Tuesday 23 August 2022

நாமமே பலம் நாமமே சாதனம்

ஹரி நாமம்
திருதிராஷ்டிரன் ” நீ இன்னும் ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ணரின் ஸ்வரூபத்தையும் அவருடைய பெயர்களின் ரகசியத்தையும் எனக்கு கூறு என்று கேட்டுக் கொண்டார்.
சஞ்சயன் “நான் மாமுனிவர்களின் வாய் மூலம் ஸ்ரீ கிருஷ்ணரின் பல பெயர்களின் காரணத்தை கேட்டிருக்கிறேன். அவற்றில் எனக்கு நினைவிலிருப்பதைக் கூறுகிறேன், அந்த அனந்தனுடைய பெயர்களும் அனந்தம்(எண்ணற்ற ) உண்மையில் எந்த ப்ரமானத்திர்க்குமான விஷயமல்ல.

“தேவர்களுக்கும் கூட பிறப்பிடமானவராகவும், எல்லாவற்றையும் தன் மாயையினால் மறைத்து விடுவதாலும் அவர் வாசுதேவன் ஆவார்.

எங்கும் நிறைந்த பரம் பொருளாய், பெரியவராய் இருப்பதால் அவரை விஷ்ணு என்று கூறுகிறார்கள்.

மௌன – தியானத்தாலும் யோகத்தாலும் அடையத் தக்க காரணத்தால் அவர் மாதவன் என அழைக்கப் படுகிறார்.

மதுவென்னும் அரக்கனை வதைத்த காரணத்தால் அவருக்கு மதுசூதனன் என்னும் பெயர் வழங்கப்படுகிறது.

க்ருஷ எனும் வினைச் சொல்லின் மூல உருவத்தின் பொருள் இருப்பு என்பதாகும் ‘ண’ ஆனந்தத்தைக் குறிக்கும் சொல். ஆனந்தத்திற்கு இருப்பிடமான காரணத்தால் அவர் யது குலத்தில் அவதரித்த பிரபு கிருஷ்ணனன் ஆவார்.

இதய புண்டரீகமே அவரது நித்யதாம வாசஸ்தலம். ஆகவே அவர் புண்டரிகாஷன்.

துஷ்டர்களை அடக்குவதால் அவர் ஜனார்தனன்.

சத்வ குணத்திலிருந்து அவர் ஒருபோதும் வழுவாதிருப்பதால் அவர் சாத்வதன் ஆவார்.

ஆர்ஷ உபநிஷத்துக்களின் மூலம் ஒளி விட்டு பிரகாசிப்பதன் மூலம் அவர் ஆர்ஷபர் ஆவார்.

வேதங்களே அவரது கண்கள், ஆகவே வ்ருஷபேஷனர் என அழைக்கப் படுகிறார்.

எந்த பிறப்புள்ள பிராணிகளிடமிருந்தும் தோன்றாததால் அவர் அஜர்!

வயிறு முதலான எல்லா இந்த்ரியங்களையும் ஒளி பெறச் செய்பவரும் (பெருமையுடைய ) அவற்றை அடக்குபவருமாதலால் அவரது பெயர் தாமோதரன் என்பதாகும்

வ்ருத்தி சுகமும், ஸ்வரூப சுகமும் ஹ்ருஷீக என பெயர் பெறும். இவற்றின் தலைவனாதலால் அவர் ஹ்ருஷிகேசன் என்று கூற படுகிறார்

தன் புஜங்களாலேயே புவி, ஆகாயம் எல்லாவற்றையும் தரிப்பதால் அவர் மஹாபாஹூ ஆவார்அவர் ஒருபோதும் (அதோ)கீழே இருப்பதில்லை ஆகவே அதோக்ஷஜன் ஆவார்

நரர்களின் அயன ஆச்ரயமாதலால் நாராயணன் ஆகிறார்.

எல்லாவற்றிலும் நிறைந்து எல்லாவற்றிற்கும் புகலிடமாய் உள்ளவரை புருஷன் என்கிறோம். அந்த புருஷனைக் காட்டிலும் சிறந்தவராதலால் அவரது பெயர் புருஷோத்தமன் ஆகும்.

சத் அசத் எல்லாவற்றின் தோன்றல், மீண்டும் லயத்துக்கு இடமான காரணத்தால் அவரே சர்வமும்.

ஸ்ரீ கிருஷ்ணன் சத்தியத்தில் நிலை பெற்றும், சத்யம் அவரில் நிலை பெற்றிருப்பதால் அவரே சத்யர்

உலகில் பரவியிருந்து ஒழுங்கை நிலை நாட்டுவதால் அவரே விஷ்ணு

எல்லோரையும் வெல்வதால் விஷ்ணு

நித்யமாயிருப்பதால் அனந்தன்

“கோ” அதாவது இந்த்ரியங்களை அறிந்தவராதலால் கோவிந்தன்

பீஷ்மர் சொல்லிய நாமங்களோ ஆயிரம்

ராம என்ற இரண்டழுத்தினால் இன்னலும் துன்பமும் பாபங்களும் சிதைந்து ஒழியும் என்கிறான் கம்பன்

பிரகலாதநோ “பகவானின் திருநாமத்திற்கு எத்தனை பாவங்களை போக்கக்கூடிய சக்தி உண்டோ, அத்தனை பாவங்களை நம்மால் செய்ய முடியவில்லை” என்று குறிப்பிட்டான்.

அப்பேர்பட்ட பகவானின் திருநாமங்களை ஜபித்து நாம் நற்கதியை அடைவோமாக.

இயன்ற வரையில் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொண்டே இறைவன் திருநாமத்தை ஜபம் செய்யவேண்டும். நாம ஜபம் கடவுள் சிந்தனையை உள்ளத்தில் தோற்றுவிப்பதற்கு மிகவும் சிறந்த எளிய ஒரு வழியாகும்.

இறைவனும் இறைவனின் திருநாமமும் ஒன்றேயாகும். அவை இணை பிரியாதவை, தனி தனியே பிரிக்க இயலாதவை.

நாம ஜபம் நம் வாழ்வில் அன்றாட வழக்கமாகட்டும்.

நாமமே பலம் நாமமே சாதனம்

ராம கிருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி.

No comments:

Post a Comment