Sunday, 11 November 2018

ஸ்ரீ ராமானுஜரும், ஸ்ரீமணவாள மாமுனிகளும்



இன்று(11/11/2018),ஐப்பசி மூலம்-ஸ்ரீமணவாள மாமுனிகள்/பெரிய ஜீயர்/ஸ்ரீசடகோப முனி/ஸ்ரீயதீந்த்ர ப்ரவணர்/அழகிய மணவாளர்/ரம்ய ஜாமாதர முனி/அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்/காந்தோபயந்த்ரூ முனி/வரவர முனி/இராமானுசன் பொன்னடி/செளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ரர்---ஸ்வாமிகளின் 649ஆவது,திருநட்சித்திரம். ஸ்ரீமணவாள மாமுனிகள்,ஸ்ரீ ராமானுஜரின் மறு அவதாரம்; ராமானுஜர் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்ற ஸ்ரீமந் நாராயணனால்,
ஸ்ரீவைகுண்டத்திலிருந்து
அனுப்பி வைக்கப்பட்ட ஆதிசேஷ அவதாரம் என்பது அனைவரும்அறிந்ததே.ராமானுஜர் மற்றும் மாமுனிகளின் வாழ்க்கைநெறி/கைங்கர்ய ங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் பல தெய்வீகத் தன்மைகள்/ஒற்றுமைகள்புலப்படுகின்றன அந்த நோக்கத்தில் அடியேனின்,ஒரு குறு முயற்சி.

1.ராமானுஜருக்கு அவருடைய தாய்மாமாவும்,ஸ்ரீஆளவந்தாரின் சீடருமான,பெரிய திருமலைநம்பிகள்'இளையாழ்வார்' என்று பெயரிட்டார்.
மாமுனிகளுக்கு அவருடைய தாய்வழித் தாத்தாவும்,ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் சீடருமான ஸ்வாமிகள்
'அழகியமணவாளன்'என்று பெயரிட்டார்.

2.இளையாழ்வார்,தம்வைணவ வாழ்க்கைநெறிக்கும்,கைங்கர்
யங்களுக்கும் இல்லறம் தடை யாக இருப்பதை உணர்ந்து துறவறம் மேற்கொண்டார். காஞ்சி தேவப்பெருமாளிடம் காஷாயம் பெற்று'எதிராஜர்' ஆனார்.அழகிய மணவாளர் லெளகீக வாழ்க்கையின் தீட்டு முதலான தோஷங்கள் தம் கைங்கர்யங்களுக்கு இடையூறாக இருப்பதால் துறவறம் மேற் கொண்டார்.தம் ஆசார்யர்திருவாய்
மொழிப்பிள்ளையின் சந்நியாசி சீடர் ,சடகோபயதி
யிடம், ஆழ்வார் திருநகரியில் துறவு பூண்டார்.'சடகோப முனி' ஆனார்.

3.ராமானுஜர் அவரது மானசீக ஆசார்யர் ஆளவந்தாரின் ஆசைப்படி,ஆசார்யர் திருவரங்கப் பெருமாள் அரையரால் ஸ்ரீரங்கம் அழைத்து வரப்பட்டு,ஸ்ரீ வைஷ்ணவ பீடத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.மாமுனிகள் தம் ஆசார்யர் திருவாய்மொழிப் பிள்ளையின் ஆணைப்படி ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீவைஷ்ணவத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

4.ஸ்ரீரங்கம் வந்த ராமானுஜரை தம்முடைய தகுதிப் பெயரான
"உடையவர்"(அனைத்து லீலாவிபூதிகளையும்,நித்ய விபூதியையும்உடையவர்)என்னும் பெயரால் ஸ்ரீரங்கநாதப் பெருமாள்அழைத்தார்.ஸ்ரீரங்கம் வந்த மாமுனிகளை-சடகோபமுனியை,தம் பெயரான"அழகியமணவாளன்"என்னும்திருநாமத்தால்அழைத்தார்,ஸ்ரீரங்கநாதர்.(மாமுனிகளின் இயற்பெயரே அழகியமணவாளன்;ஆனாலும்,துறவுபூண்டபின்'சடகோபமுனி'எனனும் பெயர்பெற்றார். ஆனால் நம்பெருமாள் அழகியமணவாளன் என்னும் பெயரிட்டே அழைத்தார்.அந்தப் பெயராலேயே மணவாள மாமுனிகள் என்னும் பேறு பெற்றார்).

5.உடையவருக்கு, சேரன் மடத்தை இருப்பிடமாகத் தருமாறு கோவில் மணியகாரரை நியமித்தார் நம்பெருமாள்.அந்த சேரன்மடத்தில் தான் உடையவர் ஸ்ரீரங்கத்தில் இருந்த காலம் முழுதும் வாசம் செய்தார்.(வடக்கு உத்திர வீதியில் இருக்கும் இன்றைய ஸ்ரீரங்கநாராயண ஜீயர் மடம்).
மாமுனிகளுக்கு,பல்லவராயன் மடத்தை இருப்பிடமாகத் தருமாறு நியமித்தார் நம்பெருமாள்.மாமுனிகள் தம் அந்திமக்காலம் வரை அந்தத் திருமாளிகையில் தான் இருந்தார்.(தெற்கு உத்திர வீதியில் இருக்கும் மணவாள மாமுனிகள் சந்நிதி).

6.ராமானுஜரிடம்சங்கும், ஆழியும் பெற்று அவரைத் தம் ஆசார்யராகஏற்றுக்கொண்டார் திருவேங்கடவர்(திருக்குறுங்குடி நம்பியும் உபதேசம் பெற்றும், திருமண்காப்பு சேஷம் தரித்தும் ராமானுஜரை ஆசார்யராகஏற்றுக்கொண்டார்).திருவேங்கடவர் திருமலை கோவில் வளாகத்தில் தம் ஆசார்யர் ராமானுஜருக்கு மட்டுமே, சந்நிதி தந்து ஏற்றம் அளித்துள்ளார்.திருவேங்கடவர் அனந்தாழ்வானுக்கு அருளிய தனியனில் "ஸ்ரீமத் ராமானுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்"என்று அனந்தாழ்வானை ராமானுஜரின் பொன்னடி என்று போற்றுகிறார்.

ஸ்ரீரங்கநாதர்-நம்பெருமாள், மணவாளமாமுனிகளிடம்,திருவாய்மொழி ஈடு காலட்சேபம் கேட்டு,தம் ஆசார்யராக ஏற்றுக்கொண்டார்.ஆசார்யருக்கு "ஸ்ரீசைலேச தயாபாத்ரம், தீபக்யாதிகுணார்ணவம்,
யதீந்த்ரப்ரவணம்,
வந்தே ரம்ய ஜாமாதர முநிம்" என்னும் பிரசித்தி பெற்ற தனியனைச் சமர்ப்பித்தார். இங்கும் 'யதீந்தரப்ரவணர்' என்று ராமானுஜர் மீது மாமுனிகள் வைத்திருக்கும் பக்தியைக்கொண்டாடுகிறார்.ஆசார்யர் மாமுனிகளுக்கு, தம்முடைய சொத்தான சேஷபீடத்தையே,தந்து ஏற்றம் அளித்தார் நம்பெருமாள்.

7.ராமானுஜர்,திருவேங்கடவர் சந்நிதியில்"வேதார்த்த ஸங்க்ரஹம்" என்னும் உபநிஷத்துகளின் சாரத்தை இயற்றிஅருளினார்.மாமுனிகள், திருவேங்கடவருக்கு திருப்பள்ளியெழுச்சி பாடச் செய்தார். தம் சீடர்
பிரதிவாதி பயங்கரம் அண்ணா ஸ்வாமிகளிடம் நியமிக்க அவர் இயற்றியதிருப்பள்ளியெழுச்சிப் பாசுரங்களே,
"கெளசல்யா ஸுப்ரஜாராமா, பூர்வா ஸந்த்யா"என்று தொடங்கும் வேங்கடேச சுப்ரபாதம் ஆகும்.

8.ராமானுஜர் பிரம்ம சூத்திரங்களுக்கும்,
உபநிஷத்துகளுக்கும் விரிவுரைகளாக"ஸ்ரீபாஷ்யம்"
முதலான கிரந்தங்களை இயற்றினார்.மாமுனிகள்( பிள்ளை லோகாசார்யரின்) ரஹஸ்ய கிரந்தங்களுக்கு விரிவுரைகள் இயற்றினார்.

9.ராமானுஜர்,தம் மானசீக ஆசார்யர் ஆளவந்தாரின் விருப்பத்துக்கிணங்க,
திருவாய்மொழிக்கு விரிவான உரை எழுதச் செய்தார் (திருக்குருகைப் பிள்ளானின் ஆறாயிரப்படி வ்யாக்யானம்). மாமுனிகள் தம் ஆசார்யர் திருவாய்மொழிப்பிள்ளையின் நியமனத்துக்கு ஏற்ப திருவாய்மொழி ஈடு காலட்சேபம்செய்வதையே (நம்பெருமாளுக்கும் கூட)
முக்கியமான கைங்கர்யமாகச் செய்து வந்தார்.

10.பெரிய கோவில் ஜீயர், என்று,பெரிய கோவில் பொறுப்பு அதிகாரியாக இருந்த திருவரங்கத்து அமுதனார் ராமானுஜரைச் சரணடைந்து அவர்சீடரானார். பெரிய கோவில் சாவியை ராமானுஜரிடம் ஒப்படைத்தார்.
உடையவரைப் போற்றும் பிரபந்ந காயத்ரி என்று போற்றப்படும்"இராமாநுச நூற்றந்தாதி" அருளித் தந்தார்.

பெரிய கோவிலில் முக்கிய கைங்கர்யங்களைச் செய்து வந்த,கோவில் கந்தாடை அண்ணன் ஸ்வாமி, மாமுனிகளைச் சரணடைந்து,
ஆசார்யராகஏற்றுக்கொண்டார்மாமுனிகள் மீது"மாமுனிகள் கண்ணிநுண் சிறுத்தாம்பு" பாடினார்.

11.ராமானுஜர் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தைப் பரப்ப 74 சீடர்களை நியமித்து அவர்களைச் 'சிம்மாசனாதிபதிகள்' ஆக்கினார்.மணவாள மாமுனிகள் 8 பிரதான சீடர்களை நியமித்து அவர்களை 'அஷ்டதிக்கஜங்கள்' ஆக்கினார்.

12.ராமானுஜரும்,மாமுனிகளும் தங்களை,ஆதிசேஷ அவதாரங்கள் என்று சில வைபவங்கள் மூலம் உணர்த்தினர்.

13.ராமானுஜர் பெரும்பாலும் 'திருப்பாவை'யை அனுஸந்தானம் செய்து கொண்டேஇருப்பார்.மாமுனிகள்'த்வயமந்த்ரம்'அனுஸந்தானம் செய்து கொண்டே இருப்பார்.

14.ராமானுஜர்,திருமாலிருஞ்சோலை அழகருக்கு,நூறு தடா அக்காரவடிசலும்,வெண்ணெயும் சமர்ப்பித்து விட்டு ஸ்ரீவில்லிபுத்தார் சென்ற போது,ஆண்டாள் தம் நிலையிலிருந்து சற்றே முன்னே வந்து "நம்அண்ணாவோ"என்று விழித்தார்.ஆண்டாளுக்கு அண்ணனான உடையவர் 'கோவில்அண்ணா/கோதாக்ரஜர்'என்று போற்றப்பட்டார்.

மார்கழி மாத நீராட்டு உற்சவத்துக்கு,ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற மாமுனிகள், ஏழுநாள் நீராட்டு உற்சவம் முடிந்து தான் சென்று சேர முடிந்தது.நீராட்டு உற்சவம் சேவிக்க முடியவில்லையே,என்று ஏங்கிய மாமுனிகளுக்காக, எட்டாம் நாளன்றும்-தைமுதல்நாள்-நீராட்டு சேவை சாதித்தார் கோதைநாச்சியார். அந்த வைபவம் இன்றும் தை முதல்நாள் நடைபெறுகிறது.

15.ராமானுஜர் தம் அந்திம திசை வரை, தம் சீடர்களுக்கு நல்வார்த்தைகளை உபதேசம் செய்து கொண்டேயிருந்தார்.
மாமுனிகளும் காலட்சேபம்/கிரந்தங்களை இயற்றுதல் ஆகியவற்றை இறுதி வரை செய்து கொண்டேயிருந்தார்.

16.ராமானுஜர் தாம் வாழ்ந்த காலத்திலேயே ,அவருடைய திருமேனிகள் இரண்டை நிர்மாணித்தபொழுது,அவற்றுக்குத் தாமே உகந்து மங்களாசாசனம் செய்து அருளினார்.அவற்றில் ஒன்று ஸ்ரீபெரும்புதூரில் நாம் சேவிக்கும் "தான் உகந்த திருமேனி".மற்றொன்று திருநாராயணபுரத்தில்(மேல்கோட்டை) எழுந்தருளியுள்ள "தமர் உகந்த திருமேனி"

மாமுனிகளும், தாம் வாழ்ந்த காலத்திலேயே தம் திருமேனிகள் இரண்டுக்கு மங்களாசாசனம் செய்து அருளினார்.தம் சீடர்களில் ஒருவரான அப்பாச்சியார் அண்ணாவின் வேண்டுதலு க்கு இணங்க,மாமுனிகள் தாம் உபயோகித்த ராமானுஜம் என்னும் சொம்பை உருக்கி இரண்டு திருமேனிகள் செய்யப் பணித்தார்.அவற்றில் ஒன்று சிங்கப் பெருமாள் கோவில் (பூந்தமல்லி) முதலியாண்டான் திருமாளிகையில் எழுந்தருளப்பண்ணப்பட்டு ள்ளது.இன்னொரு திருமேனியை நாங்குநேரி வானமாமலை மடத்தில் சேவிக்கலாம்.(முதல் அஷ்டதிக்கஜமும்,வானமாமலை மடத்தின் முதல் ஜீயருமான பொன்னடிக்கால் ஜீயருக்குத் தந்தருளியது).

17.ராமாநுஜர் அவதாரம் செய்து, வேதத்துக்குத் தவறான அர்த்தம் கற்பித்த வந்தபுறச்சமயவாதிகளையும்,குதிர்ஷ்டிகளையும் வாதில் வென்றும்,கிரந்தங்களை இயற்றியும் ஸ்ரீமந்நாராயணின்
விசிஷ்டாத்வைத நெறியை நன்றாக நிலை நாட்டினார்.74 சிம்மாசனாதிபதிகளை நியமித்து அவர்கள் வம்சத்தார் மூலம் என்றென்றும் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் செழித்து வளர வழிவகை செய்தார்.

12/13 ஆம் நூற்றாண்டுகளில் முஸ்லீம் படையெடுப்புகளால்,
இந்து மத சம்பிரதாயங்களும்,
கோவில்களும் பெரிதும் பாதிக்கப்பட்டன.வைணவ சம்பிரதாயத்துக்கும் பின்ன
டைவு ஏற்பட்டது.அந்தக் கால கட்டத்தில் தான், 1370 ஆம் ஆண்டு மாமுனிகள் அவதரித் தார்.அவர் செய்த ரஹஸ்யக் கிரந்த வியாக்யானங்களும், திருவாய்மொழி காலட்சேபங் களும் பல வித்வான்களையும் சாஸ்த்ர விற்பன்னர்களையும் அவருக்குச் சீடர்களாக்கின. அவர்கள் மூலம் வைணவம் பெரிதும் வளர்ந்தது.திவ்ய தேசங்களில் கைங்கர்யம் செழித்தது.மாமுனிகளால் உடையவர் காலத்தில் இருந்த மேன்மையை மீண்டும் அடைந்தது வைணவம்!!

18.ராமானுஜர் மனத்திலும், மாமுனிகள் மனத்திலும் இருந்து அருளும் பெருமான்:
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அமுதனார், இராமாநுச நூற்றந்தாதியில்
"இருப்பிடம் வைகுந்தம், வேங்கடம்,மாலிருஞ்சோலை என்னும்,
பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர் அவை தம்மோடும் வந்து,
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து இன்றவன் வந்து
இருப்பிடம்"என்று பரவாசுதேவரானாலும்,திருவேங்கடவரானாலும்,அழகரானாலும் அவரவர் தம் இருப்பிடங் களுடனே வந்து,ராமானுஜர் மனதில் இருந்து அருள்வார்கள் என்று பாடுகிறார்.

பிரதிவாதி பயங்கரம் அண்ணா,ஸ்ரீவேங்கடேச மங்களாசாசனத்தில்,
"ஸ்ரீமத் ஸுந்தர ஜாமாத்ரு முநி மாநஸ வாஸிநே!
ஸர்வலோக நிவாஸாய ஸ்ரீனிவாஸாய மங்களம்!!"
--(மணவாள மாமுனிகள் உளத்திருந்து பேருலகக்
கணம் புரந்து,களித்தருளும் வேங்கடவா மங்களங்கள்) என்று பாடுகிறார்.

No comments:

Post a Comment