Saturday 26 February 2022

திருப்பணி உபயதாரர்கள்

இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலின் பாலாலயம் கண்ணபிரானின் திருவருளாலும்,ஜீயர் ஸ்வாமிகள் ஆச்சாரியர்களின் குருவருளாலும் நன்முறையில் நடைபெற்றது. அதனையொட்டி திருக்கோயில் திருப்பணியின் கைங்கர்யங்களுக்கு மேற்கண்ட உபயதாரர்கள் இசைந்துள்ளனர் என்பதை நன்றியுடனும் மகிழ்வுடனும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இன்னும் நிறைய திருப்பணி களுக்கு உபயதாரர்கள் வரவேற்கப்படுகின்றனர்.

ஸ்ரீ கண்ணன் அறக்கட்டளை, இளங்காடு.
ஸ்ரீ செண்டலங்கார ஜீயர் அறக்கட்டளை, திருவரங்கம்.



ஸ்ரீ கண்ணன் அறக்கட்டளை.

Monday 14 February 2022

உங்களுக்கு தெரியுமா..?


தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்று போட்டிருக்கிறார்களே, அப்படியென்றால் என்ன தெரியுமா…?

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் இரண்டோடு, சமநோக்கு நாள் என்பதும் நடைமுறையில் உள்ளது.
இவை மூன்றும் அன்றைய நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைகின்றன.
ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பதும்( ஊர்த்துவமுக ) நட்சத்திரங்கள் எனப்படுகின்றன.அதாவது, இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்களை மேல்நோக்கு நாட்கள்.
இவை மேல்நோக்கி வளர்கின்ற பயிர்களுக்காக விதைக்கவும், மரங்களை நடுவதற்கும், மேல்நோக்கி எழும் கட்டிடங்கள் , உயரமான மதில் போன்றவற்றைக் கட்ட ஆரம்பிக்க உரிய நாட்கள் ஆகும்.

பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள், ( அதோமுக ) நட்சத்திரங்கள், அதாவது, கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.
இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்கள், கீழ்நோக்கு நாட்கள்.
இந்த நாட்களில் கிணறு வெட்டுதல், புதையல் தேடுதல், சுரங்கப் பணிகளை மேற்கொள்ளுதல், கிழங்கு வகைச் செடி களைப் பயிரிடுதல் முதலான பணிகளைச் செய்வது நல்லது.

அஸ்வினி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பதும் ( த்ரியக்முக ) நட்சத்திரங்கள், அதாவது, சமநோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.
இந்த நட்சத்திரங்கள் இடம் பெறும் நாட்கள், சமநோக்கு நாட்கள்.
இந்த நாட்களில் வாகனங்கள் வாங்குதல், செல்லப் பிராணிகள், பசு, காளை வாங்குதல், சாலை அமைத்தல், வாசக்கால் வைத்தல், வயல் உழுதல் ஆகிய பணிகளைச் செய்வது உத்தமம்.
நீங்களே இந்த நாட்களை தினசரி காலண்டர்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கிழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என்று வார்த்தையில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். அல்லது குறியீடு முறையில் இருக்கும்..!!

பகிர்வு பதிவு

நினைத்ததை நிறைவேற்றும் ‘பஞ்ச நரசிம்ம’ திருத்தலங்கள்.....!!!



நலம் அருளும் ஸ்ரீநரசிம்ம தரிசனம்...!
நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகில், பஞ்ச நரசிம்மர்களும் அருள்பாலிக்கும் க்ஷேத்திரங்கள் உள்ளன. அடுத்தடுத்த ஊர்களில் உள்ள இந்த ஆலயங்களை ஒரே நாளில் தரிசிக்கலாம். ஸ்ரீஉக்கிர நரசிம்மர், ஸ்ரீவீர நரசிம்மர், ஸ்ரீஹிரண்ய நரசிம்மர், ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் என திருக்காட்சி தந்தருளும் பஞ்ச நரசிம்மர்களையும் தரிசிப்போமா?

1.திருக்குறையலூர் ஸ்ரீ உக்கிரநரசிம்மர்

சீர்காழியில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவிலும் திருவெண்காட்டில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலை விலும் உள்ளது திருக்குறையலூர். குறைகளை அகற்றும் ஊர் என்பதே மருவி, திருக்குறையலூர் என்றானது. பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரத்தின் முதல் திருத்தலம் இது. இந்தத் தலத்தின் மூலவர் - ஸ்ரீஉக்கிர நரசிம்மர். ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் காட்சி தரும் இந்தத் தலத்தின் தாயார் - ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார். திருமங்கை ஆழ்வாரின் அவதாரத் தலம் எனப் பெருமை கொண்ட இந்தத் திருத்தலத்தில், அவருக்கும் குலசேகராழ்வாருக்கும் சந்நிதிகள் உள்ளன.

இங்கே... அமாவாசை, சுவாதி நட்சத்திரம், பிரதோஷம் ஆகிய நாட்களில் ஸ்ரீஉக்கிர நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்படுகின்றன. பித்ரு தோஷம் உள்ளவர்கள், அமாவாசை நாளில் இங்கு வந்து நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து இயன்ற அளவு அன்னதானம் செய்து வழிபட்டால், முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெற்று வம்சவிருத்தியுடன் சீரும் சிறப்புமாக வாழ்வர் என்பது ஐதீகம்!

நவக்கிரக தோஷம் கொண்டவர்கள்  நெய்தீபமேற்றி ஏழு அல்லது ஒன்பது வாரங்கள் வழிபட்டு வந்தால் தோஷங்கள் விலகும்!

பஞ்ச பூதங்களில் நெருப்பின் உருவாக ஸ்ரீஉக்கிர நரசிம்மர் காட்சி அருளிய தலம். எனவே, எதிரிகளின் தொல்லை ஒழியும் என்பது ஐதீகம்! நரசிம்ம ஜயந்தி அன்று இங்கு நடைபெறும் ஸ்ரீமகா சுதர்சன யாகத்தில் கலந்து கொண்டு ஸ்வாமியை தரிசித்தால், நீங்காத செல்வம் கிடைக்கப் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்!

2.மங்கைமடம் ஸ்ரீ வீர நரசிம்மர்

மன்னனாக இருந்து ஆழ்வார் எனப் போற்றும் வகையில் திருமங்கை ஆழ்வார் போற்றப்பட்டதற்கு காரணமான திருத்தலம் மங்கைமடம்! சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும் திருவெண்காட்டில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது இந்தத் தலம்.

ஹிரண்யாசுரனுக்கு வரம் அளித்த தோஷத்துக்கு ஆளான சிவபெருமான், மயன் மற்றும் யமன் ஆகியோருக்கு ஸ்ரீமந் நாராயணன் ஸ்ரீநரசிம்மராகத் திருக்காட்சி தந்தருளிய தலம் இது. பஞ்ச நரசிம்ம தலங்களில், இரண்டாவது தலம்!  

இந்தக் கோயிலின் மூலவர் - ஸ்ரீவீர நரசிம்மர். சாளக்ராமக் கல்லால் ஆன அழகுத் திருமேனி. உத்ஸவரின் திருநாமம் - ஸ்ரீரங்கநாதர். தாயார் - ஸ்ரீசெங்கமலவல்லித் தாயார். திருமங்கை ஆழ்வார் குறுநில மன்னனாக இருந்த போது ஸ்ரீவைர நரசிம்மர் எனப் போற்றப்பட்ட இந்த நரசிம்மர், பிறகு வீர நரசிம்மர் என அழைக்கப்பட்டாராம்! தான் விரும்பிய பெண்ணை மணம் முடிப்பதற்காக, ஸ்ரீவீர நரசிம்மரை வணங்கி, அன்னதானம் செய்தார். பஞ்ச பூத தலத்தில், இதனை காற்றுத் தலம் என்பர்.

இங்கேயுள்ள ஸ்ரீசெங்கமல புஷ்கரணி ரொம்பவே விசேஷம்.

ஆடி மாதத்தில் பிரம்மோத்ஸவம் பத்து நாள் விழாவாக, விமரிசையாக நடந்தேறும். ஸ்ரீநரசிம்ம ஜயந்தி நாளில், 1008 கலச பூஜையும் திருவீதியுலா புறப்பாடும் சிறப்புற நடைபெறும்.

விரும்பியபடி மண வாழ்க்கை அமைய வேண்டுவோர், பிரிந்த தம்பதி மீண்டும் சேர வேண்டும் என விரும்புவோர், அரசியலில் வெற்றி பெறத் துடிப்போர், மரண பயத்துடன் தவிப்போர் இங்கேயுள்ள செங்கமல புஷ்கரணியில் நீராடி, ஸ்ரீநரசிம்மருக்கு துளசி மாலை சார்த்தி வில்வத்தால் அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி, வழிபட்டால் விரைவில் நல்லது நடக்கும் என்பது ஐதீகம்!

3. திருநகரி ஸ்ரீயோக நரசிம்மர்  
4. ஸ்ரீஹிரண்ய நரசிம்மர்!  

திருக்குறையலூர் ஸ்ரீஉக்ர நரசிம்மரையும் மங்கைமடம் ஸ்ரீவீர நரசிம்மரையும் வழிபட்டு, அடுத்ததாக, மங்கைமடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள திருநகரி ஸ்ரீயோக நரசிம்மரையும் ஸ்ரீஹிரண்ய நரசிம்மரையும் வழிபடலாம். இந்த இரண்டு நரசிம்ம மூர்த்தங்களும் ஒரே தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சிறப்பு பெற்ற திருத்தலம் இது!

ஹிரண்யனை வதம் செய்த கோலத்தில் காட்சி தரும் ஸ்ரீஹிரண்ய சம்ஹார நரசிம்மரைத் தரிசித்தால் எதிரிகள் தொல்லை முழுவதுமாக அகலும் என்கின்றனர் பக்தர்கள். அடுத்து, யோக நிலையில் உள்ள ஸ்ரீநரசிம்மரை வணங்கித் தொழுதால், மாணவர்கள் கல்வி- கேள்விகள் சிறந்து விளங்குவார்கள்; ஞானத்துடன் திகழ்வார்கள் என்பது ஐதீகம்!

பஞ்ச நரசிம்ம தலத்தில், மூன்றாவது மற்றும் நான்காவது திருத்தலம் எனப் போற்றப்படுகிறது இந்தத் தலம். தவிர, பஞ்ச பூத தலத்தில், இது ஆகாய மற்றும் பூமித் தலம் இது! ஆகாயக் கோலத்தில் ஸ்ரீஹிரண்ய நரசிம்மரும் பூமிக் கோலத்தில் ஸ்ரீயோக நரசிம்மரும் திருமங்கையாழ்வாருக்குத் திருக்காட்சி தந்த அற்புதத் திருவிடமும் கூட! இந்தத் தலத்தின் மூலவர் ஸ்ரீகல்யாண ரங்கநாதர். தாயார் - ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார்.  

திருமங்கையாழ்வார் மற்றும் குலசேகர ஆழ்வார் ஸ்ரீநரசிம்ம மூர்த்தங்களை வணங்கி வழிபட்ட இந்தத் திருத்தலத்தில், திருமணத் தடையால் வருந்துவோர்... மூன்று சனிக்கிழமைகள் இங்கு வந்து மாலை சார்த்தி, நெய் தீபமேற்றி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து ஸ்ரீகல்யாண ரங்கநாதரை வழிபட்டால்... விரைவில்  திருமண பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை!

ஸ்ரீயோக நரசிம்மருக்கு செவ்வரளிப் பூமாலை சார்த்தி, நல்லெண்ணெய் மற்றும் இலுப்பை எண்ணெய் தீபமேற்றி வழிபட்டால், விரைவில் புது வீடு கட்டும் யோகம் உண்டாகும். வியாபாரத் தடைகள் நீங்கும்; எடுத்த காரியங்கள் யாவும் எளிதில் கைகூடும் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்!

ஹிரண்ய நரசிம்மருக்கு நீலநிறப்பூக்கள் சார்த்தி நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டால், குடும்பத்தில் குழப்பங்கள் தீரும். நிம்மதியும் சந்தோஷமும் பொங்க வாழ்வார்கள்.  

பிரதோஷம், சுவாதி நட்சத்திரம் ஆகிய நாட்களில்  ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீஹிரண்ய நரசிம்மர் மற்றும் ஸ்ரீகல்யாண ரங்கநாத பெருமாளை வணங்கினால், வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்!

5. திருவாலி ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்!    

திருவாலித் திருத்தலம், ஸ்ரீலக்ஷ்மியை தன் வலது தொடையில் வைத்தபடி காட்சி தரும் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் கொள்ளை அழகு. பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரத்தின் ஐந்தாவது திருத்தலம் இது!

இந்தத் தலத்தின் நாயகி ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார் மிகுந்த வரப்பிரசாதி. கைகூப்பி வணங்கிய திருக்கோலத்தில் தாயார் காட்சி தருவது விசேஷம். ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மருக்கு தாமரை மற்றும் நறுமணம் கமழும் மலர்களால் மாலையணிவித்து அர்ச்சனை செய்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் யாவும் ஈடேறும்; இல்லத்தில் சுபிட்சம் நிலவும்!

வியாபாரத்தில் முதலீடு செய்பவர்கள், விவசாயம் செழிக்க வேண்டும் என நினைப் பவர்கள், முதலீடு செய்கிற பணத்தையும் விதையையும் ஸ்வாமியின் திருப்பாதத்தில் வைத்து வணங்கினால், தொழில் சிறக்கும்; விவசாயம் தழைக்கும்!

பிரதோஷ நாளில் இங்கு வந்து ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரை வணங்கி, அவருக்கு அபிஷேகம் செய்த எண்ணெய்ப் பிரசாதத்தை தலையில் தேய்த்து நீராடினால், மனோவியாதிகள் அகலும்; மனோபலம் கூடும்!

 சீர்காழிக்கு வந்து, பஞ்ச நரசிம்மர்களையும் வணங்கி வழிபடுங்கள்; வளம் பெறுங்கள்!