Skip to main content

ஹே... ¦ பாதுகே

நன்றி

ஹே..! பாதுகே-12
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர் 11.04.2019)


நம்பெருமாளின் பாதுகைக் குமிழில் ரத்னம் சாற்றப் பெற்றிருக்கும்...! 

நம்பெருமாள் அதனைச் சாற்றிக் கொண்டு எழுந்தருளுகையில் அந்த ரத்னம் சாற்றப்பெற்ற குமிழ்கள் சப்திக்கின்றனவாம்...!

அது அவைகள் வேதம் உரைப்பது போல் தோன்றுகின்றது என்கின்றார் ஸ்வாமி தேசிகர்.

பாதுகையிலிருக்கும் சடகோபன் வேதம் தமிழ் செய்த மாறனன்றோ! திருவாய்மொழி ஸகல வேதங்களையும் நன்றாக யோசித்து அருளிச்செய்யப்பட்ட வேதத்தின் சாரம்தானே!.

இந்த பாதுகையின் பெருமையினை நல்ல ஆச்சார்யனுடைய உபதேசம் பெற்றவர்கள், அவர்களது அனுக்ரஹத்தினை அடைந்தவர்கள், புரிந்து கொள்வர்..!.

இந்த சப்தமானது இதன் பெருமையினைப் புரியாத மற்றவர்களைப் பார்த்து .. ‘ஏன் இப்படி ஒரு நல்ல ஜன்மாவினையெடுத்து கெட்டுப் போகின்றாய்? பெரியவர்கள் சொல்லும் என்னைப் பற்றிய வார்த்தையைத் தூஷிக்காதே!” என்று அன்பாய் சொல்லுவது போலிருக்கின்றதாம்.

நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி ஜனங்களுக்கு அநேக விதங்களில் ஹிதத்தை உபதேசிப்பதுதானே!


குலசேகராழ்வார்,

தீதில் நன்னெறிநிற்க அல்லாதுசெய்
நிதியாரொடும் கூடுவதில்லையான்
ஆதிஆயன் அரங்கன் – அந்தாமரைப்
பேதை மாமணவாளன் தன்பித்தனே!
                                                    -(பெருமாள் திருமொழி 3-5)

இவ்வுலகில் நம்பெருமாளைப் பெற்று நல்வாழ்வு வாழ்தற்கு குற்றமற்ற நன்நெறிகள் பலவிருந்த போதிலும், எம்பெருமானை அடைதலை விட்டு மற்ற உபாயங்களை தேடிப் போகுபவர்கள்தாம் அதிகம். அவ்வாறு தேடிப்போவரோடு நான் கூடுவதில்லை. அறிவதற்கு அரியவனாயிருக்கும் அழகிய மணவாளன் இங்கு சுலபனாய் ஸ்ரீரங்கத்தில் பள்ளிக் கொண்டுள்ளான். நான் அழகிய மணவாளனிடத்தில் பித்தன் என்கிறார்.
 
பாதுகையும் இதனைத்தான் நம்மிடத்து கேட்கின்றது!

”ஏன் இப்படி ஒரு நல்ல ஜன்மாவினையெடுத்துக் கெட்டுப்போகின்றாய்? வேதங்கள் போற்றும் – ஆழ்வார்கள் ஏத்தும் அரங்கனைத் துதியாமல் , அடைய முயற்சிக்காமல் ஏன் வீண்வாழ்க்கை வாழ்கின்றாய்? என்கிறது.

 பிராம்மணர்கள் பெரியவர்களை ஸேவிக்கும் போது
‘நான் இன்ன ரிஷி வம்சத்தில் பிறந்தவன் – இன்ன வேதம் அத்யயனம் பண்ணுகின்றேன் – இன்ன சூத்ரம் – இன்ன பெயருள்ளவன் உம்மை தண்டன் சமர்ப்பிக்கின்றேன்’ என்று சொல்லி (அபிவாதனம்) ஸேவிக்க வேண்டும்..!

அதற்குப் பெரியவர்கள் ‘ஆயுஷ்மான் பவ! ஸோம்ய ஸ்ரீநிவாஸ ஸர்மன்!” என்று சொல்லி ஆசீர்வதிக்க வேண்டும்.

நம்பெருமாளின் பாதுகைக் குமிழ்களிலிருந்து எழும் இந்த சப்தம் அப்பாதுகையினை வீழ்ந்து வணங்கும் வேதபுருஷனை இவ்விதம் ஆசீர்வதிப்பது போலுள்ளதாம்.

இந்த இனிய சப்தம் ‘உங்களுக்கு பெருமாள் ஸ்ரீரங்கவிமானத்திலிருப்பது நன்றாகயுள்ளதா? என்மேல் எழுந்தருளியிருப்பது நன்றாகயுள்ளதா? அல்லது பரமபதத்திலிருப்பது நன்றாகயுள்ளதா? என்று கேள்வி கேட்பது போல் உள்ளது என்கிறார்.

வேதங்களால் கூட அறிய இயலாத நம்பெருமாளின் விஷயங்களை தன்னுடைய இனிமையான சப்தங்களினால் பாதுகை வெளிப்படுத்துகின்றதாம்.

இதன் உட்கருத்து பெருமாள் ஸ்வரூபத்தினை
வேதங்களினால் அறிய முடியாது..! திருவாய்மொழியினால் சுலபமாக அறியலாம் என்று சூக்குமமாக உரைக்கின்றார் ஸ்வாமி தேசிகர்.

பாதுகா ஸஹஸ்ரத்தில் இந்த நாதபத்ததியில் பெரும்பாலான இடங்களில் ஸ்வாமி தேசிகர், பாதுகையையும், பாதுகையிலிருந்து வெளிப்படும் நாதத்தினையும், நம்மாழ்வாரையும், நாதத்திற்கு ஈடாக நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பெருமையையும் அற்புதமாக பாடியுள்ளார்.

ஆர்த்தத்வநே: உசிதம் உத்தரம் அந்தகாலே
கர்ணேஷூ மஞ்ஜூநிநதேந கரிஷ்யஸீதி!
வாஸம் பஜந்தி க்ருதிநோ மணிபாதரக்ஷே!
புண்யேஷூ தேவி! புளிநேஷூ மருத்வ்ருதாயா:!! 414

அரங்கனவன் அடித்தலமே..! அந்திமத்தின் நெருக்கடியில்
அரற்றும் ஒலிகளுக்கு ஆதரவே கிடைக்குமென்று
அருளாம் நின் அடிநாதம் எதிர்பார்த்தே கிடக்கின்றார்
அரங்கத்தில் அடியார்கள் ஆற்றங்கரையிதிலே - 414
(ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம் - மதுராந்தகம் ஸ்ரீ S.ரகுவீர பட்டாச்சார்யார்)

ஏ பாதுகையே! ஸ்ரீரங்கத்திலேயேயிருந்து சரீரத்தை விட்டாலும் சரி. கடைசி காலத்திலாவது ஸ்ரீரங்கத்தில் வசித்தாலும் சரி, ஸ்ரீரங்கத்தில் சரீரத்தை விடுபவர்கள், கடைசிகாலத்தில் மிகவும் வருத்தப்பட்டு புலம்பும் போது, நீ இன்பமான சப்தத்தினால் அவர்களை சமாதானம் செய்வாய்! அதற்காகவே பெரியவர்கள் ஸ்ரீரங்கத்தில் வஸிக்கின்றார்கள்.

தாஸன் - முரளீ பட்டர்
#ஹேபாதுகே

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

ஸ்ரீ ராமானுஜரும், ஸ்ரீமணவாள மாமுனிகளும்

இன்று(11/11/2018),ஐப்பசி மூலம்-ஸ்ரீமணவாள மாமுனிகள்/பெரிய ஜீயர்/ஸ்ரீசடகோப முனி/ஸ்ரீயதீந்த்ர ப்ரவணர்/அழகிய மணவாளர்/ரம்ய ஜாமாதர முனி/அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்/காந்தோபயந்த்ரூ முனி/வரவர முனி/இராமானுசன் பொன்னடி/செளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ரர்---ஸ்வாமிகளின் 649ஆவது,திருநட்சித்திரம். ஸ்ரீமணவாள மாமுனிகள்,ஸ்ரீ ராமானுஜரின் மறு அவதாரம்; ராமானுஜர் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்ற ஸ்ரீமந் நாராயணனால், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆதிசேஷ அவதாரம் என்பது அனைவரும்அறிந்ததே.ராமானுஜர் மற்றும் மாமுனிகளின் வாழ்க்கைநெறி/கைங்கர்ய ங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் பல தெய்வீகத் தன்மைகள்/ஒற்றுமைகள்புலப்படுகின்றன அந்த நோக்கத்தில் அடியேனின்,ஒரு குறு முயற்சி. 1.ராமானுஜருக்கு அவருடைய தாய்மாமாவும்,ஸ்ரீஆளவந்தாரின் சீடருமான,பெரிய திருமலைநம்பிகள்'இளையாழ்வார்' என்று பெயரிட்டார். மாமுனிகளுக்கு அவருடைய தாய்வழித் தாத்தாவும்,ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் சீடருமான ஸ்வாமிகள் 'அழகியமணவாளன்'என்று பெயரிட்டார். 2.இளையாழ்வார்,தம்வைணவ வாழ்க்கைநெறிக்கும்,கைங்கர் யங்களுக்கும் இல்லறம் தடை யாக இ...