நன்றி : இணைய இதழ்
பஞ்ச கிருஷ்ண தலங்கள்
பஞ்ச கிருஷ்ண தலங்கள் என்பவை தமிழ்நாட்டில் உள்ள முக்கிய வைணவ ஆலயங்கள் ஆகும். இத்தலங்களின் திருமால் எப்போதும் பக்தர்களுடன் சஞ்சரித்துக் கொண்டிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
இத்தலங்கள் கிருஷ்ண ஆரண்ய தலங்கள் என்றும் பஞ்ச கிருஷ்ண சேத்திரங்கள் என்றும் அழைக்கப்
படுகின்றன.
இத்தலங்களில் கிருஷ்ணனின் லீலைகள் நடைபெற்றதாக தலபுராணங்கள் குறிப்பிடுகின்றன. இத்தலங்களில் அடியவர்கள் திருமாலின் தரிசனத்தைப் பெற்றுள்ளனர்.
திருக்கண்ணங்குடி, திருக்கண்ணபுரம், திருக்கண்ண
மங்கை, கபிஸ்தலம், திருக்கோவிலூர் ஆகிய இடங்களில் பஞ்ச கிருஷ்ண தலங்கள் அமைந்துள்ளன. இவற்றைப் பற்றி பார்ப்போம்.
லோகநாதப் பெருமாள் கோவில், திருக்கண்ணங்குடி
லோகநாதப் பெருமாள் கோவில்,
இவ்விடம் நாகபட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாகபட்டிணம்- திருவையாறு சாலையில் நாகபட்டிணத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும், சிக்கலிலிருந்து 2 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
வசிட்டர் முனிவர் கண்ணன் மீது பக்தி கொண்டு வெண்ணையால் கண்ணனை உருவாக்கி வழிபட்டு வந்தார். வசிட்டரின் பக்தியின் காரணமாக வெண்ணைக் கண்ணன் உருகவில்லை.
கண்ணன் ஒருநாள் சிறுவனாக வந்து வெண்ணைக் கண்ணனை உண்டு ஓடத் தொடங்கினான். இதனை அறிந்த வசிட்டர் சிறுவனை பிடிக்க விரட்டினார்.
சிறுவன் ஓடிய வழியில் முனிவர்கள் சிலர் கண்ணனை நினைத்து தவம் இயற்றிக் கொண்டிருந்தனர். ஓடி வந்த சிறுவனை அவர்கள் கண்ணன் என உணர்ந்து இத்தலத்தில் தங்கி பத்தர்களுக்கு அருள்புரியுமாறு வேண்டிக் கொண்டனர்.
கண்ணனை தன் அன்பினால் கட்டிப்போட்ட இடம் ஆதலால் இவ்விடம் கண்ணங்குடி என்று அழைக்கப்படுகிறது.
இங்கு மூலவரும் உற்சவரும் ஒரே மாதிரியாகக் காட்சியளிப்பது இத்தலச் சிறப்பாகும். இங்கு கருடாழ்வார் கைகளைக் கட்டிய நிலையில் உள்ளார்.
இத்தலத்தில் நடைபெறும் திருநீரணி விழா சிறப்பு வாய்ந்தது. இத்திருவிழாவில் பெருமாள் உட்பட அனைவரும் திருநீறு அணிகின்றனர். சைவ வைணவ சமய ஒற்றுமைக்கு சான்றாக இவ்விழா நடத்தப்படுகிறது.
108 திவ்யதேசங்களில் இத்தலம் 18-வது ஆகும். குழந்தை வரம் வேண்டி இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் பால்பாயாசம் படைத்து வழிபாடு மேற்கொள்கின்றனர்.
வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களின் குறைகளை இத்தல இறைவன் தீர்த்து வைப்பதாக பக்தர்கள் கருதுகின்றனர்.
இங்கு திருமால் லோகநாதப் பெருமாள், சியாமளமேனிப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் லோகநாயகி என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள்.
பிரம்மா, கௌதமர், வசிட்டர், பிருகு, உபரிசரவசு, திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை நேரில் தரிசித்துள்ளனர்.
நீலமேகப் பெருமாள் கோவில், திருக்கண்ணபுரம்
நீலமேகப் பெருமாள் கோவில்,
இவ்விடம் நாகபட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நன்னிலம் நாகபட்டிணம் சாலையில் திருப்புகலூரிலிருந்து 2 கிமீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. இவ்வாலயம் 2000 வருடங்களுக்கு முற்பட்டது.
ஒரு சமயம் திருமாலை வேண்டி முனிவர்கள் பலர் இத்தலத்தில் தவம் இயற்றினர். இதனால் அவர்களின் தேகம் மெலிந்து நெற்பயிர் போலானது.
திருமாலிடம் நமோ நாராயணா மந்திரத்தைக் கற்ற உபரிசிரவசு மன்னன் தன் படையினரோடு இவ்வழியே திரும்பிக் கொண்டிருந்தான். படைவீரர்கள் பசியைப் போக்க நெற்பயிர்போல் காட்சியளித்த முனிவர்களை வெட்டினர்.
இதனைத்தடுக்க திருமால் சிறுவனாக வந்து அவர்களுடன் போரிட்டார். உபரிசிரவசு நமோ நாராயணா மந்திரத்தை சிறுவனின் மீது உபயோகித்தான். மந்திரம் சிறுவனின் திருவடிகளில் விழுந்தது.
திருமால் நீலமேகப் பெருமாளாகக் காட்சியளித்தார். மன்னனின் வேண்டுகோள்படி இத்தலத்தில் இருந்து அருளுகிறார்.
திருமால் அடியவரான கோவில் அர்ச்சகர் ஒருவரை மன்னனின் தண்டனையிலிருந்து காப்பாற்ற அர்ச்சகரின் வேண்டுகோளுக்கு இணங்கி தன் திருமுடியை மன்னருக்கு காட்டியருளினார். எனவே இத்தல இறைவனை சௌரிராஜப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார்.
இத்தலத்தில் திருமால் நின்ற கோலத்தில் அருளுகிறார். இத்தலத்தில் இறைவனின் கைகள் தானம் பெறுவது போல் (அதாவது பக்தர்களின் பாவங்களை எல்லாம் வாங்கிக் கொள்ளும் வகையில்) உள்ளன.
நீலமேகப் பெருமாள், திருக்கண்ணபுரம்
இங்கு திருமால் எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாக கையில் முழுவதும் திரும்பிய பிரயோகச் சக்கரத்துடன் காட்சியளிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இத்தலம் கீழைவீடு என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது.
வைகாசி பிரம்மோற்சவ விழவாவின் போது காலையில் சிவன், மாலையில் பிரம்மா, இரவில் திருமால் என மும்மூர்த்தி வடிவில் அருளுவது இத்தலச் சிறப்பாகும்.
இராமர் இத்தலத்தில் விபீசணனுக்கு திருமால் வடிவில் நடந்து காட்டியதாகக் கூறப்படுகிறது. இன்றைக்கும் அமாவாசை அன்று விபீசணனுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.
இக்கோவிலில் மூலவரை நோக்கி ஒரே வட்டத்தில் நவகிரகங்கள் காட்சியளிக்கின்றன. இத்தலம் இறைவன் வைகுந்த பதவியை வழங்குபவராகப் போற்றப்படுகிறார். இத்தல இறைவனை வழிபட அனைத்து நியாயமான கோரிக்கைகளும் நிறைவேறும்.
இங்கு திருமால் நீலமேகப் பெருமாள், சௌரிராஜப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் கண்ணபுரநாயகி என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள்.
நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கை
யாழ்வார், குலசேகர ஆழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை மங்களாசனம் செய்துள்ளனர்.
பக்தவத்சல பெருமாள், திருக்கண்ணமங்கை
இவ்விடம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் உள்ளது. திருவாரூர் இரயில் நிலையத்திலிருந்து 4 மைல் தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 25 மைல் தொலைவிலும், திருச்சேரையிலிருந்து 15 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.
நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகளின் சீடரான திருகண்ணமங்கைஆண்டான் வாழ்ந்து வழிபாடு நடத்திய இடம். ஆதலால் அவருடைய பெயரால் திருகண்ணமங்கை என்று அழைக்கப்படுகிறது.
பாற்கடலில் இருந்து தோன்றிய திருமகள் திருமாலை நோக்கி தவம் இருந்து அவரை கணவராக அடைந்த தலம். திருமகளாகிய லட்சுமி வழிபட்ட இடம் ஆதலால் லட்சுமி வனம் என்று அழைக்கப்படுகிறது.
திருமால் பாற்கடலை விட்டு வெளியே இத்தலத்திற்கு வந்து திருமகளை மணம் புரிந்ததால் பெரும்புறக்கடல் என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார்.
திருமால், திருமகள் திருமணம் நடைபெற்ற இத்தலம் கிருஷ்ண மங்கள சேத்திரம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.
இறைவனின் திருமணத்தை காண தேவர்கள் தேனீக்கள் வடிவில் இத்தலத்திற்கு வந்தனர். நித்தமும் திருமணக்கோலத்தைக் காணும் பொருட்டு தேனீக்கள் வடிவில் இத்தலத்தில் இன்றும் தங்கியுள்ளனர் என்பது இத்தல சிறப்பாகும். இத்தலத்தில் ஓர் இரவு தங்கி வழிபட மோட்சம் கிட்டும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் திருமால் பக்தர்களின் வேண்டுகோளுக்கு விரைந்து வருதால் இவர் பத்தராவி என்றுஅழைக்கப்படுகிறார்.
இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தை தரிசனம் செய்த உடனே சந்திரனின் சாபம் நீங்கப் பெற்றதால் இத்தலத்தீர்த்தம் தர்ஷன புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது. 108 திவ்யதேசங்களில் இத்தலம் 16-வது திவ்ய தேசமாகும்.
இங்கு திருமால் பக்தவத்சலப் பெருமாள், பத்தராவிப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் கண்ணமங்கை நாயகி, அபிசேகவல்லி என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள்.
திருமணத்தடை உள்ளவர்கள், பதவி உயர்வு வேண்டுபவர்கள், நல்ல காரியம் நடக்க வேண்டுபவர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் இத்தலஇறைவன் அருளுவார்.
வருணன், ரோமசமுனி, முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆகியோர் இத்தல இறைவனை நேரில் தரிசித்துள்ளனர்.
கஜேந்திர வரதப்பெருமாள், கபிஸ்தலம்
இவ்விடம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கும்பகோணம் திருவையாறு சாலையில் கும்பகோணத்திலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
திருமால் கருணையினை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியான கஜேந்திர மோட்சம் இத்தலத்தில் நிகழ்ந்தது. ஆஞ்சநேயருக்கு அருள் வழங்கிய தலமாதலால் இது கபிஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.
துர்வாசரின் சாபத்தால் இந்திரஜ்யும்னன் என்ற திருமால் பக்தன் காட்டு யானைகளின் தலைவனான கஜேந்திரனாகப் பிறந்தான். எனினும் திருமாலின் மீது கொண்ட பற்றினால் தினமும் தாமரை கொண்டு வழிபட்டு வந்தான்.
அகத்தியரின் சாபத்தால் கூஹூ என்ற அசுரன் முதலையாக குளத்தில் வசித்தான். ஒருநாள் திருமால் வழிபாட்டிற்காக தாமரையை மலரை எடுக்க கஜேந்திரன் யானை கூஹூ அசுரன் இருந்த குளத்தில் இறக்கினான்.
கஜேந்திரன் யானையின் காலை கூஹூ முதலை பற்றி இழுத்தது. கஜேந்திரன் யானை வலியால் “ஆதிமூலமே காப்பாற்று” என்று கதறியது.
திருமாலும் விரைந்து வந்து சக்ராயுதத்தால் கூஹூவை வதம் செய்து கஜேந்திரனைக் காப்பாற்றி இருவருக்கும் மோட்சம் அளித்தார்.
இங்கு திருமால் கஜேந்திர வரதப் பெருமாள், ஆதிமூலப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் ரமாமணி வல்லி, பொற்றாமரையாள் என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள். 108 திவ்ய தேசங்களில் இவ்விடம் 9-வது திவ்ய தேசமாகும்.
ஆடி பௌர்ணமியில் இங்கு கஜேந்திர மோட்ச லீலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.
இத்தல பெருமாளை உள்ளன்புடன் “ஆதிமூலமே” என்று அழைத்தால் திருமால் விரைந்து நம்மைக் காப்பார் என்று கூறப்படுகிறது. நோய், கடன், வறுமை ஆகியவற்றை இத்தல இறைவனை வழிபட நீங்கும்.
உலகளந்த பெருமாள் கோவில், திருக்கோவிலூர்
இவ்விடம் விழுப்புரம் மாவட்டத்தில் திருகோவிலூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் திரிவிக்ரமன் எனப்படும் உலகளந்தப் பெருமாளாக உள்ளார். திருமால் சன்னதியிலேயே துர்க்கையும் அருள்பாலிக்கிறாள்.
இத்தலத்தில் மாபலியின் கர்வத்தை அடங்க வாமனராக வந்து பின் திரிவிக்ரமனான காட்சியளித்த உலளந்த பெருமாளாக திருமால், மிருகண்டு முனிவருக்கு காட்சி அருளினார்.
உலகளந்த பெருமாள் திருக்கோவிலூர்
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோருக்கு திருமால் காட்சியளித்து அவர்களை பாசுரம் பாட வைத்த தலம்.
இங்கு திருமால் இடக்கையில் சக்கரத்தினையும், வலக்கையில் சங்கினையும் மாற்றிக் கொண்டு பக்தர்களுக்கு ஞானத்தை வழங்குகிறார்.
இங்கு திருமால் திரிவிக்ரமர், உலகளந்தப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் பூங்கோவல் நாச்சியார் என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள். 108 திவ்ய தேசங்களில் இவ்விடம் 43-வது திவ்ய தேசமாகும்.
பதவி இழந்தோர், பதவி உயர்வு விரும்புவோர், நல்ல பதவி வேண்டுவோர், திருமண வரம், குழந்தை வரம் இத்தல இறைவனை வேண்ட நினைத்தது கிடைக்கும். இத்தலம் நடுநாட்டு திருப்பதி என சிறப்பாக அழைக்கப்படுகிறது.
நாமும் பஞ்ச கிருஷ்ண தலங்கள் சென்று வழிபட்டு திருமால் அருளோடு வளமான வாழ்வு வாழ்வோம்.
ஸர்வம் ஸ்ரீ
கிருஷ்ணார்ப்பணம்🙏🙏
ஓம் நமோ நாராயணாய🙏🙏
No comments:
Post a Comment