இந்த ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பவருக்கு, ஆண்டின் 24 ஏகாதசி விரதங்களையும் கடைப்பிடித்த புண்ணியம் கிடைக்கிறது.
இந்த ஏகாதசியின் சிறப்பை கேட்டாலே வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நிச்சயம் என்கிறது தர்ம சாஸ்திரம்.
நிர்ஜல ஏகாதசியை பற்றி கேட்பவருக்கு சூரிய கிரகணத்தில் வரும் அமாவாசை திதியில் சிரார்த்தம் செய்த பலன் கிட்டும்.
இன்று தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்கம் தானம் செய்த பலன் பெறுகிறார்கள்.
மே/ ஜுன் மாதங்களில், வளர்பிறையில் தோன்றக்கூடிய நிர்ஜல ஏகாதசியின் விவரங்களை, பிரம்ம - வைவர்த்த புராணத்தில் வியாசதேவருக்கும், பீமசேனருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது.
ஏகாதசி விஷ்ணுவுக்கும் உகந்த திதி. மே/ ஜுன் மாதங்களில் மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி அன்று, தண்ணீர்கூட குடிக்காமல் விரதம் இருக்க வேண்டும். அதனாலேயே அது நிர்ஜலா ஏகாதசி எனப்படுகிறது.பீம ஏகாதசி என்றும் போற்றப்படுகிறது.
ஏகாதசி என்பது ஓர் புண்ணியகாலம் ஆகும். பரமாத்மாவுக்குப் பிரியமான திதி அது. அதைப் போற்றாத புராணமில்லை.
பாண்டவர்களில் மூத்தவரான தர்மபுத்திரர் ஒரு முறை வியாசரை தரிசித்தபோது அவரை வணங்கி "குருதேவா, துன்பங்கள் பலப்பல. அவை எப்போது எப்படி மனிதர்களை பாதிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. கலியுகத்திலோ, கேட்கவே வேண்டாம். அடை மழை போல, நேரம் காலம் பாராமல் அனைவரையும் படுத்தும். இந்த துன்பங்கள் நீங்கும்படியான ஒரு சுலபமான வழியைச் சொல்லுங்கள்'' என வேண்டினார்.
தர்மபுத்திரா, " எல்லாத் துன்பங்களையும் நீக்கக் கூடியது ஏகாதசி விரதம் மட்டுமே. ஏகாதசியன்று, உபவாசம் இருந்து பெருமானை பூஜிப்பதைத் தவிர சுலபமான வழி வேறெதுவும் இல்லை. சகல விதமான சாஸ்திரங்களும் இதைத் தான் சொல்கின்றன'' என்று பதில் சொன்னார் வியாசர்.
குருவே, ஏகாதசி விரதம் மிகவும் முக்கியமாகக் கடைப்பிடிக்கவேண்டிய விரதம் என்கிறார்கள். அன்னை குந்தி, அண்ணன் யுதிஷ்டிரர், திரௌபதி, அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என எல்லோரும் தவறாமல் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.
அவர்கள் எல்லோரும் என்னையும் ஏகாதசி விரதம் இருக்க சொல்கிறார்கள். என்னால் செய்ய கூடியதா அது?
ஒரு வேளை சாப்பிட்டுவிட்டு, அடுத்த வேளை சாப்பிடாமல் இருப்பதே என்னால் முடியாது. என்னைப்போய் முறையாக உபவாசம் இருந்து ஏகாதசி விரதம் இரு என்றால் நடக்கக் கூடியதா இது. " விருகம் "என்னும் ஒரு தீ என் வயிற்றில் இருக்கிறது. ஏராளமான உணவைப் போட்டால் ஒழிய, என் வயிற்றில் இருக்கும் நெருப்பு அடங்காது.
மற்றொரு பிரச்னை... ஏகாதசியும் ஏதோ மாதம் ஒருமுறையோ அல்லது இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ வந்தாலும் பரவாயில்லை. அது சரியாகப் பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை வந்துவிடுகிறது. என்னால் அப்படியெல்லாம் அடிக்கடி சாப்பிடாமல் இருக்க முடியாது.
போனால் போகிறதென்று வருடத்துக்கு ஒருநாள் வேண்டுமானால் உபவாசம் இருக்கலாம்.அப்படி நான் ஒருநாள் இருக்கும் விரதத்துக்கு ஓராண்டு விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்க வேண்டும். அப்படி ஏதேனும் வழி இருந்தால் சொல்லி உதவுங்கள் குருதேவா...” என்று பீமசேனன் அப்பாவியாகக் கேட்டான்.
நம்மில் பலருக்கும் மாதமிருமுறை வரும் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கும் இந்தக் கேள்விக்கான விடையைத் தெரிந்துகொள்வதில் விருப்பம் இருக்கலாம்.
வியாசதேவர் பதிலளித்தார். கவலைப்படாதே பீமா. உனக்காகவே அமைந்ததைப் போல ஒரு ஏகாதசி இருக்கிறது.
மே/ஜுன் மாதங்களில் வளர்பிறையில் சூரியன் ரிஷப ராசி அல்லது மிதுன ராசியில் இருக்கும்போது தோன்றக்கூடிய ஏகாதசி நிர்ஜல ஏகாதசி எனப்படுகிறது. இந்த ஏகாதசியில் ஒருவர் நீரும் கூட அருந்தாமல் முழு உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும். அதனாலேயே அது நிர்ஜலா ஏகாதசி எனப்படுகிறது. அந்த ஏகாதசி விரதத்தை நீ கடைப்பிடி'' என வழிகாட்டினார் வியாசர்.
வியாசர் இப்படிச் சொன்னதும் பீமன் திடுக்கிட்டான்.
``என்ன நீர்கூட அருந்தக் கூடாதா?”
``ஆமாம் பீமா. ஜலம் என்றால் நீர். நிர்ஜலம் என்றால் நீர்கூட இல்லாமல் என்று பொருள். ஆனால் யோசித்துப்பார், இந்த ஒரு நாள் விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீ ஓராண்டு முழுவதும் ஏகாதசி விரதம் மேற்கொண்ட பலனை எளிமையாகப் பெறலாம். அப்புறம் உன் இஷ்டம்” என்றார் வியாசர்.
`உணவு உண்ணாமல் இருப்பதே கடினம். அதில் நீரையும் துறக்க வேண்டுமா’
பீமன் யோசித்தான். ஆனாலும் இது நல்ல யோசனையாக இருந்தது.
பீமசேனன், குருவின் வாக்கை வேதவாக்காகக் கொண்டு இந்த விரதத்தை மேற்கொள்ள முடிவு செய்தான். அவ்வாறே நிர்ஜலா ஏகாதசி விரதத்தையும் முடித்தான். அதனால் அவனுக்குப் புண்ணிய பலன்கள் கிடைத்தன.
பீமனே உணவை விட்டு உபவாசித்த ஏகாதசி என்பதால் அந்த ஏகாதசிக்கு " பீம ஏகாதசி " என்றும் " பாண்டவ ஏகாதசி " என்றும் பெயர் உண்டானது.
துன்பங்கள் அனைத்தையும் போக்கும் ஏகாதசி இது.
நிர்ஜல ஏகாதசி விரத பலன் :-
நிர்ஜல ஏகாதசி விரதம் இருந்தால் மற்றைய ஏகாதசி விரதமிருந்த பலனுண்டு.
புனித நதிகளில் நீராடிய பலனும், பலவிதமான தானங்களை அளித்த பலனும் இந்த ஏகாதசி விரதத்தின் மூலம் கிடைக்கும்.
வாழ்வில் வளமும் செல்வமும் பெருகும். பிறவி பிணி நீங்கும்.
ஒரு பிராமணனை கொன்ற பாபம், தொடர்ந்து பொய் சொன்ன பாபம், மது அருந்திய பாபம், தன் குருவை மதிக்காமல் ஏளனம் செய்த பாபம் இவற்றிலிருந்து விடுபடலாம்.
இந்த ஏகாதசி விரதமிருப்போர் தங்கள் பாபத்திலிருந்து விடுபடுவார்கள்.அவர்களின் நூறு தலைமுறைக்கான மூதாதையர்களும் தங்கள் பாப சுமையிலிருந்து விடுபடுவார்கள்.
மேலும், அவர்களது இறப்பிற்குப் பின், அவர்களை அழைத்துச் செல்ல யமதூதர்கள் வர மாட்டார்கள். மாறாக விஷ்ணு தூதர்கள் வருவார்கள். அந்த ஆன்மா, விஷ்ணுவின் திருப்பாதத்தை அடையும்.
நிர்ஜல ஏகாதசியை பற்றி கேட்பவருக்கு சூரிய கிரகணத்தில் வரும் அமாவாசை திதியில் சிரார்த்தம் செய்த பலன் கிட்டும்.
இன்று தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்கம் தானம் செய்த பலன் பெறுகிறார்கள்.
இந்த ஏகாதசியின் சிறப்பை கேட்டாலே வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நிச்சயம் என்கிறது தர்ம சாஸ்திரம்
அத்தகைய அற்புதமான ஏகாதசி தினம் நாளை (31/05/2023) வாய்த்துள்ளது.
இன்று நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடிந்தவர்கள் உபவாசித்தும் முடியாதவர்கள் முழு அரிசியால் ஆன உணவைத் தவிர்த்தும் விரதமிருந்து பகவான் விஷ்ணுவை வழிபடலாம்.
நாள் முழுவதும் நாராயண நாமமோ அல்லது ராம நாமமோ சொல்லி ஜபம் செய்யலாம். இதன் மூலம் நம் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும்.
நாராயண!! நாராயண!!
No comments:
Post a Comment