Monday, 14 October 2019

30 #நரசிம்மர்_வழிபாட்டு_குறிப்புகள்...!!!



1. நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது.

2. நரசிம்மருக்கு சிவப்பு நிற அரளி மற்றும் செம்பருத்தி பூக்கள் மிகவும் பிடித்தமானவையாகும்.

3. கணவன்-மனைவி அடிக்கடி சண்டை போடு கிறார்களா? நரசிம்மரை வழிபட்டால் தம்பதி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகி விடும்.

4. நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. வெறும் படத்தை வைத்தே பூஜைகள் செய்யலாம்.

5. நரசிம்மர் அருள் பெற பெண்களும் விரதம் இருக்கலாம். ஆனால் பெண்கள் மிகவும் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

6. வீட்டில் நரசிம்மரை வழிபாடு செய்யும்போது வாயு மூலை எனப்படும் வடமேற்கில் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது.

7. நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று வீட்டில் உள்ள சிறுவர்- சிறுமிகளுக்கு நரசிம்ம அவதார கதையை படித்து காண்பித்தால் பிரகலாதனுக்கு கிடைத்த பலன்கள் கிடைக்கும்.

8. நரசிம்மரை நினைத்து விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக பால் மற்றும் பால் தொடர்பான உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

9. நரசிம்மரின் அருள் பெற விரும்புபவர்கள், ஸ்ரீமத் பாக வதத்தில் உள்ள பிரகலாத சரித்திரத்தின் (7-வது ஸ்கர்தம் 1 முதல் 10 அத்தியாயங்கள் வரை) பாராயணம் செய்ய வேண்டும். பிரகலாதரால் செய்யப்பட்ட ஸ்தோத்திரத்தில் 7-வது ஸ்கந்தம் 9-வது சர்க்கத்தையும் பாராயணம் செய்தல் வேண்டும்.

10. நரசிம்மரை வழிபட்டு சென்றால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.

11. நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். மகா விஷ்ணு எடுத்த இந்த அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.

12. நரசிம்மனிடம் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண் டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

13. நரசிம்மரை ‘மருத்யுவேஸ்வாகா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.

14. ‘அடித்தகை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது ‘பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறுவினாடியே உதவுபவன்’ என்று இதற்கு பொருள்.

15. நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களில் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.

16. வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும்.

17. நரசிம்மரின் அவதாரம் இறைவன் எங்கும் உள்ளார் என்பதை உணர்த்துவதாகும்.

18. நரசிம்மர் வைணவ சமயத்தில் அதிகம் வழிபட கூடிய விஷ்ணுவின் அவதாரம் ஆகும்.

19. நேபாளத்தில் உள்ள ராஜோபாத்யாய பிராமனர்கள், நரசிம்ம அவதாரத்தை கொண்டாடும் வகையில் காட்மண்டு பள்ளத்தாக்கில் ஆவனி மாதம் தேய்பிறை ஐந்தாம் நாள் (பஞ்சமி) ஸ்ரீ நரசிம்ம யாத்திரையை மேற்கொள்கிறார்கள். இந்த மரபு நூறு வருடங்களுக்கு மேலாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

20. நரசிம்ம சுவாமி இந்தியா வெங்கிலும் வழிபடப்பட்டாலும், தமிழ் நாடு, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களில் தான், இவருக்குத் புகழ் வாய்ந்த தனிக்கோவில்களும் சிறப்பு வழிபாடும் அதிகமாக உள்ளது.

21. தீராத வினைகளால் பாதிக்கப்பட்டவர்கள், மனநோ யால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை தடுமாறியவர்கள், கிரகங்களின் தோஷத்தால் துன்புறுபவர்கள், கடன் தொல்லையில் கஷ்டப்படுபவர்கள் ஸ்ரீநரசிம்மரை வணங்க துயர் நீங்கி சுக வாழ்வு பெறுவார்கள்.

22. ஸ்ரீநரசிம்ம அவதாரம் பற்றி கம்பர் தனது ராமாயணத்தில் இரணிய வதை படலம் ஒன்றை தனியாக சேர்த்து உள்ளார். இதை நினைவூட்டவே ஸ்ரீரங்கத்தில் கம்பர் தனது ராமாயணத்தை அரங்கேற்றியபோது ஸ்ரீரங்க கோவிலில் சிங்கமுக மண்டபம் அமைத்து தரப்பட்டது. இதை இன்றும் காணலாம்.

23. நரசிம்ம தத்துவத்தை “மத்ஸ்ய” புராணத்திலும் “விஷ்ணு தர்மோத்திர” புராணத்திலும் காணலாம்.

24. நரசிம்மர் பல நாமங்களில் அர்ச்சிக்கப்படுகின்றார். இரணி யனுக்கு முன்பு தோன்றியபோது வக்ர நரசிம்மராகவும், இரணி யனுடன் போர் செய்தபோது வீர நரசிம்மராகவும் , போர் முடிந்து சாந்த நிலையை பெற்ற போது சாந்த நரசிம்மராகவும் தனது மனைவியான மகாலட்சுமியுடன் அருள் பாலித்த போது ஸ்ரீலட்சுமி நரசிம்மராகவும் யோக நிலையில் அமர்ந்தபோது யோக நரசிம்மர் என்றும் வர்ணிக்கப்படுகின்றார்.

25. ஸ்ரீநரசிம்மர் பெரும்பாலும் மலை உச்சியிலும், குகை பகுதியிலுமே அவதரித்து உள்ளார். ஆலயங்களும் அப்பகுதியிலேயே கட்டப்பட்டு உள்ளன.

26. சப்த ரிஷிகளுக்கு தனது யோக நிலையை காண்பித்த தலமே திருக்கடிகை என அழைக்கப்படும் சோளிங்கர்.

27. நாமக்கல் நரசிம்மர் சக்திவாய்ந்தது. இவ்விடத்தில் யோக நரசிம்மர் அருள்பாலிக்கிறார்.

28. சென்னை அருகே சிங்க பெருமாள் கோவில் தலத்தில் நரசிம்மர் சாலகிராம கல்மலையுடன் விரலிலும், மார்பிலும் ரத்த கறை போன்ற சிவப்பு நிறத்துடன் காணப்படுகின்றார்.

29. ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவில் உள்ள நரசிம் மரும், விசாகப்பட்டினம் அருகே ஸ்ரீசிம்மாசலம் என்ற மலை மீது அவதரித்து உள்ள நரசிம்மரும் சக்தி மிக்கவர்கள்.

30. கும்பகோணம் மன்னார்குடி மார்க்கத்தில் வலங்கைமான் ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீயோக நரசிம்மர் சன்னதி உள்ளது. பிரதோஷபூஜை இங்கு சிறப்பாக நடத்தப்படுகின்றது. பூஜையில் கலந்து கொண்டாலும் (அல்லது) பிரதோஷ பூஜையை ஏற்று நடத்தினாலும் கடன் தொல்லை, தீராதநோய், வறுமை, செய்வினை கோளாறுகள் உடனுக்குடன் விலகுகின்றன. சுவாதி நட்சத்திரக்காரர்கள் பிரதோஷ பூஜையை ஏற்று நடத்துவது நல்லது.

ஸ்ரீ யோக நரசிம்ஹாய நமோ நமஹ 🙏

Saturday, 12 October 2019

குருவாயூர்

பூலோக வைகுண்டம் -குருவாயூர் கோவிலை பற்றிய அறியாத சிறப்புகள்!!

#குருவாயூர்!!

🌷 திருமாலின் உலகமாக கருதப்படும் வைகுண்டம், சொர்க்கமாக போற்றப்படுகிறது. அத்தகைய வைகுண்டத்திற்கு இணையாக போற்றப்படும் ஒரு கோவில் இந்த பூ உலகில் உள்ளது என்றால் அது தான் குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோவில்.

🌷 இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் எனும் இடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் இதுவாகும்.

🌷 கிருஷ்ண அவதாரத்திற்கு முன்பே தன் தாய் தந்தையருக்கு இக்கோவிலில் குழந்தை வடிவத்தில் கிருஷ்ணன் காட்சி கொடுத்த சிறப்பு இக்கோவிலுக்கு உள்ளது.

🌷 வைணவர்களின் புனித தலமாக போற்றப்படும் இந்த கோவில் 108 திவ்ய தேசக் கோவில்களில் இடம் பெறவில்லை. ஆனால் அதையும் கடந்து இது பூலோக வைகுண்டமாக போற்றப்படுகிறது.

திருத்தல மகத்துவம் :

🌷 குருவாயூர் கோவில் குளத்தில் சிவபெருமான் ருத்ரனாக இருந்து மகாவிஷ்ணுவை போற்றி கடும் தவம் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் இந்த குளத்தின் தீர்த்தமானது ருத்ர தீர்த்தம் என்று போற்றப்படுகிறது. புண் முறுவலோடும், கம்பீர தோற்றத்தோடும் இங்கு காட்சி தரும் கிருஷ்ணர், தனது நான்கு கரங்களில் சங்கு, சுதர்சன சக்கரம், தாமரை, கதை ஆகியவற்றை ஏந்தி காட்சி தருகிறார்.

🌷 இந்த கோவிலில் உள்ள மூலவரின் விக்ரகத்திற்கு தனி சிறப்பு உண்டு. இதை வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவே படைத்து அதை சிவனிடமும், பிரம்ம தேவனிடமும் கொடுத்ததாக நம்பப்படுகிறது.

🌷 கிருஷ்ணாவதாரம் முடியும் தருவாயில் அந்த விக்கிரகம் உத்தவரிடம் கொடுக்கப்பட்டது. துவாரகையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் துவாரகை கடலில் மூழ்கிப்போக இந்த விக்ரகம் கடலில் மிதந்தவண்ணம் இருந்தது. இதை கண்ட வாயுவும், குருவும் அந்த விக்ரகத்தை பிரதிஷ்டை செய்ததால் குருவாயூர் என பெயர் பெற்றது.

கோவிலின் சிறப்புகள் :

🌷 தேவ சிற்பியான விஸ்வகர்மாவால் குருவாயூர் கோவில் உருவாக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

🌷 அதிகாலையில் ஸ்ரீகுருவாயூரப்பனின் விஸ்வரூப தரிசனம் காண பக்தர்களின் கூட்டம் அலைமோதும். குழந்தை கிருஷ்ணனை எந்த வேளையில் தரிசித்தாலும், அதிகாலையில் தரிசிப்பது கூடுதல் ஆனந்தம்!

🌷 விஸ்வரூப தரிசனம் முடிந்ததும் தைலாபிஷேகம் நடைபெறும். குருவாயூரப்பனுக்கு நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்யப்படுகிறது.

🌷 இரவு மூன்றாம் ஜாமம் முடிந்ததும் 3 மணிக்கு நாதஸ்வர இன்னிசை ஒலிக்க, சங்கு முழங்க குருவாயூரப்பனைத் திருப்பள்ளி எழச்செய்வர். அப்போது பகவான் காட்சி கொடுப்பதற்கு 'நிர்மால்ய தரிசனம்" என்று பெயர்.

🌷 இந்த அபிஷேகம் முடிந்த பின் நெல்பொரி, கதளிப்பழம், சர்க்கரை முதலியவற்றை நைவேத்தியமாகப் படைப்பர். அப்போது உன்னி கிருஷ்ணனாகத் தோற்றம் அளிப்பார் குருவாயூரப்பன்.

🌷 சந்தன அபிஷேகத்தில் நீராடிய குருவாயூரப்பனை அன்றைய தினம் முழுவதும் பக்தர்கள் தரிசிக்கலாம். சந்தன அபிஷேகம் நடந்த தினத்துக்கு அடுத்த நாள் இந்த சந்தனம் களையப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது.

🌷 குழந்தைகளுக்கு முதல் அன்னமிடுதலும் இங்கே சிறப்பு. குழந்தைகளுக்கு முதன் முதலாக இங்கே அன்னம் ஊட்டினால் வாழ்நாள் முழுதும் அந்தக் குழந்தைக்கு ருசியான உணவு கிடைக்கும் என்பதும், உணவுக்குப் பஞ்சம் வராது என்பதும், நோய் நொடிகள் எதுவும் வராது என்பதும் நம்பிக்கை.

🌷 இத்தகைய சிறப்பு பெற்றது குருவாயூர் கோவில் மூலவர் விக்ரகம். இப்படி பல சிறப்புகள் நிறைந்ததாலேயே குருவாயூர் கோவில் பூலோக வைகுண்டமாக போற்றப்படுகிறது.

Friday, 11 October 2019

கண்ணன் கீதையில் இவ்வாறு சொல்கிறார்

*திருமால் புகழ்*





"எவர்கள் எவ்வாறு என்னை நாடுகிறார்களோ அவர்களை அவ்வாறே அனுக்கிரகிக்கிறேன்" என்று

(கீதை 6 ஆம் அத்யாயம் 11 ஆவது சுலோகம்)

யார் என்னை எந்தப் பெயரால் அழைத்தாலும், அவர்களை அவ்வாறே ஏற்றுக் கொண்டு ஆசிர்வதிப்பேன் என்பது இதன் பொருள். அதனால் தான், மகா விஷ்ணுவுக்கு 16 பெயர்கள் கூறப்படுகின்றன . அந்தப் 16 பெயர்களில் எப்பொழுதும் மக்களை ஆட்கொள்ள அவர் தயங்குவதில்லை. அப்பெயர்கள் பின்வருமாறு.

1. மருந்தை உட்கொள்ளும் பொழுது , அவனை நினைத்தால் - விஷ்ணு,

2. உணவை உட்கொள்ளும் பொழுது அவனை நினைத்தால் - ஜனார்த்தனன் ,

3. படுக்கச் செல்லும் பொழுது அவனை நினைத்தால் - பத்மநாபன்,

4. திருமணத்தின் பொழுது அவனை நினைத்தால் - பிரஜாபதி,

5. யுத்தம் செய்யும் பொழுது அவனை நினைத்தால் - சத்ரதாரி,

6. வெளியில் கிளம்பும் பொழுது அவனை நினைத்தால் - திரிவிக்ரமன்,

7. நண்பனாய் அவனைப் பார்க்கும் பொழுது - ஸ்ரீ தரன் ,

8. கெட்ட கனவு காணும் பொழுது அவனை நினைத்தால் - கோவிந்தன்,

9. கஷ்டம் வரும் போது , அவனை அழைத்தால் - மதுசூதனன்,

10. காடுகளில் செல்லும் பொழுது - நரசிம்மனாக தம்மை அண்டியவர்களைக் காப்பவன் ,

11.நெருப்பால் துன்பம் வரும் பொழுது, அவனை நினைத்தால் அவனே - ஸ்ரீ மகாவிஷ்ணு ,

12.தண்ணீரால் துன்பம் ஏற்படும் பொழுது அவனை நினைத்தால் அவனே - ஸ்ரீ வராகன்,

13.ஆபத்தான மலையின் மீது ஏறும் சமயத்தில் அவன் நாமத்தை நினைக்கும் பொழுது அவனே -ஸ்ரீ ராமன்,

14. நடக்கும் பொழுது உள்ளத்தால் அவன் பாதம் பற்றினால் அவனே - வாமனன், 15.இறக்கும் தருவாயில் அவன் நமக்கு - நாராயணன்,

16. எல்லாச் சமயங்களிலும் பக்தனுக்கு அருள ஓடோடி வருவதில் அவன் - மாதவன்.

இதே போல, அந்த நாராயணன் எட்டு வகையான சயனத் திருக் கோலங்களில் (சிலா ரூபமாய்) பல்வேறு திருத்தலங்களில் வழிபடப்படுகிறார்: அவைகளும் பின்வருமாறு :

• உத்தான சயனம் : திருக் குடந்தை

• தர்ப்ப சயனம் : திருப்புலாணி

• தல சயனம் : மா மல்லபுரம்

• புஜங்க சயனம் : திருவரங்கன், திரு அன்பில், திரு ஆதனூர், திருவள்ளூர், திருக்கரம்பனூர், திருக்கவித்தலம், திருக்கோட்டியூர் , திருக்கோளூர், திருச்சிறுபுலியூர், திருதெற்றியம்பலம், திருப்பார் கடல், திரிப்பிரிதி, திருவட்டாறு, திருவெங்காடு, திருவெள்ளியங்குடி

• போக சயனம் : திரு சித்ர கூடம்

• மாணிக்க சயனம் : திருநீர் மலை

• வடபத்ர சயனம் : ஸ்ரீ வில்லிப்புத்தூர்

• வீரசயணம் : திரு இந்தளூர்

இதுபோல யுகங்கள் தோறும் பகவானுக்கு பல நாமங்கள் உண்டு. அவைகள் பின்வருமாறு :

துவாபர யுகம் - ஸ்ரீ தேவராஜன்

திரேதா யுகம் - ஸ்ரீ ரங்கநாதன்

கிருதயுகம் - ஸ்ரீ ஜெகந்நாதன்

கலியுகம் - ஸ்ரீ வெங்கடேசன்

குறிப்பு :

கலியுகம் பாவங்கள் நிறைந்த யுகம் என்பதை யாரும் மறுக்க முடியாது. பெருகி வரும் துன்பங்களில் இருந்து கோடிக்கணக்கான பக்தர்களை போர்கால அடிப்படையில் ஆட்கொள்ளத்தான் . ஸ்ரீநிவாசனாக, அந்த நாராயணன் நின்றகோலத்தில் உள்ளார். நின்ற கோலத்தில் இருந்தால் தான், பக்தன் அழைக்கும் பொழுது ஓடிச் சென்று உதவ முடியும். மற்ற மூன்று யுகங்களில், கலியுகம் அளவுக்கு பாவங்கள் இல்லை, அதனால் தான் அமர்ந்த கோலத்தில் தேவராஜனாகவும், படுத்த ( சயன) கோலத்தில் ரங்கநாதனாகவும் இருந்து உள்ளார் பகவான் என்பது தாத்பர்யம்.

**

Thursday, 3 October 2019

*ஸ்ரீ கிருஷ்ண கவசம்*


அகரம் முதலே அழியாப் பொருளே
ஆயர் குலமே நேயர் கரமே
இகமும் பரமும் இணையும் இடமே
ஈதல் மரபாம் இதயத் தவமே
உலகக் குடையே உயிரின் கலையே
ஊதும் குழலுள் வேதப் பொருளே
எரியும் கனலில் தெரியும் புனலே
ஏழை மனதில் வாழும் அருளே
ஐயம் தீர்க்கும் அறிவுக் கதிரே
ஐவர் துணையே அன்புச் சிலையே
ஒளியே விழியே உயிரே வழியே
ஓடும் நதியில் பாடும் அலையே
அவ்அவ் வுலகை ஆக்கும் நிலையே
அடியேன் சரணம் சரணம் சரணம்!
அறமே அறமே அறமே அறமே
திறமே திறமே திறமே திறமே
தவமே தவமே தவமே தவமே
வரமே வரமே வரமே வரமே
வேதம் விளையும் வித்தே விளைவே
நாதம் பொழியும் நலமே நிலமே
ஓதும் பொழுதே உடனே வருவாய் உள்ளம் கேட்கும் வெள்ளம் தருவாய்
அறியாக் கவலை அதிகம் அதிகம்
அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம்!
பொய்யா மொழியே பொங்கும் நிலவே
பூமிக் குடையின் காவற் பொருளே
பார்த்தன் பணியும் பாதம் காக்க
பாஞ்ச சன்னியம் பக்தனைக் காக்க
மூடர்கள் தமையும் மோகனன் காக்க
முள்ளில் மலராய் முளைத்தோன் காக்க
வாடும் உயிரை மன்னவன் காக்க
தேடும் விழியைத் திருமால் காக்க
கேலிப் பொருளைக் கிருஷ்ணன் காக்க
கண்ணீர் நதியைக் கண்ணன் காக்க
துன்பம் என்றொரு சுமையைத் தீர்க்க
தூயோன் வருக! துணையே தருக! 
 மாதர் கற்பும் மடவார் நோன்பும்
மாயோன் காக்க மலைப்போல் வருக! தகிடத் தகிடத் தகிடத் தகவென
தறிபடு துன்பம் தறிகெட ஓட
திகிடத் திகிடத் திகிடத் திகிடத்
திசைவரு கவலை பசைஇல தாக!
துருவத் துருவத் துருவத் துருவிடத்
தொலையாப் பொருளே அலையாய் வருக!
நிஷ்கா மத்தில் நிறைவோன் வருக
கர்மசந் யாசக் களமே வருக
ஞானம் யோகம் நல்குவன் வருக
நல்லோர் வாழ்வில் நலமே நிறைக!
அடியேன் துயரம் அதிகம் அதிகம்
அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம்
பொங்கும் வேலும் புண்ணாக் காது
பொருந்தும் துயரம் பொடிபடு மாறு
தாங்கும் தலைவன் தாமரைக் கண்ணன்
தாளில் விழுந்தேன் சரணம் சரணம்
மதுசூ தனனே மனிதன் சரணம்
இருடீ கேசா இயலான் சரணம் !
கீதா சாரிய கிருஷ்ணா சரணம்
வேதா சாரிய வேந்தே சரணம்
தேவகி மைந்தா சிறியேன் சரணம்
யசோத குமரா அடியேன் சரணம்
உன்னை விட்டொரு உறவுக ளில்லை
என்னை விட்டொரு இனியவ ளில்லை
நம்மை விட்டொரு நண்பர்க ளில்லை
நன்மையில் உன்போல் நாயக னில்லை
எங்கெங் கேநான் இருந்திடும் போதும்
அங்கங் கேநீ அருள்செய வருக
கோசலை ஈன்ற குமரா வருக
கோதையின் மாலை கொண்டவன் வருக
ரகுவம் சத்தின் நாயகன் வருக
யதுவம் சத்தின் யாதவன் வருக
மதுவை வென்ற மாதவன் வருக
மலைக்குடி கொண்ட மாலவன் வருக
திருப்பதி யாளும் திருமால் வருக
திருவரங் கத்துப் பெருமாள் வருக
இராவணன் கொடுமை தீர்த்தாய்; துன்பம் 'இரா' வணம் எமக்கும் இன்னருள் புரிக கம்சன் கொடுமை களைந்தோய் வருக
காலனை வெல்லக் கைவலி தருக
நெற்றியில் திருமண் நெஞ்சில் வைரம்
காதில் குண்டலம் கையில் வில்லோடு
தண்டைக் காலில் சலங்கை குலுங்க
அண்டையில் வந்து அருளே புரிக
கௌரவர் தம்மைக் களத்தில் வென்றாய்
கௌரவம் காக்கக் கண்ணன் வருக
பார்த்தன் மகிழப் பாடம் சொன்னாய்
படித்தவன் மகிழப் பரமே வருக
மூன்று குணங்கள் முறையாய்க் கூறிய
சான்றோன் பாதம் தாலி அணைத்தேன்.
சிக்கென உன்னைச் சேர்த்துப் பிடித்தேன்
பக்கென உந்தன் பாதம் பற்றினேன்
கொக்கென நின்று குறிவைத் திருந்தேன்
அக்கணம் வந்தாய் அடியில் விழுந்தேன்
இக்கணம் என்னை ஏங்க விடாமல்
தக்கவ னேநீ தயவுடன் அருள்க!
கல்லாய்ப் போனவள் காலடி பட்டு
பெண்ணாய் ஆனது பிழையே அன்று!
உன்னால் தானே உலக இயக்கம்
கண்ணனி லாமல் கடல்வான் ஏது?
கண்ணனி லாமல் கடவுளு மில்லை
கண்ணனி லாமல் கவிதையு மில்லை
கண்ணனி லாமல் காலமு மில்லை
கண்ணனி லாவிடில் காற்றே இல்லை
எத்தனை பிறவி எத்தனை பிறவி
அத்தனை பிறவியும் அடியேன் கொண்டால்!
சத்திய நாதன் தாள்களை மறவேன்
தத்துவக் கண்ணன் தனிமுகம் மறவேன்
உன்னை நம்பி உனையே சேர்ந்தால்
பிறவிக ளிலை நீபேசிய பேச்சு
உலகில் போதும் ஒருமுறை மூச்சு
உன்னிடம் சேர்த்து உன்வடி வாக்கு
இங்கே நாங்கள் இருக்கும் வரையில்
சங்கு முழங்கு தர்மம் நிலைக்க!
பிள்ளைகள் வாழ்க்கை பிழையா காமல்
மனையவள் வாழ்க்கை மாண்பு கெடாமல்
இல்லை என்றொரு நாளில் லாமல்
இன்னும் என்னும் ஆசை வராமல்
தொல்லை என்பது துளியு மிலாமல்
தொற்றும் நோய்கள் பற்றி விடாமல்
முதுமைத் துயரம் மூண்டு விடாமல்
படுக்கையில் விழுந்து பரிதவிக் காமல்
சிந்தனை கெட்டு திறமையும் கெட்டு
நிந்தனை பெற்று நீங்கி விடாமல்
என்றும் பதினா றிளமை வழங்கு
இப்பணி தொடர அற்புதம் காட்டு
தளரா மேனியில் சக்தியைக் கூட்டு
தாய்போ லிருந்து சாதம் ஊட்டு
வாழ்ந்தால் இப்படி வாழ்வது நன்றென
ஊரார்க் கென்னை உதாரணம் காட்டு! உலகில் ஒருவன் உத்தமன் இவனென
உயிர்கள் பேசிடும் ஒரு நிலை கூட்டு
சிறியவர் பெரியவர் வறியவர் செல்வர்
சரிசரி சரியெனத் தலையை அசைக்க
பொலிபொலி பொலியெனப் புகழும்விளங்க
மளமள மளவென மனையிருள் நீங்க
கலகல கலவெனக் காசுகள் சேர
தளதள தளவெனத் தர்மம் தழைக்க
வரவர வரவர வாய்ப்புகள் வாய்க்க
ரகுபதி பசுபதி நன்மைகள் அருள்க
ஐயா சரணம் சரணம் சரணம்
அடியவன் வாழ்வில் நீயே கவசம்
கவசம் கவசம் கவசம் கவசம்
வந்தது வாழ்வில் மன்னவன் கவசம்
கவசம் கவசம் கவசம் கவசம்
வாழ்க்கை என்றும் கோபுரக் கலசம்!
அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்
அவனே துணையென அறிவோம் அறிவோம்
அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்
அவனிடம் எதையும் தருவோம் தருவோம்
ஜெயஜெய ராமா ஜெயஜெய கிருஷ்ணா
ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய
ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய!!!