Skip to main content

சப்த சக்கரங்களையும் சப்தரீஷீகளையும்உள்ளடக்கிய சப்தஸ்தானம்...

நன்றி :திருவையாறு சிவ சேவா சங்கம்

சப்த சக்கரங்களையும் சப்தரீஷீகளையும்உள்ளடக்கிய சப்தஸ்தானம்...
திருநெய்தானம் (தில்லைஸ்தானம்) 

திருபூந்துருத்தி 

திருக்கண்டியூர் 

திருவேதிகுடி 

திருச்சோற்றுத்துறை 

திருபழனம் 

திருவையாறு 


சப்தஸ்தான தலங்கள் என்பவை மனித உடலில் உள்ள மூலாதாரம் தொடங்கி சஹஸ்ராரம் வரை உள்ள சக்கரங்களைக் குறிப்பிடும் வகையில் அமைந்திருக்கும்திருத்தலங்களாகும். இந்த ஏழு திருத்தலங்களையும் இணைக்கும் வகையில் நடைபெறுவது, சப்தஸ்தான பல்லக்குத் திருவிழா! நந்திதேவரின் திருமண வைபவத்தை ஒட்டி நடைபெறும் இந்த விழாவின் சிறப்பு பற்றி, ‘நந்தி கல்யாணம் தரிசித்தால் முந்தி கல்யாணம்’ என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

நந்திதேவர் சிவ பெருமானின் முதன்மைச் சீடராவார். துர்வாச முனிவருடைய சீடர் சிலாத முனிவர். அவர் வசிஷ்டரின் சகோதரி சாருலட்சணையை மணந்தார். இந்த தம்பதி குழந்தை வரம் வேண்டி தவம் புரிந்ததனால் ஐயாறப்பரின் திருவருள் கைகூடியது. ஸ்வாமியின் ஆக்ஞைப்படி சிலாத முனிவர், அந்தணர் குறிச்சி எனும் இடத்தில் வேள்விக்காக நிலத்தை உழுதபோது, ஒரு செப்புப் பெட்டகத்தில் சிவவடிவுடன் கூடிய குழந்தை கிடைத்தது. குழந்தைக்கு ஜப்பேசன் என்று பெயரிட்டு வளர்த்தனர். அந்தக் குழந்தை நாளடைவில் எல்லா கலைகளிலும், ஆகம புராண சாஸ்திரங்களிலும் வல்லுநராயிற்று. சிவபெருமான் அவருக்கு நந்தீஸ்வரன் என்று பெயர் சூட்டி, முதல் குருநாதன் என்ற தகுதியைையும் அளித்தார்.

அதுமட்டுமா? நந்தீஸ்வரருக்கு திருமழபாடியில் வாழ்ந்த வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயம்பிரகாசை என்பவளை சிவனாரே மணம் செய்துவைத்தார். இதுவே, இன்றைக்கும் ஏழு திருத்தலங்களை இணைக்கும் பெருவிழாவாக சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. திருவையாறிலிருந்து கல்யாணத்துக்காக வெட்டிவேர் பல்லக்கில் புறப்பட்டுச் செல்லும் ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியை திருமழபாடியில் கோயில் கொண்டிருக்கும் வைத்தியநாதரும்,சுந்தராம்பிகையும் கண்ணாடி பல்லக்கில் வந்து எதிர்கொண்டு அழைக்கிறார்கள்.அதாவது மாப்பிள்ளை வீட்டாரை பெண் வீட்டார் எதிர்கொண்டு அழைத்து வரவேற்பதாக ஐதீகம்.

திருமணத்தன்று, திருவையாறு மற்றும் அருகில் உள்ள சிவ ஸ்தலங்களான திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருக்கண்டியூர், திருவேதிக்குடி,திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய தலங்களிலிருந்தும் வரும் சிவாசார்யர்கள் கலந்து கொண்டு பரிசுப் பொருள்கள் வழங்குவார்கள். திருமணம் முடிந்து சுமார் ஒருமாத காலத்துக்குப் பிறகு, முனிவர்களின் ஆசியைப் பெறுவதற்காக சுற்றிலும் உள்ள ஆசிரமங்களுக்கு மணமக்களை ஐயாறப்பர் அழைத்துச் செல்வார். அவை: திருவையாறில் சிலாதர் ஆசிரமம், திருப்பழனத்தில் கவுசிகர் ஆசிரமம், திருச்சோற்றுத் துறையில் கவுதமர் ஆசிரமம், திருவேதிக்குடியில் வியாசராசிரமம், திருக்கண்டியூரில் சதாதயராச்சிரமம், திருப்பூந்துருத்தியில் காசியபராசிரமம், திருநெய்த்தானத்தில் பிருகு முனிவராசிரமம் ஆகியன.

திருமழபாடியில் நடைபெறும் நந்திதேவர் திருமணத்துக்கு, திருப்பழனத்திலிருந்து பழ வகைகள், திருசோற்றுத்துறையிலிருந்து உணவு வகைகள், திருவேதிக்குடியில் இருந்து வேதியர்கள், திருக்கண்டியூரிலிருந்து ஆபரணங்கள், திருப்பூந்துருத்தியிலிருந்து மலர்கள், திருநெய்த்தானத்திலிருந்து நெய் முதலியன வந்ததாகக் கூறப்படுகிறது. திருமணம் முடிந்ததும், அறம் வளர்த்த நாயகியுடன் ஐயாறப்பர் கண்ணாடிப் பல்லக்கிலும், நந்தியம்பெருமான் சுயம்பிரகாசையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும், ஏழூர் உலா புறப்படுவார்கள்.

திருவையாறு ஆதிசைவராக எழுந்தருளி இருந்து, ஐயாறப்பர் தன்னைத்தானே பூஜை செய்யும் அற்புதம் நடைபெற்ற தலம். காவேரி வடகரைத் தலங்கள் 63ல் 51வது தலம் திருவையாறு. ”ஐயாறே ஐயாறே என்பீராகில் அல்லல் தீர்ந்து அமரருலகம் ஆளலாமே” என்று அப்பர் பாடியிருக்கிறார். ஏழூர் வலம் வரும் விழாவில் முதல் தலம் திருவையாறு. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்புகளையும் பெற்றது. 15 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. தஞ்சாவூருக்கு வடக்கே 3 கி.மீ தூரத்தில் இருக்கிறது.

இங்கே மூலவர் மண் லிங்கம் ஆனதால், அபிஷேகம் கிடையாது. ஆவுடையாருக்குத்தான் அபிஷேகம். லிங்கத் திருமேனிக்கு புனுகுச்சட்டம் சாத்தப்படுகிறது. இந்தத் திருக்கோயிலில் வடகயிலாயம், தென்கயிலாயம் என இரண்டு கயிலாயங்கள் இருப்பது சிறப்பு. கோயிலின் மூன்றாம் பிராகாரத்தின் தென்மேற்கு மூலையில் நின்று வடக்கு நோக்கி ‘ஐயாறா’ என்று கூவினால், ஏழு முறை எதிரொலிக்கும்!

திருப்பழனம் கதலிவனம் என்று புராணங்கள் போற்றும் இந்தத் தலம் திருவையாறிலிருந்து கும்பகோணம்நெடுஞ்சாலையில் கிழக்கு திசையில் 3 கி.மீ தூரத்தில் உள்ளது. சப்த ஸ்தான தலங்களில் இரண்டாவதாகக் கருதப்படுகிறது. ஐயாறப் பரின் பல்லக்கு திருப்பழனம் அடைந்தவுடன், இறைவன் ஆபத்சகாயேஸ்வரர் இறைவி பெரிய நாயகி எதிர்கொண்டு அழைப்பார். கோயிலில் தீபாராதனைகளும் 16 வகை உபசாரங்களும் செய்யப்படும். வேறு தலங்களில் ஒரு வருடம் தங்கி இருக்கும் புண்ணியம், திருப்பழனம் தலத்தில் ஓர் இரவு தங்குவதால் பெறலாம் என்பார்கள். இங்கிருந்து கிளம்பும் பல்லக்குகள் காவேரி, குடமுருட்டி ஆறுகளைக் கடந்து திருச்சோற்றுத்துறையை அடையும்.

திருச்சோற்றுத்துறை அன்னபூரணி சமேதராக சோற்றுத்துறையப்பர் அருள் பாலிக்கும் தலம். தஞ்சாவூர் திருவையாறு சாலையில், கண்டியூரில் இருந்து கிழக்கே 4 கி.மீ. தூரத்தில் உள்ளது. சப்தஸ்தானங்களில் மூன்றாவதாக இருக்கப்பெற்றதுசோற்றுத்துறை. தன்னை வழிபடும் அடியார்களின் பசிப்பிணி போக்கி இறைவன் சோறு வழங்குபவன் என்ற பொருளில் இத்தலத்துக்கு திருச்சோற்றுத்துறை என்ற பெயர் ஏற்பட்டது. இந்திரன் இத்தலத்து இறைவனை வழிபட்டுப் பலன் பெற்றான்.

திருச்சோற்றுத்துறையில் 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் சிலை ஒரே வரிசையில் இல்லாமல், மூலவர் சந்நிதியின் அருகில் தனியாக உள்ளது. இறைவனுக்கே உணவு அளித்து, அன்பைப் பெற்ற கண்ணப்ப நாயனார், பக்தர்களுக்கு அருளாசி வழங்கவும், அவரது பக்தியை உலக மக்கள் தெரிந்து கொள்வதற்காகவும்,அவரது சிலை கோயிலில் மூலவர் சந்நிதிக்கு முன் இடம் பெற்றுள்ளது. இந்தத் தலத்து ஸ்வாமியும் அம்பாளும் ஐயாறப்பரையும் நந்தியையும் எதிர்கொண்டு அழைத்து ஆலயம் சென்று மரியாதை செய்த பிறகு, கோயில் பூஜைகள் முடிந்தபிறகு, பல்லக்குகள் திருவேதிக்குடிநோக்கி செல்லும்.

திருவேதிக்குடி சப்தஸ்தான தலங்களில் 4வது தலம். திருச்சோற்றுத்துறையிலிருந்து, தென் திசையில் 3 கி.மீ தொலைவில் உள்ளது. திருவேதிக்குடி என்பதற்கு திரு என்றால் அழகிய என்றும், வேதி என்றால் பிரம்மன் என்றும், குடி என்பதற்கு குடி புகுந்த ஊர் என்றும் பொருள்படும். அங்கு மங்கையர்க்கரசி சமேத வேதபுரீஸ்வரர் எதிர்கொண்டு அழைத்து மரியாதை செய்வார்கள். திருமணத் தடைகள் நீங்கி, வாழ்க்கையில் நல்ல வாழ்க்கைத் துணை அமைவதற்கு திருவேதிக்குடி சிறந்த பரிகாரத்தலமாகும். வேதங்களுக்கு அருள்புரியும் வேதபுரீசர் என்பதால் திருவேதிக்குடியாயிற்று. இறைவனுக்கு, செல்வப் பிரான், வாழைமருநாதன், திருவேதிக்குடி மகாதேவர் போன்ற திருப் பெயர்களும் உண்டு. இங்கிருந்து ஏழுர் வலம் கண்டியூருக்குச் செல்லும்.

கண்டியூரில் தம்பதிக்கு மலர்மாலைகள் மாற்றப்பட்டு, பூஜைகள் செய்யப்படுகின்றன. இந்தத் தலத்தில் கோயில் கொண்டிருக்கும் இறைவன் பிரம்மகண்டீசுவரர். இறைவி மங்கலநாயகி. பிரம்மாவின் தலையைக் கொய்தவர் என்பதால் இவருக்கு பிரம்மகண்டீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கண்டியூரில் முருகப்பெருமான் ஞான குருவாக வீற்றிருக்கிறார். சூரியன் வழிபட்ட ஸ்தலம். பிராகாரத்தில் சரஸ்வதியுடன், பிரம்மாவுக்கு தனி சந்நிதி உள்ளது. பாடல் பெற்ற ஸ்தலம். ஏழூர் வலம் வரும் விழாவில் கண்டியூர் ஐந்தாவது தலம்.

அடுத்து, பல்லக்குகள், கண்டியூரிலிருந்து மேற்கு நோக்கி செல்லும் சாலையில் 3 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பூந்துருத்தி கோயிலுக்குச் செல்கின்றன. திருப்பூந்துருத்தியின் நாயகன் புஷ்பவனநாதர். அம்பிகையின் திருநாமம் சௌந்தரநாயகி. ஏழூர் வலம் வரும் விழாவில் இது ஆறாவது தலமாகும். திருப்பூந்துருத்தி கோயிலில் உள்ள தீர்த்தம் காசி கங்கை தீர்த்தம். ஆடி அமாவாசையில் இறைவன் இத்தலத்தில் தோன்றியதால், அந்தப் புனித நாளில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி இறைவன் இறைவியின் அருள்பெற வேண்டிக் கொள்ளலாம். திருநெய்த்தானம் சப்தஸ்தான தலங்களில் ஏழாவது தலம். திருப்பூந்துருத்தியிலிருந்து, குடமுருட்டி, காவேரி ஆறுகளைக் கடந்து 3 கி.மீ தொலைவில் இருக்கும் திருநெய்த்தானம் செல்லும்போது, வாலாம்பிகை உடனாகிய நெய்யாடியப்பர் எதிர்கொண்டு அழைக்க பல்லக்கில் எழுந்தருள்வார். ஐயாறப்பர் ஆண்டில் மூன்று முறை இங்கு எழுந்தருள்கிறார். நெய்க்கு முக்கியம் வாய்ந்த இடம் என்பதால், இதற்கு திருநெய்த்தானம் என்ற பெயர் ஏற்பட்டது. இறைவனுக்கு நெய்யினாலேயே அபிஷேகம் நடைபெறுகிறது. உள்ளே சென்றால், சப்தஸ்தான பல்லக்குகள் வைப்பதற்கான மேடை உள்ளது. இங்கே பூஜை உபசாரங்கள் முடிந்தபிறகு, திருநெய்த்தானத்திலிருந்து பல்லக்கு கள், திரும்பவும் வந்த வழியாகவே திருவையாறு கோயிலை அடையும்.

சப்தஸ்தான பல்லக்கு விழாவை தரிசிப்பவர்களுக்கு, ஏழு திருத்தலங்களில்உள்ள இறைவனை தரிசித்த பலன் கிடைக்கும்.

இந்த ஆண்டு திருவையாறு சித்திரை மாத சப்தஸ்தானப் பெருவிழா வரும் ஏப்ரல் 30ம்தேதி முதல் மேலான 12ம் தேதி வரை மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது.

Thanks to siva seva sangam Thiruvaiyaru

பக்திசெய்வோம், ஞானம்பெறுவோம்,இறைவனிடம் செல்வோம்! அன்பே சிவம்!!

சீரார் திருவையாறா போற்றி! போற்றி

திருச்சிற்றம்பலம்.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

ஸ்ரீ ராமானுஜரும், ஸ்ரீமணவாள மாமுனிகளும்

இன்று(11/11/2018),ஐப்பசி மூலம்-ஸ்ரீமணவாள மாமுனிகள்/பெரிய ஜீயர்/ஸ்ரீசடகோப முனி/ஸ்ரீயதீந்த்ர ப்ரவணர்/அழகிய மணவாளர்/ரம்ய ஜாமாதர முனி/அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்/காந்தோபயந்த்ரூ முனி/வரவர முனி/இராமானுசன் பொன்னடி/செளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ரர்---ஸ்வாமிகளின் 649ஆவது,திருநட்சித்திரம். ஸ்ரீமணவாள மாமுனிகள்,ஸ்ரீ ராமானுஜரின் மறு அவதாரம்; ராமானுஜர் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்ற ஸ்ரீமந் நாராயணனால், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆதிசேஷ அவதாரம் என்பது அனைவரும்அறிந்ததே.ராமானுஜர் மற்றும் மாமுனிகளின் வாழ்க்கைநெறி/கைங்கர்ய ங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் பல தெய்வீகத் தன்மைகள்/ஒற்றுமைகள்புலப்படுகின்றன அந்த நோக்கத்தில் அடியேனின்,ஒரு குறு முயற்சி. 1.ராமானுஜருக்கு அவருடைய தாய்மாமாவும்,ஸ்ரீஆளவந்தாரின் சீடருமான,பெரிய திருமலைநம்பிகள்'இளையாழ்வார்' என்று பெயரிட்டார். மாமுனிகளுக்கு அவருடைய தாய்வழித் தாத்தாவும்,ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் சீடருமான ஸ்வாமிகள் 'அழகியமணவாளன்'என்று பெயரிட்டார். 2.இளையாழ்வார்,தம்வைணவ வாழ்க்கைநெறிக்கும்,கைங்கர் யங்களுக்கும் இல்லறம் தடை யாக இ...