Thursday, 22 November 2018

கார்த்திகை, கார்த்திகையில் அவதரித்தக் கலியன்” (ஸ்ரீரங்கம் முரளீபட்டர்)


நன்றி 
(ஸ்ரீரங்கம் முரளீபட்டர்)


திருப்பாணாழ்வார் உள்ளத்தினைக் கவர்ந்த கள்வனான அரங்கன், கள்வனாக மாறிய திருமங்கையாழ்வார் மனதினையும் கவருகின்றார். அரங்கன் கள்ளனுக்கெல்லாம் கள்ளன். இவரது இயற்பெயர் நீலன். கள்ளர் குலத்தவர். சோழபேரரசின் தளபதி. இவர் திருவாலி என்னும் ஊரில் குறையலூர் என்ற சிற்றூரில் ஆலி நாட்டு பெரிய நீலன் என்ற படைத்தளபதிக்கும் வல்லித்திரு எனும் நற்குண மங்கைக்கும் மகனாகப் பிறந்தார். போரில் எதிரிகளை கலங்கடித்தவர். பின்னர் சோழமன்னன் அவரை ‘திருமங்கை’ என்னும் சிற்றரசுக்கு அரசனாக்கினான். 

வீர இளைஞனான நீலன் திருவெளளக்குளம் என்ற ஊரிலுள்ள ஸ்ரீநிவாஸர் கோவிலில் குமுதவல்லி எனும் கபிலமுனியின் சாபத்தினால் மானுடவாழ்வெடுத்த தேவமகளை, தேவதையை, அழகு என்ற சொல்லுக்கே இலக்கியமானவளை, மஹாஞானியை பார்க்கின்றாh. தன் மனதினை பறிக்கொடுக்கின்றார். குமுதவல்லி இரண்டு கட்டளையிடுகின்றார்.

1) பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு திருமாலடியவனாய் மாறவேண்டும்.
2) அடியார்கள் அனைவருக்கும் தினமும் அன்னதானம் செய்ய வேண்டும்.
பஞ்ச சம்ஸ்காரம் யாரிடம் செய்து கொள்வது?. என்றும் உயர்ந்ததையே நாடும் நீலன் அன்று
திருநறையூர் ஸ்ரீநிவாஸனையே தேர்ந்தெடுத்தார் குருவாக. மன்னன் சித்தம் கேட்ட பட்டர் செய்வதறியாது திரைசேர்த்து வெளியேறினார். கருவறையில் ஸ்ரீநிவாஸன் எதிரே நீலன்!
பிடிவாதமாக அவர்தான் தமக்கு பஞ்சசம்ஸ்காரம் செய்ய வேண்டுமென்று கண்மூடி அசையாது அவரையே தியானித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம்தான் என்றாலும் கடுமையான தபஸ் அது.
மெய்யுருகி நின்றால் வெண்ணையுண்டவாயன் தான் உருக ஆரம்பித்து விடுவான். ஸ்ரீநிவாஸனின் சக்கரக்கையும் சங்கக்கையும் நீலனின் புஜங்களை தீண்டியது. நெற்றியில் ஊர்த்வபுண்டரமிட்டது. பரகாலன் என்று நாமமிட்டு அழைத்தது. திருமந்திரத்தை உபதேசித்தது. நீலனின் களை மாறியது. தேஜஸ் ஒளிர்ந்தது. புனித குமுதவல்லியுடன் திருமணம் இனிதே நடந்தது. அன்னதானம் ஆலிநாட்டில் சிறப்பானது. ஆலிநாடே அதிசயபட்டது. மன்னன் பரகாலன் புகழ் எட்டுதிசைகளிலும் பரவியது.

கப்பம் கட்டாத பரகாலனுடன் போரிட்டு வெல்லமுடியாது என்றறிந்த சோழமன்னன் தந்திரமாக அவனை ஒரு கோவிலில் சிறை வைத்தான். மூன்று நாட்களாக உண்ணாவிரதமிருந்த பரகாலனின் கனவில் பேரருளாளன் அத்திகிரி அருளாளப் பெருமாள் வரதன் தோன்றினான். காஞ்சிக்கு வரப் பணித்தான். கடனைத் தீர்ப்பதாக அறிவித்தான். அருளாளின் ஆணையை அரசிற்குத் தெரிவித்தார் பரகாலன். பரகாலன் சத்தியம் தவறாதவர் என்று நன்குணர்ந்த அரசன் ஒரு சிறு குழுவினை அவரோடு காஞ்சி அனுப்பி வைத்தார். மீண்டும் பரகாலன் கனவில் தோன்றிய அருளாளன் ஒரு புதையல் இருக்கும் இடத்தைக் காண்பித்துக் கொடுத்தார். வேகவதி ஆற்றங்கரையில் தோண்டினார் பரகாலன். பெரும் புதையலை கண்டெடுத்தார். அரசுக்கு செலுத்தவேண்டிய கப்பம் செலுத்தினார். மீதமானதை அன்னதானத்திற்கு எடுத்து வைத்தார். திருமங்கை விளைச்சலில் அரசுக்கு சேரவேண்டிய நெல்லைக் கேட்டனர் குழுவினர். அருளாளனின் மீது பாரத்தை போட்டுவிட்டு கண்ணை
மூடிக்கொண்டு உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஆற்று மணலைக் காட்டினார் பரகாலன். என்ன ஆச்சர்யம்! அவர் காட்டிய இடமெல்லாம் மணல்துகளனைத்தும் நெல்மணிகளாயின! பரகாலன் பெருமையினை, தெய்வம் துணை நின்றதையறிந்த அரசன் தவற்றுக்கு வருந்தினான். அவரை சுதந்திரமாக திருமங்கையை ஆளவிட்டார்.

நீலன் மனப்பூர்வமாக வைணவனாக உறுதி பூண்டார். திருநறையூர் நம்பி அருள் புரிந்தார் இவரின் உறுதி கண்டு!. அன்னதானத்தின் பயன் அருளாளன் வரதன் அருள்புரிந்தார்.

ஆலிநாட்டின் பொருளாதாரம் வலுவிழந்தது. வளமுள்ளவரிடத்து கொள்ளயடித்தாவது இந்த கைங்கர்யத்தைச் செய்ய துணிபு பூண்டார் பரகாலன். வழிப்பறிக் கொள்ளையனாய் மாறினார்.
வயலாளி மணவாளனும் தாயாரும் புதுமணத் தம்பதியனராய் மாறினர். இவர்களின் ஆபரணங்கள் அனைத்தும் கொள்ளையடித்த பரகாலனால் நம்பெருமாள் கால்விரலில் அணிந்திருந்த விரலணியை கழற்ற இயலவில்லை. பரகாலன் பல்லால் கடித்தாவது கழற்ற முயலுகின்றார். அவரின் தலை இறையின் பாதங்களில் முட்டுகின்றது. பல்லினால் கடிக்கின்றார். தீண்டிய வேகத்தில் மெய்வண்ணம் உணர்கின்றார். திருமந்திரம் மீண்டும் உபதேசித்து பேரொளியாய் மறைகின்றான் மாயவன். 

கவி பிறக்கின்றது கள்வனுக்கு!
பொய் வண்ணன் மனத்தகற்றி புலனைந்தும் செலவைத்து
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை
மை வண்ணம் கருமுகில் போல் திகழ் வண்ண மரதகத்தின்
அவ்வண்ண வண்ணனை யான் கண்டது தென்னரங்கத்தே
பொய்கள் போன்ற பலவிதமான பாவச் செயல்களை மனதிலிருந்து நீக்கி, ஐந்து புலன்களையும் தகாத வழிகளில் போகாத வண்ணம் நிலைநிறுத்தி, ஆத்மாவுடன் சேர்ந்து முழு உள்ளத்துடன் தன்னை வணங்குபவர்களுக்கு, தனது உண்மையான குணங்கள் முழுவதும் காண்பிப்பவனை, கண் மைப் போன்ற கரிய நிறமும், கரியமேகம் போல் ஒளிவீசும் நிறமும், மரகதம் என்ற ரத்தினத்தினைப் போன்ற பச்சை நிறமும் உடைய பெரியபெருமாளை, நான் திருவரங்கத்தில் கண்டு வணங்கினேன். 

திருமங்கையாழ்வார் பரம பாக்யசாலி. பகவானால் பஞ்சசம்ஸ்காரம் செய்யப்பட்ட ஒரே வைணவர் இவர்தான்!. இவர் ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் செய்த பல கைங்கர்யங்கள் கணக்கிலடங்கா! ஆனால் இந்த கைங்கர்யத்தினை நிறைவேற்ற இவர் கையாண்ட முறை வித்யாசமானது! எது வேண்டுமானாலும் பகவத் கைங்கர்யத்திற்காக துணிவோடு செய்வார். இவர் செய்த கைங்கர்யங்களுள் சாட்சியாகயிருப்பது இவரால் கட்டப்பட்ட மதில்களும், விமான, மண்டப, கோபுரங்களும் இவர் பாடிய பாசுரங்களும்தாம். திருவரங்கம் திருச்சுற்றில் நான்காவது திருச்சுற்று ஆலிநாடன் திருச்சுற்று என்றே திருமங்கை மன்னன் திருப்பணியை நினைவுகூறும் வகையில் அமைந்துள்ளது. 

நாகப்பட்டினத்தின் அருகேயுள்ள ஒரு புத்தர் கோவிலிலுள்ள சொர்ணத்தினாலான, எளிதில் திருடவே முடியாத, ஒரு புத்தர் சிலையை வெகு சாமர்த்தியமாகக் கொள்ளையடித்தார். பயணக்கப்பல் ஒன்றில் தன் பரிவாரங்களோடு பயணமும் செய்து பொய்வழக்காடி அந்த கப்பல் முதலாளியிடமிருந்து நிறைய தனத்தினைப் பெற்றார். இவையனைத்தையும் திருப்பணிக்காக செலவழித்தும் ஊழியர்களுக்கு சம்பளபாக்கி!. அவர்களனைவரையும் ஒரு ஓடத்தில் ஏற்றினார். அக்கரைச் சேர்ந்தவுடன் தருகிறேன் என்று கூறி கொள்ளிடம் நடு ஆற்றில் ஓடத்தைக் கவிழ்த்து அவர்கள்தம் பிறவிக்கடனை இவர் கழித்தார். அவரவர் உறவினர் இவரை மடக்க, இவரது ஸ்வப்னத்தில் (இங்குமா!?), அரங்கன் எழுந்தருளி உறவினர்களளனைவரையும் காவேரி ஸ்நானம் செய்து அழகிய மணவாளன் திருமண்டபத்திலே நின்று அவரவர் உறவினர் பெயரைக் கூப்பிட்டு காத்திருக்கச் சொல்லி மறைந்தார். அவ்வாறே ஆழ்வாரும் ஏற்பாடு செய்தார். மாண்டோர் அனைவரும் மீண்டனர். அவர்களனைவரும் அவர்கள்தம் உறவினர்களிடத்து ‘ஆழ்வாருடைய நிர்ஹேதுக பரம க்ருபையுண்டானபடியினாலே நாங்கள் பெரியபெருமாள் திருவடிகளையடைந்தோம்! நீங்கள் ஆழ்வார் திருவடிகளிலே அபசாரப்படாதீர்கள். சிலகாலம் இந்த ஸம்ஸார வாழ்க்கையினைக் கழித்து விட்டு ஆழ்வார் திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள்!’ என்று விண்ணப்பித்து மீண்டுபோனார்கள்.

இந்த க்ஷணம் அடியேன் சிலகாலம் முன்பு என் மனதில் போட்டு வைத்திருந்த ஒரு கேள்விக்கு அரங்கன் பதிலளித்துள்ளார். ஸ்ரீரங்கம் கோவிலில் முகலாயர்கள் படையெடுப்பின் போது ஆயிரக்கணக்கான வைணவர்கள் இறந்தார்களே? கோவில் வளாகத்திற்குள்ளேயே இறந்து போனார்களே? அப்பொழுதெல்லாம் ஏன் அரங்கன் அவர்களைக் காப்பாற்றவில்லை? அரங்கனுக்கு அவர்களைக் காப்பாற்றக் கூடிய சக்தியில்லையா? என்றெல்லாம் தோன்றியது. என்றாவது ஒரு நாள் பதில் தருவான் என்று மனதின் ஒரு மூலையில் கிடத்திய இக்கேள்விக்கு இன்று பதில் கிடைத்துள்ளது. அரங்கனுக்குக் கைங்கர்யம் பண்ணிய அடியார்களை ஆற்றில் மூழ்கடித்தார் திருமங்கைமன்னன்.     நம் பார்வைக்கு அநியாயமாகக் கொல்லபட்ட அவர்களை அரங்கன் ஆட்கொண்டான். அவர்கள் பெரியபெருமாள் திருவடிகளடைந்ததை பிரத்யட்சமாக அழகிய மணவாளன் மண்டபத்தில் மீண்டு வந்து உணர்த்தினார்கள். 

இதை நாம் பிரமாணமாகக் கொள்ள வேண்டும்! அரங்கநகரப்பனைக் காக்கும் பொருட்டு தன் இன்னுயிர் துறந்தவர்களை சும்மாவா விடுவான் அரங்கன்? அவர்களைனைவரையும் அரங்கனே அவர்களது ஊழ்வினையறுத்து தம் திருவடிகளில் சேர்த்துக் கொண்டுள்ளார். உயிர் கூட்டினை விட்டு சாமான்யர்களின் உயிர்பறவை பிரிவதென்பது வலிதான். இவர்களனைவரும் சற்று கடுமையான வலியினைத் தாங்கியுள்ளனர். எவர் மூலமோ கொடுவாள் எடுத்து ஊழ்வினையறுத்து, அவனது நிர்ஹேதுக கிருபையினால் அவன் திருவடிகளையடைந்துள்ளனர். அவனது திருவடிகளடைந்து பரமபதம் சென்றாலும் அவர்கள் அவ்வப்போது திருவரங்கமும் வந்து சென்று அரங்கனை தரிசிக்கின்றார்கள். இதனை நான் சொல்லவில்லை. ஆழ்வாரே அறிவிக்கின்றார்! இதோ அவர் பாடல்!
ஏனமீனாமையோடு அரியும் சிறுகுறளுமாய்
தானுமாய தரணித்தலைவனிடமென்பரால்
வானும் மண்ணும் நிறையப்புகுந்து ஈண்டி வணங்கும்- நல்
தேனும் பாலும் கலந்தன்னவர்சேர் தென்னரங்கமே!
பரமபதத்தில் உள்ளவர்களும், இந்த பூமியிலுள்ளவர்களும் ஊர் முழுவதும் நிறைந்துள்ளது போல் இங்கு வந்து ஒன்றாகத் திரண்டு வணங்கும் இடமும், சுவையும் மதுரமும் உள்ள தேனும் பாலும் இரண்டற ஒன்றாகக் கலந்தது போல் இங்கு உள்ள அடியார்கள் சேர்ந்து நிற்கவும் ஆகிய திருவரங்கமானது - வராகமாகவும், மீனாகவும், ஆமையாகவும், நரசிம்மமாகவும், வாமனனாகவும் அவதாரங்கள் எடுத்துப் பின்னர் தானே ஒரு பூர்ணமான அவதாரம் எடுத்தப் பூமியின் தலைவனும், சக்ரவர்த்தித் திருமகனாம் ஆகிய இராமபிரானின் இடமாகும்.

திருமங்கையாழ்வார் தொண்டரடிப்பொடியாழ்வாரைச் சந்தித்திருக்கிறார். திருமதிள் அமைக்கும் போது இவரது நந்தவனத்திற்கு எந்த ஊறும் ஏற்படாவண்ணம் திருமதிளை நந்தவனத்தை வளைத்துக் கட்டியுள்ளார். இதனைக் கண்டு மகிழ்ந்த தொண்டரடிப்பொடிகள் அவரை வாழ்த்தி, தான் பூக்களைப் பறிக்கும் சிறுகத்தி போன்ற ஆயுதத்திற்கு, திருமங்கைமன்னனின் மற்றொரு பெயரான ‘அருள்மாரி’ என்ற பெயரை வைத்துள்ளார்.

திருமங்கையாழ்வார் அரங்கனிடத்து சில வரங்களை யாசிக்கின்றார்.  அவற்றுள் சில

- தசாவதாரங்களையும் தரிசிக்க வேண்டும்
- திருமங்கைமன்னன் படித்துறைக்கு (மயானம்) எந்தவித தோஷங்களும் கூடாது. அது எப்போதும் தோஷற்றதாக விளங்க வேண்டும்.

அரங்கன் ஆழ்வாரது கோரிக்கையை சந்தோஷமாக ஏற்கின்றான். எம்பெருமானின் தசாவதாரங்களையும் பாடிக் கொண்டிருந்த திருமங்கையாழ்வாருக்கு அந்த அவதாரங்களை தானும் ஸேவிக்க மிகுந்த ஆசையுண்டாயிற்று. ஆழ்வார்கள் வேண்டி அரங்கன் ஏதும் மறுப்பானோ? ஆழ்வார் உய்ய, அவர் பொருட்டு நாம் உய்ய அர்ச்சாரூபமான (சிலா ரூபத்தில்) தசாவதாரங்களையும் காண்பித்தருளினான். அப்போதே திருமங்கையாழ்வார் விக்ரஹத்தையும் தோன்றச் செய்தார். இவருக்குக் காட்சியளித்த விக்ரஹங்களனைத்தையும் இன்றும் ஸ்ரீரங்கத்தில் அஹோபில மடத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ‘தசாவதார ஸந்நிதியில்’ அதிவிசேஷமாகக் காணலாம். (இத்திருக்கோவில் ஒரு காலத்தில் கோயிலண்ணன் கட்டுப்பாட்டிலிருந்ததாகவும், 18ம் பட்டம் அழகியசிங்கர் காலத்தில் கைமாறியதாகவும் சொல்லுவர்). இங்குள்ள திருமங்கையாழ்வார் விக்ரஹம்தான் ஸ்ரீரங்கத்தில் அத்யயன உற்சவத்தின் போது எழுந்தருளப் பண்ணியதாகவும், இந்த உற்சவம் முழுவதும் வடக்குச் சித்திரை வீதியிலுள்ள ஒரு மண்டபத்தில் தங்கியிருந்ததாகவும் சொல்லுவர். அடுத்தமுறை ஸ்ரீரங்கம் வரும்போது இந்த ஸந்நிதியினை ஸேவிக்கத் தவறாதீர்கள்!

இக்கலியனை மிகவும் கவர்ந்த திவ்யதேசங்கள் திருநறையூர், திருக்கண்ணபுரம், திருவரங்கம், திருவேங்கடம், திருக்குடந்தை ஆகிய திவ்யக்ஷேத்திரங்களாகும். இவர் நாலுகவிப் புலவராவார். அவையாவன ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, விஸ்தாரகவி என்பதாகும். திருவரங்கத்தில் ஆழ்வார்களின் தீந்தமிழுக்கு, திருவாய் மொழித் திருநாள் ஏற்படுத்தி, பெருவிழா எடுத்த முதல்வர் இவர்தான். திருக்குடந்தை ஆராவமுதன் குறித்து இவர் இயற்றிய ‘திருவெழுக்கூற்றிருக்கை” ஒரு அற்புத சித்ரகவியாகும். காடு, மேடு, ஆறுகள், குன்றுகள் பலவற்றைக் கடந்து எண்பதிற்கும் மேலான திவ்யதேசத்து எம்பெருமான்களைப் பற்றி பாடியுள்ளார். அதிக திவ்யக்ஷேத்திரத்து எம்பெருமான்களை பாடிய பெருமை இவரையேச் சாரும். இவரது வாழ்க்கையும், பாக்களும் மிகவும் சுவாரசியமானவை. பாசுரங்கள் காந்தம் போன்று மனதினை கவர்ந்துவிடும்.

ஏழை ஏதலன் கீழ்மகனென்று எண;ணாது 
இரங்கி மற்றவற்கு இன்னருள் சுரந்து
மாழை மான்மட நோக்கி உன் தோழி
உம்பியெம்பியென்றொழிந்தில்லை - உகந்து
தோழன் நீ எனக்கு இங்கொழியென்ற
சொற்கள் வந்து அடியேன் மனந்திருந்திட -
ஆழிவண்ண! நின்னடியினையடைந்தேன்
அணிபொழில் திருவரங்கத்தம்மானே!

ஞானமில்லாதவன், பகைவன், தாழ்ந்த பிறவியுடையவன் என்று சிறிதும் நினைக்காமல் மனதில் இரக்கம் கொண்டு, அதற்கும் மேலே அந்த குகனுக்கு உனது இனிய அருளையும் கொடுத்தாய். கள்ளம் கபடம் இல்லாத மானுடைய இனிமையான பார்வை போன்று கனிவான பார்வையுடைய ‘இந்த சீதை உனக்கு தோழியென்றும், என்னுடைய தம்பியான இலக்குவன் உனக்கும் தம்பியாவான்’ என்று கூறினாய். இதோடு நிற்காமல் மிகவும் உவகையுடன், ‘நீ எனக்குத் தோழன்’ என்று குகனைப் பார்த்துக் கூறினாய். உனது தம்பியான பரதன் ஆட்சி செய்யும் காலத்தில் அவனுக்குப் பாதுகாப்பாக இருக்க எண்ணி ‘நீ அங்கேயே இரு’ என்றாய். இவ்விதமான நீ அருளிய சொற்கள் பெரியோர்கள் மூலம் அடியேன் காதில் விழுந்து எனது மனதிலேயே தங்கிவிட்டது. கடல் போன்ற நிறமும் மனதும் உடையவனே! அழகான சோலைகளை உடைய திருவரங்கப் பெரிய பெருமாளே! உனது திருவடிகளே சரணம் என்று நான் வந்தேன். 

நம் தேகமே ஆத்மா,  ஆத்மா நம்முடையது,     நாம் சுதந்திரமானவர்கள் என்று எண்ணுகின்றோமே அதுதான் ஒரு பெரிய களவு.    எப்போது மெய்ஞானம் தோன்றி அரங்கனிடத்து ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகின்றோமோ அன்றுதான் நமக்கு விடுதலை!

No comments:

Post a Comment