பகவான் மகா விஷ்ணு எடுத்த அவதாரங்களில் தனிச் சிறப்பு கொண்டதாகத் திகழ்வது நரசிம்ம அவதாரம். பகவான் நரசிம்மர் அரூபமாக எங்கும் நிறைந்திருப்பவன்தான் என்றாலும், ஓர் உருவத்துடன் தூணில் மட்டுமல்ல, காணும் இடம் எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருந்த அவதாரம் நரசிம்ம அவதாரம். இரண்யன் எந்த இடத்தைத் தாக்கினாலும், அந்த இடத்தில் இருந்து வெளிபட்டு இரண்யனை வதம் செய்யத் தயாரான உருவத்துடனே எங்கெங்கும் வியாபித்திருந்தார்.
பிரகலாதன் காட்டிய தூணை இரண்யன் பிளக்க, தூணில் இருந்து வெளிப்பட்ட நரசிம்மர், இரண்யனை வதம் செய்தார். இரண்யனை நரசிம்மர் வதம் செய்த திருத்தலம்தான் அகோபிலம்.
ஆனால், நரசிம்மரின் அவதாரக் காலம் வெறும் இரண்டு நாழிகையே. இதனால், காச்யப முனிவர், நாரதர், வருணன், சுகோசன் ஆகியோர் நரசிம்மரின் திருக்கோலத்தை தரிசிக்க விரும்பினர். அவர்கள் மகா விஷ்ணுவை பிரார்த்தித்தனர்.
அவர்களின் பிரார்த்தனைக்கு இரங்கிய மகா விஷ்ணு, "பொதிகை மலைச்சாரலில் அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்ட மனிமுத்தா தீர்த்தத்தில் நீராடி, பின் 40 கல் தொலைவில் உள்ள சித்ரா நதிக்கரையில் என்னை நோக்கித் தவம் இருங்கள்" என்று சொல்லி மறைந்தார்.
அதன்படியே தவம் இருக்க, தவத்தில் மகிழ்ந்த பகவான் ஶ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத நரசிம்மராக 16 திருக்கரங்களுடன் காட்சி தந்தார். பகவானை மனம் குளிர தரிசித்து வணங்கிய காச்யப முனிவரும், மற்றவர்களும் நரசிம்மர் அந்தத் தலத்திலேயே எழுந்தருளி, காலம்தோறும் வழிபடும் பக்தர்களுக்கு அருள் புரியவேண்டும் என்று பிரார்த்தித்தனர். நரசிம்மரும் அங்கேயே எழுந்தருளினார்.
கருவறையில், இரண்யனை தனது மடியில் கிடத்தி, இரண்டு கரங்களால் அவனைப் பற்றி, நான்கு கரங்களால் வயிற்றைக் கிழித்து, மேலும் இரண்டு கரங்களால் குடலை உருவி, மீதமுள்ள எட்டு கரங்களில், பலமான ஆயுதங்களுடன் காட்சி தருகிறார் நரசிம்மர்.
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா கீழப்பாவூர் கிராமத்தில் நரசிம்மர் திருக்கோயில் உள்ளது. வயல்வெளிகள் நிறைந்த பசுமையான சூழலில் கோயில் அமைந்துள்ளது. இது சுமார் 1100 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டது. இந்த இடம் சோழர்கள் காலத்தில் 'சத்திரிய சிகாமணி' என்று அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
கருவறையில் நரசிம்மர் உக்கிரமாக இருப்பதால், ஊர் அடிக்கடி தீப்பற்றி எறிந்தது. நரசிம்மரின் சீற்றத்தைத் தணிக்க லட்சுமி தேவியை அனுப்பி வைத்தார், பிரம்மதேவன். நரசிம்மரின் சீற்றம் தணிந்தது. நாம் இங்கு சென்று பகவானை தரிசிக்கும் போது, நரசிம்மரின் மார்பில் வீற்றிருக்கும் லட்சுமிதேவியையும் தரிசிக்க முடியும். ஆலயத்துக்கு முன்பாக நரசிம்ம தீர்த்தமும் நரசிம்மப் பெருமானின் உக்கிரத்தை தணிக்கிறது.
நரசிம்மருக்கு இளநீர், பால், பானகம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
நெய்தீபம் ஏற்றி வழிபட பிரார்த்தனைகள் உடனே நிறைவேறும்.
நரசிம்மர் எங்கும் நிறைந்திருப்பவர், நாம் கேட்காமலேயே நமக்கு அருள் புரிவார்.
No comments:
Post a Comment