க்ருஷ்ண தாமோதரம் வாஸுதேவம் ஹரிம்
ஸ்ரீதரம் மாதவம் கோபிகாவல்லபம்
ஜானகீநாயகம் ராமசந்த்ரம் பஜே
அச்யுதம் - என்றும் ஒரே நிலையில் இருப்பவன்! தன்னை அண்டியவர்கள் கீழ் நிலையை அடைய விடாதவன்! இவனை அடைந்தவர்களுக்கு மீண்டும் பிறப்பிறப்பு சுழல் கரும வசத்தால் அமைவதில்லை!
கேசவம் - அழகிய சுருண்ட முடிகளை உடையவன்! கேசி என்னும் அரக்கனை வதைத்தவன்! அரன் அயன் என்று உலகு அழித்து அமைத்து உளனே என்று ஆழ்வார் பாடியதைப் போல் க என்ற பிரம்மனுக்கும் ஈச என்ற ஈசானனுக்கும் அந்தர்யாமி ஆனவன்!
ராம - மகிழ்ச்சியைத் தருபவன்! மகிழ்ச்சியே உருவானவன்! கவர்பவன்!
நாராயணம் - நாரங்கள் என்னும் உயிர்கள், உலகங்கள் அனைத்திற்கும் இருப்பிடமானவன்! நாரங்களை இருப்பிடமாகக் கொண்டவன்! நாரங்களை நடத்துபவன்! நீர்மையன்! நீரைப் போன்ற தன்மை கொண்டவன்! அடியவர் தரும் உருவங்களை எல்லாம் ஏற்று அதில் நிறைபவன்!
க்ருஷ்ண - கவர்பவன்! களையெடுப்பவன்! கருப்பன்! பண்படுத்துபவன்! கண்ணன்!
தாமோதரம் - அன்பிற்கு வசப்படுபவன்! யசோதையாலும் சகாதேவனாலும் கட்டப்பட்ட கயிற்றைத் தாங்கியவன்!
வாஸுதேவம் - வசுதேவன் மைந்தன்! எங்கும் வசிப்பவன்! ஒளி வடிவானவன்!
ஹரிம் - கவர்பவன்! பொருளைக் கவர்பவன்! உள்ளத்தைக் கவர்பவன்! உயிரைக் கவர்பவன்! திருடன்!
ஸ்ரீதரம் - திருவாளன்! திருவைத் தன் மார்பில் தாங்குபவன்! செல்வன்!
மாதவன் - திருமகள் கேள்வன்! திருமால்! பெருந்தவ வடிவானவன்!
கோபிகா வல்லபம் - கோபியர் கொஞ்சும் ரமணன்! கோபியர் உள்ளத்திற்கு நெருங்கியவன்! கோபியர்களின் அந்தரங்கன்!
ஜானகீ நாயகம் - ஜனக குமாரியின் நாயகன்!
ராமசந்த்ரம் - சந்திரனைப் போல் கவர்பவன்!
பஜே - என்றும் துதிக்கிறேன்!
தன் அன்பர்கள் நிலை தாழ விடாதவனும், சுருள்முடி அழகனும், மகிழ்ச்சியைத் தருபவனும், நீர்மையாளனும், கண்ணனும், அன்பிற்கு வசப்படுபவனும், எங்கும் வசிப்பவனும், கவர்பவனும், செல்வனும், திருமகள் கேள்வனும், கோபியர் உள்ளம் நிறைபவனும், சீதை மணாளனும் ஆன ராமசந்திரனை என்றும் பஜிக்கிறேன்!
No comments:
Post a Comment