Sunday 24 June 2018



ஜீவாத்மாக்கள் கரை சேர திவ்யப்ரபந்தம் அருளசெய்த
*ஶ்ரீமந்நாதமுனிகள் அவதார திருநட்சத்திரம்*
இன்று 25/06/2018


பிறந்த காலம் - கி.பி. 823 - கி.பி. 917
பிறந்த ஆண்டு - சோபக்ருத ஆண்டு
மாதம் - ஆனி
திருநட்சத்திரம் - அனுசம்
திதி - பௌர்ணமி (புதன் கிழமை)
இடம் - காட்டு மன்னார் கோயில் (வீரநாராயணபுரம்)
அம்சம் - சேனை முதலியாரின் படைத்தலைவர் கஜாநனர்.

நாதமுனிகள் யோகவித்தை தேவ கான இசை ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்

இவரது இயற்பெயர்திருவரங்க நாதன் ஆனால் இவர் சிறந்த யோகியாக இருந்ததால் இவரை திருவரங்க நாதமுனிகள் என்று அழைத்தனர்

அதுவே பிற்காலத்தில் மருவி நாதமுனிகள் ஆயிற்று

இவர் தம் குடும்பத்தாருடன் பல வட தேச திருத்தலங்களுக்குச் சென்று எம்பெருமானைத் தரிசித்ததோடல்லாமல் அவருக்குத் தாமே திருத்தொண்டும் புரிந்து கொண்டும் இருந்தார்

ஒரு நாள் காட்டுமன்னனார் கோயிலில் திருவருள் புரியும் எம்பிரான் நாதமுனிகள் கனவில் வந்து வீரநாராயணபுரத்திற்கே மீண்டும் வருமாறு அழைத்தார்

இறைவனின் திருவுள்ளப்படி வீரநாராயணபுரம் திரும்பிய நாதமுனிகள் காட்டுமன்னனார் கோயிலில் மலர் திருவிளக்கு கைங்கரியம் கோயில் நந்தவனப் பராமரிப்பு மடப்பள்ளி தளிகை என இறைத் தொண்டு கைங்கர்யம் செய்து வந்தார்

அவ்வாறு செய்து வருகையில் ஒருநாள் அக்கோயிலுக்கு புனிதயாத்திரை வந்த சில வைணவர்கள்

ஆராவமுதே அடியேனுடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்துகரைய உருக்குகின்ற நெடுமாலே சீரார்செந்நெல்கவரி வீசும் செழுநீர்த்திருக்குடந்தை ஏரார்கோலம் திகழக்கிடந்தாய் கண்டேன் எம்மானே

என்னும் திருவாய்மொழி பாசுரம் தொடங்கி

உழலையென்பின் பேய்ச்சிமுலையூடு அவளை உயிருண்டான் கழல்களவையே சரணாகக்கொண்ட குருகூர்ச்சடகோபன்
குழலின்மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
மழலைத்தீரவல்லார் காமர்மானேய நோக்கியர்க்கே

என்னும் பாசுரம் முடிய உள்ள பத்து பாடல்களையும் அவர்கள் பாடினார்

அவற்றைக் கேட்ட திருவரங்க நாதமுனிகள் அப்பாடல்களில் தன்னை மறந்தார்

அவர்களிடம் நீங்கள் கடைசியாகப் பாடிய பாட்டில் ஓராயிரத்துள் இப்பத்தும் என்று வருகிறதே அப்படியென்றால் உங்களுக்கு அந்த ஆயிரம் பாடல்களும் தெரியுமோ? என்று வினவினார்

அவர்களோ இல்லை சுவாமி எங்களுக்கு இந்த பத்து பாசுரம் மட்டுமே தெரியும் என்று பதிலளித்தனர்

அப்பாடலில் குருகூர்ச்சடகோபன் என்று வருவதால் அவர் திருக்குருகூர் சென்று விசாரித்தால் அவற்றைப் பற்றி அறிய இயலும் என்று திருக்குருகூர் சென்றார்

அங்கு எவரும் இதைப்பற்றி அறியவில்லை

இறுதியில் அவர்மதுரகவியாழ்வாரின் சீடனான பராங்குசதாசரை சந்தித்து அவரிடம் இதைப்பற்றி விசாரிக்கையில்

அவர் திருவாய்மொழியும் பிரபந்த பாடல்களும் சில காலம் முன்னமேயே மறைந்துவிட்டன

தம் குருவான மதுரகவியாழ்வார் தமக்களித்த கண்ணிநுண்சிறுத்தாம்பு என்னும் பிரபந்தம் மட்டும் தம்மிடம் இருப்பதாகவும்

அந்த பாசுரங்களை திருப்புளியாழ்வார் முன் பக்தியுடன் அமர்ந்து பன்னீராயிரம் முறை (12,000 முறை) ஓதினால் நம்மாழ்வார் நம்முன் தோன்றி வேண்டுவன அருளுவார் என்று முன்னோர் அனுசந்த்தித்தனர் என பதிலளித்தார்

அதைக்கேட்ட நாதமுனிகள் மிகுந்த உவகையுடன்

பராங்குசதாசரிடம் கண்ணிநுண்சிறுத்தாம்பு பாசுரங்களை உபதேசமாகப் பெற்று நேரே ஆழ்வாரின் திருப்புளியாழ்வாரிடம் சென்று நம்மாழ்வாரின் திருவடி முன் அமர்ந்து தியானம் புரிந்தார்

பன்னீராயிரம் முறை கண்ணிநுண்சிறுத்தாம்பு பிரபந்தத்தை ஒருமுகமாய் ஓதினார்

இதனால் அகம் மகிழ்ந்த ஆழ்வார்

அசரீரீயாய்த் தோன்றி நாதமுனிகளின் வேண்டுதலை வினவினார்

நாதமுனிகளும் திருவாய்மொழி பிரபந்த பாசுரங்களை அடியேனுக்கு அருளுமாறு வேண்டினார்

நம்மாழ்வார் நாதமுனிகளின் முன் தோன்றி திருவாய்மொழி பிரபந்த பாசுரங்களை மட்டுமல்லாது அரங்கநாதன் விஷயமான மற்ற பிரபந்தங்களையும் சேர்த்து அருளி நாலாயிரம் பிரபந்தங்களையும அவற்றின் ஆழ்பொருளையும அஷ்டாங்க யோக இரகசியங்களையும் அருளினார்

அவற்றைப் பெற்றபின்பும் அவர் யோகசமாதியிலேயே நிலைத்திருந்தார்

மீண்டும் காட்டு மன்னனார் பெருமாள அவரை திரும்ப வருமாறு அழைக்கவே மீண்டும் வீரநாராயணபுரம் புறப்பட்டார்

அங்கு அவர் தான் பெற்ற புதையலை அனைவரும் அறியச் செய்தார்

பிரபந்த பாசுரங்களை இனிய இராகம் தாளம் அமைத்தும் அதற்கேற்ற அபிநயம் பிடித்தும் அரங்கன் முன் ஆடினார் இவ்வாறு அரையர் சேவைக்கு வித்திட்டதோடு அல்லாமல் தம் வழிவந்தோரையும் தொடரச் செய்தார்

அரையர் சேவையை முதன்முதலில் தோற்றுவித்தவரும் இவரே

ஸ்ரீ வைணவ ஆச்சாரியப் பரம்பரையின் முதல் ஆச்சாரியரும் இவரே

*நாதமுனிகள்*வாழி*திருநாமம்*

ஆனிதனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே

ஆளவந்தார்க் உபதேசமருளிவைத்தான் வாழியே

பானு தெற்கிற்கண்டவன் சொல் பலவுரைத்தான் வாழியே

பராங்குசனார் சொல்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே

கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே

கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே

நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே

நலம்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஶ்ரீமந நாதமுனிகள் திருவடிகளே சரணம்

ராம் ராம் 🙏🙏🙏

No comments:

Post a Comment