Tuesday, 25 April 2023

120வாக்கியங்களில்........

ஸ்ரீராமாநுஜர் ஜெயந்தி,.25/4/23 ,.
உடையவர் ஸ்ரீராமானுஜர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர முடியுமா? உடையவர் ஸ்ரீராமானுஜர்!!
ஒரு பூரண மனித ஆயுளைப் பூர்த்தி செய்த மகான் ஸ்ரீராமானுஜர். அவ்வாறு 120ஆண்டுகள் வாழ்ந்து ஆன்மிக சமுதாயக் கடமையாற்றிய அப்பெருமகனாரின் வாழ்க்கையை 120வாக்கியங்களில் தொகுத்தளித்திருக்கிறார் மெய்யூர் ஸ்ரீ நரசிம்மாச்சார்யார். உடையவர் என்று போற்றப்படும் ஸ்ரீராமானுஜரைப் பற்றிய ஒவ்வொரு வாக்கியமும்‘உடையவாக’வே முடிவது சிறப்புக்குரியது.
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
1. ஸ்ரீ பெரும்பூதூரை பிறப்பிடமாக உடையவர்.
2. ஆஸுரிகேசவாசார்யர் மற்றும் காந்திமதிதேவியை பெற்றோர்களாக உடையவர்.
3. சித்திரையில் ஆதிரை நாளில் அவதரித்த பெருமையை உடையவர்.
4. திருமலை நம்பியை மாதுலராக உடையவர்.
5. மாதுலரால் சூட்டப்பட்ட லக்ஷ்மணன் என்ற பெயரை உடையவர்.
6. பிற்காலத்தில் சூட்டப்பட்ட இளையாழ்வான், ராமானுஜர் என்ற பெயர்களை உடையவர்.
7. பதினாறு வயதிற்குள் நன்கு கசடறக்கற்றுக்கொண்ட வேத, வேதாங்க, சாஸ்திர கல்வியை உடையவர்.
8. நல்லார் பரவும் ராமானுஜன், கற்றார் காமுறு சீலன் என்று போற்றப்பட்ட பெருமையை உடையவர்.
9. வேதாந்த சாஸ்திரத்தை போதித்த யாதவபிரகாசரை குருவாக உடையவர்.
10. அனந்தனாம் ஆதிசேஷனின் அவதாரமாகப் போற்றப்படும் பெருமையை உடையவர்.
11. தன் சிறிய தாயாரின் மகன் கோவிந்தனை சிஷ்யனாக ஏற்று, எம்பார் என்னும் ஆசார்யனாக்கிய பெருமையை உடையவர்.
12. அன்பினால் பகை வென்ற அருஞ்செயல் வீரத்தை உடையவர்.
13. வேதாந்தம் பயிலும்போதே குருவுடன் வாதம் செய்து ப்ரம்மத்தின் உண்மை நிலையை உணர்த்தும் உபநிஷத் வாக்கியங்களுக்கு சரியான முறையில் அர்த்தம் செய்த பெருமையை உடையவர்.
14. பூலகில் வைகுந்தம் காட்டிய வித்தகர் என்ற பெருமையை உடையவர்.
15. பூரண ஞானப் பொலிவை புறத்தே பொசிந்து காட்டும் வடிவழகை உடையவர்.
16. மண்ணுலகில் சாதனைகள் பல புரிந்த சரித்திரச் சான்றோன் என்ற புகழ் உடையவர்.
17. மேதா விலாஸத்தையும், தீக்ஷ்ணமான புத்தியையும் உடையவர்.
18. வாக்சாதூர்யம் உடையவர்.
19. வேதாந்த விஷய ஞானத்தில் தனக்குப் போட்டியாக அவதரித்தவன் என்றும், அத்வைத சித்தாந்தத்தை அசைக்கக்கூடியவன் என்றும், சாஸ்திர ஞானத்தில்தன்னையும் விஞ்சக்கூடியவன்என்றும்,யாதவ பிரகாசரை அஞ்சச் செய்த பெருமை உடையவர்.
20. தன்னைக் கொல்லச் செய்த சூழ்ச்சியை அறிந்து நடுக்காட்டில் தப்பி வந்து தேவப் பெருமாளால் (காஞ்சி வரதர்) காஞ்சியில் சேர்க்கப்பட்ட அற்புதத்தை உடையவர்.
21. கரிகிரிமேல் காவலனாய் (காஞ்சி வரதர்) நிற்கும் கண்ணனுக்கு தீர்த்த கைங்கர்யம் செய்த பாக்கியத்தை உடையவர்.
22. ஆளவந்தாரின் திவ்ய கடாக்ஷத்திற்கு பாத்ரரான பெருமையை உடையவர்.
23. திருக்கச்சி நம்பி மூலம் தேவப்பெருமாளால் அருளப் பெற்ற வசிஷ்டாத்வைத சித்தாந்த ஸ்தாபனத்திற்குத் தேவையான ஆறு வார்த்தைகளைக் கேட்ட பாக்கியத்தை உடையவர்.
24. ஆளவந்தாரின் அனுக்ரஹ விசேஷத்தால் ஐந்து ஆசார்யர்களைப் பெற்ற பாக்கியம் உடையவர்.
25. தேவாதி ராஜன் காஞ்சி வரதர் திருஉள்ளப்படி பெரிய நம்பியை ஆச்ரயித்து பஞ்ச ஸம்ஸ்காரங்கள் செய்யப் பெற்று மந்த்ரோபதேசம் பெற்ற பாக்கியம் உடையவர்.
26. திருமலை நம்பியிடம் ஸ்ரீமத் ராமாயணத்தின் விசேஷார்த்தங்களை ஸ்வீகரித்த பெருமையை உடையவர்.
27. திருக்கோட்டியூர் நம்பியிடம் திருமந்த்ரார்த்த விசேஷங்களைப் பெற்று ஸர்வஜனங்களுக்கும் பிரகாசப்படுத்திய பரந்த உள்ளம் உடையவர்.
28. க்ருஹஸ்தாச்ரமத்தில் வெறுப்புற்று ஸந்யாஸாச்ரமத்தை ஸ்வீகரித்த பக்குவம் உடையவர்.
29. சைவனாக மாறிய தன் தம்பி கோவிந்தனை திருமலை நம்பிகள் மூலம் திருத்தி வைஷ்ணவனாக்கி தன் சிஷ்யனாகக் கொண்ட வாத்ஸல்யம் உடையவர்.
30. ஆளவந்தாரின் மனோரதத்தைப் பூர்த்தி செய்ய ஸ்ரீ பாஷ்யத்தை இயற்றிய பெருமையை உடையவர்.
31. இதர மதஸ்தர்களை வாதில் வென்று விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை ஸ்தாபனம் செய்த பெருமையை உடையவர்.
32. சகல சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான சிஷ்யர்களைக் கொண்ட பெருமையை உடையவர்.
33. 74ஸிம்ஹாஸனாதிபதிகளை ஏற்படுத்திய பெருமையை உடையவர்.
34. அத்வைதியான தன் குரு யாதவ பிரகாசரை தனக்கு சிஷ்யனாக ஏற்ற பெருந்தன்மையை உடையவர்.
35. மூன்று உலகங்களின் புண்ய பலனாகிற முக்கோலை உடையவர்.
36. ‘‘வாரீர் எம் உடையவரே’’ என்று திருவரங்கனால் அருளப் பாடிட்டு அழைக்கப்ெபற்ற பாக்கியம் உடையவர்.
37. ‘‘உபய விபூதி ஐச்வர்யமும் நீர் இட்ட வழக்காய் இருக்கும்’’ என்று அரங்க நகரப்பனால் அருளப் பெற்ற பாக்கியம் உடையவர்.
38. தன் உடன் பிறந்தாளின் பிள்ளை தாசரதி என்ற முதலியாண்டானை மட்டும் துறக்காமல் தம் த்ரிதண்டமாகவே கருதி தம்முடன் வைத்துக் கொண்டகருணையை உடையவர்.
39. வயதிலும் ஞானத்திலும் சீலத்திலும் தன்னை விஞ்சி நின்ற கூரத்தாழ்வானை தன்னுடைய பவித்ரமாகக் கருதி பிரதான சிஷ்யராகக் கொண்ட பெருமையை உடையவர்.
40. காஷாயம் உடுத்தி முக்கோல் பிடித்து துறவுக்கோலம் பூண்ட நிலையில் முன்னிலும் அழகாக விளங்கக் கண்ட திருக்கச்சி நம்பியால் ‘‘யதிராஜர்’’ என்றழைக்கப்பட்ட பெருமையை உடையவர்.
41. ஸ்ரீ வைஷ்ணவ சாம்ராஜ்யப் பணியை இனிது நடத்திய பெருமையை உடையவர்.
42. திருவரங்கம் பெரிய கோயிலைப் பழுது பார்த்து செப்பனிட்டு நந்தவனம், மண்டபங்கள், மருத்துவச்சாலை, நூல் நிலையங்கள் அமைத்து ஆழ்வார்கள் அனுபவித்த ரஸம் குன்றாமல் ஆராமம் சூழ்ந்த ஆரங்கத்தைக் காத்த பெருமை உடையவர்.
43. திருவரங்க நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்த சோழச் சிற்றரசன் அகளங்கனைத் தேர்ந்தெடுத்த அறிவுக்கூர்மை உடையவர்.
44. உறங்காவில்லிதாஸனை திருவரங்கனின் கண்ணழகில் ஈடுபடுத்தி பகவத்பாகவதகைங்கர்யத்தில்ஈடுபடும்படிசெய்தபெருமைஉடையவர்.
45. சீரிய பண்புகளையும், தெய்வீக அருளையும் உடையவர்.
46. திருவரங்கத்தில் பொருட் செல்வத்தோடு, அறிவுச் செல்வமும் அருட்செல்வமும் பெருகச் செய்த பெருமையை உடையவர்.
47. திருக்கோட்டியூர் நம்பியால், தன் பரந்த உள்ளத்தையும் பிறர் வாழ்வில் விருப்பினையும் உகந்தருளியதால் ‘எம்பெருமானார்’ என்ற பெயர் சூட்டப்பட்ட பெருமை உடையவர்.
48. பரம வைதீக சித்தாந்தம் என்று இருந்ததை ‘எம்பெருமானார் தரிசனம்’ என்று அழைப்பதே அரங்கன் திருஉள்ளம் என்று திருக்கோஷ்டியூர் நம்பியால்போற்றப்பட்ட பெருமையை உடையவர்.
49. திருக்கோட்டியூர் நம்பி தானே உகந்து சரம ச்லோகத்தின் ரஹஸ்யார்த்தத்தை அருளின பாக்யத்தை உடையவர்.
50. திருமாலையாண்டானிடம் ஆளவந்தார் கருத்துப்படி திருவாய்மொழி உரை கேட்கும் பாக்கியம் உடையவர்.
51. மாயாவாதியான யக்ஞமூர்த்தியை வாதப் போரில் வென்ற வீரத்தை உடையவர்.
52. தன்னைச் சரணடைந்த யக்ஞமூர்த்தியை வைஷ்ணவனாக்கி ‘அருளாளப் பெருமாள் எம்பெருமானார்’ என்ற திருநாமம் சூட்டி சிஷ்யனாக ஏற்ற மகிமையை உடையவர்.
53. சரஸ்வதி தேவியால் ‘ஸ்ரீ பாஷ்யகார்’ என்ற பெயர் சூட்டப்பட்டு ஹயக்ரீவ விக்ரஹத்தையும் பெற்ற பாக்கியம் உடையவர்.
54. திருவாய்மொழிக்கு அபூர்வ அர்த்தங்கள் ஸாதிக்கும் மேதா விலாஸம் உடையவர்.
55. ஆளவந்தாரிடம் ஏகலைவ பக்தி பூண்டு அவரின் அருளைப் பெற்ற பாக்கியம் உடையவர்.
56. திருமாலையாண்டானால் ‘சடகோபன் பொன்னடி’ என்ற திருநாமம் சூட்டப்பட்ட பாக்கியத்தை உடையவர்.
57. திருவரங்கப் பெருமாள் அரையரால் ‘‘ஆசார்யனே உபாயம் உபேயம் நடமாடும் பரமபுருஷன் என்று விச்வஸித்து இரும்’’ என்ற பஞ்சம சரமபர்வ அர்த்தவிசேஷத்தை அருளப் பெற்ற பாக்கியம் உடையவர் (கர்ம, ஞான, பக்தி, ப்ரபத்தி, 4பர்வாக்கள்).
58. திருப்பாவையில் ஆழ்ந்த அனுபவம் காரணமாக திருப்பாவை ஜீயர் என்ற திருநாமம் பெற்ற பெருமையை உடையவர்.
59. ‘பெரும்பூதூர் மாமுனி’ என்ற திருநாமம் உடையவர்.
60. ஆசார்யனையும் (ராமானுஜர்), அவரது பாதுகைகளையுமே தெய்வமாகக் கொண்ட வடுக நம்பியை சிஷ்யராக உடையவர்.
61. ஸ்ரீபாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம், வேதார்த்த ஸங்க்ரஹம், கீதாபாஷ்யம், சரணாகதிகத்யம், வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம், நித்யம் என்ற நவரத்னம் ஆகிய 9க்ரந்தங்களை இயற்றிய மேதாவிலாஸம் உடையவர்.
62. தனது சிஷ்யர்களுக்கு ஆறுவிதமான கைங்கர்யங்களை வாழ்நாளில் செய்யும்படி அருளிச்செய்த கருணையை உடையவர்.
63. குறையல் பிரானடியாரிடம் விள்ளாத அன்பு உடையவர்.
64. பொய்கைப் பிரான் (பொய்கையாழ்வார்) மறையின் குருத்தின் பொருளையும், செந்தமிழையும் கூட்டி ஒன்றத்திரித்து அன்றெரித்த திருவிளக்கை தன் உள்ளத்தே உடையவர்.
65. இருள்கெட ஞானமென்னும் நிறை விளக்கேற்றிய பூதத்திருவடித் (பூதத்தாழ்வார்) தூள்களை நெஞ்சத்தில் உடையவர்.
66. மன்னிய பேரிருள் மாண்டபின் ‘‘திருக்கண்டேன்’’ என்றுரைத்த தமிழ்த்தலைவன் பேயனின் (பேயாழ்வார்) பொன்னடி போற்றும் திரு உடையவர்.
67. சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமிழால் அளித்த புகழ்ப்பாண் பெருமான் (திருப்பாணாழ்வார்) சரணபதுமதத்தை சென்னிமேல் உடையவர்.
68. இடங்கொண்ட கீர்த்தி மழிசைக்கிறைவன் (திருமழிசையாழ்வார்) இணையடிப் போதடங்கும் இதயத்தை உடையவர்.
69. பசுந்துளவத் தொழில் மாலையும் செந்தமிழில் பெய்யும் மறைத் தமிழ் மாலையும் சீரங்கத்தையன் கழற்கணியும் பரன் தாளன்றி ஆதரியா மெய்யை உடையவர்.
70. கொல்லிக் காவலன் (குலசேகராழ்வார்) சொல் பதிக்கும் கலைக்கவிபாடும் பெரியவர் பாதம் துதிக்கும் பண்பை உடையவர்.
71. சோராத காதல் பெருஞ்சுழிப்பால் தொல்லை மாலையொன்றும் பாராதவனைப் பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன் (பெரியாழ்வார்) தாள் பேராத உள்ளம் உடையவர்.
72. அரங்கர்மெளலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் (ஆண்டாள்) தொல்லருளால் வாழும் வாழ்வை உடையவர்.
73. கலைபரவும் தண்டமிழ் செய்த நீலன் (திருமங்கையாழ்வார்) தனக்குலகில் இனியான் என்ற பேர் உடையவர்.
74. மறைகளை ஆயிரம் இன்தமிழால் செய்த சடகோபனை (நம்மாழ்வார்) சிந்தையுள்ளே பெய்த பெரியோன் என்ற மகிமையை உடையவர்.
75. தானுகந்த திருமேனி (ஸ்ரீபெரும்பூதூர்), தமருகந்த திருமேனி (மேல்கோட்டை), தானேயான திருமேனி (ஸ்ரீரங்கம்) என்று மூன்றுவித அர்ச்சாவதார திருமேனியை உடையவர்.
76. நாதமுனியை நெஞ்சால் வாரிப் பருகும் பக்தியை உடையவர்.
77. வாணன் பிழைபொறுத்த தீர்த்தனையேத்தும் சீலத்தை உடையவர்.
78. ‘‘வைப்பாய வான் பொருள்’’ என்று நல்லன்பர் மனத்தகத்தே வைக்கும் மொய்ப்புகழ் உடையவர்.
79. காரேய் கருணையும், திக்குற்ற கீர்த்தியும் உடையவர்.
80. கொழுந்து விட்டோங்கிய வள்ளல் தனமும் வெள்ளைச்சுடர் விடும் பெருமேன்மையும் உடையவர்.
81. திருவரங்கத் தமுதனாரின் (நம்மாழ்வார்) வாய் கொஞ்சிப் பரவும் புகழ் உடையவர்.
82. தென்குருகைப்பிரான் பாட்டென்னும் வேதப்பசுந்தமிழ் தன்னை தன்பத்தியென்னும் வீட்டின் கண் வைத்த பெருமையை உடையவர்.
83. தென்னத்தியூரர் (காஞ்சி வரதர்) கழலிணைக் கீழ்பூண்ட அன்பை உடையவர்.
84.‘கமலத்தலர் மகள் கேள்வன் கையாழியும் சங்கும், நாந்தகமும், படர்தண்டும் ஒண்சார்ங்கவில்லும் இந்தப் பூதலம் காப்பதற்கென்று ராமானுசமுனியாயின’’ என்றுபோற்றுப்படும்பெருமையைஉடையவர்.
85. பொன்னரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னில் மயலேபெருகும் திருமனம் உடையவர்.
86. ஆரணச் சொல் கடல் கொண்ட ஒண்பொருள் கொண்டவர் பின்படரும் குணம் உடையவர்.
87. ‘படிகொண்ட கீர்த்தி இராமாயணம்’ என்னும் பக்தி வெள்ளம் குடிகொண்ட கோயில் என்று போற்றப்படும் பெருமையை உடையவர்.
88. கண்ணனுக்கே ஆமதுகாமம் அறம்பொருள் வீடிதற்கென்றுரைத்த சீலத்தை உடையவர்.
89. சொல் ஆர்தமிழொரு மூன்றும், சுருதிகள் நான்கும், எல்லையில்லா அறநெறியாவும் தெரிந்த பெருமையை உடையவர்.
90. கருதரிய பற்பல உயிர்களும் பல்லுலகில் யாவும் பரனதென்னும் நற்பொருள் தன்னை இந்நானிலத்தே நாட்டிய மகிமையை உடையவர்.
91. அரங்கன் மலரடிக்காள் உற்றவரே தனக்குற்றவராகக் கொள்ளும் உத்தம குணம் உடையவர்.
92. மாயன் அன்றைவர் தெய்வத் தேரினிற் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரிய பாரினிற் சொன்ன பெருமையை உடையவர்.
93. என்பெருவினையைக் கிட்டி கிழங் கொடு வெட்டிக் களைந்த அருள் என்னும் வாளை உடையவர்.
94. வைகுந்தம், வேங்கடம், மாலிருஞ்சோலை என்னும் இருப்பிடம் கொண்ட மாயன் அவை தன்னொடும் வந்திருக்கும் மனம் உடையவர்.
95. நம் இதயத்தை இருப்பிடமாக உடையவர்.
96. எப்பொழுதும் அச்சுதனின் தாமரை இணையடியை நினைத்து மோஹித்திருப்பதைத் தவிர மற்ற விஷயங்களை அற்பமாக மதிக்கும் சீலம் உடையவர்.
97. ஞான, வைராக்ய, பக்தியாகிய, முக்கோல் உடையவர்.
98. ஸ்ரீமந் நாராயணனுடைய குணங்களாகிய முத்துக் குவியல்களை வெளியிடும் முத்துச்சிப்பிகள் போன்ற க்ரந்தங்களை இயற்றிய பெருமையை உடையவர்.
99. வாதப்போர் புரிவதிலுள்ள உத்ஸாஹமென்னும் பிசாசினால் பீடிக்கப்பட்ட யுக்திவாதம் செய்பவர்களின் புகழாகிய கடலின் பெருக்கை உறிஞ்சுவதில் அகஸ்தியர் போன்ற அறிவுச்செல்வமும் வாக்சாதுர்யமும் கொண்ட அநேக சிஷ்யர்களை உடையவர்.
100. வேதார்த்தங்களை ஆராய்வதில் ஈடுபட்டிருப்பவர்களால் பகவத் குணங்களை விளக்கும் ராமானுஜரின் ஸ்ரீஸுக்திகளாகிய கோல் கொண்டு திசையெங்கும் பரவ முழக்கப்பட்ட புகழாகிய பறையை உடையவர்.
101. சிற்றறிவினரான நம்முடைய உள்ளத்தில் வைப்பதற்காக வேதார்த்தங்களில் மறைந்துள்ள ரஹஸ்யார்த்தத்தை மேலே எடுத்து வரும் தம் திருக்கையில் பொருந்திய ஞான முத்திரையை உடையவர்.
102. மேல் கோட்டை நாரணனை டில்லி பாதுஷாவிடமிருந்து மீட்டு தன் செல்வப் பிள்ளையாகப் பெற்ற பாக்கியம் உடையவர்.
103. அஹங்காரமாகிய இருளை ஒழிப்பதாய், பிரகாசிப்பதாய் உள்ள திருக்கண்ணோக்கு உடையவர்.
104. நம் மனக்குகையில் வசிக்கும் சீரிய சிங்கப்பிரானின் திவ்ய கடாக்ஷத்தை உடையவர்.
105. சஞ்சலமான மனநிலையைப் போக்கும் மருந்தாயுள்ள திருவடிகளை உடையவர்.
106. அகலகில்லேன் இறையு மென்றுரை அலர்மேல் மங்கை யுறை மார்பனை திருவேங்கடவனைத் தன்னகத்தே உடையவர்.
107. மலர்மகள் மடியமரும் மாலோலனை அஹோபிலம் தன் மனக்குகையுள்உடையவர்.
108. அலர்மகள் அன்பன் அரங்கத்தரவணையானின் பாத கமலங்களில் தன்னைக் காக்கும் பரத்தையும் அதன் பலனையும் ஸமர்ப்பித்து நிர்பரமான, நிர்பயமான வாழ்வை வாழ்ந்த மகிமையை உடையவர்.
109. திருமலையில் சீடர் அனந்தாழ்வான் மூலம் நந்தவனம் ஏற்படுத்தி இன்றளவும் நடக்கும் புஷ்பகைங்கர்யத்தை துவக்கி வைத்த பெருமையை உடையவர்.
110. திருமலையில் எழுந்தருளியிருப்பவன் ஸ்ரீமந் நாராயணனே என்று நிரூபித்து வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் இருந்த சச்சரவைத் தீர்த்து வைத்த பெருமையை உடையவர்.
111. வைணவ சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்து 120வருடம் வாழ்ந்த பெருவாழ்வை உடையவர்.
112. மாமலராள் புணர்ந்த பொன்மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும் குணந்திகழ் கொண்டல் என்ற மகிமையை உடையவர்.
113. கடிபொழில் தென்னரங்கன் தொண்டர் குலாவும் ராமானுஜன் என்ற பெருமையை உடையவர்.
114. மிக்க நான்மறையின் சுடரொளியால் கலியிருளைப் போக்கிய ராமானுஜன் என்ற பெருமையை உடையவர்.
115. அடியைத் தொடரும் ஐவர்கட்காய் அன்று பாரதப்போர் முடிய பரிநெடுந்தேர் விடுங்கோனை முழுதுணர்ந்த அடியார்க்கமுதம் என்ற பெருமையை உடையவர்.
116. ‘‘பிடியைத் தொடரும் களிறென்ன யான் உன்பிறங்கியசீர் அடியைத் தொடரும்படி நல்க வேண்டும்’’ என்று திருவரங்கத்தமுதனார் பரவிய சீர்மை உடையவர்.
117. ‘‘பண்தருமாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதமாய் விண்டிட எங்கள் ராமானுச முனி வேழம் குவலயத்தே வந்தது’’ என்று போற்றப்படும் பெருமையை உடையவர்.
118. ஆசார்ய பரம்பரையான ரத்தினமாலையில் சூரியனிலும் அதிகமாக பிரகாசிக்கும் நடுநாயக மணியாக விளங்கும் மகிமை உடையவர்.
119. கவிதார்க்கிக சிங்கமாகிய வேதாந்த தேசிகனால் யதிராஜ ஸப்ததி என்ற உயர்ந்த அத்யற்புதமான ஸ்தோத்ரத்தினால் புகழப்பட்ட மகிமை உடையவர்.
120. சகல வித்யாநதிகளும் உற்பத்தியாகும் மலையாய் இருக்கும் மகிமை உடையவர்.

No comments:

Post a Comment