Skip to main content

கல்வியில் சிறந்து விளங்க ஹயக்ரீவர் வழிபாடு


கல்வியில் முன்னேற நம்முடைய முயற்சி இருந்தாலும், மறுபக்கம் இறைவனின் திருவருள் நிச்சயம் வேண்டும். அதற்கு திருமாலின் அவதாரங்களில் ஒன்றான ஹயக்ரீவரை வழிபட்டால் நிச்சயம் நல்ல பயன் கிட்டும். காரணம், பிரம்மதேவனுக்கு வேதத்தை உபதேசித்து, அவருடைய மனைவியான கல்விக்கடவுள் சரஸ்வதி தேவிக்கே குருவாக இருந்தவர் ஹயக்ரீவர் என வைணவப் பெரியோர்கள் கூறுவர். மனித உடல் அமைப்பில், வெள்ளை குதிரை முகத்துடன் திருமால் எடுத்த இந்த அவதாரம் தசாவதாரங்களுக்கு முற்பட்டது. இதை பூர்ணாவதாரம் எனவும் அழைப்பார்கள். அதாவது திருமால் தானே தன்னுடைய முழு சக்தியுடன் உலகில் அவதரித்து தர்மத்தைக் காக்கும் பணியை திறம்படச் செய்து முடித்தல் என்பதாகும். இந்த அவதாரத்தின் சிறப்பைப் பற்றி திருமொழியில்.

வசையில் நான்மறை கெடுத்த
அம்மல ரயற்கருளி முன்பரி முகமாய்
இசைகொள் வேதநூ லென்றிலை
பயந்தவனே எனக்கருள் புரியே
உயர்கொள் மாதவிப் போதொடுலாவிய
மாருதம் வீதியின் வாய்
திசையெல்லாம் கமழும் பொழில்சூழ்
திருவெள்ளறை நின்றானே!

எனக் கூறப்பட்டுள்ளது. பரிமுகன், அஸ்வ சிரவா என்றும் ஹயக்ரீவரை அழைப்பதுண்டு. முதன்முதலில் உலகம் தோன்றிய காலத்தில், அதில் மனிதர்கள், மற்ற ஜீவராசிகளை எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றி திருமால் யோசித்தார். தனது யோக சக்தியால் பிரம்மதேவனை முதலில் உருவாக்கி, அவரிடம் படைக்கும் தொழிலை ஒப்படைத்தார். அதற்கு உதவ வேதங்கள், தேவ ரகசியம் ஆகியவை அடங்கிய பிரம்மச் சுவடிகளைக் கொடுத்தார். இந்தச் சுவடிகளைக்கொண்டு தனது பணிகளை பிரம்மதேவன் செய்துகொண்டிருக்கும் வேளையில், ஒருநாள் தன்னையறியாமல் சற்று கண்ணயர்ந்தார். அப்போது மது, கைடபர் என்கிற அரக்கர்கள் பிரம்ம தேவனிடமிருந்து பிரம்மச் சுவடிகளைத் திருடி, அதை கடல் நீருக்கடியில் மறைத்து வைத்துவிட்டனர். சுவடிகளைக் காணாமல் கலங்கிய பிரம்மதேவன், அதை மீட்டுக்கொடுக்குமாறு திருமாலிடம் வேண்டினார். மிக முக்கியச் சுவடிகள் காணாமல் போனதால், திருமால் வெண்குதிரை முகத்துடனும், மனித உடலுடனும் ஹயக்ரீவர் என்கிற அவதாரத்தை எடுத்து, வேதங்களை மீட்டு மீண்டும் பிரம்ம தேவனிடம் ஒப்படைத்தார். பின்னர் சுவடிகளைத் திருடிய அரக்கர்களைக் கொன்றார். வேதங்களைக் காப்பாற்றவே ஹயக்ரீவ அவதாரம் நிகழ்ந்ததால் இவரே கல்விக்கு அதிபதியாகவும் திகழ்கிறார்.

மாணவர்கள் கவனத்துடன் பாடங்களைப் படித்த பின்னர், வைணவக் கோயிலில் குடி கொண்டிருக்கும் ஹயக்ரீவரை கீழுள்ள சுலோகத்தைச் சொல்லி, அவருக்குப் பிடித்த ஏலக்காய் மாலையை அணிவித்து வணங்கி வரவேண்டும்.

ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம்
உபாஸ்மஹே.

(தூய மெய்ஞ்ஞான வடிவமும், ஸ்படிகம் போன்று தூய வெண்நிறமும், அறிவுச் செல்வத்திற்கு உலகில் ஆதாரமாக விளங்கி வருபவருமான ஹயக்ரீவரை வணங்குகிறேன்.)

இப்படி வழிபாடு செய்தால் படித்த பாடங்கள் நன்கு மனதில் தங்கும். தேர்வு நேரத்தில் சட்டென நினைவுக்கு வரும். தேவையில்லாத பயம், கவலை போன்றவை அகலும்.

கல்வி, கலை, ஞானம் போன்றவற்றுக்கு குருவான ஹயக்ரீவர் சில இடங்களில் தாயார் லட்சுமிதேவியைத் தன் மடியில் வைத்து லட்சுமி ஹயக்ரீவராக காட்சியளிப்பார். இவரை வணங்கினால் கல்விச் செல்வமும், பொருட் செல்வமும் சேர்ந்து கிட்டும்.

உடுப்பியில் பிறந்த வாதிராஜதீர்த்தர் (1480-1600) என்கிற மத்வ மடாதிபதி, தினமும் தனது தலைக்குமேல் தட்டில் இறைவனுக்கு படைக்கவேண்டிய நைவேத்தியத்தை வைத்துக்கொள்வார். வெள்ளை குதிரை வடிவில் ஹயக்ரீவர் அவருக்குப் பின்புறம் வந்து தோள்கள் மீது இரண்டு முன்னங்கால்களை வைத்து நைவேத்தியத்தை உண்பார்.

ஞான வடிவான ஹயக்ரீவரை வழிபட ப்ரார்த்னா மூர்த்தியாக நம் இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயில்களில் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவராக சேவை சாதிக்கிறார்.
 வித்யா ஸ்வரூபனான ஹயக்ரீவரைக் குறித்து முப்பத்தியிரண்டு சுலோகங்கள் கொண்ட ஸ்தோத்திரத்தை சுவாமி தேசிகன் எழுதியுள்ளார். இதைச் சொன்னால் நல்ல ஞானம் வரும். முடிந்தளவுக்கு சிறு வயதிலேயே ஹயக்ரீவ ஸ்தோத்திரத்தை குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் சொல்லித் தரவேண்டும். மாணவ - மாணவிகள் தினமும் பக்தியுடன் ஹயக்ரீவரை வணங்கினால் அது நிச்சயம் நல்ல பயனைக் கொடுக்கும். 24.12.21.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

அன்றாட வழிபாடு : வழிகாட்டும் நாலாயிர திவ்ய பிரபந்தம்

பூஜை அறை கதவைத் திறத்தல்: 1.  ஆண்டாள் : திருப்பாவை : 489 நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய கோயில்காப் பானே கொடித்தோன்றும் தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய். திருப்பள்ளியெழுச்சி பாடுதல் 2. தொண்டரடிப்பொடி ஆழ்வார் : திருப்பள்ளியெழுச்சி : 917 கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்,  மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,  எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,  அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும் அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. துயில் எழுந்த பெருமாளை போற்றித் துதித்தல் 3.  ஆண்டாள் : திருப்பாவை  : 497 அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி குன்று குடை...