Sunday 12 August 2018

திருவாடிப்பூரம் 2018

நாளை ஆடிப்பூரம்.

ஆகஸ்ட் 13 -ஆடிப்பூரம்


இந்து மதத்தில், எத்தனையோ தெய்வப் பெண்களைப் பற்றி படித்திருப்போம். உலக நன்மைக்காக லட்சுமி தாயாரே சீதா, ருக்மணி என்ற அவதாரங்களை எடுத்து பூமிக்கு வந்த போது, பகவான் விஷ்ணுவும் ராமனாக, கிருஷ்ணனாக மனித அவதாரமெடுத்து பூமிக்கு வந்தார். இவர்களும் தங்கள் பக்தியின் காரணமாக ராம, கிருஷ்ணரை கணவராக அடைந்தனர்.

ஆனால், பூமாதேவி, ஆண்டாளாகப் பூமியில் பிறந்த போது, அவளுக்காக, பகவான் பூமியில் பிறக்கவில்லை. கோவிலிலே அர்ச்சாவதாரமாக (சிலை வடிவில்) சயனம் கொண்டிருந்த பெருமாளை, கணவனாக அடைய வேண்டும் என, மனதிற்குள் உறுதி பூண்டாள் ஆண்டாள்.

மகளின் இந்த விசித்திரமான ஆசையை அறிந்த பெரியாழ்வார், 'மானிடப் பெண் ஒருத்தி, கோவிலில் சிலையாக இருக்கும் கடவுளை எவ்வாறு கணவனாக அடைய முடியும்...' என, நினைத்து வேதனைப்பட்டார். ஆனால், ஆண்டாள் அதை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அவள் மனதில், பெருமாள் மட்டுமே நீக்கமற நிறைந்திருந்ததால், கண்ணன் சிலையாக இருந்தால் என்ன, அவன் தான் தன் கணவன் என்பதில் உறுதியாக இருந்தாள்.

பெரியாழ்வார், தினமும் பூமாலை கட்டி பெருமாளுக்கு சூட எடுத்துச் செல்வார். அதை யாருக்கும் தெரியாமல் எடுத்து, அந்த மாலை, பெருமாளுக்கு பொருத்தமாக இருக்குமா என, தன் கழுத்தில் அணிந்து அழகு பார்ப்பாள் ஆண்டாள். ஒருசமயம், அவள் அவ்வாறு அழகு பார்த்த போது, அவளது கூந்தல் முடி ஒன்று அதில் ஒட்டிக்கொள்ள, குட்டு உடைந்து போனது. பெரியாழ்வார் அவளை கண்டித்து, வேறு ஒரு மாலை கட்டி எடுத்துச் சென்றார். ஆனால், பெருமாளோ, 'பக்தை அணிந்து தரும் மாலை தான் வேண்டும்...' எனச் சொல்லி, ஆண்டாளின் காதலை ஏற்றுக் கொண்டார்.

கடவுள் மேல் அவள் கொண்ட ஆத்மார்த்தமான பக்தியும், காதலும், சிலையாக இருந்த தெய்வத்தையும், மனம் உருக வைத்து, அவளை ஏற்றுக் கொள்ள வைத்தது. தான் நினைத்த திருமாலையே கணவனாக அடைந்து, எந்த மானிட பெண்ணும் செய்யாத சாதனையைச் செய்தாள் ஆண்டாள். அந்த தெய்வமும், அவள் வாழும் காலத்திலேயே அவளுக்கு அனுக்கிரகம் செய்தது.
தன் மனதையே யாக குண்டலமாக்கி, தன்னுடைய பக்தியையும், காதலையும் நெருப்பாக்கி, தன் ஆன்மாவையே ஹவிசாக இட்டு, திருப்பாவை என்னும் மந்திரத்தால் அவனைத் துதித்து, தான் நினைத்ததை சாதித்தாள் ஆண்டாள்.

இத்தகைய வைராக்கிய உணர்வு கொண்ட இந்த சாதனைப் பெண்மணி, ஆடிமாதம் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தாள்.
தங்கள் லட்சியத்தில் ஒருமித்த ஈடுபாடும், அதை அடைய வேண்டும் என்ற வைராக்கிய உணர்வும் இருந்தால், நினைத்ததை சாதிக்கலாம் என்பதற்கு, ஆண்டாளே வாழ்ந்து காட்டியுள்ளாள்!


👇👇👇👇👇👇

No comments:

Post a Comment