Tuesday 10 August 2021

ஆண்டாள் அவதரித்த திருநாள்

.

இன்று என்ன விசேஷம்? நமக்காகவே ஆண்டாள் அவதரித்த திருநாள் இன்று.
திருவாடிப்பூரம் இன்று 
 திருமாலுடன் கூடிவாழும் என்றுமே குறையாத பெரும் செல்வமாகிய வைகுந்தமாகிற வான்போகத்தை வேண்டாமென உதறித் தள்ளிவிட்டு, பூவுலக மாந்தர்களை உய்விக்க பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையாய் பூமிதேவி இந்தப் புவியில் அவதரித்த திருநாள் இன்று. 

பெரியாழ்வாருக்கு மகளாக ஏன் பிறக்க வேண்டும்? பூவுலகில் பிறந்தாலும் ‘மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்’ என்று சூளுரைத்தவள். ‘வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை வேங்கடவர்’ கென்று பிறந்தவள். ‘பொங்கும் பரிவாலே’ அந்தப் பரம்பொருளுக்கே பல்லாண்டு பாடியவருக்குப் பிறக்காமல் வேறு யாருக்கு பிறக்க முடியும்?

எல்லாப் பெண் குழந்தைகளுக்கும் முதல் உதாரண புருஷர் தகப்பனார் தான். பொதுவாகவே பெண் குழந்தைகளுக்கு அம்மாவைவிட தங்களது தகப்பனாரிடத்தில் அதிகமான பரிவு உண்டு. தகப்பனார்களுக்கும் அப்படியே. இதற்கு கோதாவும் விலக்கல்ல.

பரமனிடம் பெரியாழ்வார் காட்டிய பரிவைப் பார்த்து, பூமிப் பிராட்டி அவரது துளசித் தோட்டத்தில் வந்துதித்தாள் என்றும் சொல்லலாம். 

தனது திருத்தந்தையாரையே தனது ஆசார்யனாகக் கொண்டு தனது நாச்சியார் திருமொழியில் ஒவ்வொரு பத்துப் பாசுரங்களின் முடிவிலும் அவரது மகளாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளுகிறாள் ஆண்டாள் – நாம் எப்படி நமது தந்தை பெயரின் முதலெழுத்தை முதலில் போட்டுக் கொள்ளுகிறோமோ அப்படி.

நாச்சியார் திருமொழி முதல் பத்தில் ‘புதுவையர்கோன்விட்டு சித்தன் கோதை’ என்று ஆரம்பித்து ‘வில்லிபுத்தூர் மன்விட்டுசித்தன் தன் கோதை’, பட்டர்பிரான் கோதை’ என்று ஒவ்வொரு பத்துப் பாசுரங்களின் முடிவிலும் தன்னை பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையாய் நிலைநிறுத்திக் கொள்ளுகிறாள்.

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஆசார்ய சம்பந்தம் மிகவும் முக்கியமில்லையோ

திருதகப்பனாரை ஆசார்யன் என்று ஏற்றுக் கொண்டு விட்டால் போதுமா? அவரது வழி நடக்க வேண்டாமா? பெரியாழ்வார் கண்ணனின் பிள்ளைத் தமிழை ‘பாதக் கமலங்கள் காணீரே’ என்று ஆரம்பித்து ‘செண்பக மல்லிகை யோடு செங்கழு நீர்இரு வாட்சி எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்றுஇவை சூட்டவாவென்று’ பாடி முடித்தார். அதாவது பரம்பொருளின் திருவடியிலிருந்து திருமுடிவரை பாடினார்.

‘அதேபோல ஆண்டாளும் திருப்பாவையில் இரண்டாவது பாசுரத்தில் ‘பாற்கடலுள் பையத்துயின்ற பரமனடி பாடி’ என்று ஆரம்பித்து கடைசியில் வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனை’ என்று முடிக்கிறாள்.

இப்படி ஆசார்யன் காட்டிய வழியில் நடப்பதையே ‘ஆந்தனையும் கைகாட்டி’ என்றும் திருப்பாவையில் குறிப்பிடுகிறாள்.

ஆண்டாள், கோதா என்றெல்லாம் குறிப்பிட்டாலும் கூட இவளுக்கு இன்னொரு சிறப்புப் பெயர் ‘ஏகாரச் செல்வி’ என்று.

ஒரு சொல்லை அழுத்திச் சொல்லும்போது ‘ஏ’ சேர்த்து சொல்லுவோம், இல்லையா? ஆண்டாளும் தனது திருப்பாவை முதல் பாசுரத்தில் ‘நாராயணனே நமக்கே பறை தருவான்’ என்று ‘ஏ’ காரத்தில் சொல்லுகிறாள். அந்த செல்வத் திருமால் நம்மையெல்லாம் ‘எங்கும் திருவருள் பெற்று இன்புற’ச் செய்யும் போது நாம் என்ன செய்ய வேண்டும்?

இருபத்தி ஒன்பதாம் பாசுரத்தில் சொல்லுகிறாள்: ‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம்; உனக்கே நாமாட் செய்வோம்’ என்று இருக்க வேண்டும்.

இவள் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை; ‘மல்லிநாடாண்ட மடமயில்’, ‘மெல்லியலாள்’. அதுமட்டுமல்ல; ‘செழுங்குழல் மேல் மாலைத் தொடை தென்னரங்கருக்கு ஈயும் மதிப்புடைய சோலைக்கிளி’. தனது கூந்தலில் சூடிக் களைந்த மாலையை அரங்கருக்குக் கொடுத்தவள்.

எப்பொழுதோ அவதரித்தவள் எப்படி பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் (பிறகு பிறந்தவள் – தங்கை) ஆகமுடியும்?

ஸ்வாமி ராமாநுஜருக்கு ‘திருப்பாவை ஜீயர்’ என்றே ஒரு திருப்பெயர் உண்டு. அவரது உதடுகள் எப்போதும் திருப்பாவையை சேவித்துக்கொண்டே இருக்குமாம். நாச்சியார் திருமொழி திருமாலிருஞ்சோலை பாசுரத்தில் ஆண்டாள் தன் ஆவலை கூறுகிறாள்:

நாறுநறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு* நான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்*
நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்*
ஏறுதிருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங்கொலோ!

ஸ்ரீ ராமானுஜர் இந்த பாசுரத்தை சேவித்து போது ஆண்டாளின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று திருமாலிருஞ்சோலை சென்று நாறு அண்டா வெண்ணெய், நூறு அண்டா நிறைந்த அக்காரவடிசில் செய்வித்து அழகருக்கு அமுது செய்விக்கிறார்.

அதன் பின் ஸ்வாமி ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற போது ஆண்டாள் தன் திருவாயாலே ஸ்வாமியை ‘வாரும், அண்ணா’ என்று அழைத்தாளாம்.

தாய் பத்தடி பாய்ந்தால் சேய் பதினாறு அடி பாயும் என்பார்கள். திருத்தகப்பனார் பரமனுக்குப் பொங்கும் பரிவாலே பல்லாண்டு பாடினார் என்றால் திருமகள் என்ன செய்தாள் தெரியுமோ?

வேதங்கள், ரிஷிகள், முனிவர்கள் பிரம்மாதி தேவர்க ளெல்லாம் ‘பரமன் எங்கே?’ என்று தேடிக் கொண்டிருக்க, இவள் ‘விருந்தாவனத்தே கண்டோமே’ என்று அவனைக் கண்டு அதை பாசுரங்களாகவும் பாடி விட்டாள்.

நாச்சியார் திருமொழியின் கடைசிப் பத்துப் பாடல்களை உரையாடலாகவே அமைத்திருக்கிறாள் ஆண்டாள்.

கேள்வி: ‘பட்டிமேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க்கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக்கண்டீரே?

பதில்: இட்டமான பசுக்களை இனிதுமறித்து நீரூட்டி*
விட்டுக்கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே’.

‘ஆடுமாடுகள் மேய்க்கும் ஆயர்குலத்தில் பலதேவனின் தம்பியாகப் பிறந்தவனை விருந்தாவனத்தே கண்டீர்கள். அன்று ஆயர்களுக்காக மலையை தூக்கினானே, அந்த கோவர்த்தனனைக் கண்டீரே?

மாலாய்ப் பிறந்த நம்பியை, மாலே செய்யும் மணாளனை கண்டீரே? மாதவன் என் மணியினை கண்டீரே? ஆழியானைக் கண்டீரே? விமலன் தன்னைக் கண்டீரே?’ என்ற தொடர் கேள்விகளுக்கு முத்தாய்ப்பாகப் பதில் சொல்லுகிறாள் கோதை:

‘பருந்தாட்களிற்றுக்கருள் செய்த பரமன் தன்னை* பாரின்மேல்
விருந்தாவனத்தே கண்டமையை விட்டுசித்தன் கோதைசொல்*
மருந்தாமென்று தம்மனத்தே வைத்துக்கொண்டு வாழ்வார்கள்*
பெருந்தாளுடைய பிரானடிக் கீழ்ப் பிரியாதென்றுமிருப்பாரே’.

இப்படி ஆண்டாள் பாடியதாலேயே ஸ்ரீவைஷ்ணவத் திருத்தலங்களில் பெருமாள் திருவீதி வலம்வரும்போது திராவிட வேதம் என்றழைக்கப்படும் திவ்யப்பிரபந்தம் சேவிப்போர் பெருமாளின் முன்னாலும், இன்னமும் பந்தாமனைத் தேடிக்கொண்டிருக்கும் வேதங்களை சேவிப்போர் பின்னாலும் வருகிறார்கள் என்று சொல்லுவார்கள்.

இனிமையான எளிமையான தமிழில் அமைந்த பாடல்கள் இவை. திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே!

கோதை நாச்சியாரே சரணம் ! ஆண்டாளின் பாதார விந்தங்களே போற்றி போற்றி !!!

No comments:

Post a Comment