Skip to main content

அதான் சொர்க்க வாசலை தாண்டியாச்சுல்ல.. சரி.. அப்போ வா போலாம்

*வைகுண்ட ஏகாதசி*
கடந்த வாரம் வைகுண்ட ஏகாதசி அன்று அரங்கனைச்  சேவித்து, பரமபத வாசலையும் கடந்து ... மணல்வெளியில் காற்றாட சிறிது நேரம் அமர்ந்திருந்தேன்.

*"அதான் சொர்க்க வாசலை தாண்டியாச்சுல்ல.. சரி.. அப்போ வா போலாம்.."* 
என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுப் பார்த்தேன்.

அவன்தான்... அந்தக்  குட்டிக் கண்ணன் கள்ளச் சிரிப்போடு நின்று கொண்டிருந்தான்.
*'எங்க கூப்பிடற கண்ணா?'*

   *"சொர்க்கத்துக்கு... அங்க போகணும்னுதானே இவ்ளோ நேரம் வரிசையில நின்னு கும்பல்ல முட்டி மோதி வந்த... அங்கதான் கூட்டிப்போறேன் வா..!"*

*'விளையாடாத கண்ணா.. எனக்குக் குடும்பம் இருக்கு... பிள்ளைங்க  இருக்காங்க..  திடீர்னு இப்படி என்னைக் கூப்பிட்டா... நான் இல்லாம அவங்க என்ன பண்ணுவாங்க?'*

*"இந்த உலகத்தையே பார்த்துக்கிறவன் நான்.. உன் குடும்பத்தைப் பார்த்துக்க மாட்டனா?"*

*'எனக்குன்னு நிறைய கடமைகள் இருக்கு.. நீதானே சொல்லிருக்க.. கடமையை ஒழுங்கா செய்னு.. அப்புறம் இப்படி சொன்னா எப்படி?!'*

*"அப்போ கடமையை செய்யாம, எதுக்கு சொர்க்கத்துக்குப் போகணும்னு இங்க வந்து என்னைக் கேட்ட?? சாகவேணாம்.. ஆனா சொர்க்கம் மட்டும் வேணும்னா அது எப்படி? நீ பக்தியோட கேட்ட.. அதான் நானும் வந்தேன்.. இப்போ சாக்கு சொல்லாதே......வா போலாம்"*

*'பக்தியோட கேட்டது இன்னைக்கு போறதுக்கில்ல.. பின்னாடி வயசானப் புறம் கண்டிப்பா ஒருநாள் சாகத்தான் போறோம்.. அதுக்காக!'*

*"ஓ! எப்போ என்கிட்ட வரணும்கறதையும் நீதான் முடிவு பண்ணுவ... என்கிட்ட வர்றதுக்கு advance booking.........   அதை வருஷா வருஷம் renewal வேற பண்ற.. ஆனா, இப்போ நானே வந்து கூப்பிட்டாலும் வரமாட்ட.. அப்படித்தானே..!!"* என்றான் கிண்டலாக!

*'அப்படிதான்!  அதைத்தானே எல்லாரும் செய்றாங்க.. என்னை மட்டும் கிண்டல் பண்றியே!'*

*"உன்னை மட்டுமில்ல... எல்லாரையும் சேர்த்துதான் சொல்றேன்...... சரி, சில கேள்விகள் கேட்கறேன் ...........பதில் சொல்லு.."*

*'என்ன? கேளு!'*

 *"சொர்க்கத்துக்குப் போகணுமா?  பரமனின் பதத்தை அடையணுமா?  எது வேணும்?"*

*'குழப்பாதே கண்ணா!'*

*"நான் குழப்பலை... நீங்கதான் குழம்பிப்போய் இருக்கீங்க.."*

*'அப்போ ரெண்டும் வேறயா?!'*

*"அது உன் எண்ணத்தைப் பொருத்தது!"*

*'அப்படின்னா??'*

*"பரமனின் பதத்தை அடைவதே சொர்க்கம்னு நினைக்கறது வேற....                            பண்ணின பாவத்துக்கெல்லாம் எமகிங்கரர்கள் எண்ணை சட்டில  போட்டு வேக வைச்சுடுவாங்களோன்ற பயத்தில, 'அய்யோ பகவானே மன்னிச்சு இந்திரன் இருக்க சொர்க்கபுரில சேர்த்துடு'ன்னு நினைக்கிறது வேற.."*

*'அப்போ சொர்க்கம் நரகமெல்லாம் நிஜமாவே இருக்கா??'*

*"அது உங்களுக்குத் தான் தெரியும்... நீங்கதானே கலர்கலரா செட் போட்டு புகை பறக்கவிட்டு நாலு பொண்ணுங்களை நாட்டியமாட விட்டு காட்டறீங்க.."*

*'அப்போ அதெல்லாம் எங்க கற்பனை...... நிஜமா ஒண்ணும் இல்லைனு சொல்றியா?'*

*"நான் என்ன சொல்லணுமோ, அதையெல்லாம் கீதைல ஏற்கனவே சொல்லிட்டேன். நீங்க அதைப் படிக்காம, உங்க இஷ்டத்துக்கு எதையோ கற்பனை பண்ணிட்டு அந்த கற்பனை உலகத்தை நிஜம்னு நம்பி வாழறீங்க..."*

*"உங்களுக்கு எது வசதியோ அதை மட்டும் எடுத்துக்கிட்டு மற்றதை விட்டுடறீங்க ..."*

*"ஆனா கஷ்டம் வந்தா மட்டும்,  'கண்ணா, பெருமாளே.. உனக்கு கண்ணில்லையா, காதில்லையா'ன்னு என்னை திட்டறீங்க!!!"*

*'அப்போ இந்த விழா, பரமபத வாசல் தாண்டுறது இதெல்லாம் தேவையில்லை.. சொர்க்கம், நரகம் இதெல்லாம் பொய்னு சொல்றியா??'*

*"இல்லை.. இதெல்லாம் தேவைதான்!! ஆனா, நீங்க எதையும் உண்மையான அர்த்தம் புரிஞ்சு பண்லைன்னு  சொல்றேன்.."*

*"இந்த உலகத்தில இருக்கிற நீங்க, பார்க்கிறது கேட்கிறது எல்லாமே நான்தான்... கடைசியில நீங்க வந்து சேரப்போறதும் என்கிட்டதான்..."*

*"இடையில நீ வாழற இந்த வாழ்க்கையில உன்னுடைய கர்மாவுக்கேற்ற பலனை அனுபவிச்சு, பின் என்கிட்ட வந்து சேரப்போற.. "*

*"அப்படி என்கிட்ட உன்னை சேர்க்கக்கூடிய பாதையில் நடக்கும்போது நீ பார்ப்பவைதான், அனுபவிப்பவைதான்.. சொர்க்கமும் நரகமும்..."*

*"நீ எதை அனுபவிக்கணும், பார்க்கணும்னு நீதான் தீர்மானம் செய்ற.. உன் கர்மாக்கள் மூலமாக.."*
 
*"நீ இறந்தபிறகு எங்கு போகணும்னு யோசிக்கறதை விட்டுட்டு, வாழும்போது எப்படி இருக்கணும்னு யோசி.."*

*"சொர்க்கமும் நரகமும் நீ வாழற வாழ்க்கைலதான் இருக்கு.. எங்கோ ஆகாயத்துல இல்லை.."*

*"வாழும்போதே சொர்க்கத்தை அடையும் வழியைதான் நான் கீதையில சொல்லிருக்கேன்..."*

*"அதைப் புரிந்து படி.. உன் எல்லா கேள்விகளுக்கும் அதில் விடையுண்டு.."*

*"அதை ஞாபகப் படுத்ததான் இந்த விழாக்கள்..."*

*"கீதையின்படி, தர்மத்தைப் போற்றி, கர்மத்தை நிறைவேற்றி வாழ்ந்தால்... சொர்க்கம் போன்ற வாழ்வை வாழ்ந்து இறுதியில் என் பதத்தை அடைவாய்..."*

*"உனக்கு நல்வழிகாட்ட பல அவதார ரூபங்களிலும் தோன்றினேன்..."*

*"உனக்கு வழி காண்பித்து பரமபத வாசலை முதலில் கடந்து உன்னை வழிநடத்துகிறேன்.. இதுதான் தத்துவம்!!!"*

*"ஆனால் இது புரியாமல் வருடா வருடம் ஒரு சடங்காக மட்டுமே நீங்கள் இதை செய்கிறீர்கள்.."*

*"பரமபத வாசலைக் கடக்கும்போது இந்த உண்மையை உணர்ந்து.. தன் தவறுகளை சரி செய்ய முடிவெடுத்து.. நான் காண்பித்த வழி பின்பற்ற முடிவெடுத்தவர் எத்தனை பேர்??"*

    *"பெரும்பாலானவர்களைப் பொருத்த வரை, வாசலைக் கடந்தால் பண்ணின தப்பையெல்லாம் மன்னிச்சு சாமி சொர்க்கத்தில சேர்த்திடுவார்.."*

*"சிலருக்கு இது மற்றுமொரு சடங்கு.."*

மற்றும் சிலர், 

*'எல்லாரும் போறாங்க நானும் போறேன்!'*

இன்னும் சிலர், 

*'ஏகாதசி திருவிழா சமயத்தில தேவஸ்தான கடையில போடற தோசை சூப்பரா இருக்கும்.. அதோட புளியோதரை, கேசரி சாப்பிட்டுட்டு.. அப்படியே சொர்க்க வாசலையும் மிதிச்சு வைப்போம் ... போனா சொர்க்கம். இல்லாட்டி தோசையாவது கிடைச்சதே...!!!'*

அவ்வளவுதான்!!

*"உண்மையான அர்த்தம் புரிந்து செய்பவர் வெகு சிலரே..."*

*"இன்று உனக்குச் சொன்னேன்!                  நீ சிலருக்கு சொல்..."*

*"நீங்கள் என் குழந்தைகள்..."* 

*"நீங்கள் சரியான வழி நடந்து என்னை வந்தடையும் வரை நான் வழி காட்டிக்கொண்டு தான் இருப்பேன்.."*.

*"உங்கள் கை பிடித்து அழைத்துச் செல்ல காத்திருக்கிறேன்..."*
*"நல்லபடியாக வந்து சேருங்கள்...!!"*

*"சொல்லிவிட்டுப் போய்விட்டான்..

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

ஸ்ரீ ராமானுஜரும், ஸ்ரீமணவாள மாமுனிகளும்

இன்று(11/11/2018),ஐப்பசி மூலம்-ஸ்ரீமணவாள மாமுனிகள்/பெரிய ஜீயர்/ஸ்ரீசடகோப முனி/ஸ்ரீயதீந்த்ர ப்ரவணர்/அழகிய மணவாளர்/ரம்ய ஜாமாதர முனி/அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்/காந்தோபயந்த்ரூ முனி/வரவர முனி/இராமானுசன் பொன்னடி/செளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ரர்---ஸ்வாமிகளின் 649ஆவது,திருநட்சித்திரம். ஸ்ரீமணவாள மாமுனிகள்,ஸ்ரீ ராமானுஜரின் மறு அவதாரம்; ராமானுஜர் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்ற ஸ்ரீமந் நாராயணனால், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆதிசேஷ அவதாரம் என்பது அனைவரும்அறிந்ததே.ராமானுஜர் மற்றும் மாமுனிகளின் வாழ்க்கைநெறி/கைங்கர்ய ங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் பல தெய்வீகத் தன்மைகள்/ஒற்றுமைகள்புலப்படுகின்றன அந்த நோக்கத்தில் அடியேனின்,ஒரு குறு முயற்சி. 1.ராமானுஜருக்கு அவருடைய தாய்மாமாவும்,ஸ்ரீஆளவந்தாரின் சீடருமான,பெரிய திருமலைநம்பிகள்'இளையாழ்வார்' என்று பெயரிட்டார். மாமுனிகளுக்கு அவருடைய தாய்வழித் தாத்தாவும்,ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் சீடருமான ஸ்வாமிகள் 'அழகியமணவாளன்'என்று பெயரிட்டார். 2.இளையாழ்வார்,தம்வைணவ வாழ்க்கைநெறிக்கும்,கைங்கர் யங்களுக்கும் இல்லறம் தடை யாக இ...