வித்யா நகரை சேர்ந்த
வயதில் முதிர்ந்தவர்
இவர் பெரும் செல்வந்தர் வடநாட்டு தலங்களை தரிசிக்க சென்றிருந்தார்.
இவரை போலவே திவ்ய தலங்களை காண வந்த அதே ஊரை சேர்ந்த
ஓர் இளைஞரின் நட்பு
ஒரு தலத்தில் கிடைக்கிறது.
இருவரும் நிறைய தலங்களை காண்கின்றனர்.
காசி கயா பிராயகை முதலான தலங்களை தரிசித்துவிட்டு பிருந்தாவனம் வந்தனர்.
திடீரென ஓர் நாள் பெரியவருக்கு நோய் பீடித்தது.
படுத்த படுக்கையான முதியவரை
பல நாட்கள் இளைஞர் தூங்காமல் கவனித்து கொண்டார்.
முதியவரின் நோய் குணமானதும்,
முதியவர் தனது மகளை அந்த இளைஞருக்கு திருமணம் செய்து தருவதாக சொன்னார்.
இளைஞரோ நான் எவ்வித எதிர்பார்ப்புமின்றியே செய்தேன்,
அடியவர்களுக்கு சேவை செய்வது அந்த அனந்தனுக்கு செய்யும் சேவையாக நினைத்தே செய்தேன் என்றார்.
முதியவரோ,
நீ ஏழையாக இருந்தாலும்
நான் வாக்கு தவற மாட்டேன்,
என கிருஷ்ணனுக்கு முன் சத்தியம் செய்தார்.
முதியவரும் இளைஞரும்
ஊர் வந்து சேர்ந்தனர்.
முதியவர் தனது குடும்பத்தாரிடம்
தான் இளைஞனுக்கு கொடுத்த வாக்குறுதி பற்றி கூறினார்.
ஆனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் அதனை ஏற்கவில்லை.
பெண் கேட்டு வந்த இளைஞன் துரத்தப்பட்டான்,
ஊர் பஞ்சாயத்தை கூட்டினான் இளைஞன்.
பெரியவரோ குடும்பத்தின் நெருக்கடியில்
தான் அப்படி சொன்னதாக ஞாபகம் இல்லை என்றார்.
சாட்சி ஏதாவது இருக்கிறதா என பஞ்சாயத்தார்கள் கேட்டனர்.
அந்த கோபாலனே சாட்சி என்றான் இளைஞன்.
அந்த கோபாலனை அழைத்து வாருங்கள்
தீர்ப்பு சொல்கிறோம் என்றனர்.
பிருந்தாவனம் வந்தான்
கோபாலனிடம்
எனக்கு அவர் மகளை மணக்க வேண்டும் என்பது முக்கியம் இல்லை
ஆனால் அவர் உன் முன்னால் அளித்த வாக்கு பொய்யாகி விடக்கூடாதல்லவா ,
ஆகையால் நீ என்னுடன் வர வேண்டும்
வந்து சாட்சி சொல்ல வேண்டும் என்றான்.
கிருஷ்ணர் ஊர் விட்டு ஊர் வந்து சாட்சி சொல்வது நடவாத காரியம் என பலவாறு அங்கே வராமல் இருக்க வழி தேடினார்.
ஆனால் இளைஞர் முடிவாக நீ வர வேண்டும் என பிடிவாதமாக இருந்தார்.
கடைசியாக
கிருஷ்ணர் அந்த இளைஞனிடம்
நீ முன்னே திரும்பி பார்க்காமல் போக வேண்டும்
உன் பின்னே நான் வந்து கொண்டே இருப்பேன்.
கால் கொலுசுகளின் சத்தமும் உனக்கு கேட்டுக்கொண்டே இருக்கும்.
நீ எப்போது திரும்பி பார்க்கிறீயோ
அங்கேயே நான் இருந்துவிடுவேன் என்றார்.
இளைஞன் முன்னே செல்ல
கிருஷ்ணர் பின்னேயே சென்றார்.
கொலுசு சத்தம் கேட்டபடி இருந்தது.
பிருந்தாவனத்தில் இருந்து பல நாட்கள் நடந்து
அந்த குறிப்பிட்ட கிராம எல்லைக்கு வந்தனர்.
பெரிய மணல் மேடு ஒன்று இருந்தது.
அதில் கால் வைத்து நடந்தனர்.
கொலுசில் மண் ஏறியதால் கொலுசு சத்தம் கேட்காமல் போனது,
இளைஞர் கொலுசு சத்தம் வராததால்
திரும்பி பார்த்தார்.
சிரித்தபடி நின்றிருந்த கிருஷ்ணர்
ஓளி வீசும் சிலையாக மாறி நின்றார்.
இதனை கேள்விப்பட்ட அந்த ஊர் மக்கள்
இறைவனை வந்து தொழுதனர்.
முதியவர் தனது குடும்பத்தோடு வந்து
இறைவனின் காலில் விழுந்து வணங்கினார்.
இளைஞனுக்கு தனது மகளை திருமணம் செய்து வைத்தார் முதியவர்.
இறைவன் சாக்ஷி கோபால் என ஆனார்.
ஊரும் சாக்ஷி கோபால் ஆனது.
பூரி ஜெகன்நாதர் ஆலயத்தில் இருந்து 3 km தொலைவில் உள்ளது ஆலயம்.
Comments
Post a Comment