Friday 17 April 2020

ஸ்ரீராமஜயம்னு சத்தமாகச் சொல்லு

*"ஸ்ரீராமஜயம்னு சத்தமாகச் சொல்லு!"*

மகாபெரியவர் திருத்தல யாத்திரைகள் செய்து கொண்டிருந்த காலகட்டம் அது. 

அந்த சமயத்தில் ஆந்திர மாநிலத்தில் ஓரிடத்தில் சில நாட்கள் முகாமிட்டிருந்தார் அவர். அந்த மாதிரியான சமயங்களில் உபன்யாசம் மாதிரியான சொற்பொழிவுகள் போன்றவை நடப்பது வழக்கம்.  அந்த மாதிரி ஒருநாள், மகாபெரியவர் முன்னிலையில் ராமாயண உபன்யாசம் நடத்தினார் ஒரு பண்டிதர். மிக அழகாக எளிமையாக ராம காவியத்தை அவர் சொன்னதை மகாபெரியவர் ரொம்பவே ரசித்துப் பாராட்டினார். 

பெரியவரின் பாராட்டால் நெகிழ்ந்துபோன உபன்யாசகர், நெகிழ்வோடு மகானை நமஸ்கரித்தார். அப்போது, "நீ இப்படி உபன்யாசம் செய்வது மட்டுமல்லாமல், இன்னொரு உபகாரமும் முன்பு செய்து கொண்டு இருந்தாயே, அதை இங்கேயும் செய்யலாமே" என்றார் மகான்.

அந்த உபன்யாசகர், தான் நிகழ்ச்சி நடத்தப் போகும்போது, சின்னச் சின்னதாக சில நோட்டுகளை கையோடு கொண்டு செல்வார். உபன்யாச நிகழ்ச்சி முடிந்ததும், அந்த நோட்டுகளை அங்கே இருக்கும் சிறுவர் சிறுமிகளிடம் தந்து ஸ்ரீராமஜயம் எழுதச் சொல்வார். அனால் கொஞ்சநாளாக அவருக்கு ஒரு விரக்தி இருந்தது. ஸ்ரீராமஜயம் எழுதச் சொல்லி நோட்டுகளை தருகிறோம். ஆனால், அவர்கள் எழுதுகிறார்களா இல்லையா? என்பதே தெரியாது. அதோடு, இப்படி எழுதச் சொல்வதால் என்ன பிரயோஜனம் என்ற விரக்திதான் அது. 

மகாபெரியவர் எப்படியோ அதைத் தெரிந்து கொண்டு சொல்லவும், அந்த உபன்யாசகருக்கு ஆச்சரியம்! மகானே சொல்லிவிட்டதால், ஸ்ரீராமஜயம் நோட்டுகளை வழக்கத்தைவிட நிறையவே குழந்தைகளுக்குக் கொடுத்தார். 

குழந்தைகளும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிக் கொள்ள, "எல்லோரும் நாளைக்கு இதே நேரத்துக்குள் அந்த நோட்டு முழுக்க ஸ்ரீராமஜயம் எழுதிக் கொண்டு வந்து என்கிட்டே தரணும்!" சொன்னார், மகான். 

மறுநாள் எல்லாக் குழந்தைகளுமே ஸ்ரீராமஜயம் எழுதி முடித்த நோட்டுகளுடன் வந்து விட்டார்கள். 

அன்றைக்கும் உபன்யாசம் உண்டு என்பதால், உபன்யாசகரும் வந்திருந்தார். 

குழந்தைகள் வரிசையாக நின்று ஒவ்வொருவராக ஸ்ரீராமஜயம் நோட்டை பெரியவரிடம் சமர்ப்பிக்க, கல்கண்டு பிரசாதமும் வெள்ளிக்காசும் கொடுத்து ஆசிர்வதித்த பெரியவர், குறிப்பாக ஒரு பையன் வந்து நோட்டைத் தன்னிடம் சமர்ப்பித்ததும் அவனை ஆதூரத்துடன் உற்றுப் பார்த்தார். 

"நோட்டு முழுக்க ஸ்ரீராமஜயம் எழுதியிருக்கியே, எங்கே ஸ்ரீராமஜயம்னு உரக்கச் சொல்லு  பார்ப்போம்" என்று சொல்ல, அங்கே திடீரென்று அமைதி நிலவியது. 

நோட்டினைத் தந்த சிறுவன் மிரள மிரள விழிக்க, "உன்னைத்தான் சொல்றேன். ஸ்ரீராமஜயம் சொல்லு!" மறுபடியும் சொன்னார், மகான்.

"பெரியவா...அவனால பேச முடியாது....!" கூட்டத்தில் இருந்த இன்னொரு சிறுவன் சொல்ல, அங்கே திடீரென்று ஒரு சலசலப்பு எழுந்தது. 

சட்டென்று கையைச் சொடுக்கிய மகான், "கொஞ்சம் எல்லோரும் அமைதியா இருங்கோ... அந்தப் பையன் ஸ்ரீராமஜயம் சொல்லட்டும்!" கொஞ்சம் அழுத்தமாகவே சொல்ல, அங்கே பேரமைதி நிலவிய அந்த நிலையில்தான் நடந்தது அந்த அதிசயம்.

எந்தப் பையன் பிறவியிலேயே பேசும் திறன் அற்று இருந்தானோ அவன், மகாபெரியவர் முன்னிலையில், மெதுவாகத் திக்கித் திணறி..."ஸ்ஸ்...ரீ...ரா..ஆ.ஆ..ஆ..ம.. ஜ்..ஜய்ய்யம்ம்!" என்று மூன்றுமுறை தடுமாறிச் சொல்லிவிட்டு, பிறகு மளமளவென்று ஸ்ரீராமஜயம், ஸ்ரீராமஜயம் என்று உரக்கச் சொல்லத் தொடங்கினான்.   

ஆமாம்..அவனுக்குப் பேசும் திறன் வந்துவிட்டது. அதிசயித்துப் போனவர்கள் பெரியவரின் அனுகிரஹத்தை நினைத்து ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர என்று குரல் எழுப்ப, மெதுவாகக் கையை உயர்த்திய மகான், கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்த உபன்யாசகரை அழைத்தார். 

"நான் எதுவும் பண்ணலை ...எல்லாம் இவரால வந்தது. இவர் ஸ்ரீராமஜயம் எழுதச் சொல்லி நோட்டு கொடுத்தார் இல்லையா? ஸ்ரீராமஜயம் எழுதின புண்ணியம் இவனுக்கு வாக்கு வந்திருக்கு..! அதனால, இந்தப் பெருமை இவருக்குத்தான்!" உபன்யாசகரைச் சுட்டிக்காட்டி மகாபெரியவர் சொல்ல, அப்படியே நெக்குருகி நெகிழ்ந்து போனார் உபன்யாசகர். 

ஸ்ரீராமஜயம் எழுதச் சொல்கிறோமே, அதனால் என்ன பயன் என்று உபன்யாசகர் நினைத்தது மகானுக்கு எப்படித் தெரிந்தது? பேசாமல் இருந்த சிறுவன் பேசியது எப்படி? எல்லாம் அந்த மகானுக்கு மட்டுமே தெரிந்த தெய்வ ரகசியம்!      

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!

மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!

No comments:

Post a Comment