Wednesday, 7 August 2024

பந்து_மொகந்தி


ஒடிசா மாநிலத்தில் கட்டாக் நகர் ஜாஜ்பூர் கிராமத்தில் வாழ்ந்த ஓர் ஏழை. பூரி ஜெகந்நாதரின் பரம பக்தர். எல்லா நேரமும் பூரி ஜெகந்நாதரையே வழிபட்டும் அவரையே பாடி காலம் கழித்து வந்தவர். ஒரு சமயம் அவர் வாழ்ந்த கிராமத்தில் கடும் பஞ்சம் வர தன் மனைவி, குழந்தைகள் பசியில் வாடுவவதை கண்டு மனம் கலங்கினார். அது சமயம், அவருடைய மனைவி உங்களுக்கு தெரிந்த நண்பர்களிடம் சென்று எதாவது உதவி வேண்டுமாறு கூற, எனக்கு யாரையும் தெரியாதே, எனக்குள்ள ஒரே நண்பன் பூரி ஜெகந்நாதனே, அவனிடம்  செல்லலாம் என்று கூற, அனைவரும் உடன் கிளம்பி 140கிமீ நடந்தே, பூரி  வந்து அடைந்தனர். இரவு நேரமாக, பசியில் கோவில் மடப்பள்ளியில், அருகே படுத்திருந்த பந்து மொகந்தியை யாரோ தன் பெயர் சொல்லி கூவி அழைப்பது கேட்டது. யார் நம்மை இந்த இரவில் அழைப்பது என வியந்த பந்து மொகந்தி, "ஐயா,நான் தான் பந்து மொகந்தி, என்னை ஏன் அழைக்கிறீர்கள்" என வினவ, அந்த கருத்த பெரிய உருவம் கொண்ட நபரோ "என்னைத்  தானே  நீ தேடி வந்தாய், இந்தா உனக்கு, உன் குடும்பத்திற்கு பசிக்கு வேண்டிய உணவு, சாப்பிட்டு உறங்கு", என கூற அதற்கு பந்து மொகந்தி, "நன்றி" என வந்தவர் யார் என்று புரியாமல்,  வாங்கி "உணவினை எடுத்துக் கொண்டு தட்டுனினை திருப்பி தருகிறேன்" என சொல்ல, அந்த நபரோ, "தட்டினை நாளை நான் வாங்கி கொள்கிறேன். நீர் போய் சாப்பிட்டு விட்டு உறங்கு" என கூறிவிட்டு மடப்பள்ளி பக்கம் சென்று விட்டார். உணவினை வாங்கிய பந்து மொகந்திக்கோ,  ஆச்சரியம். இத்தனை விதமான பலதரப்பட்ட உணவு வகைகளை பார்த்து மகிழ்ச்சி. கொண்டு சென்று, தன் மனைவி குழந்தைகள் உடன் நன்றாக சாப்பிட்டு விட்டு அங்கே, தட்டினை தலையில் வைத்து தூங்கி விட்டார். அடுத்த நாள் காலையில் கோவிலில் ஒரே கூச்சல்.  சப்தம் கேட்டு, எழுந்த பந்து மொந்தி, என்ன என்று பார்த்தால், பூரி ஜெந்நாதனுக்கு பிரசாதம் படைக்கும் தங்க தட்டினை காணவில்லை என்று அங்கு அர்ச்சர்கள், காவலாளிகள் தேடுவதை கண்டார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் பந்து மொகந்தி கையில் இருந்த தங்க தாம்பாளத்தைக் கண்டவர்கள், அவரை பிடித்து கொண்டனர். "நீ தான் பூரி ஜெந்நாதனின் தங்கதட்டினை திருடினாயா?" என அவரை  கேட்க, அவர் அதை மறுக்க, அந்த ஊர் ராஜாவிடம் அவரை அழைத்து சென்று, தங்க தாம்பாள தட்டினை காணவில்லை, இவன் கையில் தட்டு கிடைத்தது, என முறையிட்டனர். ராஜாவும் அவரிடம், விசாரிக்க, பந்து மொகந்தியோ, "நேற்று இரவு ஒரு நபர் மடப்பள்ளியில் இருந்து வந்து, என்னை கூப்பிட்டு இந்த தட்டில் பல உணவுகளை தந்தார், நான் திருடவில்லை, என கூறினார். "ராஜாவும் மடப்பள்ளியில் பணி ஆற்றியவர்களை அழைத்து, யார் இந்த தட்டில் உனக்கு உணவு அளித்தது யார் என அடையாளம் காட்ட சொன்னார். ஆனால் அங்கிருந்த யாரும் பந்து மொகந்தி பார்த்த பருத்த கருத்த நபரை போல் இல்லை. "இவர்களில் யாரும எனக்கு தரவில்லை" என பந்து மொந்தி உண்மை கூறி மறுக்க, இதனால் சந்தேகம் அடைந்த ராஜா பந்து மொகந்தியை சிறையில் அடைத்தார். அடுத்த நாள் வழக்கம் போல், பூரி ஜெகந்நானுருக்கு பூஜை செய்து நைவேத்தியம் செய்யும் போது ஜெகந்தானுக்கு, எதிரில் தெரியும், கண்ணாடியில் ஜெகந்நாதனினன் பிரதி பிம்பம் கண்ணாடியில் தெரியவில்லை. இதை கவனித்த அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். ஏன் ஜெகந்நாதனின் பிம்பம் வழக்கம் போல் பூஜையின் போது தெரியவில்லை என கலக்கம் அடைந்தனர்.  இந்த தகவலை ராஜாவிடம் தெரிவித்தனர். ராஜாவும் செய்தியை கேட்டு கலக்கம் அடைத்தார். எப்போதும் தெரியும் பிம்பம் ஏன் தெரியவில்லை என பூரி ஜெகந்நாதரை நினைத்து பிராத்தித்தார். ஏதேதும் தவறு செய்தால் மன்னிக்க பிராத்தித்தார். அன்று இரவில் ராஜா கனவில் தோன்றிய ஜெகந்நாதர், என் பக்தன் பந்து மொகந்தியை விடுவிக்க வேண்டும், என் தங்க தாம்பாளம் காணவில்லை என்றால் என்னிடம் அல்லவா நீ கேட்க வேண்டும், அதை விடுத்து, நீ என் பக்தன் பந்து மொகந்தியை சிறையில் அடைத்தது தவறு, நான் தான் எனக்கு நீ படைத்த 56 உணவு வகைககளை பந்து மொகந்திக்கு கொடுத்தேன் அவன் திருடவில்லை. உடன் அவரை விடுதலை செய்து பந்துமொகந்திக்கு கோவில் மடப்பள்ளியில் வேலை கொடுத்து அவரை கௌரவிக்க சொன்னார். உறக்கத்தில் இருந்து விழித்த ராஜா தன் தவறை உணர்ந்து, உடன் பந்து மொகந்தியை விடுதலை செய்து மன்னிப்பு வேண்டினார். பின்னர் கோவிலின் மடப்பள்ளி அருகே பந்து மொகந்திக்கு ஆசிரமம் அமைத்து கோவில் நிர்வாகத்தில் வேலையும் கொடுத்தார். 1815ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்வின் பின் இன்று வரை, பந்து மொகந்தி, அவருடைய பரம்பரை சந்ததியிரே பூரி ஜெகந்தாருக்கு மடப்பள்ளி கைங்கரியம் செய்து 56 உண்வு தயாரித்து ஜெகந்நாதனுக்கு படைக்கின்றனர். இன்றும் பூரியில் சிங்கவாசல் நுழைவாயிலிருந்து இடதுபுறம் சென்றால், மடப்பள்ளி சுவர் அருகில் பந்து மொகந்தி ஆசிரமம் உள்ளது. பூரியின் சிறப்பு, பசி ஆற்றுவதில் ஜெகந்தானுக்கு இணையில்லை.

जय जगन्नाथ महाप्रभु
Jai Jagannath Mahaprabhu
ஜெய் ஜெகந்நநாத் மகாபிரபு.

No comments:

Post a Comment