இறைவனுடைய அற்புதமான, சிறப்புப் படைப்புகளில் ஒன்றே அணில் ஆகும். மனித குலத்திற்கு வந்து அமைந்திடாத எண்ணற்ற பல விசேஷமான சக்திகளைப் பூண்ட அணிலானது, ஒரு மரத்தில் உள்ள காய் பழமாகி விட்டதா, இல்லையா என்பதையும், ஒரு பழம் இனிக்குமா, இனிக்காதா என்பதையும் தூர இருந்தே அதனைப் பார்த்த மாத்திரத்திலேயே பகுத்தறியும் சக்திகளைப் பெற்றதாகும்.
மேலும், பல வகைகளில் செயலாற்றும் இத்தகைய விசேஷமான சக்திக்கு சலப்ரகாஷ்டப் புலம் என்று பெயர்.
ஒவ்வொரு அணிலும் கொறிக்கின்ற (பழக்) கொட்டையின் சிதறல்கள் பூமியில் படிந்து, அதன் மூலமாக இந்த சலப்ரகாஷ்டப் புலச் சக்தி மனிதனை அடைகின்றது. இதற்காகவே 'அணிலேறி விளையாடி வா!' என அழைத்து வீட்டில் பழ மரங்களை வளர்ப்பர். இது மிருக இன வளத்திற்காக மனித குலம் ஆற்ற வேண்டிய தர்மமாகும்.
அணிலுக்கு அதன் சுறுசுறுப்பே ஒரு மகத்தான ஆன்ம சக்தியாய் உள்ளது. ஒரு அணில் 300 அடி வரை முன்னே உள்ள முள், சிறுகொம்பு போன்றவற்றை, பார்த்த மாத்திரத்திலேயே, தான் வேகமாக ஓடும் கதியிலேயே, கண்ட ஒரு சில விநாடிகளுக்கு உள்ளேயே பாதையின் தன்மைகளை சுற்றுப்புறச் சூழலுடன் உணர்ந்து அறியும் திறமையான மூளை சக்திகளை உடையது. இவ்வாறான தீர்க்க தரிசனச் சக்திகள் அணிலுக்கு நிறைய உண்டு.
மூலாதார த்ரயப் பரல்கள்!
அணிலின் முதுகில் உள்ள மூன்று பட்டைகள் மகத்தான தெய்வீகத்துவம் கொண்டவை!
திரேதா யுகத்தில் ஸ்ரீராமர் அணிலுக்கு அளித்த மூன்று பட்டைகளின் மகாத்மியத்தை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்! அரணீயம், பரணீதரம், பில்வதாரணீயம் என்று இந்த மூன்று பட்டைகளுக்கும் பெயராகும்.
“வரதா(ணி)யப்பா படைத்த நெடுவில் ராமனார் தோயப்படுத்தி வா அணிற் புறச்சாயம்!"
என்பது சித்த கிரந்த பரிபாஷையாகும். இதில் அணில் படைப்பின் பிரம்ம ரகசியங்கள் பல கோடி பதிந்துள்ளன. ஆத்மவிசாரத்தில் இவை காலத்தால் விரிந்து விளக்கம் காணக் கூடியதாகும்.
சேது பாலம் கட்டிட ஆற்றிய அருள் சேவைக்கான திருவுடைப் பரிசாக, ஸ்ரீராமர் தம் ஆத்மார்த்தமான அருளாசியாக, அணில் இனத்திற்கு இந்த மூன்று பட்டைகளை, மூலாதார திரயப் பரல்களாக அவற்றின் முதுகில் அளித்திட்டார். இதனால்தான் அணிலுக்கு ஆன்மப் பூர்வமான தனிச் சிறப்பிடம் தெய்வீகத்தில் ஒன்று உண்டு.
ஒரு அணிலானது தினந்தோறும் ஒரு வில்வ மரத்திலாவது ஏறி தியானித்து, இறங்க வேண்டும் என்ற தெய்வீக நியதியும், நித்தியக் கடமையும் உண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள நித்திய பூஜைக் கடமைகள் போலவே, ஆன்மீகப் பூர்வமாக ஒவ்வொரு அணிலும் தினமுமே அந்தந்த நாள், திதிக்கேற்ப எத்தனை, எவ்வகை தெய்வீக விருட்சங்களில் ஏறி பிற ஜீவ நலன்களுக்காக, 'அணிற்புழங்க யோகாசனம்' என்னும் அரிய வகை யோகாசனங்களைப் பூண்டு தியானித்துப் பூஜிக்க வேண்டும் என்ற வரைமுறைகளும் உண்டு.
அணிலைப் பார்க்கும் போதெல்லாம் எவருக்கு ‘ராம நாம' நினைவு வருகின்றதோ, அவர் நல்ல தெய்வீகப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார் என்பது பொருளாகும். இதுவும் அணில் உணர்த்தும் ஆன்மீக நெறியே!
அணில் கண்டு அணிவீர் ராமநாம ஜபம்!
அணில் குலத்தின் சார்பாக 'வாசஸ்பதி' என்ற அணில், ஸ்ரீராமரின் தரிசனம் பெற்றுத் தன் குலத்திற்கே ஸ்ரீராமரின்
திருக்கரங்களால் அனைத்துலக அணில்களுக்கும் முதுகில் மூன்று பட்டைகளைத் திரு அருள் பூர்வமாகப் பெற்றுத் தந்தது.
பெருமாள் ஆலயங்களில் தலைக்கு சடாரி சாற்றுவதுபோல, ஸ்ரீராமரும் 'வாசஸ்பதி' அணிலின் மூலாதார ஸ்தானத்தில் 'த்ரயோகப்பதாரியை', 'ஜபதப யோகாபியை' இட்டார். இதனால்தான் அணிலைப் பார்க்கும்போதெல்லாம் உடனே ராம நாமத்தை ஜபிப்போருக்கு அவரவர் ஆன்ம நிலைக்கேற்ப ஜபதப யோக சக்திகளை 'வாசஸ்பதி' அணில் தான் திரேதா யுகத்தில் பெற்ற, ஸ்ரீராம தரிசனப் பலனைக் கொடுக்கும் சங்கல்பத்தை ஏற்றதுடன், இன்றளவும், என்றுமாய் யுகயுகமாய் அளித்துக் கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment