Saturday 30 November 2019

அன்றாட வழிபாடு : வழிகாட்டும் நாலாயிர திவ்ய பிரபந்தம்



பூஜை அறை கதவைத் திறத்தல்:

1.  ஆண்டாள் : திருப்பாவை : 489
நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய
கோயில்காப் பானே கொடித்தோன்றும்
தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ
வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.

திருப்பள்ளியெழுச்சி பாடுதல்

2. தொண்டரடிப்பொடி ஆழ்வார் : திருப்பள்ளியெழுச்சி : 917
கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்,
 மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,
 எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,
 அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும் அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே.

துயில் எழுந்த பெருமாளை போற்றித் துதித்தல்

3.  ஆண்டாள் : திருப்பாவை  : 497
அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

திருவிளக்கு ஏற்றுதல்:

4. பொய்கையாழ்வார் : 2082
வையம் தகளியா வார்கடலே நெய்யாக,
 வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய
 சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,
 இடராழி நீங்குகவே என்று
5. பூதத்தாழ்வார் :  2182
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக,
 இன்புருகு சிந்தை யிடுதிரியா, - நன்புருகி
 ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
 ஞானத் தமிழ்புரிந்த நான்

விளக்கு ஒளியில் பெருமாளை சேவித்தல்:

6. பேயாழ்வார் :  2282
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்
 அருக்கன் அணிநிறமும் கண்டேன், - செருக்கிளரும்
 பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்,
என்னாழி வண்ணன்பால் இன்று

திருமஞ்சனம்  செய்வித்தல்:

7. திருமங்கையாழ்வார்: திருக்குறுந்தாண்டகம்: 2046
முன்பொலா இராவ ணன்றன் முதுமதி ளிலங்கை வேவித்து,
அன்பினா லனுமன் வந்தாங் கடியிணை பணிய நின்றார்க்கு,
என்பெலா முருகி யுக்கிட் டென்னுடை நெஞ்ச மென்னும்,
அன்பினால் ஞான நீர்கொண் டாட்டுவ னடிய னேனே.

மாலை சூட்டுதல்:

8. திருமங்கையாழ்வார்: திருக்குறுந்தாண்டகம்: 2047
மாயமான் மாயச் செற்று மருதிற நடந்து, வையம்
தாயமா பரவை பொங்கத் தடவரை திரித்து, வானோர்க்
கீயுமால் எம்பி ரானார்க் கென்னுடைச் சொற்க ளென்னும்,
தூயமா மாலை கொண்டு சூட்டுவன் தொண்ட னேனே!

தூபம் காட்டுதல்:
9. நம்மாழ்வார்: திருவிருத்தம் : 2498
சூட்டுநன் மாலைகள் தூயன வேந்தவிண் ணோர்கள்நன்னீர்
ஆட்டியந் தூபம் தராநிற்க வேயங்குஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணை தொடுவுண்ணப் போந்திமி லேற்றுவன்கூன்
கோட்டிடை யாடினை கூத்துஅட லாயர்தம் கொம்பினுக்கே.

கண்டு அருளப்பண்ணுதல்:
10. ஆண்டாள் : நாச்சியார் திருமொழி : 593
இன்றுவந் தித்தனையும் அமுதுசெய் திடப்பெறில்நான்
ஒன்றுநூ றாயிரமாக் கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன்
தென்றல் மணங்கமழும் திருமாலிருஞ் சோலைதன்னுள்
நின்ற பிரான்அடியேன் மனத்தேவந்து நேர்படிலே

ஒரு சில போற்றும் பாசுரங்கள்:
11. பெரியாழ்வார் : திருப்பல்லாண்டு : 1 & 2
பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடிநூறாயிரம்
 மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன் செவ்வடிசெவ்விதிருக்காப்பு. 
 அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றிஆயிரம்பல்லாண்டு
 வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்றமங்கையும்பல்லாண்டு
 வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும்பல்லாண்டு
 படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும்பல்லாண்டே
12. திருமங்கையாழ்வார்: பெரிய திருமொழி  : 956
குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லம்,
 நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளொடுபெருநிலமளிக்கும்,
 வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற தாயினு மாயினசெய்யும்,
 நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும்நாமம்.
13. மதுரகவியாழ்வார் : கண்ணி நுண்சிறுத்தாம்பு  : 937
கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
 பண்ணி யபெரு மாயன்,என் னப்பனில்,
 நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்,
 அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே.
14. திருப்பாணாழ்வார்: திருவரங்கம்: 931
பாரமாய பழவினை பற்றறுத்து, என்னைத்தன்
 வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி யென்னுள் புகுந்தான்,
 கோர மாதவம் செய்தனன்கொ லறியே னரங்கத் தம்மான்,திரு
 வார மார்பதன் றோஅடி யேனை யாட்கோண்டதே.
15. திருமங்கையாழ்வார்: திருவிடந்தை 1108
திவளும்வெண் மதிபோல் திருமுகத் தரிவை செழுங்கட லமுதினிற் பிறந்த
 அவளும்,நின் னாகத் திருப்பது மறிந்தும் ஆகிலு மாசைவி டாளால்,
 குவளையங் கண்ணி கொல்லியம் பாவை சொல்லுநின் தாள்நயந் திருந்த
 இவளை,உன் மனத்தா லென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே
16. திருமங்கையாழ்வார்: திருவெள்ளறை: 1369
வசையில் நான்மறை கெடுத்தவம் மலரயற் கருளி,முன் பரிமுகமாய்,
இசைகொள் வேதநூ லென்றிவை பயந்தவ னே எனக் கருள்புரியே,
உயர்கொள் மாதவிப் போதொடு லாவிய மாருதம் வீதியின்வாய்,
திசையெல் லாம்கம ழும்பொழில் சூழ்திரு வெள்ளறை நின்றானே!
17.  பெரியாழ்வார்:  திருவரங்கம்: 420
தேவுடைய மீனமாய் ஆமையாய்*  ஏனமாய் அறியாய்க்  குறளாய்*
மூவுருவில் இராமனாய்க்*  கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான்கோயில்*
சேவலொடு பெடையன்னம்*  செங்கமல மலரேறி ஊசடிலாப்*
பூவணைமேல் துதைந்தெழு*  செம்பொடியாடி விளையாடும் புனலரங்கமே.
18. குலசேகர ஆழ்வார் : திருவேங்கடம் : 685
செடியாய் வல்வினைகள் தீர்க்குந்திருமாலே
நெடியானே வேங்கடவா ! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவருமரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க்கிடந்துன் பவளவாய் காண்பேனே.
19. திருமங்கையாழ்வார்: சிங்கவேள்குன்றம்: 1008
அங்கண்ஞாலமஞ்ச அங்கோராளரியாய் அவுணன்
 பொங்கவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம்,
 பைங்கணானைக்கொம்புகொண்டு பத்திமையால், அடிக்கீழ்ச்
 செங்கணாளியிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே.
20. திருமங்கையாழ்வார்: திருபுள்ளம்பூதங்குடி: 1356
துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றா திருளாய் மூடியநாள்,
அன்ன மாகி யருமறைகள் அருளிச் செய்த அமலனிடம்,
மின்னு சோதி நவமணியும் வேயின் முத்தும் சாமரையும்,
பொன்னும் பொன்னி கொணர்ந்தலைக்கும் புள்ளம் பூதங் குடிதானே,
21. திருமங்கையாழ்வார்: திருக்கோவலூர்: 1146
தூவடிவின் பார்மகள்பூ மங்கை யோடு சுடராழி சங்கிருபால் பொலிந்து தோன்ற,
 காவடிவின் கற்பகமே போல நின்று கலந்தவர்கட் கருள்புரியுங் கருத்தி னானை,
 சேவடிகை திருவாய்கண் சிவந்த வாடை செம்பொன்செய் திருவுருவ மானான் றன்னை,
 தீவடிவின் சிவனயனே போல்வார் மன்னு திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.
22. திருமங்கையாழ்வார்: திருவேங்கடம் : 1046
வந்தாயென்மனம்புகுந்தாய் மன்னிநின்றாய்,
 நந்தாதகொழுஞ்சுடரே யெங்கள் நம்பீ.,
 சிந்தாமணியே திருவேங்கடம்மேய
 எந்தாய்., இனியானுன்னை யென்றும் விடேனே.
23. திருமங்கையாழ்வார்: திருவள்ளூர் : 1066
பந்தி ருக்கும் மெல்விரலாள் பாவை பனிமலராள்,
வந்தி ருக்கும் மார்வன்நீல மேனி மணிவண்ணன்,
அந்த ரத்தில் வாழும் வானோர் நாயக னாயமைந்த,
இந்தி ரற்கும் தம்பெருமா னெவ்வுள் கிடந்தானே.
24. நம்மாழ்வார்  : திருமாலிருஞ்சோலை: 3129
மழுங்காத வைந்நுதிய சக்கரநல் வலத்தையாய்,
 தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே,
 மழுங்காத ஞானமே படையாக, மலருலகில்
 தொழும்பாயார்க் களித்தாலுன் சுடர்ச்சோதி மறையாதே?
25. நம்மாழ்வார் : திருவேங்கடம் : 3129
அகல கில்லேன் இறையும் என் றலர்மேல் மங்கை யுறைமார்பா,
 நிகரில் புகழாய். உலகமூன் றுடையாய். என்னை ஆள்வானே,
 நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,
 புகலொன் றில்லா அடியேனுன் அடிக்கீ ழமர்ந்து புகுந்தேனே
26. நம்மாழ்வார்: திருக்குடந்தை : 3427
வாரா வருவாய் வருமென் மாயா. மாயா மூர்த்தியாய்,
 ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்,
 தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய். திருக்குடந்தை
 ஊராய்.உனக்காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?
27. நம்மாழ்வார்  : திருவிண்ணகர்: 3481
என்னப்பன் எனக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாய்,
 பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பனென் அப்பனுமாய்,
 மின்னப்பொன் மதிள்சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்தவப்பன்,
 தன்னொப்பா ரில்லப்பன் தந்தனன்தன தாள்நிழலே
28. திருமங்கையாழ்வார் : திருவாலி : 1188
வந்துன தடியேன் மனம்புகுந்தாய் புகுந்ததற்பின் வணங்கும்,என்
 சிந்தனைக் கினியாய். திருவே என் னாருயிரே,
 அந்தளி ரணியா ரசோகி ளிளந்தளிர்கள் கலந்து, அவை யெங்கும்
 செந்தழல் புரையும் திருவாலி யம்மானே
29. நம்மாழ்வார்  : திருவனந்தபுரம்: 3911
மாய்ந்துஅறும் வினைகள்தாமே*  மாதவா என்ன நாளும்-
ஏய்ந்தபொன் மதிள்*  அனந்தபுர நகர்எந்தைக்குஎன்று*
சாந்தொடு விளக்கம்தூபம்*  தாமரை மலர்கள்நல்ல*
ஆய்ந்துகொண்டு ஏத்தவல்லார்*  அந்தம்இல் புகழினாரே
30. திருமங்கையாழ்வார்: திருஇந்தளுர் : 1335
முன்னிவண்ணம்பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற*
பின்னைவண்ணம் கொணடல்வண்ணம் வண்ணமெண்ணுங்கால்*
பொன்னின்வண்ணம்மணியின் வண்ணம் புரையுந்திருமேனி*
இன்னவண்ணமென்றுகாட்டீர் இந்தளூரிரே!
31. திருமங்கையாழ்வார்: திருவல்லிக் கேணி 1074
பரதனும் தம்பி சத்துருக் கனன்னும் இலக்கும னோடுமை திலியும்
 இரவுநன் பகலும் துதிசெய்ய நின்ற இராவணாந் தகனையெம் மானை,
 குரவமே கமழும் குளிர்ப்பொழி லூடு குயிலொடு மயில்கள்நின் றால,
 இரவியின் கதிர்கள் நுழைதல்செய் தறியாத் திருவல்லிக் கேணிக்கண் டேனே
32. குலசேகர ஆழ்வார் : தில்லை திருச்சித்ரகூடம்: 747
குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து*  குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி*
எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன்*  இன்னுயிர் கொண்டு அவன்தம்பிக்கு அரசும் ஈந்து*
திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்தன்னைத்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*
அரசு-அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்*  அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே*
33. நம்மாழ்வார்: சிரீவர மங்கலநகர் : 3409
கருள புட்கொடி சக்க ரப்படை வான நாட.எங் கார்முகில் வண்ணா,
 பொருளல் லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்,
 தெருள்கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ் சிரீவர மங்கலநகர்க்கு,
 அருள்செய்தங்கிருந் தாயறி யேனொரு கைம்மாறே
34. திருமங்கையாழ்வார்: திருகடல்மல்லை : 1551
புள்வாய் பிளந்த புனிதா என் றழைக்க,
 உள்ளேநின் றென்னுள்ளங் குளிரு மொருவா,
 கள்வா கடன்மல்லைக் கிடந்த கரும்பே,
 வள்ளால் உன்னை யெங்ஙனம்நான் மறக்கேனே
35. திருமங்கையாழ்வார்: திருநறையூர் : 1543
கான எண்கும் குரங்கும் முசுவும் படையா அடலரக்கர்
 மான மழித்து நின்ற வென்றி அம்மான் எனக்கென்றும்
 தேனும் பாலும் அமுது மாய திருமால் திருநாமம்
 நானும் சொன்னேன் நமரு முரைமின் நமோநா ராயணமே
36. திருமங்கையாழ்வார்: தேரழுந்தூர்  : 1601
குன்றால் மாரிதடுத் தவனைக்குல வேழமன்று
 பொன்றா மை,அதனுக் கருள்செய்த போரேற்றை,
 அன்றா வின்நறுநெய் யமர்ந்துண்ண அணியழுந்தூர்
 நின்றா னை,அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே
37. நம்மாழ்வார்: திருக்குறுங்குடி : 3005
செல்வநாரண னென்றசொல்கேட்டலும்,
 மல்கும்கண்பனி நாடுவன்மாயமே,
 அல்லும்நன்பகலு மிடைவீடின்றி,
 நல்கியென்னை விடான்நம்பி நம்பியே
38. திருமங்கையாழ்வார்: திருக்கண்ணபுரம் : 1732
வந்தாயென் மனத்தே வந்துநீ புகுந்தபின்னை,
 எந்தாய். போயறியாய் இதுவே யமையாதோ
 கொந்தார் பைம்பொழில்சூழ் குடந்தைக் கிடந்துகந்த
 மைந்தா உன்னையென்றும் மறவாமைப் பெற்றேனே
39. திருமழிசையாழ்வார் : 2440
அன்பாவாய் ஆரமுதம் ஆவாய், அடியேனுக்
 கின்பாவாய் எல்லாமும் நீயாவாய், - பொன்பாவை
 கேள்வா கிளரொளியென கேசவனே, கேடின்றி
 ஆள்வாய்க் கடியேன்நான் ஆள்
40. திருமழிசையாழ்வார் : 2388
இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்
 நின்றாக நின்னருளென் பாலதே, - நன்றாக
 நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே
 நீயென்னை யன்றி யிலை
41. திருமங்கையாழ்வார் : திருவெள்ளக்குளம் : 1308
கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்,
நண்ணார்முனை வென்றிகொள் வார்மன்னு நாங்கூர்,
திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக் குளத்துள்
அண்ணா,அடியே னிடரைக் களையாயே.
42. திருமங்கையாழ்வார்: திருநாகை : 1761
வம்புஅவிழும் துழாய் மாலை தோள்மேல்*  கையன ஆழியும் சங்கும் ஏந்தி,*
நம்பர்நம் இல்லம் புகுந்து நின்றார்*  நாகரிகர் பெரிதும் இளையர்,*
செம்பவளம் இவர் வாயின் வண்ணம்*  தேவர் இவரது உருவம் சொலலில்,*
அம்பவளத்திரளேயும் ஒப்பர்*  அச்சோ ஒருவர் அழகியவா!
43. நம்மாழ்வார் : திருக்கோளூர் : 3517
உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற் றிலையுமெல்லாம்
கண்ணன், எம்பெருமான் னென்றென் றேகண்கள் நீர்மல்கி,
மண்ணினுள் அவன்சீர் வளம்மிக் கவனூர் வினவி,
திண்ண மென்னிள மான்புகு மூர்திருக் கோளூரே.
44. திருமங்கையாழ்வார்: செம்பொன்செய் கோயில்  : 1276
களங்கனி வண்ணா. கண்ணணே என்றன் கார்முகி லேஎன நினைந்திட்டு,
உளங்கனிந் திருக்கு மடியவர் தங்கள் உள்ளத்து ளூறிய தேனை,
தெளிந்தநான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
வளங்கொள்பே ரின்பம் மன்னிநின் றானை வணங்கிநான் வாழ்ந்தொழிந் தேனே.
45. நம்மாழ்வார் : திருவண்பரிசாரம்: : 3699
வருவார் செல்வார் வண்பரி சாரத் திருந்த,என்
திருவாழ் மார்வற்கென்திறம் சொல்லார் செய்வதென்,
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங் கும்மோடு,
ஒருபா டுழல்வானோரடி யானு முளனென்றே.
46. நம்மாழ்வார் : திருவேங்கடம் : 3556
அடியேன் மேவி யம ர்கின்ற அமுதே. இமையோர் அதிபதியே,
கொடியா அடுபுள் ளுடையானே. கோலக் கனிவாய்ப் பெருமானே,
செடியார் வினைகள் தீர்மருந்தே. திருவேங் கடத்தெம் பெருமானே,
நொடியார் பொழுதும் உன்பாதம் காண நோலா தாற்றேனே.
47. ஆண்டாள் : திருப்பாவை : 502
சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
 பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்
 பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ
 குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது.
 இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
 எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு
 உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம்
 மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!
48. திருமங்கையாழ்வார் தனியன்
மாலைத் தனியே வழிபறிக்க வேணுமென்று,
கோலிப் பதிவிருந்த கொற்றவனே, -- வேலை
அணைத்தருளும் கையா லடியேன் வினையை,
துணித்தருள வேணும் துணிந்து
49. இராமாநுச நூற்றந்தாதி :
நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும்,நிறை வேங்கடப்பொற்
குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந் தரும்உன் இணைமலர்த்தாள்
என்றனக் கும்அது,இராமா னுச! இவை யீந்தருளே
மாலை விளக்கேற்றுதல்:

50. பெரியாழ்வார்: 200
இருக்கொடு நீர்சங்கில் கொண்டிட்டு எழில்மறை யோர்வந்து நின்றார்
தருக்கேல்நம்பி சந்தி நின்று தாய்சொல்லுக் கொள்ளாய் சிலநாள்
திருக்காப்பு நான்உன்னைச் சாத்தத் தேசுடை வெள்ளறை நின்றாய்
உருக்காட்டும் அந்தி விளக்குஇன் றொளிகொள்ள ஏற்றுகேன் வாராய்.

தாலாட்டு பாடுதல்:
51. குலசேகர ஆழ்வார் : 728
தேவரையு மசுரரையும் திசைகளையும் படைத்தவனே
யாவரும்வந் தடிவணங்க அரங்கநகர்த் துயின்றவனே
காவிரிநல் நதிபாயும் கணபுரத்தென் கருமணியே
ஏவரிவெஞ் சிலைவலவா இராகவனே தாலேலோ

திருப்பள்ளி கொண்டபின்
52. பெரியாழ்வார் : 451
உறக லுறக லுறகல் ஒண்சுட ராழியே சங்கே
அறவெறி நாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே
இறவு படாம லிருந்த எண்மர் உலோகபா லீர்காள்
பறவை யரையா உறகல் பள்ளி யறைக்குறிக் கொண்மின்.
Contact our Trustee's
 Mr.M.Chinna Durai 9942604383
 Mr.J.Gopikrishnan 9500264545
 Mr.S.P.Purusothaman 8056901601

No comments:

Post a Comment