Skip to main content

க்ருஷ்ணாய நம

அனந்தனுக்கு ஆயிரம் திருநாமங்கள்

*58. க்ருஷ்ணாய நம:*
கோகுலத்தில் ஒருநாள் காலை. கோபிகைகள் குடங்களை எடுத்துக்கொண்டு யமுனைக் கரைக்குச் சென்று கொண்டிருந்தார்கள்.
அவர்களைக் கண்ணன் வழிமறித்தான். “நீங்களெல்லாம் இன்று மிகவும் அழகாக இருக்கிறீர்களே, என்ன காரணம்?
குடங்களோடு எங்கே செல்கிறீர்கள்?” என்று கேட்டான் கண்ணன். “கண்ணா! வீட்டுக்கு அவசரமாகத் தண்ணீர் கொண்டு
செல்ல வேண்டும்! வழி விடு!” என்றாள் சந்திரமதி என்ற பெண்.
“நிச்சயமாக வழிவிடுகிறேன். ஆனால் ,என்னுடன் நீங்கள் கண்ணாமூச்சி ஆடவேண்டும்.
அப்போது தான் உங்களை விடுவேன்!” என்றான். “இல்லை கண்ணா! இன்னொரு நாள் விளையாடுவோம்.

இப்போது விட்டுவிடு!” என்று சொல்லிவிட்டு வேகமாக ஓடினார்கள் அந்தப் பெண்கள்.
“என்னிடம் இருந்து நீங்கள் தப்பவே முடியாது!” என்று சொன்ன கண்ணன், ஒரு புதருக்குள் சென்று ஒளிந்து கொண்டான்.
யமுனையில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அவர்கள் திரும்ப வருகையில், புதருக்குள் ஒளிந்திருந்த கண்ணன்
உண்டைவில்லால் சந்திரமதியின் மண்குடத்தை அடித்தான். குடம் சுக்கு நூறாக உடைந்தது,
சந்திரமதி தண்ணீரில் நனைந்து போனாள். “ஹா ஹா” என்ற புன்னகையோடு வெளியே வந்த கண்ணன்,
“இப்போது கண்ணாமூச்சி ஆடுவோமா?” என்று கேட்டான்.

முடியாது என்றால் மீதமுள்ளவர்களின் குடங்களையும் இவன் உடைத்துவிடுவான் என்றுணர்ந்து,
சரி என்று அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். அன்று முழுவதும் அவர்களோடு கண்ணாமூச்சி விளையாடிய கண்ணன்,
அன்று மாலைதான் அவர்களை வீடு திரும்ப அனுமதித்தான்.
அடுத்த நாள் சந்திரமதி இரண்டு புதிய வெண்கலக் குடங்களை எடுத்துச் சென்றாள்.
இரண்டும் பார்ப்பதற்கு மண் குடங்களைப் போலவே இருக்கும்.
கண்ணன் மட்குடம் என்றெண்ணி உண்டைவில்லால் அடித்து ஏமாந்து போவான் என்று அவள் திட்டம் தீட்டியிருந்தாள்.

அன்று எல்லாப் பெண்களும் யமுனைக்குச் செல்லும்போது, வழிமறித்த கண்ணன், “என்ன? தொடங்கலாமா?” என்றான்.
“எதைத் தொடங்குவது?” என்று கேட்டார்கள் பெண்கள். “நம் கண்ணாமூச்சி ஆட்டத்தைத் தான்!” என்றான் கண்ணன்.
“அதெல்லாம் முடியாது!” என்று கோபத்துடன் சொல்லிவிட்டு அந்தப் பெண்கள் யமுனையை நோக்கி நடக்கத் தொடங்கினர்.
சந்திரமதி ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு குடங்களைத் தலைக்குமேல் சுமந்து செல்வதைப் பார்த்தான் கண்ணன்.
கண்ணனால் இந்தக் குடங்களை உடைக்கவே முடியாது என்ற உறுதியுடன் அவனை ஏளனமாகப் பார்த்துக் கொண்டே நடந்தாள் சந்திரமதி.
யமுனைக் கரையில் தன் முதல் குடத்தில் தண்ணீரை நிரப்பிய சந்திரமதி, அதைத் தரையில் வைத்துவிட்டு
அடுத்த குடத்தில் நீரை மொண்டாள். ‘டங்’ என்ற ஒலி கேட்டது.
கண்ணனால் உதைபட்ட அவளது முதல் குடம் உருண்டு யமுனையில் போய் விழுந்தது. “கண்ணா!” என்று கத்தினாள் சந்திரமதி.
அதற்குள் மீண்டும் ஒரு ‘டங்’. அவளது இரண்டாவது குடத்தையும் உதைத்து நதியில் தள்ளிவிட்டு “ஹா ஹா” என்று சிரித்தான் கண்ணன்.
அவனை அடிக்கப் போனாள் சந்திரமதி. ஆனால் என்ன அதிசயம். யமுனையில் இருந்து இரண்டு தெய்வீக புருஷர்கள் கிளம்பி
விமானத்தில் வைகுந்தம் செல்வதைக் கண்டாள். “உன்னுடைய இரண்டு குடங்களும் முக்தியடைந்து விட்டன!” என்று கூறினான் கண்ணன்.

அவனது திருவடி பட்டதால் இரண்டுக்கும் முக்தியே கிடைத்து விட்டது.
“உன்னால் உடைக்க முடியாது என்று எண்ணி வெண்கலக் குடத்தை எடுத்து வந்தால்,
நீ அதன் பந்தத்தையே உடைத்து முக்தி அளித்து விட்டாயே. உன்னை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தால்
நாங்கள் தான் ஏமாந்து போவோம்!” என்று சொன்ன அந்தப் பெண்கள் அன்றும் அவனோடு கண்ணாமூச்சி விளையாடினார்கள்.
நாளடைவில், கண்ணனோடு விளையாடுவதில் பேரானந்தம் அடைந்த கோபிகைகள் தாங்களே முன்வந்து
கண்ணனைக் கண்ணாமூச்சி ஆடவரும்படி அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.
இவ்வாறு கண்ணன் தானும் ஆனந்தமாக இருந்து தன் அடியார்களுக்கும் அதே ஆனந்தத்தைத் தருகிறான்.
*‘கிருஷி’* என்றால் பூமி என்று பொருள். *‘ண’* என்றால் ஆனந்தம்.
பூமிக்கு ஆனந்தம் தருவதால் அவன் *‘கிருஷ்ண:’* என்றழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 58-வது திருநாமமாக அமைந்துள்ளது.
*“க்ருஷ்ணாய நம:”* என்று தினமும் சொல்லி வருவோரின் துன்பங்களை எல்லாம் கோபிகைகளின் குடங்களை உடைத்தது போல உடைத்து பேரானந்தத்தைக் கண்ணன் தருவான் என்பதில் ஐயமில்லை. 

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

ஸ்ரீ ராமானுஜரும், ஸ்ரீமணவாள மாமுனிகளும்

இன்று(11/11/2018),ஐப்பசி மூலம்-ஸ்ரீமணவாள மாமுனிகள்/பெரிய ஜீயர்/ஸ்ரீசடகோப முனி/ஸ்ரீயதீந்த்ர ப்ரவணர்/அழகிய மணவாளர்/ரம்ய ஜாமாதர முனி/அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்/காந்தோபயந்த்ரூ முனி/வரவர முனி/இராமானுசன் பொன்னடி/செளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ரர்---ஸ்வாமிகளின் 649ஆவது,திருநட்சித்திரம். ஸ்ரீமணவாள மாமுனிகள்,ஸ்ரீ ராமானுஜரின் மறு அவதாரம்; ராமானுஜர் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்ற ஸ்ரீமந் நாராயணனால், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆதிசேஷ அவதாரம் என்பது அனைவரும்அறிந்ததே.ராமானுஜர் மற்றும் மாமுனிகளின் வாழ்க்கைநெறி/கைங்கர்ய ங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் பல தெய்வீகத் தன்மைகள்/ஒற்றுமைகள்புலப்படுகின்றன அந்த நோக்கத்தில் அடியேனின்,ஒரு குறு முயற்சி. 1.ராமானுஜருக்கு அவருடைய தாய்மாமாவும்,ஸ்ரீஆளவந்தாரின் சீடருமான,பெரிய திருமலைநம்பிகள்'இளையாழ்வார்' என்று பெயரிட்டார். மாமுனிகளுக்கு அவருடைய தாய்வழித் தாத்தாவும்,ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் சீடருமான ஸ்வாமிகள் 'அழகியமணவாளன்'என்று பெயரிட்டார். 2.இளையாழ்வார்,தம்வைணவ வாழ்க்கைநெறிக்கும்,கைங்கர் யங்களுக்கும் இல்லறம் தடை யாக இ...