலனில்லை. எனவே 1825-ம் ஆண்டில் அவர் இம்முறை மழைகாலத்தில் ஏரி உடையாமல் இக்கோவிலில் உறையும் ராமர் காப்பாற்றினால் ஜனகவல்லித் தாயார் என்ற தாயாரின் ஸந்நிதையைக் கம்பெனி செலவிலேயே கட்டித் தருவதாக வாக்களித்தார்.
பெருமழை பெய்து ஏரி நிரம்பி வழிந்தபோது இரவில் ராமரும் லக்ஷ்மணரும் நடந்து சென்று அதனை உடையாமல் பாதுகாப்பதைக் கண்டு பரவசமடைந்த அந்த துரை ஜனகவல்லித் தாயார் ஸந்நிதியைக் கட்டிக் கொடுத்தார். இன்றும் தாயார் ஸந்நிதியில் கலெக்டரின் இந்தத் தர்மம் பற்றிய தகவல் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இதனால் இந்த தலத்து ராமபிரானை ஏரி காத்த ராமர் என்றே அழைக்க ஆரம்பித்தனர்.
கோவிலில் நின்றதிருக்கோலத்தில் மூலவராகக் கோதண்டராமர் கல்யாண கோலத்தில் ஸீதை, லக்ஷ்மணருடன் காட்சி தருகிறார். உற்சவ மூர்த்தியான கோதண்ட ராமர் சற்றுப் பெரிய வடிவினராக ஸீதை லக்ஷ்மணருடன் ஸேவை ஸாதிக்கிறார். மூலவர் விபாண்டக மஹர்ஷிக்கு ஸேவை தந்த கோலத்தில் பாணிக்கிரகண பாணியில் ஸீதையின் கையைப் பற்றிக் கொண்டுள்ளார். விபாண்டக மஹர்ஷியும் ஸந்நிதியில் எழுந்தருளியுள்ளார். சற்றே சிறய அளவில் உள்ள மற்றொரு உற்சவமூர்த்தியே கருணாகரப் பெருமாள். அவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி உள்ளார். இவரையே ராமபிரானாக விபாண்டக மஹர்ஷி ஆராதித்துத் தனக்குக் காட்சி அளிக்கும்படி வேண்டினாராம். கருணாகரப் பெருமாளின் நாச்சியாரே ஜனகவல்லித் தாயார். இவர் தனி ஸந்நிதியில் மூலவராகவும், உற்சவராகவும் உள்ளார். இவரது ஸந்நிதிதான் கலெக்டர் துரையால் கட்டிக் கொடுக்கப்பட்டது. எல்லா உற்சவங்களும் கருணாகரப் பெருமாளுக்கே. ஸ்ரீ ராமநவமி மஹோத்சவம் மட்டும் கோதண்ட ராமருக்கு. உற்சவ மூர்த்தி கண்ணன இவர் ஸந்நிதியில் உள்ளார்.
கோவிலின் கோபுரத்தில் வடகலைத் திருமண் அடையாளமும் ஸ்ரீராமா என்ற எழுத்துக்களும் பொலிவுடன் காட்சி அளிக்கின்றன. இங்கு அஹோபில மடத்தினரால் நடத்தப்படும் ஸம்ஸ்க்ருதக் கல்லூரியும், ஓரியண்டல் பள்ளியும் உள்ளன. ஆனிமாத ப்ரஹ்மோத்சவமும், பங்குனி மாதத் திருக்கல்யாண உத்சவமும், மார்கழி மாத அத்யயன உத்சவமும் இங்கு புகழ் பெற்றவை.
இது நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் சேராவிட்டாலும் மிகுந்த புகழ் பெற்றது.
ராம ராம ராம ராம ராம ராம ராம

No comments:

Post a Comment