Monday, 16 July 2018

திருப்பாவை முப்பது பாசுரங்கள் பாடினாள் ஆண்டாள்.

அவற்றில் முதல் பத்து, "அவன் திருநாமத்தைச் சொல்லு" என்று உணர்த்துகின்றன. இரண்டாவது பத்து, "உயர்ந்ததான அவன் திருவடியை அர்ச்சனை பண்ணிப்பாரு" என்கிற பாசுரங்கள். மூன்றாவது பத்தோ "அவன் திருவடியிலே ஆத்ம சமர்ப்பணம் பண்ணு" என்று சொல்கின்றன.

ஆக வராஹ மூர்த்தியினிடத்திலே அன்று கேட்ட மூன்று விஷயங்களை முப்பது பாசுரங்களாய்ப் பாடி, ஆண்டாள் அவதாரத்திலே எடுத்துக் காட்டினாள்.
திருப்பாவை என்பது ஒரு நூல் மட்டுமல்ல. அது ஒரு யாகம். ஆண்டாள் பண்ணிய வேள்வி அது. வராஹ மூர்த்தியினிடத்த்திலே பெற்ற உபதேசத்தைக் கொண்டு தனுர் (மார்கழி) மாசத்திலே ஒரு வேள்வி வளர்க்கிறாள்.

வேள்வி செய்வதற்கு கபாலம் என்றொரு பாத்திர சாதனம் உண்டு. அதிலே புரோடாசத்தை வைத்து நெய்யைத் தடவி சமர்ப்பிப்பார்கள். ஆண்டாள் பண்ணிய திருப்பாவையின் மூன்று பத்தும் மூன்று கபால சாதனங்கள் என்றே சொல்லலாம். ஆசாரிய அனுக்கிரஹம் என்கிற நெய்யினால் தடவி அதைச் சமர்ப்பிக்கிறாள்.

வேள்வி பண்ணும்போது ஒவ்வொரு கபாலத்தைச் சமர்ப்பிக்கும் போதும் திரிவிக்கிரமாவதாரனான எம்பெருமானை ஸ்தோத்திரம் பண்ணிச் சமர்ப்பிப்பது மரபு.

திருப்பாவையின் மூன்று பத்தும் மூன்று கபாலங்கள் என்றேன், இல்லையா? ஒவ்வொரு கபாலத்தின் தொடக்கத்திலும் திரிவிக்கிரமனைத் துதிக்கிறாள் ஆண்டாள் என்பதைக் கவனிக்க வேண்டும்.
"ஓங்கி உலகளந்த உத்தமன்" என்று முதல் பத்திலே திரிவிக்கிரமனை நினைக்கிறாள்.

"அம்பர மூடறுத்து ஓங்கி உலகளந்த" என்று அடுத்த பதினொன்று முதல் இருபது வரையிலான பாசுரத்துக்குள்ளே இரண்டாவது முறையாக திரிவிக்கிரம அவதாரத்தைப் பாடுகிறாள்.

"அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி" என்று மறுபடியும், இருபத்தொன்று முதல் முப்பது வரையிலான பாசுரங்களுக்குள்ளே மறுபடியும் திரிவிக்கிரமன் திருவடிகளைப் போற்றுகிறாள்.

ஆகையினாலே, திருப்பாவை ஒரு வேள்வி போன்றது. ஆண்டாள் நமக்கு கீதையின் வழியைக் காட்டி, "நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா" என்று ஆச்ரயித்து, அவனையே திருக்கல்யாணமும் பண்ணிக் கொண்டாள்.

No comments:

Post a Comment