Monday, 5 August 2019

கருட நாக பஞ்சமி

இன்று (5/8) கருட பஞ்சமி!



ஆடி அமாவாசை அடுத்து வரும் பஞ்சமி, கருட பஞ்சமி என்று அழைக்கப்படும். பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம் கருட பஞ்சமி விரதமாகும்!

நாகர்களும், கருடனும் ஒரு தந்தையின் (தாய் வேறு வேறு) பிள்ளைகள். சகோதரர்கள் என்பதால் நாக சதுர்த்தி/பஞ்சமி - கருட பஞ்சமி ஆகிய இரு நாட்களும் சகோதரர்களுக்கான பண்டிகையாகக் கொண்டாடப் படுகிறது!

பிரம்ம தேவனின் மகனான கஷ்யபரின் நான்கு மனைவிகளுள் கத்ரு, வினதை என்ற இரு சகோதரிகளும் இருந்தார்கள். கத்ரு என்பவள் நாகர்களின் தாயாகவும், வினதை கருடனின் தாயாகவும் விளங்கினார்கள். கத்ருவுக்கு வினதையை பிடிக்காது. அவளை தனக்கு அடிமையாக்க நினைத்து, தந்திரமாக போட்டிக்கு அழைப்பு விடுத்தாள். அந்தப் போட்டியில் ஜெயிப்பவர்க்கு தோற்றவர் அடிமையாக வேண்டும் என்ற ஒப்பந்தத்தை வகுத்துக் கொண்டனர். போட்டியின் முடிவில் வஞ்சகமாக விளையாடி கத்ரு ஜெயித்து விட்டாள்-வினதை தோல்வியால், மகன் கருடனுடன் சேர்ந்து அவளுக்கு அடிமை சேவகம் செய்யளானாள்.

கருடன் கத்ருவிற்கும் அவளது பிள்ளைகள் நாகர்களுக்கும் வாகனமானான். கருடன் மிகவும் மனம் வருந்தி தனது தாயை எப்படியாவது கத்ருவின் அடிமை வாழ்விலிருந்து மீட்க வேண்டும் என்று சபதம் கொண்டான்.

கத்ரு கருடனிடம், தேவேந்திரனிடம் இருந்து 'அமிர்த கலச'த்தை கொண்டு வந்து தந்தால், இருவருக்கும் நிலையான விடுதலை தருவதாக சொல்கிறாள். கருடன், தன் தாயை வணங்கி தேவலோகம் சென்று, தேவர்களுடன் போர் புரிந்து, வெற்றி பெற்று, தேவேந்திரனிடம் இருந்து அமிர்த கலசத்தைப் பெற்று அதை கத்ருவிடம் தருகிறான். இருவருக்குமான அடிமை வாழ்வு நீங்கி, ஆனந்த வாழ்வு வாழ கருடன் வழி செய்து கொண்டான். அந்தநாள் கருடன் பிறந்த தினமாக "கருட பஞ்சமி" என்று போற்றப் படுகிறது!

நடந்ததை மறந்து கத்ருவை மன்னித்து ஏற்றுக் கொண்ட வினதைக்கும், தாயை காத்த தனயன் கருடனையும் மெச்சி எம்பெருமான் அவர்களுக்கு சேவை சாதித்ததுடன், கருடனை தன் வாகனமாகவும் இந்த கருட பஞ்சமி திதியன்று ஏற்றுக் கொண்டான்! கருடன் நாகர்களையும் அரவணைத்து கொள்கிறான், அவனது உடலில் எட்டு ஆபரணமாக, அஷ்ட நாகர்கள் பெருமை சேர்க்கிறார்கள்!

ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும், அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுணம் ஆகும். பகைவர்களை அடக்குவது, படிப்பில் நல்ல தேர்ச்சி, நினைவாற்றல், எதிலும் வெற்றி ஆகியவற்றை கருடனை மனம் கனிந்து வழிபடுவதன் மூலமாக பெறமுடியும் என்று பத்மபுராணம் கூறுகிறது!!
-
"தத்புருஷாய வித்மஹே
 ஸுவர்ண பக்ஷாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்"

No comments:

Post a Comment