Thanks to :
திருமலை சீனிவாசன்.
மேற்கு மாம்பலம்.
*27.12.2021.*
*ஸ்ரீபக்த கோமாபாய்*
*பக்திக்கு ஆண் என்ன பெண் என்ன! பகவான் இதையெல்லாம்* *பார்ப்பதில்லை.பகவான் மனிதனில் பிரிவு பார்க்க மாட்டார்.*ஆணுக்கு ஒரு நியதி பெண்ணுக்கு ஒரு நியதி கிடையாது.** *பக்தியைக் தான் கவனிப்பார். ஏழையோ பணக்காரனோ ஆணோ பெண்ணோ என்பதைக் கவனிக்க மாட்டார்.* *பக்தி மட்டும் தான் அடிப்படை.*
*பக்திக்கு தான் மரியாதை.*
கேரளத்தில் ஒரு குரூர அம்மைப் போல் மஹாராஷ்டிராவில் ஒரு கோமாபாய். இளம் வயதில் தாய் தந்தை இழந்து பின் கணவனை இழந்த கோமாபாய் பாண்டு ரெங்கனின் பரம பக்தை.ஏழை! *ஏழைக்கு தான் நல்ல பக்தி வருமோ!ஊழ்வினைப் பயனால் கஷ்டம் வந்தாலும் பாண்டு ரெங்கனிடம் பரம பக்தி! அதுவும் ஊழ்வினையில் ஒரு நல் வினையோ!*
ஒருமுறை ஏகாதசி தினம் வந்தது!
பண்டரிபுரம் செல்ல வேண்டும். பாண்டு ரெங்கனை தரிசனம் செய்ய வேண்டும். நடந்து சென்றாள் கோமா பாய். சந்திரபாகா நதியை அடைந்து விட்டாள். ஓடத்தில் ஏறி மறு கரை செல்ல வேண்டும். *ஏழை. பாவம் என்ன செய்வாள்!*
ஓடக்காரனிடம் தன்னிடம் கொஞ்சம் ரொட்டி மாவு இருக்கிறது தருகிறேன். என்னை மறு கரை சேர்த்துவிடு என்றாள். அவனோ பணம் தந்தால் ஓடத்தில் ஏறலாம். இல்லையென்றால் ஓடத்தில் இடமில்லை. *வாழ்வு எனும் சாகரத்தில் நாம் கரை சேர வேண்டும்.* *அதற்குத்தானே பாண்டு ரெங்கனை தரிசனம். ஆனால் இக்கரையில் நின்ற அக்கரை செல்ல முடியவில்லை. ஏழை* *என்றால் ஏளனம். பணக்காரனுக்கு ஓடத்தில் பயணம்!*
மனிதர்களில் தான் எத்தனை வேறுபாடுகள்! ஓடக்காரன் காலை பிடித்து கெஞ்சினாள். அவன் உதறினான். கோமா பாய் கோபம் கொள்ளாமல் பாண்டு ரெங்கனை கரையிலிருந்து காண கதறினாள். பாண்டு ரெங்கன் பக்தையின் கூக்குரலுக்கு செவி சாய்த்தான்.
அந்த கரையில் ஒரு ஓடக்காரன் வந்தான். "வாம்மா வா! சீக்கிரம்! கடைசி சவாரி! வா!" என்றான். ஓடத்தில் கோமாபாய் ஏறினாள். சந்திரபாகா நதியை கடந்து கரையில் இறங்கினாள். திரும்பி பார்க்க ஓடமுமில்லை. ஓடக்காரனுமில்லை. *மாயக்காரன் பாண்டு ரெங்கன் பெரிய ஓடக்காரன் அல்லவா!*
அன்று காலை நதியில் குளித்தாள். பாண்டு ரெங்கனை நன்றாக தரிசித்தாள். பஜனையில் கலந்து கொண்டாள். ஏகாதசி அவளுக்கு விரதமும் விட்டலலின் நாம ஜபமும் நன்றாக அமைந்தது. மறுநாள் துவாதசிக்கு அதிதிக்கு காத்திருந்தாள். ஏழை என்பதால் யாரும் அவளை கண் எடுத்து கூடப் பார்க்கவில்லை! பாண்டு ரெங்கா! பாண்டு ரெங்கா!
மனம் அழைத்துக் கொண்டிருந்தது. முதலில் ஒரு ஏழை பிராமணன் வடிவில் ஒருவர் வந்தார். பசிக்கிறது என்றார். கோமா பாய் சுள்ளி சேர்த்து நெருப்பு மூட்டி ரொட்டி செய்தாள். அதை அவளிடம் உண்ணச் சொல்ல, சிறிது நேரம் கழித்து புதிய மூதாட்டி ஒருத்தி வந்தாள். " ஸ்வாமி உங்களை எங்கு தேடுவது! என்னை விட்டு தனியாக எப்படி வந்து இங்கு சாப்பிடலாம்?" என்று கேட்டாள். அவளும் உண்ண பக்த கோமா பாய் ரொட்டிகள் கொடுத்தாள்.
பக்த கோமா பாய் மனம் மகிழ்ந்தாள்.தம்பதியருக்கு துவாதசி பாரணை அளிக்கும் பெரும் பாக்யம் கிடைத்ததே என மகிழ்ந்தாள்.
அருந்திய பின் ருக்மணி சமேத பாண்டு ரெங்கன் காட்சியளித்தார். கோமா பாய் நிலத்தில் விழுந்து வணங்கினாள்.
திருநாமங்களை சொல்லி உருகினாள்.
பண்டரீபுரத்தில் பல காலம் தங்கி பாண்டு ரெங்கன் பாமாலை ஜபித்து முடிவில் பாண்டு ரெங்கனுடன் ஐக்கியமானாள்.
*உண்மையான ஏழையின் பக்தி வெல்லும்.*
No comments:
Post a Comment