Wednesday, 9 August 2017

திருவாய்மொழி

"""ஆறு மலைக்கு எதிர்ந்தோடும் ஒலி
   அரவூறு சுலாய் மலை
   தேய்க்கும் ஒலி
   கடல் மாறு சுழன்று
   அழைக்கின்ற ஒலி
   அப்பன் சாறு பட அமுதம்
   கொண்ட நான்றே !
                                     - திருவாய்மொழி

இப்பாசுரத்தில் நம்மாழ்வார் திருப்பாற்கடல், அமுதம் (இன்னும் பலவும் அப்போது தோன்றின) வேண்டி, கடையப்பட்ட நிகழ்வை #நாலே_வரிகளில் பிரம்மாண்டமாக சித்தரிக்கிறார்.

பாற்கடல் கடையப்பட்டபோது எழுந்த பேரொலிகளுக்கான (cosmic sounds) காரண காரியங்களை ஆழ்வார் ஆராய்கிறார். பாசுரத்தின் பிரம்மாண்ட சித்தரிப்பை வைத்து, ஆழ்வார் பேசுவது, கடல் கடைதலான அவதார நிகழ்வை மட்டுமே அல்ல, கொஞ்சம் அறிவியலும் பேசியிருக்கிறார்….

மூன்று பெரும் சப்தங்கள் குறித்து ஆழ்வார் சொல்கிறார்...

1. ஆறு மலைக்கு எதிர்ந்தோடும் ஒலி

கடைந்த இடத்தில் கடல்நீர் அதிவேகமாக சுழன்றதால் ஏற்பட்ட பெரும்சக்தி வாய்ந்த வெளி நோக்கிப் பாய்ந்த விசையானது (centrifugal force), மலைகளிலிருந்து கடல் நோக்கிப்பாயும் ஆறுகளை, புவியீர்ப்பு விசைக்கு எதிராகத் திருப்பி, மலைகளில் ஏறி ஒடும்படியாகச் செய்தது! இதனால் பேரொலிகள் எழுந்தன.

2. அரவூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி

அடுத்த பேரொலிகள் உராய்வு விசை (Frictional force) சார்ந்தது. பாற்கடலைக் கடைகையில், மந்தர மலையைச் சுற்றிய பிரம்மாண்ட அரவின் உடலானது, மலையையோடு உராய்கையில் உண்டான பெரும் சப்தம்,

3. கடல் மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி

கடையப்பட்ட கடலானது, மாறி மாறி சுழன்றதால், கடல் நீர் ஏற்படுத்திய பேரிரைச்சல். சூரியனைச் சுற்றிவரும் பூமி, தனது அச்சிலும் (மேற்கிலிருந்து கிழக்காக) சுழல்வது தெரிந்ததே. “கடல் மாறு சுழன்று” என்று ஆழ்வார் பாடும்போது, #பூமி_சுழற்சி பற்றி புரிந்தவராகவே அவரை எண்ண வேண்டும், அதாவது, இந்த பிரம்மாண்டக் கடல் கடைதலின் ஒரு பக்க சுழற்சி, பூமியின் சுழற்சிக்கு எதிராக நிகழ்ந்த போது, பூமியின் சுழற்சியே பாதிப்புக்குள்ளாகி, பூமி அதிர்ந்து பேரொலிகள் உண்டாயின!

4. அப்பன் சாறு பட அமுதம் கொண்ட நான்றே!

அமுதத்தைப் பங்கிடுவதில் தேவர்களுக்கும் அசுரருக்கும் சண்டை ஏற்பட. மோகினி உருவெடுத்த விஷ்ணு, அசுரருக்குக் கிடைக்காத வண்ணம், அமுதைக் கவர்ந்து சென்றார். அசுரர்கள் மோகினியான மஹாவிஷ்ணுவை துரத்தினர். பின் தேவர்களுக்கு அமுதம் கிடைக்கும் வண்ணம் செய்தார் மஹா விஷ்ணு.

🌹 குறிப்பு:

அசுரர்கள் துரத்திய சமயம், அமுதக்குடத்திலிருந்து சிந்திய #நான்கு_துளிகள் இந்தியாவில் பிரயாகை (அலகாபாத், கங்கையும் யமுனையும் சந்திக்கும் இடம்), ஹரித்வார், உஜ்ஜயினி, நாசிக் ஆகிய நான்கு இடங்களில் விழுந்ததாலேயே, அந்த நான்கு இடங்களும் புனித/புண்ணியத் தலங்களாகப் போற்றப்படுகின்றன.

ஓம் நமோ நாராயணா

No comments:

Post a Comment