எம்பெருமான் கோயில் கொண்டிருக்கும் திருக்கோயிலையும் அவனை போற்றும் வேதமாகிய திவ்யப்ரபந்தங்களையும் காப்பாற்றும் பொருட்டு ஶ்ரீராமாநுஜர் பல்வேறு நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். ஶ்ரீராமாநுஜருடைய ஆணைகள் 1000 வது ஆண்டில் கூட இன்னும் ஶ்ரீரங்கம் , திருமலை , மேல்கோட்டை போன்ற பல திருக்கோயில்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
ஸ்ரீரங்கம் கோயில் பாரமேச்வர ஸம்ஹிதையில் விவரிக்கப்பட்ட பாஞ்சராத்ர ஆகம வழிபாடு முறையை உடையது. முகம்மதியர்களின் படையெடுப்பின் போது அர்ச்சகர்கள் திருநாராயணபுரம் செல்ல நேர்ந்ததால் அந்த இடைப்பட்ட காலத்தில் வைகாநஸ அர்ச்சகர்கள் கோவில் பொறுப்பேற்று நடந்து வந்தனர்.
உடையவர், கோயிலில் வைகாநச முறைப்படி நம்பெருமாளுக்கு திருவாராதனம் நடந்து வந்ததை மாற்றி பாஞ்சராத்ர விதிப்படி நடக்கச் செய்தார். ஆளவந்தார் அருளிச்செய்த “ஆகமப்ரமாண்யம்” என்ற க்ரந்தத்தை ப்ரசாரப்படுத்தி பாஞ்சராத்ர ஆகமத்தை உயர்ந்த ப்ரமாணமாக எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்படி நிலை நிறுத்தினார்.
உடையவர் கோயிலில் பெரிய திருமண்டபத்திலே எழுந்தளியிருந்து தான் கோயில் காரியங்கள் கவனிப்பர். (இந்த இடத்திற்கு தேவராஜன் குறடு என்று பெயர். சந்தன மண்டத்தின் கிழக்கு படிக்கட்டுகள் வழியாக செல்பவர்கள் அந்த இடத்தில் ஒரு வெள்ளைக்கல் பதிக்கப்பட்டிருப்பதையும், அந்த இடத்திற்கு வடக்கே சுவற்றில் தேவப்பெருமாள் கருடாரூடராய ஸேவை ஸாதிப்பதையும் காணலாம். இங்கு தான் உடையவர் எழுந்தளியிருந்து கோயில் காரியங்கள் கவனிப்பார்).
பெருமாளுக்கு அமுதுபடி (பிரசாதம் ), சாத்துபடிகள் வஸ்த்ரம் ஆபரணங்கள் எல்லாம் திருமேனிக்கு ஏற்புடையதாக இருப்பதை நாள்தோறும் கவனிப்பார்.
1. அமுதுபடி, நெய்யமுது, மிளகுபொடி மூன்றும் தளிகைக்கு ( சமையலுக்கு ) பதக்கு, உழக்கு ,ஆழாக்கு ( அந்தக்கால அளவு முறைகள்) என்கிற அளவு களிலேயும்;
2. கறியமுதிற்கு கொம்பஞ்சும், கொடியஞ்சும் (செடிகளில் விளைந்த காய்களும், கொடிகளில் விளைந்த காய்களும், ஒவ்வொன்றிலும் ஐந்து வகைகள்) சேரவும்;
3. கந்தமூலம் வாசனை பொருட்கள் (வெட்டிவேர் போன்ற நறுமண வேர்கள்) பல்வகைப் பழங்கள், பாலமுது சர்க்கரை, நெய்யமுது ஆகியவை எம்பெருமனுக்கு கண்டருளப் பண்ண ( நிவேதனம்) செய்ய ஏற்பாடுகள் செய்தார்.
4. திருமடைப்பள்ளி, திருமண்டபங்கள், கருவூலங்கள் போன்றவற்றில் அழிந்தனவற்றைத் திருத்தி சரி செய்தார் .
5. அனைத்து கொத்தில் உள்ளவர்களையும் அரங்கனுக்கு கைங்கர்யம் செய்ய வசதியாக திருமதிளுக்கு உள்ளேயே உள்துறை வீதியில் (இதுவே பிற்காலத்தில் மருவி உத்தரவீதி ஆயிற்று) கோயில் உள்துறை பணியாளர்களாகிய பரிசாரகர்கள், அர்ச்சகர்கள், மற்றைய கைங்கர்யம் செய்பவர்களுக்கு திருமாளிகைகள் (வீடுகள்) ஏற்படுத்தினார் .
அ. முக்கிய சீர்திருத்தங்களும், மாற்றமைப்புகளும்:
1. தனது சிஷ்யனும், சோழ அரச பிரதிநிதியும் ஆன அகளங்க நாட்டாழ்வான், கோயில் நிலங்களிலிருந்து கிடைக்கும் வருவாயை கவனப்பதுற்கு நியமித்தார்.
2. தன்வந்திரி கோயில் புதுப்பித்து: இதன் நிர்வாகத்திற்கு தனது சீடரான கருடவாகன பண்டிதரை நியதித்ததார்.
3. வைகாஸை ஆகமத்தைச் சேர்ந்த அர்ச்சகர்கள் கோயிலில் இருந்து வெளியேற்றியது: (இந்த மாற்றமானது ஆகம விதிகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்டதாகும்.
ஆரம்ப காலத்திலிருந்து பழக்கத்தில் இருந்த பாஞ்சராத்ர ஆகமத்தை மீண்டும் செயல்பாட்டில் கொண்டு வர வேண்டியது பெருமை மிக்க மதத் தலைவரான ஸ்ரீராமாநுஜருடைய கடமையாயிற்று.
4. கோயில் கணக்குகள் சரிபார்ப்பது:
அதிகாரத்தை வெளிப்படுத்தும் கருடன், சக்கரம் மற்றும் சங்கு பொறிக்கப்பட்ட முத்திரைகள் உபயோகிப்பது:
நகைகள் வெள்ளி மற்றும் தங்க ஆபரணங்கள் பாத்திரங்கள் ஶ்ரீவைஷ்ணவ வாரியத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டன.
இவை கோயிலின் உள்ளே இவற்றிற்கென உரிமை படைத்தோர் கரங்களில் திறவு கோல்களுடன் முத்திரை வைக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டன.
இவற்றை பாதுகாப்பதற்காக முத்திரைகள் பொறிக்கப்பட்டன . எல்லா குழுக்களைச் சேர்ந்த அனைவரும் இந்த முத்திரைகளைப் பொறிக்க அதிகாரத்தை ஸ்ரீராமானுஜர் அளித்திருந்தார்.
நகைப்பெட்டிகளின் சாவியையும், பெட்டிகள் வைக்கப்பட்டிக்கும் தெற்கு கல் அறையின் சாவியையும் தன் வசம் வைத்திருப்பது. வேண்டும் போது இவ்வறையை திறக்கவும் மூடவும் வேறெருவரை நியமிப்பது, தன்னுடைய முத்திரையை எல்லா அறைகளின் பூட்டுகளின் மீதும் “பதிப்பது”. ஆகியவவை உடையவரின் செயலாக இருந்தது.
(இன்னும் இந்தப் பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. ஏழு நபர்களால் முத்திரை பதிக்கப்படுகிறது).
5. கோயில் வேலையாட்களின் வேலை முழுவதுமாக நிர்ணயிக்கப் பட்டது.
.
5 ஐந்து குழுக்களாக இருந்த இவர்கள் பத்து குழுக்களாக விரிவாக்கப்பட்டு ஒவ்வொருவரின் கடமையும் மிகத்துல்லியமாக நிர்ணயிக்கப் பட்டது.
6. அத்யயனோத்ஸவம் என்னும் மிகப்பெரிய உத்சவம் (20 நாட்கள் நடக்கும் ) கொண்டாடப்படுவதற்கான வழிமுறைகளை வகுத்து, நம்மாழ்வார் விக்ரஹத்தை கோயிலில் ப்ரதிஷ்டை செய்தார் .
7. ஆழ்வார்கள் , ஆண்டாள் மற்றும் நாதமுனிகள் திருவுருவங்களை ப்ரதிஷ்டை செய்தார் .
8. சோழங்க நல்லூரிலே, கோயிலுக்கு பாலமுது ஸமர்ப்பித்திடுவதற்காக மிகப்பெரிய கோசாலை ஒன்று அமைத்தார்.
திருவரங்கம் கோயிலில் இருந்து வெளியேற்றப்பட்ட வைகானஸ அர்ச்சகர்களின் மறுவாழ்விற்காக “ஆனிரை காத்த பெருமாள்'' என்ற ஒரு கிருஷ்ண விக்ரஹத்தை ப்ரதிஷ்டை செய்து இவர்களை அர்ச்சகர்களாக நியமித்தார்.
இவருடைய எல்லா சீர்திருத்தங்களும் கோயில் நிர்வாகம் எளிதாக நடைபெறுவதற்கான வழிமுறைகள் கொண்டதாய் அமைந்ததிருந்தன. உடையவர் தன்னம்பிக்கை கொண்டவர். கண்டனம் செய்வதில் , அபிப்ராயம் சொல்வதில் மிதமாக இருந்தார்.
குழந்தைகளே ! இவை எல்லாம் ஶ்ரீராமாநுஜரின் ஆளுமைத் திறனுக்கு எடுத்துக்காட்டு .
ஆ. உடையவர் திட்டமும், அவர் ஏற்படுத்தி வைத்த கொத்துக்களும் ( குழுக்கள்)
உடையவர் கோயில் பரிஜனங்கள் (ஊழியர்கள்) குழுக்களை பத்து குழுக்களாக பெருக்கினார்.
1. திருப்பதியார்:
முலஸ்தான ஊழியத்திற்கு பொறுப்பு உடையவர்கள். திருவிளக்குகள் ஏற்றுதல், தூபம் இடுதல் இவர்கள் பணிகளில் ஒன்று.
2. திருப்பணி செய்வார்: கொடவர் மற்றும் திருத்தாழ்வரைதாஸர் ஆகியோரின் தலைமுறையைச் சேர்ந்த ஐந்து நபர்கள் இருந்தனர். உடையவரால் ஆசி வழங்கப்பட்ட இவர்கள் கோயிலில் தம் பணிகளைச் செய்து வந்தனர்.
3. பாகவத நம்பிகள்:
இந்தக் குழு புதிதாக ஏற்படுத்தப்பட்டு எம்பெருமானின் கைங்கர்யத்திற்கும், மூன்றாம் பிராகாரத்தில் உள்ள சிறுசிறு சன்னதிகளில் உள்ள அர்ச்சாமூர்த்திகளை பூசிப்பதற்கும் நியமனம்.
4. உள்ளூரார்:
மூலவருக்கும், புற உலா வரும் உற்சவ மூர்த்திக்கும் கைங்கர்யம் செய்ய நியமிக்கப்பட்டவர்கள். ஸ்வாமியின் பட்டாடைகள், விசிறி, குடை, முதலியவற்றை பாதுகாப்பது, எடுத்துப் பயன்படுத்துவது இவர்கள் பொறுப்பு.
5. விண்ணப்பம் செய்வார்: வீணை வாசித்தல், வேதம் ஓதுதல், திவ்ய பிரபந்த பாராயணம் செய்வார்கள். இசையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கோயிலில் தனி மரியாதை உண்டு.
6. திருக்கரகக்கையார்: காவிரி நதியிலிருந்து தீர்த்தங்களை யானை மீது வைத்து கோயிலுக்கு கொண்டு வருவார்கள். பாத்திரங்களில் நீர் நிரப்புதல் இவர்கள் பொறுப்பு.
7. ஸ்தானத்தார் (தலத்தார்): அரங்கன் தொடர்புடைய எல்லாவற்றையும் கவனிப்பது, பல்லக்கு சுமத்தல், உடன் செல்லுதல் இவர்கள் கடமை.
8. பட்டர்கள்:
கர்ப்பகிரகத்தில் வேத மந்திரங்கள் ஓதுதல், நித்யபடி பூஜை, இவர்கள் பொறுப்பு.
9. ஆரியபட்டர்கள்:
முக்கிய வேலை கோயிலையும், அர்ச்சா விக்ரஹங்களையும் கண்ணும் கருத்துமாக பாதுகாப்பது, பல்லக்கில் பின்புற தண்டுகள் சுமப்பர்.
10. தாசநம்பிகள்: எம்பெருமானுக்கு நந்தவனம் அமைத்தல், சிவிகையை ( பல்லக்கு) பூமாலைகளால் அழகு படுத்துதல், ஒளி விளக்குகள் ஏற்றுதல்.
இதன் பிறகு கோயிலைச் சேராத நான்கு ப்ரம்மச்சாரிகளை ஏகாங்கிகளாக நியமித்து பணியில் அமர்த்தினார்.
கோயில் சின்னங்கள் பொறிக்கப்பட்ட நான்கு தங்க தண்டங்கள், இரண்டு வெள்ளி தண்டங்கள், மற்றும் மேலே சிறிது வளைக்கப்பட்ட இரண்டு மூங்கில் தண்டங்கள். இவற்றை எடுத்துச் செல்ல எட்டு ஸ்ரீவைஷ்ணவ துறவிகள் நியமிக்கப்பட்டனர். வெளியூர்களைச் சேர்ந்த சாத்தாத முதலிகளுக்கு சில நிரந்தரமான பணிகள் தரப்பட்டன.
பிராமணர் அல்லாத பணியாளர்களும் பத்துக் கொத்துகளாகப் பிரிக்கப்பட்டு அவர்களின் பணியும் நிரந்தரமாக்கப்பட்டது.
''மாமி , அந்தணர்கள் அல்லாதவர்களுக்கும் கோவிலில்பணிகள் கொடுக்கப்பட்டதா ?
''ஆமாம், குழந்தாய் . சமூக வாழ்க்கையில் பொருளாதார அடிப்படையில் மட்டுமே ஜாதிப் பிரிவினைகள் இருக்கலாம் என்பதே ஶ்ரீராமானுஜரின் வாதம் .ஆனால் அன்மீகப் பிரிவு என்பது இந்தப் பிரிவுகளுக்கு அப்பாற்பட்டது. மிகவும் உயர்ந்தது. ஆனால் அதை சரியான கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் .
இ. அந்தணர் அல்லாத பத்துக் கொத்துகளின் கைங்கர்யங்கள்:
1. தானியங்கள் அளப்பவர்: கோவிலின் நித்யபடி தேவைக்கு உரிய தானியங்களை அளப்பவர். உழுதொழில் புரியும் வேளாளர்களையும் நியமித்திருந்தார்.
2. முதலிகள்: வழிபாட்டிற்குரிய பொருட்களை தொகுத்து சேமித்து வைப்பதும், அவ்வப்போது எடுத்துக் கொடுப்பதும்.
உப்பு, மிளகு முதலிய பொடி வகைகளையும் , கோயிற் கதவுகளில் முத்திரை இடுவதற்குரிய களிமம், அரக்கு முதலியவற்றை தயாரிப்பதுமாகும்.
3. தேவதாசிகள்: இவர்களின் கடமைகள் ஸவாமியுடனும், கோயிற் சடங்குகளிலும் தொடர்பு உடையதாக இருந்தது.
(கி.பி. 1323 ஆம் ஆண்டில் முஸ்லீம்கள் திருவரங்கம் கோயிலைக் கைப்பற்றி உட்புகுந்த போது தேவதாசிகளுள் ஒருத்தி கோயிலை பாதுகாத்தாள்)
4. சிற்பிகள், கம்மியர்கள், பொற்கொல்லர்கள்: -தெய்வ வடிவங்களை செதுக்குகின்றவர்--சிற்பிகள்,
கொடிகள் முதலியவற்றிற்கு வண்ணம் தீட்டுபவர்கள்-கம்மியர்கள்.
பெருமாளுக்கு உரிய புதிய நகைகளைச் செய்பவர்களும், பழையவற்றை புதுப்பித்து மெருகேற்றுபவர்கள்-பொற்கொல்லர்கள்.
5. கன்னார்கள், உலோக வேலைக்காரர்கள்:
பித்தளைப் பாத்திரங்களைச் செய்பவர்கள் அல்லது பழுது பார்ப்பவர்கள்-கன்னார்கள்.
கோயில் மணிகள், சேமக்கலங்கள், நிலை விளக்குகள், படிகள், பீடங்கள் ஆகியவற்றுக்குத் தகடுகள் முதலியன செய்பவர்கள்-உலோக வேலைக்காரர்கள்.
6. தையற்காரர், தச்சர், நெசவாளர்:
கோயில் தூண்களிலும், பந்தல் உரைகளிலும் தொங்கவிடப்படும் விதானங்கள், மடிபுத் தொங்கல் கள் முதலியவற்றை தைத்து சரிகை முதலியவற்றால் பின்னி சித்திரவேலை செய்து அழகு படுத்துவர். ஸ்வாமிக்கு பலவித ஆடைகளையும் தயாரிப்பவர்-தையற்காரர்.
மிகப்பெரிய குடைகள், பெரிய ஆலவட்டங்கள், விருதுச் சின்னங்கள் முதலியவற்றை செய்தனர் தச்சர்கள்.
பூமாலைகள் தொடுத்தற்குரிய பட்டு சரிகைகள் சாமரங்கள், தொங்கல்கள் குஞ்சங்கள் தயாரித்தனர் நெசவாளர்கள்.
7. சலவையாளர்கள்: ஈரங்கொல்லி என்றும் அழைப்பார்கள். பெருமாளுக்குச் சாற்றப்படும் பரிவட்டம் முதலிய ஆடைகளை துவைத்து உலர்த்துவர். திருவாராதனத்தின் போது பயன்படுத்தப்படும் தட்டுகள் முதலியவற்றை மூடும் துணி வகைகளை வெளுத்து சுத்தம் செய்வர்.
8. குயவர்கள்:
கோயில் திருமடைப்பள்ளியில் நாள் தோறும் பயன்படுத்தப்பட்டு பின்னர் உடைத்தெறியப்படும் மட்பாண்டங்களை தினமும் புதியனவாகச் செய்து கொடுப்பவர்கள்.
9. படகோட்டிகள்: காவிரியின் அக்கரையிலிருந்து கோயில் திருமடப்பள்ளிக்கு பால் தயிர் போன்ற உணவுப் பொருட்களை கொண்டுவருவர்.
10. இசைவாணர்களும், நடன ஆசிரியர்களும்: இவர்கள் அனைவரும் விழாக்களிலும், விசேஷ நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு சிறப்பிப்பர்.
இப்படி இருபதுக்கும் மேற்பட்ட பிரிவினர் பெரிய குழுவாக அமைந்திருந்து இராமானுஜர் இட்ட ஆணைப்படி ரங்கநாதனுக்கு கைங்கர்யம் செய்து வந்தனர்.
“ராமானுஜார்ய திவ்யாஜ்ஞா வர்த்ததாம் அபிவர்த்ததாம்
ஸ்ரீ மந்ந ஸ்ரீரங்க ஸ்ரீயமநுபத்ரவாம் அநுதினம் ஸம்வர்த்தய!”
ஸ்ரீராமானுஜருடைய சிறந்த ஆணை மேன்மேலும் வளரட்டும். ஸ்ரீயபதியே! திருவரங்கச் செல்வத்தை இடையூறில்லாமல் தினந்தோறும் வளர்த்தருள்வாய் என்று அனைவரும் இன்று எல்லா கோயில்களிலும், வீடுகளிலும் தினந்தோறும் அநுசந்தித்து வருவது இதை வலியுறுத்தும்.
திருவரங்கம் பெரியகோயில் நம்பி என்பவர் ஶ்ரீரங்கம் கோயில் புரோகிதராகவும், புராணம் படிப்பராகவும் தொண்டு செய்துவந்தார். ஆனால் சிறிது கர்வமுடையவராக இருந்தார். யதிராஜர் கூரத்தாழ்வான் மூலம் இவரை நல்வழிப்படுத்தி ஆழ்வானின் சீடராக்கினார். பெரியகோயில் நம்பி ஆழ்வானுக்கு சிஷ்யனாக இருப்பதையே பேறாக கொண்டிருந்தார்.
ஆழ்வானுக்கு ஆசார்யரான எம்பெருமானார் மீது மாறாத காதல் அன்பு ஏற்பட்டதால் அவரை போற்றி நூல் செய்ய எண்ணம் கொண்டார். இருமுறை நூல்களை செய்து யதிராஜரின்பார்வைக்கு வைத்தார். யதிராஜர் அவைகளைப் புறக்கணித்து '' உமக்கு கவி பாட வேண்டும் என்ற அவா உண்டானால் உமக்கு ஆசார்யனான ஆழ்வான், எமக்கு ஆசார்யரான ஆளவந்தார், ஆழ்வார்கள், எம்பெருமான் விரும்பி உறையும் திவ்யதேசங்கள் இவர்களின் பெருமைகளை கூறும் வகையில் ஒரு நூலை செய்யும்'' என்று பணித்தார்.
பெரிய கோயில் நம்பியும் அவ்வாறே செய்வதாகக் கூறி “இராமாநுச நூற்றந்தாதி” என்ற நூலைச் செய்து யதிராஜர், ஆழவான் முதலானவர்கள் பெரிய திரளாக இருந்த போது அந்நூலை வெளியிட்டருளினார்.
இராமாநுச என்னும் திருநாமத்தை கொண்ட நூற்றியெட்டு பாட்டுகளை உடையதாக இருப்பதால் “ப்ரபந்த காயத்ரி” என்றும் அழைக்கப்படுகிறது. இத்திவ்ய பிரபந்தத்தில் யதிராஜருடைய பெருமையை மிக அழகாக வெளிப்படுத்தி உள்ளார். யதிராஜரும் அந்த ப்ரபந்த காயத்திரியைக் கேட்டு மிக உகந்து ஏற்றுக் கொண்டார்.
பெரிய கோயில் நம்பியின் சொல் அமுதமாயிருந்ததால் ‘அமுதனார்’ என்ற திருநாமத்தை மகிழ்வோடு சாற்றினார்.
No comments:
Post a Comment