Monday 5 August 2024

சித்த சோரா

கடவுளின் புகழைப் பாடி, அதை ஒரு தொழிலாகக் கொண்டிருந்த ஒரு பாகவதர்.
 அன்று பாகவதத்தின் கதையை
ஒரு வீட்டில் பிரவசனம் செய்து கொண்டிருந்தார். 

அப்போது அந்த வீட்டிற்குள் திருட வந்த ஒரு திருடன் நுழைந்து, மூலையில் மறைந்து, (வேறு வழியில்லாமல்) பிரவசனத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

"ஸ்ரீமத் பாகவதம்", பகவான் 
ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் மற்றும் மாய லீலைகள் நிறைந்த ஒரு புனித நூலாகும்.

திருடன் இக் கதைகளைக் கேட்கும் கட்டாயத்தில் இருந்தான். 

பாகவதர் அச்சமயம் பால கிருஷ்ணர் அணிந்திருந்த ஆபரணங்களை பிரமாதமாக வர்ணித்துக் கொண்டிருந்தார்.

கிருஷ்ணரை பசுக்களுடன் அனுப்புவதற்கு முன், தாயார் யசோதை அவருக்கு அணிவித்து மகிழ்ந்த நகைகளை பாகவதர் விவரித்தார்.

இக் கதைகளைக் கேட்டு பரவசம் அடைந்த திருடன், எப்படியாவது அப் பாலகனின் நகைகள் எல்லாவற்றையும் கொள்ளை அடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

தினமும் சிறு சிறு பொருட்களைத் திருடுவதை விட, இது மேல் என்று எண்ணினான்.

பிரவசனம் முழுவதும் முடியும் வரை திருடன் காத்திருந்தான். 

இப்பாலகன் இருக்கும் இடத்தை திருடன் அறிய விரும்பினான். நிகழ்ச்சி முடிந்த பின் அவன் பாகவதரைப் பின் தொடர்ந்து சென்று அவரை வழி மறித்தான்.

 தட்சிணையாகக் கிடைத்த தனது சிறு செல்வமும் தொலைந்து விடுமோ என பாகவதர் பயந்து, தன்னிடம் ஒன்றும் இல்லை என்று திருடனிடம் கூறினார்.

திருடன், பாகவதரின் பொருளில் தனக்கு எதுவும் வேண்டாம் என்றும், அவர் வர்ணித்த மாடு மேய்க்கும் பாலகனின் ஆபரணங்கள் பற்றிய விவரம் தனக்கு வேண்டும் என்றான்.

 தன்னை அவ்விடத்திற்கு அழைத்துச் செல்லும்படி திருடன் அவரைக் கேட்டான்.

 பாகவதர் குழப்பம் அடைந்தார். அவர் திருடனிடம்,(தப்பிக்க) “யமுனை நதிக் கரையில் உள்ள பிருந்தாவனம் என்னும் நகரத்தில், பச்சைப் புல்வெளியில் காலை வேளையில் வருவான்.

 அவன் மேகங்களின் நிறத்தைப் போல் நீல வர்ணமாகவும், கையில் புல்லாங்குழலுடனும்,  பட்டாடைகளுடனும் இருப்பான்.

 நான் வர்ணித்த நகைகளை அந்த நீல வர்ண பாலகன் அணிந்திருப்பான்” என்று கூறி சமாளித்தார்.

பாகவதர் கூறியதை நம்பிய திருடன் பிருந்தாவனத்திற்கு உடனடியாகக் கிளம்பினான். 

அந்த அழகான இடத்தை அவன் கண்டு பிடித்து, ஒரு மரத்தின் மீது ஏறி, ஸ்ரீகிருஷ்ணன் வரும் வழியை எதிர்பார்த்து, நம்பிக்கையுடன் காத்திருந்தான். 

சூரியோதயம் ஆனது.

 காற்றுடன் புல்லாங்குழலின் இனிமையான ஓசை மிதந்து வந்தது.

 அந்த இசை நெருங்கி, ஓசை சற்று வலிதானதும், திருடன் பால கிருஷ்ணனைக் கண்டான்.

 மரத்திலிருந்து இறங்கிய அவன், ஸ்ரீகிருஷ்ணனை நெருங்கினான்.

 பால கிருஷ்ணரின் மனோகரமான ரூபத்தைக் கண்டதும், அவன் தன்னை மறந்து அவரை கை கூப்பி வணங்கினான். 

அவனையும் அறியாமல் ஆனந்தக் கண்ணீர் அவன் கண்களிலிருந்து வழிந்தது.

 இக் கண்ணீர் அவன் உள்ளத்திலிருந்து வந்ததால், தன்மையாக இருந்தது.

 இந்த அழகான சிறுவனை எந்தத் தாயார் அனுப்பி இருப்பார்கள் என எண்ணி அவன் வியந்தான்.

 கண்களை அகற்றாமல் ஸ்ரீகிருஷ்ணனை பார்த்தான்..! அவனுள் ஒரு மாற்றம் ஏற்பட தொடங்கியது!!

அவன் கிருஷ்ணனை நெருங்கி “நில்” என்று கூச்சலிட்டபடி கிருஷ்ணரின் கையைப் பிடித்தான்.

 அக்கணமே, பஞ்சு மூட்டை நெருப்பில் எரிவது போல், அவனது பழைய கர்மாக்கள் அழிந்தன. 

அவன் கிருஷ்ணரை நெருங்கி மிக அமைதியாக “யார் நீ” என்று கேட்டான்.

கிருஷ்ணர் அவனைப் பார்த்து, ஏதுமறியாதது போல் ‘உன் பார்வை என்னை பயமூட்டுகிறது.

 தயவு செய்து என் கைகளை விட்டு விடு’ என்றார். 

திருடன் அவமானத்துடன் “என்னுடைய கெட்ட எண்ணம் என் முகத்தில் பிரதிபலிக்கிறது; எனவே நீ பயந்து கொள்கிறாய். நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். ஆனால் உன்னை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது. நான் உன்னை விட்டு விட வேண்டும் என்று மட்டும் தயவு செய்து கூறாதே” என்றான்.

குறும்புக்கார கிருஷ்ணன் திருடனிடம், அவன் வந்த காரணத்தை நினைவு படுத்தி, சிரித்தபடி, “நீ விரும்பியது போல்  இதோ, இந்த ஆபரணங்களை எடுத்துக் கொள்” என்றார்.

 குழப்பமடைந்த திருடன் “அனைத்து ஆபரணங்களையும் நீ கொடுத்து விட்டால், உன் தாயார் உன்னை கோபித்துக் கொள்ள மாட்டாரா?” என்று கேட்டான்.

 அதற்கு கிருஷ்ணர் புன்சிரிப்புடன், “நீ அதைப் பற்றி கவலைப் படாதே. என்னிடம் அதிக அளவில் ஆபரணங்கள் இருக்கின்றன. 

நான் உன்னை விடப் பெரிய திருடன்; ஆனால் நம் இருவரிலும் ஒரு சிறு வித்தியாசம் இருக்கிறது. நான் எவ்வளவு திருடினாலும், எவரும் என்னைப் பற்றி புகார் கூற மாட்டார்கள்.

 என்னை அன்புடன் ‘சித்த சோரா’ என்று அழைப்பார்கள். 

உனக்கே தெரியாமல், உன்னிடம் பழைய ஆபரணம் ஒன்று இருக்கிறது; உனது சித்தம் (உள்ளம்). அதை நான் இப்போது திருடி எடுத்துச் செல்லப் போகிறேன்” என்று கூறிய உடனே, மாயகிருஷ்ணன் திருடன் கண் பார்வையிலிருந்து மறைந்து விட்டார்.

திருடன் வியக்கும் வகையில், ஆபரணங்கள் நிறைந்த ஒரு பை அவன் தோளில் தொங்கிக் கொண்டிருந்தது. 

அதை பாகவதரின் வீட்டுக்கு எடுத்து வந்து, அவன் நடந்த அனைத்தையும் அவருக்கு விவரித்தான்.

 பாகவதர் இப்போது மிகவும் பயந்து, திருடனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று, பையைத் திறந்து பார்த்தார்.

 அவர் திகைக்கும் வகையில், பாகவதத்தில் அவர் விவரித்தபடி, கிருஷ்ணர் அணிந்திருந்த அத்தனை ஆபரணங்களும் அப்பையில் இருந்தன.

ஆனந்தக் கண்ணீர் வடித்தபடி பாகவதர் திருடனிடம், கிருஷ்ணரை அவன் கண்ட இடத்திற்கு, தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறினார்.

 திருடன் ஒப்புக் கொண்டு, தான் முந்தைய தினம் கிருஷ்ணரை கண்ட இடத்திற்கு அவரை அழைத்துச் சென்றான்.

திடீரென திருடன் ஆச்சரியத்துடன் "அதோ, அங்கே அவன் வருகிறான்" என்று கூறினான். 

ஆனால் பாகவதர் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. 

ஏமாற்றம் அடைந்த அவர், 
“மாய கண்ணா ஒரு திருடனுக்கு நீங்கள் தரிசனம் அளித்தீர்கள்; 
ஆனால் எனக்கு ஏன் காட்சி தரவில்லை?”என்று கண்ணீருடன் கேட்டார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மிகுந்த பரிவுடன் இவ்வாறு பதிலுரைத்தார்.

 நீங்கள் ஸ்ரீமத் பாகவதத்தை, மற்ற கதைகளைப் போல படிக்கிறீர்கள்.

 திருடனோ நீங்கள் என்னைப் பற்றி கூறியதை நம்பி, என்னைத் தேடி உண்மையாக வந்தான். 

என்னிடம் பூரண நம்பிக்கை வைத்து சரணாகதி அடைபவர்களுக்கே நான் தரிசனம் அளிக்கிறேன்.

*நீதி:*

*ஆன்மீக நூல்களை, நம்பிக்கை இல்லாமல் ஒப்புக்கு படிப்பதால் ஒரு பயனும் கிடையாது. தீவிர நம்பிக்கை இருந்தால், மலைகள் கூட அசையும்..*

No comments:

Post a Comment