Skip to main content

எம்பெருமானார்

"பொறி தட்டுகிறது இராமானுசருக்கு"

விறு விறு என்று கோபுரத்தின் மேல் ஏறுகிறார் உடையவர்! கண்களின் ஓரத்தில் லேசாக நீர்!
வந்த கண்ணீரை, கண்களின் நடு வழியில் வரும் போதே....
"படக்"கென்று தொண்டைக்குள் அடைத்துக் கொள்ளும் வித்தை!
அதைத் தெரிஞ்சி வைச்சிருக்கார் போல!
சின்னஞ் சிறு வயதிலேயே அத்தனை கொடுமையும் பார்த்து விட்டார் அல்லவா?
ஆசிரியர் தன்னை விரட்டி விடல், பின்பு, குருவே தன்னைக் கொல்ல முயற்சி,
பின்பு, திருமண முறிவு, பின்பு, உடன் பழகிய பலரின் வெறுப்பு, பின்பு சக அடியவர்கள் தன் மீது பொறாமை...
பின்பு, குருவைப் பார்க்க வந்து கொண்டிருக்கும் போதே குருவின் மரணம்!
இப்படிப் புடம் போட்டு விட்டது போல! கண்ணீர் மட்டும் வெறுமனே வழிகிறது!
கோபுரத்தில் இருந்து, உரத்த குரலில் கூவிக் கூவி எல்லாரையும் அழைக்கிறார்!
உடன் வந்த சீடர்கள், "இவர் என்ன தான் பண்ணுறாரு?"-ன்னு தெரியாமல் விழிவிழி-ன்னு விழிக்கிறார்கள்!
வயல் வெளிகளில் இருந்தும், ஊர்ச் சந்தைக்கும் வந்த கூட்டம், கீழே அலை மோதுகிறது! கோபுரத்தின் கீழ் நிற்க இடமில்லை!
இந்தச் சின்னப் பையன், வாலிபத் துறவி, இனிக்க இனிக்கப் பேசுகிறான் தான்! இல்லை-ன்னு சொல்லலை! ஆனா அப்படி என்ன பெருசா சொல்லிடப் போறான்?
உடையவர் கீழே குனிந்து அத்தனை பேரையும் பார்க்கிறார்!
கன்னங் கரேல் என்று அன்றாடம் வெயிலில் வாடிடும் மக்கள்! இவர்களுக்கு என்னா-ன்னு சொல்லுறது?
நம்பிகள் தம்மிடம் சொன்னது என்ன???
நர சமூகோ நாரா:
நாரா ஜாதானி தத்வானி
நாரா நிதி ததோ விது:
தான்யேவ சயனம் தஸ்ய - தேன
நாராயண ஸ்மிருதா:
செற்றமே வேண்டித் திரிதருவேன் தவிர்ந்தேன்
செல் கதிக்கு உய்யுமாறு எண்ணி,
நற்றுணையாகப் பற்றினேன் அடியேன்
நாரணா என்னும் நாமம்!
இப்படி எல்லாம் சொன்னா,
இவிங்களுக்குப் புரியுமா?
சரி, சரி, மிகவும் எளிதாக்கிச் சொல்லீற வேண்டியது தான்!
வேறு வழியில்லை.....
இறைவனே பன்றியாய்க் கீழே இறங்கி வருகிறானே!
நாம் இறங்கினால் ஒன்னும் குறைந்து விட மாட்டோம்!!
என்னை மன்னித்து விடுங்கள் திருக்கோட்டியூர் நம்பிகளே!
ஓம் நமோ .....
அந்த "ரகஸ்யம்",
இதோ.....ஊருக்கே போட்டு உடைக்கப்பட்டு விட்டது! உங்களுக்கு?
அனைவர் முகத்திலும் ஏதோ எளிமையாகப் புரிந்து கொண்ட திருப்தி!
எல்லாருக்கும் வாயெல்லாம் சிரிப்பு!
உடையவர் வாயால் திருமந்திர அர்த்தம் கேட்டதே போதும் என்ற மோட்சத் திருப்தி!
அடியவர்களோடு கூடி இருந்து குளிந்தேலோ என்ற மோட்சத் திருப்தி!
அப்பாடா....
இனி பிறவியே இல்லை என்ற
சுயநலம் வெறுமனே சம்சார துக்க நிவர்த்தி அதுவா மோட்சம்?
இல்லை! இல்லவே இல்லை!
அந்தமில் பேரின்பத்து "அடியவர்களோடு" கூடி
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!
உடையவர் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வருகிறார்.....
எதிரே சாட்சாத் திருக்கோட்டியூர் நம்பிகள்!
அவர் முன்குடுமி கோபத்தால் ஆடுகிறது!
பழுத்த வைணவ நம்பிக்கு, கண்களோ சிவக்க!!
நம்பி: "இராமானுஜா! என் முகத்தில் விழிக்காதே! போய் விடு இங்கிருந்து! திருக்கோஷ்டியூர் பக்கம் இனி எட்டியும் பார்க்காதே!"
உடையவர்: "அடியேன் என்றைக்கும் உங்கள்-இராமானுசன் தான், குருவே!"
நம்பி: "இதற்கு ஒன்னும் குறைச்சல் இல்லை! உதட்டில் பஞ்சு, உள்ளத்தில் நஞ்சா? குருத் துரோகி! போயும் போயும் உன்னையா ஆளவந்தார் நம்பினார்?"
உடையவர்: "ஐயோ...சுவாமீ...."
நம்பி: "ச்சீ....அப்படி அழைக்காதே! நான் உன்னைச் சபித்தால் என்ன ஆவாய் தெரியுமா?"
உடையவர்: "ஆச்சார்யர் திருவடிகளே தஞ்சம் என்று, அப்போதும் உங்கள் காலடியிலேயே வீழ்ந்து கிடப்பேன்!"
(நம்பிக்குக் கண் கலங்குகிறது...இவனை என்னவென்று சொல்வது?..எவ்வளவு திட்டினாலும், நம்மை அல்லவா ஏக்கமுடன் பார்க்கிறான்!
சாத்திரத்தை மீறியவன் போலவும் தெரிகிறான்! மீறாதவன் போலும் தெரிகிறானே.........?
நம்பியின் கோபத்தைப் பார்த்து, மொத்த ஊரே அரண்டு போய் நிற்கிறது!)
நம்பி: "குருவின் வார்த்தையை, அரை நாழிகைக்குள் மீறி விட்டாயே! உனக்கு என்ன கிடைக்கும் தெரியுமா?"
உடையவர்: "நரகம் தான் சுவாமி!"
நம்பி: "தெரிந்துமா இப்படிச் செய்தாய்?"
உடையவர்: "கேட்பவர் "எவராயினும்" அவருக்கு மோட்சம் "காட்ட" வல்லது என்று நீங்கள் தானே சொன்னீர்கள்?
இத்தனை பேர் இங்கு உழல்வதை விட, அடியேன் ஒருவன் தானே? நரகத்தில் தாராளமாக உழலலாம் அல்லவா? கேட்ட அத்தனை பேரும் மோட்சம் அடைவார்கள் இல்லையா?"
நம்பி: "ஆஆஆஆஆஆஆ...இராமானுஜா!"
உடையவர்: "நொண்டியோ, குருடோ, விகாரமோ, அழகோ.....அத்தனை குழந்தைகளும் தாயிடம் சேரட்டுமே!
அடியேன் ஒருவன் குருத் துரோகி ஆகி நரகத்தைச் சேர்கிறேன்! எனக்கு ஆசி கூறி, நரகத்துக்கு அனுப்பி வையுங்கள் சுவாமி!"
(நம்பியின் காலில் உடையவர் விழ......அதட்ட வந்த நம்பிகள் அரண்டு போகிறார்! இப்படி ஒரு பதிலைத் தன் வாழ்நாளில் அவர் கேட்டதே இல்லை!)
(இளைய இராமானுசனை வாரி எடுத்துக் கொள்கிறார்!)
நம்பி: "காரேய்க் கருணை இராமானுசா! ஆசை உடையோர்க்கெல்லாம் பேசி "வரம்பு அறுத்தாயோ"?
எம்பெருமான் தன்னிலை இறங்கி வருவான் தெரியும்! ஆனால் மனிதன் இறங்கி வர மாட்டானே? அவன் பிடிச்சதே பிடியாச்சே! இள ரத்தத்துக்கு இன்னும் அதிகமாச்சே? இந்தச் சின்ன வயதில் இவ்வளவு இரக்கமா உனக்கு? நீ மகாலக்ஷ்மித் தாயாரின் குணத்தை அல்லவா பெற்று இருக்கிறாய்?
அவன் எம்+பெருமான்!
ஆனால் நீயோ
எம்+பெரும்+ஆனார்!
நீரே எம்பெருமானார்! நீரே எம்பெருமானார்!

"ஸ்ரீஎம்பெருமனார் திருவடிகளே சரணம்"

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

ஸ்ரீ ராமானுஜரும், ஸ்ரீமணவாள மாமுனிகளும்

இன்று(11/11/2018),ஐப்பசி மூலம்-ஸ்ரீமணவாள மாமுனிகள்/பெரிய ஜீயர்/ஸ்ரீசடகோப முனி/ஸ்ரீயதீந்த்ர ப்ரவணர்/அழகிய மணவாளர்/ரம்ய ஜாமாதர முனி/அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்/காந்தோபயந்த்ரூ முனி/வரவர முனி/இராமானுசன் பொன்னடி/செளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ரர்---ஸ்வாமிகளின் 649ஆவது,திருநட்சித்திரம். ஸ்ரீமணவாள மாமுனிகள்,ஸ்ரீ ராமானுஜரின் மறு அவதாரம்; ராமானுஜர் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்ற ஸ்ரீமந் நாராயணனால், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆதிசேஷ அவதாரம் என்பது அனைவரும்அறிந்ததே.ராமானுஜர் மற்றும் மாமுனிகளின் வாழ்க்கைநெறி/கைங்கர்ய ங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் பல தெய்வீகத் தன்மைகள்/ஒற்றுமைகள்புலப்படுகின்றன அந்த நோக்கத்தில் அடியேனின்,ஒரு குறு முயற்சி. 1.ராமானுஜருக்கு அவருடைய தாய்மாமாவும்,ஸ்ரீஆளவந்தாரின் சீடருமான,பெரிய திருமலைநம்பிகள்'இளையாழ்வார்' என்று பெயரிட்டார். மாமுனிகளுக்கு அவருடைய தாய்வழித் தாத்தாவும்,ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் சீடருமான ஸ்வாமிகள் 'அழகியமணவாளன்'என்று பெயரிட்டார். 2.இளையாழ்வார்,தம்வைணவ வாழ்க்கைநெறிக்கும்,கைங்கர் யங்களுக்கும் இல்லறம் தடை யாக இ...