Wednesday, 9 August 2017

"எனக்குத் தெரியாமல் ஒளிப்பாயோ


விடியற்காலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்துவிட்டாள் அவள். பெரும்பாலும் கோகுலத்திலுள்ள அனைவருமே விடியலுக்கு முன் எழுந்துவிடுவர். எழுந்ததும் ஒரு எண்ணெய் விளக்கை எடுத்துக்கொண்டு நேராக மாட்டுத் தொழுவத்திற்கு வந்தாள். நாற்பதைம்பது மாடுகள் நிரம்பிய தொழுவம். ஒவ்வொன்றும் நன்றாக வளர்ந்து சித்தானைக்குட்டி போலிருக்கும். ஒவ்வொரு மாடாய்த் தடவி விட்டுக் கொண்டும், அவைகளோடு பேசிக்கொண்டும் கன்றுக்குட்டிகளை ஊட்டுவதற்காக அவிழ்த்துவிட்டாள்.
ஒரு காளைக்கன்று எப்போதும் துள்ளிக்கொண்டே இருக்கும். கண்ணன் பிறந்த அன்று அதுவும் பிறந்தது. அவன் நினைவாக அதற்கும் கான்ஹா என்று பெயர். அதன் அம்மா மாடு வரலக்ஷ்மி. அதன் பாலைக் கண்ணன் மிகவும் விரும்பிக் குடிப்பான். சமயத்தில் கான்ஹாவும் அந்தக் கருப்பனும் சேர்ந்து வரலக்ஷ்மியிடம் ஊட்டுவதை அவளே நேரில் கண்டிருக்கிறாள்.
கண்ணன் அவளிடம் ஊட்டிவிட்டுப் போனால் அந்த வரலக்ஷ்மி மகிழ்ச்சி மிகுதியால் இரு மடங்கு பால் கொடுப்பாள்.
சமயத்தில் வரலக்ஷ்மி கண்ணனுக்கு ஊட்டினாளா அல்லது அவன் இவளுக்கு செலுத்தினானா என்று சந்தேகம் வருமளவிற்கு பாலைக் கொட்டித் தீர்த்துவிடுவாள்.
அந்தப் பாலைத் தோய்த்து வெண்ணெய் கடைந்தால் அதன் சுவையை பூலொகத்தில் எதனுடனும் ஒப்பிட முடியாது.
பொதுவாகவே சித்ரகலா மிக இனிமையாகக் கண்ணனின் லீலைகளைத் தொகுத்துப் பாடிக்கொண்டே பால்கறப்பாள். அவள் குரலினிமையிலும், அவனது லீலாம்ருதத்திலும் மயங்கும் மாடுகள் ஏராளமாகப் பாலைக் கொட்டித்தரும்.
இன்றும் வழக்கம்போல் பாடிக்கொண்டே கறக்க ஆரம்பித்தாள்.
நாற்பது பானைகள் நிரம்பின. வண்டியில் கட்டி விடிவதற்குள் அரண்மனைக்கு அனுப்பவேண்டும்.
ஜாக்கிரதையாக எடுத்து வைத்தபின், வெண்ணெயைக் கடைய ஆரம்பித்தாள். தன் இனிமையான குரலால் அதில் கருப்பனின் நாமங்களைக் கலந்தாள்.
த்ருஷ்டி சுற்றி எடுத்தாள்.
இனிமேல்தான் சவால்.
எங்கே ஒளித்து வைத்தாலும் கண்டுபிடித்து விடுகிறானே. என்ன செய்யலாம்? சமையலறையில், பருப்புப் பானைகளுக்கு நடுவே வைத்தாள்.
திரும்பியவள் இங்கே வேண்டாம் என்று கூடத்தில் மச்சில் வைத்து மூடினாள். ஒரு நிமிடம் கழித்து யோசித்து வேறிடம் மாற்றினாள். அங்கு வைத்தபோதும் ஒருநாள் அவன் கொள்ளையடித்தது நினைவுக்கு வர, மறுபடி மாற்றினாள். பத்துப் பதினைந்து இடங்களுக்கு மாற்றியபின்னும் குழப்பம் தீரவில்லை. அதற்குள் அவளது கணவன் ஸ்மிதாக்ஷன் வந்தான்.
சித்ரா என்ன செய்யற? நேரமாச்சு பார். அரண்மனைக்குப் போகணும். பால் குடங்களை எடு என்றான்.
வேலையிருந்ததால், ஒருவாறு சமாதானப்படுத்திக் கொண்டு, அவனுக்கு உதவி செய்யப் போய்விட்டாள்.
இன்று அதிசயமாக,
சூரியன் வந்ததும், கண்ணனும் வந்தான். அதை விட ஆச்சரியம் என்னவெனில்,
மாமி, உன் வீட்டு வெண்ணெய் நாக்கை சுண்டியிழுக்குது. எனக்கு கொஞ்சம் புது வெண்ணெய் தறீங்களா?
என்று கேட்டானே பார்க்கவேண்டும்.
கிள்ளிப் பார்த்துக் கொண்டாள்.
ஏனடா? திருடித்தானே சாப்பிடுவாய்? இன்னிக்கென்ன புத்தி வந்துட்டதா? கேட்கிறாயே..
இல்லை‌ மாமி. கேட்டால் நீங்கள் தருவீங்களோ இல்லையோன்னு தான். இது என் வீடு மாதிரிதானே. நானே எடுத்துப்பேன். இன்னிக்கு நீங்க ரொம்ப அழகா என் அம்மா மாதிரியே எனக்குத் தெரியறீங்களா. அதான் கேட்டேன்.
உள்ளம் உருகிவிட்டது. மகாராணியின் பிள்ளை, அழகன், இவனைப்போல் ஒரு பிள்ளையோ, அல்லது இவனோடு விளையாடவேனும் ஒரு பிள்ளையோ வேண்டும் என்று தவமிருப்பவள்.
பாவமாய்க் கெஞ்சிக் கேட்கிறானே குழந்தை. அம்மா என்கிறானே. மனம் தாங்கவில்லை.
சரி இரு. ஒரு உருண்டைதான் தருவேன். சரியா? என்று கேட்டுக்கொண்டே உள்ளே போனவள் திரும்பிப் பார்த்து, நீ ரேழியிலேயே நில்லு. நானே கொண்டுவரேன் என்று சொல்லிவிட்டுப் போனாள்.
வைத்த இடத்தை அவன் பார்த்தால் அடுத்த வேளைக்குள் பானையோடு காணாமல் போகுமே.
போனாள் போனாள் போனாள் வருவதாய்க் காணோம்.
கண்ணனோ சற்றைக்கொருதரம்,
மாமி மாமீ.. மா....மீ.... என்று கூப்பிட்டுக் கொண்டே இருந்தான்.
உள்ளிருந்து வந்தவள் வெறுங்கையோடு வந்தாள்.
மாமீ என்னாச்சு ஏன் இவ்ளோ நேரம்? எங்கே வெண்ணெய்?
அதில்லடா கண்ணா. எங்கே வெச்சேன்னு மறந்துட்டேண்டா
என்று தயங்கித் தயங்கிச் சொன்னாள்.
குறும்புக்காரக் கண்ணன், நமுட்டுச் சிரிப்போடு சொன்னான்,
அவ்ளோதானே மாமி, என்னைக் கேட்டா நான் எடுத்துக் கொடுத்திருப்பேனே
என்று சொல்லிக்கொண்டே நேராக உள்ளேபோய், தண்ணீர்ப்பானைகளுக்குள் ஒன்றாய் இருந்த வெண்ணெய்ப்பானையை எடுத்துக்கொண்டு வந்தான்.
மாமீ நான் கண்டுபிடிச்சதால, முழுசும் எனக்குத்தான்.
நாளைக்கு வேற இடத்தில் ஒளிச்சு வைங்கோ. நான் வந்து எடுத்துதரேன் என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே பானையோடு ஓடிவிட்டான்.
மலங்க மலங்க விழித்துக் கொண்டு அவ்விடத்திலேயே சாயங்காலம் வரை நின்றுகொண்டிருந்தாள் அந்தப் பேதை சித்ரகலா

"ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்"

No comments:

Post a Comment