Saturday 27 March 2021

மட்டையடி என்னும் ப்ரணயகலஹம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: 
*முகவுரை*
ஸ்ரீரங்கநாதன், ஸ்ரீரங்கம் என்னும் விமானத்தோடு திருப்பாற்கடலிலிருந்து ஆவிர்ப்பவித்து, ஸத்யலோகத்தில் ப்ரஹ்மாவால் ஆராதிக்கப்பெற்று, பிறகு திருவயோத்தியில் இக்ஷ்வாகு மஹாராஜாவாலும் அவர் வம்சத்தரான சக்ரவர்த்திகளாலும் ஆராதிக்கப்பட்டு, சக்ரவர்த்தித் திருமகனிடத்திலிருந்து விபிஷண ஆழ்வானால் அடையப்பட்டு, திருக்காவேரியின் மத்தியில் சந்திரபுஷ்கரணி தீரத்தில் எழுந்தருளி, உறையூருக்கு அரசனான தர்மவர்மாவினால் ஆராதிக்கப் பட்டார். பூலோக வைகுண்டமாகிய மேற்படி ஸ்ரீரங்கத்தில் வசிக்கிற புண்யவான்கள் ப்ரஹ்மாவாலும், இக்ஷ்வாகு முதலானவர்களாலும் நடத்திவந்த பங்குனி மாதத்து சுக்லபக்ஷத்திய ஆதிப்ரஹ்மோத்ஸவத்தில் பங்குனி உத்திரம் என்கிற பெருமாள் - நாச்சியார் ப்ரணய கலகத்தைப் பெருமாளுக்கான அரையரைக் கொண்டும், நாச்சியாருக்காக நாச்சியார் பண்டாரிகளைக் கொண்டும் வாதிக்கும்படி செய்கிறார்கள். 

*அதாவது:*
பங்குனி மாதம் சுக்லபக்ஷம் உத்திர நக்ஷத்திரத்தில் சூர்யோதய காலத்தில் ஸ்ரீரங்கநாதன் திருப்பல்லக்கில் ஏறியருளி, முன்னும் பின்னும் ஸ்ரீவைஷ்ணவோத்தமர்கள் ஸ்தோத்திரம் பண்ண, திருவெண்சாமரம், திருமுத்துக்குடை முதலிய உபசாரத்தோடு ஒவ்வொரு திருமாளிகையிலும் திருக்காவனம் பரிமாறி வாழைமரம், பாக்குக்குலை, முத்து, பவழங்களால் அலங்கரித்து ரமணீயமாய் இருக்கிற உள்திருவீதி, சித்திரை வீதிகளை வலம்வந்து ஸ்ரீரங்க நாச்சியார் திருச்சன்னதிக்கு அதிகமான ப்ரேமையுடன் எழுந்தருளும்போது, பெருமாள் உறையூர் நாச்சியாரிடம் போய் வந்தாரென்று கோபத்தாலே ஸ்ரீரங்கநாச்சியார் திருக்காப்புச் சேர்த்துக்கொண்டு பூப்பந்துக்களாலும், வாழைப்பழம், பலாச்சுளை முதலியவைகளாலும் எறிவித்து, வாசலிலேயே நிறுத்திவைக்கும்போது பெருமாளுக்கும் நாச்சியாருக்கும் நடக்கிற ஸம்வாதம்.

ஸ்ரீரங்கநாதருக்கும் ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் நடந்துவருகிற மட்டையடி என்னும் ப்ரணயகலஹம்

*பெருமாள் அருளிச்செய்த ப்ரகாரம்*
நாம் உத்ஸவார்த்தமாக புறப்பட்டருளி திருவீதிகளெல்லாம் வலம் வந்து தேவதைகள் புஷ்பவர்ஷம் வர்ஷிக்க ப்ராமணர்களெல்லோரும் ஸ்தோத்திரம் பண்ண, இப்படி பெரிய மனோரதத் தோடே தங்களிடத்தில் வந்தால் தாங்கள் எப்போதும் எதிரே விடைகொண்டு, திருக்கை கொடுத்து உள்ளே எழுந்தருளப் பண்ணிக் கொண்டு போய் திவ்ய சிம்மாசனத்திலேறியருளப்பண்ணி, திருவடி விளக்கி திருவொத்து வாடை சாத்தி, திருவால வட்டம் பரிமாறி, மங்களஹாரத்தி கண்டருளப் பண்ணி சுருளமுது திருத்தி ஸமர்ப்பித்து இப்படி அநேக உபசாரங்களெல்லாம் நடக்குமே இன்றைக்கு நாமெழுந்தருளின இடத்திலே திருப்பல்லக்கை தொட்டுத்தள்ளி திருக்காப்புச் சேர்த்துக்கொண்டு, திருமுக மண்டலத்தைத் திருப்பிக்கொண்டு, திருச்சேடிமார்கள் கைகளாலே பந்துகளாலும் பழங்களாலும் விட்டெறிவித்து, இப்படி ஒரு காலா காலங்களிலேயும் பண்ணாத அவமானங்களையெல்லாம் இன்றைக்கு பண்ண வந்த காரியம் ஏதென்று கேட்டுவரச் சொல்லிப் பெருமாளருளிச் செய்த ப்ரகாரம்.

*நாச்சியார் அருளிச்செய்த ப்ரகாரம்*
தாம் எப்போதும் போல எழுந்தருளினதே மெய்யானால் திருக்கண்களெல்லாம் சிவந்து இருப்பானேன்? திருவதநம் வெளுத்திருப்பானேன்? திருக்குழல் கற்றைகளெல்லாம் கலைந்திருப்பானேன்? திருக்கழுத்துக்களெல்லாம் நகக்ஷதங்களா இருப்பானேன்? கஸ்தூரி, திருமண்காப்பு கரைந்திருப்பானேன்? திருமேனியெல்லாம் குங்கும பொடிகளாயிருப்பானேன்? திருவடிகளெல்லாம் செம்பஞ்சுக் குழம்பாயிருப்பானேன்? திருப்பரி வட்டங்களெல்லாம் மஞ்சள் வர்ணமாயிருப்பனேன்? இப்படிப்பட்டிருக்கிற அடையாளங்களைப் பார்த்து நாச்சியாருக்கு மிகவும் திருவுள்ளங்கலங்கி இருக்கிறது, ஆனபடியினாலே உள்ளேயிருக்கிற பேரை வெளியிலே விடவேண்டாமென்றும், வெளியிலேயிருக்கிற பேரை உள்ளே விட வேண்டாமென்றும் இப்படி ஒரு கட்டுப்பாடு பண்ணிக் கொண்டிருக்கிற சமயத்திலே, இப்போது உள்ளே விண்ணப்பஞ்செய்ய சமயமில்லை, ஆனபடியினாலே நேற்றைக்கு எழுந்தருளின விடத்திலேதானே இன்றைக்கும் எழுந்தருளச் சொல்லி நாச்சியாரருளிச் செய்த ப்ரகாரம்.

*பெருமாள் அருளிச்செய்த ப்ரகாரம்*
திருக்கண்கள் சிவந்திருப்பானேன் என்றால் நாம் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனாரான படியினாலே கவரி முடித்து, கலிக்கச்சை கட்டி, வல்லபமேந்தி, குதிரை நம்பிரான் மேலே ராத்திரி முப்போதும் நித்திரையின்றி ஜகத்ரக்ஷணார்த்தமாக ஜாகரூகனாய் இருந்தபடியினாலே திருக்கண்கள் சிவந்து போச்சுது. திருக்குழல் கற்றைகள் எல்லாம் கலைந்திருப்பானேன் என்றால் காற்றடித்து கலைந்து போச்சுது. கஸ்தூரி திருமண்காப்பு கரைந்திருப்பானேன் என்றால் அதிகடோரமான சூரியகிரணத்தாலே கரைந்து போச்சுது. திருவதரம் வெளுத்திருப்பானேனென்றால் அசுர நிரஸனார்த்தமாக தேவதைகளுக்காக சங்கத்வானம் பண்ணினபடியினாலே ஸ்ரீபாஞ்சசன்ய ஸ்பர்ஸத்தாலே திருவதரம் வெளுத்துப் போச்சுது. திருக்கழுத்தெல்லாம் நகக்ஷதங்களாயிருப்பானேனென்றால் அதிபிரயாசமான காடுகளிலே போகிற போது பூ, முட்கள் கிழித்தது. திருமேனியெல்லாம் குங்குமப்பொடிகளாய் இருப்பானேன் என்றால் தேவதைகள் புஷ்பவர்ஷம் வர்ஷித்த படியினாலே புஷ்ப ரேணுக்கள் படிந்தது. திருப்பரி வட்டங்களெல்லாம் மஞ்சள் வர்ணமாயிருப்பானேன் என்றால் ஸந்த்யாராகம் போலேயிருக்கிற திவ்ய பீதாம்பரமானபடியினாலே உங்கள் கண்ணுக்கு மஞ்சள் வர்ணமாகத் தோற்றுகிறது. திருவடிகளெல்லாம் செம்பஞ்சுக்குழம்பாயிருப்பானே னென்றால், குதிரை நம்பிரான் மேலேறி அங்கவடி மேல் திருவடிகளை அழுத்திக்கொண்டு போனபடியினாலே திருவடிகள் சிவந்துபோச்சுது. இப்படிப்பட்ட அடையாளமேயொழிய வேறில்லை. ஆனால், போதுகழித்து வருவானேன் என்றால் வேட்டையாடி வேர்த்து விடாய்த்து வருகிற ஸமயத்திலே திருமங்கையாழ்வானென்பான் ஒருவன் வந்து ஸர்வ ஸ்வாபஹாரத்தையும் பண்ணிக்கொண்டு போனான், அவனைச் சில நல்ல வார்த்தைகளைச் சொல்லித் திருவாபரணங்களை மீள வாங்கிக் கொண்டு போய் கருவூலத்தில் எண்ணிப் பார்க்குமிடத்தில் கணையாழி மோதிரம் காணாமல் போச்சுது. அதற்காக விடிய பத்து நாழிகைக்குப் புறப்பட்டருளி திருவீதிகளெல்லாம் வலம்வந்து கணையாழி மோதிரத்தை கண்டெடுத்துக் கொண்டு மீளவாரா நிற்கச் செய்தே தேவதைகள் பாரிஜாத புஷ்பங்கள் கொண்டு ஸேவிக்க வந்தார்கள். நாம் நம்முடைய பெண்டுகள் அன்னியிலே சூட்டுகிறதில்லை யென்று தமக்கு முன்னமே வரக்காட்டி தாமும் பின்னே எழுந்தருளினோம். ஆனபடியினாலே நாம் கொடுத்த புஷ்பத்தையும் வாங்கிச்சூட்டிக்கொண்டு நம்மையும் உள்ளே அழைக்கச் சொல்லி பெருமாளருளிச் செய்த ப்ரகாரம்.

*நாச்சியார் அருளிச்செய்த ப்ரகாரம்*
கணையாழி மோதிரம் காணாமற் போனதுவே மெய்யானால் விடிய பத்து நாழிகைக்குப் புறப்பட்டு எழுந்தருளி உறையூரிலே போய், மின்னிடை மடவார் சேரிகளெல்லாம் புகுந்து யாதோமனோரதம் அனுபவித்து அவ்வனுபவத்தாலே உண்டாயிருக்கிற அடையாளங்கள் எல்லாம் திருமேனியிலே ஸ்பஷ்டமாக தோற்றா நிற்கச் செய்யாதேயும் அவ்வடையாளங்களையும் அந்நியதாவாகச் சொல்லிக்கொண்டு நாங்கள் ஸ்த்ரீ ஜாதிகள் ஏழைகளான படியினாலே இப்படிப்பட்டிருக்கிற வஞ்ச நோக்கிகளையெல்லாம் சொல்லவந்தாரே. இப்படிப்பட்டிருக்கிற பொய்களையெல்லாம் தனக்கு சரியென போனவிடத்திலே தானே சொல்லிக்கொண்டு நேற்றைக்கு எழுந்தருளின விடத்திலே தானே இன்றைக்கும் எழுந்தருளச் சொல்லி நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்.

*பெருமாள் அருளிச்செய்த ப்ரகாரம்*
நாமானால் உறையூரைக் கண்ணாலே கண்டதும் இல்லை; காதாலே கேட்டதுமில்லை. துஷ்டர்களாய் இருக்கிறவர்கள் உம்மனதுக்கு சரிப்போனபடி சொன்னால் நீயும் அந்த வார்த்தைகளைத்தானே கேட்டுக்கொண்டு, நம்மை பண்ணாத அவமானங்களெல்லாம் பண்ணலாமா? நீங்கள் ஸ்திரீகளானபடியினாலே முன்பின் விசாரியாமல் படிக்கு அவமானங்களை பண்ணினீர்களாமென்கிற அவமானம் உங்களுக்கேயொழிய நமக்குத் தேவையில்லை. ஆனபடியினாலே நாம் கொடுத்த புஷ்பத்தையும் வாங்கிக்கொண்டு நம்மையும் உள்ளே அழைக்கச் சொல்லி பெருமாள் அருளிச் செய்த ப்ரகாரம்.

*நாச்சியார் அருளிச்செய்த ப்ரகாரம்*
முந்தா நாள் அழகியமணவாளப் பெருமாள் வேட்டையாடி, வேர்த்து, விடாய்த்து எழுந்தருளினார் என்று அடியோங்கள் அதிப்ரீதியுடனே எதிரே விடை கொண்டு திருக்கை கொடுத்து, திருஒத்து வாடை சாத்தி, திருவடிகள் விளக்கி, மங்களஹாரத்தி கண்டருளப்பண்ணி சுருளமுது திருத்தி சமர்ப்பித்து உள்ளே எழுந்தருளப் பண்ணிக் கொண்டு போய் திவ்ய சிம்மாஸனத்தில் எழுந்தருளப்பண்ணி திருவடி விளக்கி, திருவொத்து வாடை சாத்தி, திருவால வட்டம் பறிமாறினோம். அப்போ அதிக சிரமத்தோட எழுந்தருளியிருந்தார். ஆனால் இளைப்பே வென்னு வெந்நீர் திருமஞ்சனம் கொண்டுவந்து ஸமர்ப்பிவித்தோம். அதுவும் நீராடினது பாதியும், நீராடாதது பாதியுமாகே எழுந்தருளியிருந்தார். ஆனால் இளைப்போ என்று திருவரைக்குத் தகுதியான வல்லி, நுன்னின, சுன்னவாடையான திவ்ய பீதாம்பரம் கொண்டு வந்து ஸமர்ப்பித்தோம். அதையும் எப்போதும் போல சாத்திக் கொள்ளாமல் ஏதோ ஒருவிதமாய் சாத்தியருளினார். ஆனால் இளைப்போ வென்னும் கஸ்தூரித் திருமண்காப்பு சேர்த்து ஸமர்ப்பித்தோம். அதுவும் எப்போதும் போலே சாத்திக்கொள்ளாமல் ஏதோவிதமாய் சாத்தியருளினார். ஆனால் இப்போவென்று கஸ்தூரி திருமண்காப்பு சேர்த்து சமர்ப்பிவித்தோம். அதுவும் எப்போதும்போல சாத்திக்கொள்ளாமல் திருவேங்கடமுடையான் திருமண்காப்பு போல கோணாமாணாவென்று சாத்தியருளினார். ஆனால் இளைப்போ என்று தங்க பள்ளயத்தில் அப்பங்கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து வர்க்க வகைகள் முதலானதுகளையும் சேர்த்து ஸமர்ப்பித்தோம். அதுவும் அமுது செய்தது பாதியும், அமுது செய்யாதது பாதியுமாகத்தானே எழுந்தருளியிருந்தார். ஆனால் இளைப்போ என்று திருவனந்தாழ்வானைத் திருப்படுக்கையாகவும் திருமெத்தையாகவும் விரித்து அதன் மேலே பெருமாளை திருக்கண் வளரப்பண்ணி அடியோங்கள் அதிப்ரீதியுடனே திருவடிகளைப் பிடித்துக் கொண்டிருந்தோம். தாம் வஞ்சக கள்வர் ஆனபடியினாலே எங்களுக்கு ஒரு மாயா நித்திரையை உண்டாக்கி, எங்கள் தாழ் எடுத்து எங்கள் கருகூலம் திறந்து, எங்கள் ஸ்திரீதனங்களான அம்மானை, பந்துகழஞ்சி, பீதாம்பர ஆபரணாதிகள் அனைத்தையும் கைக்கொண்டு, இன்னவிடத்துக்கு எழுந்தருளுகிறோம் என்று சொல்லாதபடிக்குத்தானே எழுந்தருளியிருந்தார். அந்த உத்தரக்ஷணமே அடியோங்கள் அச்சமுடன் திடுக்கிட்டு எழுந்திருந்து திருப்படுகையைப் பார்க்குமிடத்தில் பெருமாளைக் காணாமையாலே கைநெரித்து வாயடித்து அணுகவிடும் வாசற்காப்பாளரை அழைத்துகேட்கும் அளவில் அவர்கள் வந்து ஸ்திரீதனங்களான அம்மானை, பந்துகழஞ்சி, பீதாம்பர ஆபரணாதிகள் அனைத்தையும் கைக்கொண்டு இன்னவிடத்துக்கு எழுந்தருளுகின்றோம் என்று சொல்லாதபடிக்குத்தானே எழுந்தருளினார் என்று சொல்ல வந்தார்கள். அந்த உத்திரக்ஷணமே எங்கள் அந்தரங்க பரிஜனங்களாயிருக்கிற திருச்சேவடிமார்களை அழைப்புவித்தோம். கேட்குமளவில் அவர்கள் வந்து அடியைபிடித்து அடிமிதித்துக் கொண்டு போனவிடத்திலே உறையூரிலே கொண்டு போய்விட்டது. அங்கே பார்க்குமிடத்தில் தான் மற்றொருத்தியை மச்சினி என்று முறைமை சொல்லி மடியைப்பிடத்தும், கச்சணி பொன்முலை கண்ணால் விழித்ததும், கனிவாய்க்கொடுத்ததும், கையில் நகக்குறி மெய்யாகமானதும் கார்மேனியெங்கும் பசுமஞ்சள் பூத்ததும், கருப்பந்தோட்டத்திலே யானையானது சஞ்சரிக்குமாபோலே தேவரீர் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறீர் என்றும் நாங்கள் உசிதமாகப் போகவிட்ட தூதர்கள் ஓடிவந்து அங்க அடையாளம் உள்ளபடி வந்து சொன்னார்கள். ஐயா! உம்மாலே எங்கள் மனது உலைமெழுகாய் உருகுகிறது. இந்த வேளையிலே இங்கே ஒன்றும் சொல்லாதேயும் போம்போமென்று நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்.

*பெருமாள் அருளிச்செய்த ப்ரகாரம்*
லோகத்திலே ஒருவருக்கொருவர் ஸம்சயப் பட்டால் அந்த ஸம்சயம் ஒரு ப்ரகாரத்தாலும் தீராமற் போனால் ப்ரமாணத்தாலே தீர்த்துக் கொள்வார்கள். அந்தப்படி நாம் ப்ரமாணம் பண்ணித் தருகிறோம்! நாம் தேவாதி தேவனான படியினாலே தேவதைகளைத் தாண்டித் தருகிறோம்! ஸமுத்திரத்திலே மூழ்குகிறோம்! அக்னி ப்ரவேசம் பண்ணுகிறோம்! பாம்புக் குடத்திலே கையிடுகிறோம்! மழுவேந்துகிறோம்! நெய்யிலே முழுகுகிறோம்! இப்படிப்பட்ட ப்ரமாணங்களையானாலும் வாங்கிக் கொண்டு நாம் கொடுத்த புஷ்பத்தையும் வாங்கி சூட்டிக்கொண்டு நம்மையும் உள்ளே அழைக்கச் சொல்லி பெருமாள் அருளிச்செய்த ப்ரகாரம்.

*நாச்சியார் அருளிச்செய்த ப்ரகாரம்*
லோகத்திலே ஒருவருக்கொருவர் ஸம்சயப்பட்டால் அந்த ஸம்சயம் ஒரு ப்ரகாரத்தாலும் தீராமல் போனால், ப்ரமாணத்தாலே தீர்த்துக் கொள்ளுவார்கள் என்றும், லோகத்திலே ப்ராஹ்மணனுக்கும் ப்ராஹ்மணனுக்கும் வாக்குவாதம் வந்தால் ப்ராஹ்மணன் ப்ராஹ்மணனை தாண்டிக் கொடுப்பார்கள் என்றும், தாம் தேவாதி தேவனான படியினாலே தேவதைகளைத் தாண்டித் தருகிறோமென்று சொல்லவந்தாரே! அந்த தேவதைகள் தேவரீருடைய திருவடிகளை எப்போ காணப்போகிறோம்! என்று அனேக கற்பகம் தோறும் சதா ப்ரார்த்தித்துக் கொண்டிருக்கிறவர்களை வலுவிலே தாண்டித் தருகிறோமென்றால் வேண்டா மென்பார்களா? சமுத்திரத்திலே மூழ்கிறோமென்று சொல்லவந்தாரே! ப்ரளய காலத்திலே ஸகல லோகங்களையும் தம்முடைய திருவயிற்றிலே வைத்து ரக்ஷித்துக்கொண்டு ஒரு ஆல இலைத் தளிரிலே திருக்கண்வளர்ந்தருளின தமக்கு ஸமுத்திரத்திலே முழுகிறது அருமையா? அக்னிப்பிரவேசம் பண்ணுகிறோம் என்று சொல்லவந்தீரே! ப்ரும்மாவுக்காக உத்திர வேதியிலே ஆவிர்பவித்த தமக்கு அக்னியிலே மூழ்கினால் அக்னி சுடுமா? பாம்புக் குடத்திலே கை இட்டுத் தருகிறோமென்று சொல்ல வந்தீரே! சென்றாற் குடையாம், இருந்தாற் சிங்காசனமாம் யென்று ஸதாஸர்வகாலம் திருவநந்தாழ்வான்மேலே திருக்கண்வளர்ந்திருக்கிற தமக்குப் பாம்புக் குடத்திலே கையிட்டால் பாம்பு கடிக்குமா? மழுவேந்துகிறோம் என்று சொல்லவந்தாரே! கோடி சூர்யப்ரகாசமான திருவாழியாழ்வானை ஸதா திருக்கையிலே தரித்துக்கொண்டிருக்கிற தமக்கு அப்ரயோஜகமாய் இருக்கிற இரும்பை மழுவாக ஏந்துகிறது அருமையா? நெய்க் குடத்திலே கையிடுகிறோ மென்று சொல்லவந்தாரே! கிருஷ்ண அவதாரத்திலே பஞ்சலக்ஷம் குடியிலுள்ள வெண்ணையுண்ட தமக்கு நெய்குடத்திலே கையிடுவது அருமையா? இப்படிப்பட்டிருக்கிற பரிஹாஸ ப்ரமாணங்களை எல்லாம் தமக்கு சரிப்போன இடத்திலேதானே பண்ணிக்கொடுத்துக்கொண்டு தாமும் இன்னைக்கு அங்கேயே தானே எழுந்தருளச் சொல்லி நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்.

*பெருமாள் அருளிச் செய்த ப்ரகாரம்*
நாம் உத்ஸவார்த்தமாகப் புறப்பட்டருளி திருவீதிகள் எல்லாம் வலம்வந்து தேவதைகள் புஷ்ப வர்ஷம் வர்ஷிக்க, ப்ராஹ்மணர்கள் எல்லோரும் ஸ்தோத்திரம் பண்ண, இப்படி பெரிய மநோரதத்தோடே தங்களிடத்தில் வந்தால் தாங்கள் எப்போதும் போல் ஆதரியாமற்படிக்கு அபராதங்களைப் பண்ணினோமென்றும் நாமானால் உறையூரைக் கண்ணாலே கண்டதுமில்லை. காதாலே கேட்டதும் இல்லை என்று சொன்னோம். அத்தை அப்ரமாணமாக ஒப்புக்கொண்டீர். ஆனால் ப்ரமாணமானாலும் பண்ணித் தருகிறோமென்று சொன்னோம். அத்தைப் பரிஹாஸம் பண்ணினீர். இப்படி நாம் எத்தனை சொன்னபோதிலும் அத்தனையும் அந்யதாவாகக் கொண்டு கோபத்தால் திருவுள்ளங் கலங்கித் திருமுகமண்டலம் கறுத்துத் திருக்கண்கள் சிவந்து இப்படி எழுந்தருளி இருந்தால் நமக்கென்ன வேறு கதி இருக்கிறது? அழகிய மணவாளப் பெருமாள் ஸ்ரீரங்கநாச்சியார் சந்நிதி வாசலிலே தள்ளுபட்டுக் கொண்டிருக்கிறாரென்கிற அவமானம் உங்களுக்கேயொழிய நமக்குத் தேவையில்லை. ஆனபடியினாலே நாம் கொடுத்த புஷ்பத்தையும் சூட்டிக் கொண்டு நம்மையும் உள்ளேயழைக்கச் சொல்லி பெருமாளருளிச்செய்த ப்ரகாரம்.

*நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்*
தாம் பண்ணினதெல்லாம் தாறுமாறுமாக பண்ணிப்போட்டு தங்கள் வாசலிலே தள்ளுப்பட்டுக் கொண்டிருக்கிற அவமானம் எங்களுக்கே ஒழிய தமக்கு தேவையில்லையென்று சொல்ல வந்தாரே. இதுகளையெல்லாம் இப்படி வருஷத்திற்கொருதரம், வழிமாராட்டயாய் யெழுந்தருளி, தமக்கு சரிபோனபடி நடந்துபோட்டு, பின்னையும் இங்கே தானே வந்து, நாமானால் ஒன்றும் அறியோமென்றும், நாம் அத்தனை அபராதங்களை பண்ணினபோதிலும் பொருத்தருள வேணுமென்றும், இப்படிப்பட்டிருக்கிற ஆகாத்யங்களை பண்ணிக்கொண்டு வருகிறார். நாமானால் பொருக்கிறதில்லை. இதுகளையல்லாம் நம்முடைய அய்யா மகிழ்மாறன் நம்மாழ்வார் வந்து மங்கள வசனமாகச் சொன்ன வாய் மொழியினாலே, பொருத்தோம். பொருத்தோம். பெருமாளை உடனே உள்ளே எழுந்தருளப்பண்ணச்சொல்லி நாச்சியார் அருளிச்செய்த பிரகாரம்.

ப்ரணய கலகம் முடிந்தது. உடனே ஸ்ரீரங்கநாதன் ஸ்ரீரங்கநாச்சியாருடன் ஒரே ஸிம்ஹாசனத்திலெழுந்து அருளி சகல ஜனங்களுக்கும் ஸேவை ஸாதித்தருளுகின்றார்.
*ப்ரணய கலஹம் முற்றிற்று.*

No comments:

Post a Comment