Wednesday 24 August 2022

💥பிள்ளை லோகாச்சர்யர் -இவர் மொத்தம் 18 கிரந்தங்களை இயற்றியவர்.💥


🌹 இவர் உண்மையில் காஞ்சி தேவபெருமாளின் அவதாரம்.

🌹 பிள்ளை லோகாச்ரயரின் தகப்பனார் வடக்கு திருவீதிப்பிள்ளை. இவர் நம்பிள்ளையின் சீடர்.

🌹 பிள்ளை லோகாச்சர்யர் அவதார வருஷம் 1205 AD

🌹 மோக்ஷ ப்ராப்தி அடைந்த வருஷம் 1311 AD

🌹 பிள்ளை லோகாச்ரயரின் அவதார ரகசியம் :

🌹 காஞ்சி தேவபெருமாள் ஒரு சமயம் மணர்பாக்கம் நம்பி என்றவரின் கனவில் தோன்றி சில முக்கியமான, உயர்ந்த ரகஸ்யங்களை அருளிவிட்டு சென்றதாவகவும், 

🌹 ஸ்ரீரங்கன் போய் வசிக்க வேண்டும் என்றும், பின்னொருநாள் தானே வந்து மேலும் சில அர்த்தங்களை விளக்குவதாகவும் கூறி விட்டு மறைந்தார்.

🌹 மணர்பாக்கம் நம்பியும் ஸ்ரீரங்கம் வந்தடைந்து ஒரு சிறு கோவிலை நிர்மாணித்து வழிபட்டு வந்தரர். ஒரு நாள், அந்த சிறு கோவிலுக்கு பிள்ளை லோகாச்சர்யர் தமது சிஷ்யர்களுடன் வழிபட வந்தார்.

🌹 அப்பொழுது, பிள்ளை லோகாசார்யர் தமது சிஷ்யர்களுக்கு உபதேசித்த சில ரஹஸ்யங்கள், மணர்பாக்கம் நம்பிகளின் காதில் விழுந்தன.

🌹 இதுதான் காஞ்சி தேவப்பெருமாள் தனக்கு உபதேசித்த விஷயங்கள் என்று தெரிந்துகொண்டார்.

🌹 உடனே அவர் பிள்ளை லோகாச்சரயரிடம், "அவரோ நீர்?" என்று கேட்டார். பிள்ளை லோகாசார்யரும் "ஆம்" என்று விடையளித்தார். 

🌹 அன்று முதல், மணர்பாக்கம் நம்பிகள் பிள்ளை லோகாசார்யரின் சீடர்ஆனார். 

🌹 பின்னொரு சமயம், முகமதியர்கள் ஸ்ரீரங்கம் கோவிலை கொள்ளையடிக்க வந்தனர். 

🌹 இதை கேள்விப்பட்ட பிள்ளை லோகாசார்யர், ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளின் சந்நிதியை செங்கல் சுவர் கட்டி மறைத்துவிட்டு, வேறு ஒரு விக்ரஹத்தை, சுவரின் முன்னே வைத்துவிட்டு, 

🌹 நம்பெருமாளின் (உற்சவர்) விக்ரஹத்தை தூக்கிக்கொண்டு காட்டு வழியே தன சிஷ்யர்களுடன் ஓடினார்.

🌹 விழியில் திருடர்களிடம் அகப்பட்டுக்கொண்டு, நம்பெருமாளின் ஆபரணங்கள் அனைத்தையும் பறிகொடுத்தார். 

🌹 அதிர்ஷ்டவசமாக திருடர்கள் நம்பெருமாளை மட்டும் பிள்ளை லோகாசார்யரிடமே விட்டுவிட்டு சென்றார்கள்.

🌹 பின், அவர், தன சிஷ்யர்களுடனும், நம்பெருமாளின் விகரஹத்துடனும், ஜ்யோதிஷ்குடி என்ற கிராமத்தை அடைந்து, உடல் நலம் குன்றியதால், அங்கேயே மோக்ஷம்அடைந்தார்.

💥 பிள்ளை லோகாசார்யரின் படைப்புகள்

🌹 முமுக்ஷுப்படி
🌹 யாத்ருச்சிகப்படி
🌹 ஸ்ரியப்பதிப்படி
பரந்தபடி
🌹 தனி சரமம்
🌹 தனி த்வயம்
🌹 தனி பிரணவம்
🌹 ஸ்ரீ வசன பூஷணம்
🌹 அர்த்த பஞ்சகம்
🌹 தத்வ சேகரம்
🌹 தத்வ த்ரயம்
🌹 அர்ச்சிராதி
🌹 பிரமேய சேகரம் -வியாக்யானம்
🌹 நவவித சம்பந்தம்
🌹 பிரபன்ன பரித்ரணம் - வியாக்யானம்
🌹 சாரா சங்க்ரகம்
🌹 நவரத்ன மாலை- வியாக்யானம்
🌹 சம்சார சாம்ராஜ்யம்
🌹 கத்யத்ரேய வியாக்யானம்

🌹 ஆச்சாரியர் திருவடிகளே சரணம் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ🌹

கிருஷ்ணர் வணங்கும் ஆறுபேர் யார்



நாம் எல்லோரும் கிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறோம். ஆனால் கிருஷ்ணரும் யார் யார் யாரையோ கும்பிடுகிறார். வியப்பாக இருக்கிறது அல்லவா? கள்ளக் கிருஷ்ணனின் இந்த ரகசிய செயலைக் கண்டு பிடித்தது வேறு யாரும் இல்லை. கிருஷ்ணனின் மனைவி ருக்மிணிதான் இதைக் கண்டுபிடித்தார்.
ஒரு நாள் கிருஷ்ணரும் வழிபாடு செய்வதைப் பார்த்துவிட்டு, “அன்பரே! நீர் யாரையோ வணங்குவது போலத் தெரிகிறது. அவர்கள் யார்? என்று கேட்டாள்.

கிருஷ்ணர் கொஞ்சமும் தயங்காமல் பதில் சொன்னார்:

*நித்யான்ன தாதா, தருணாக்னிஹோத்ரி, வேதாந்தவித், சந்திர சஹஸ்ர தர்சீ, மாஸோபாவாசீச, பதிவ்ரதா ச ஷட் வந்தனீயா மம ஜீவ லோகே*

*பொருள்: இந்த மனிதர்கள் வாழும் பூமியில் நான் ஆறு வகையான மக்களை வணங்குகிறேன்:*

தினமும் *1.அன்னதானம் செய்வோர்,*

*2.தினமும் அக்னிஹோத்ரம் செய்வோர்,*

*3.வேதாந்தம் அறிந்தவர்கள்,*

*4.சஹஸ்ர சந்திர தரிசனம் செய்து சதாபிஷேகம் செய்துகொண்டோர்,*

*5.மாதா மாதம் உபவாசம் இருப்போர்,*

*6.பதிவ்ரதையான பெண்கள்.*🙏🙏🙏🙏🙏🙏

அவர் சுருக்கமாகச் சொல்லி முடித்தாலும், பெரியோர்கள் இதற்குச் சொல்லும் விளக்கத்தை நாம் அறிந்தால்தான் அந்த ஆறு வகையான மக்களின் முழுப் பெருமையையும் நாம் அறிவோம்:

*(1).நித்ய அன்ன தாதா:* 

*அந்தக் காலத்தில் ஒருவருக்குக் கிடைக்கும் வருமானத்தில் அல்லது நிலத்தில் அறுவடையாகும் விளைச்சலில் ஆறில் ஒரு பகுதியை மன்னருக்குக் கொடுத்து விட வேண்டும். மீதி ஐந்து பகுதிகளை அவர் ஐந்து பேரைப் பாதுகாக்கப் (பஞ்ச யக்ஞத்துக்கு) பயன்படுத்தவேண்டும்.* திருவள்ளுவரும் கூட:-

தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்று ஆங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை (43)

பொருள்: இறந்து போய் தென் திசையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் முன்னோர்கள், கடவுள், வீட்டிற்கு வரும் விருந்தாளிகள், சுற்றத்தார் (இதில் நாம் வளர்க்கும் பசு முதலிய பிராணிகளும், வீட்டில் ஊர்ந்து செல்லும் எறும்புகளும் அடங்கும்), தனது குடும்பம் என்ற ஐந்து பேரையும் போற்றுவது இல்வாழ்வானின் தலையாய கடமை.

மனு ஸ்மிருதியில் 3-72 –ல் மனு சொன்னதை வள்ளுவரும் சொல்லி இருக்கிறார். ஆகவே இமயம் முதல் குமரி வரை ஒரே கொள்கை இருந்திருகிறது. விருந்தாளிகளுக்குச் சாப்பாடு போட்டவுடன் தான் வீட்டிலுள்ளோர் சாப்பிட வேண்டும்.

*அதிதி தேவோ பவ:* (விருந்தாளி என்பவன் இறைவனுக்குச் சமம்) – என்று வேதம் கூறுகிறது.

அந்தக்காலத்தில் தான் உண்பதற்கு முன்னால் வாசல் திண்ணையில் சிறிது நேரம் உட்கார்ந்து யாரேனும் விருந்தாளிகள் அல்லது வழிப்போக்கன் வருகிறார்களா என்று பார்த்துவிட்டே உணவருந்த செல்வார்கள்.

தர்மர் நடத்திய ராஜ சூய யாகத்தில் புகுந்து பரபரப்பை உண்டாக்கிய கீரி சொன்ன கதை எல்லோருக்கும் தெரியும். இப்படி தினமும் அன்னதானம் செய்வோர், இது தவிர அன்னக்கொடி ஏற்றி ஆயிரக்கணக்கானோருக்கு அன்னம் இடுவோர் ஆகியோரை க்ருஷ்ணன் வணங்குகிறார். இவர்கள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் அன்னம் இடுகிறார்கள்!!

*(2).தருண அக்னிஹோத்ரி:* அந்தக் காலத்தில் ஏழு வயதில் பூணூல் போட்டவுடன் பிராமணச் சிறுவர்கள் சமிதாதானம் என்று தினமும் அக்னி வளர்த்து சமித்துக்களை நெய்யுடன் அக்னியில் ஆகுதி கொடுப்பார்கள். குருகுலம் முடித்து வீட்டுக்கு வந்தவுடன் இளைய பருவத்திலேயே திருமணமும் நடந்துவிடும். பின்னர் அவர்கள் தினமும் ஔபாசனம் என்ற அக்னி காரியத்தைச் செய்து வருவர். இதை தவிர அக்னிஹோத்ரம் என்ற அக்னி காரியம் சூரியனை உத்தேசித்து சரியாக சூரியன் உதிக்கும் காலத்திலும் அஸ்தமனம் ஆகும் காலத்திலும் நடத்த வேண்டும். இதை எல்லோரும் செய்துவிட முடியாது. 

*தனது தந்தை ஒரு அக்னிஹோத்ரியாக இருந்தால் மட்டுமே தானும் அக்னிஹோத்ரம் செய்யமுடியும்.* இவர்கள் காணக்கிடைப்பது அபூர்வம். இப்படித் தவறாமல் செய்துவரு வோரை கிருஷ்ணனே வணங்குகிறார் நாம் வணங்கத் தயக்கம் உண்டோ!

*(3).வேதாந்த வித்:-* வேதங்கள் நான்கு. அதன் முடிவில் இருப்பது உபநிஷத் (வேத+ அந்தம்/முடிவு). அதை உணர்ந்தவர்கள் வேதாந்திகள். அஹம் பிரம்மாஸ்மி, தத்வம் அஸி போன்ற ஞான உணர்வு படைத்தவர்கள். வேதாந்தத்தில் நாட்டம் ஏற்பட வேண்டும் என்றால் பலகோடி ஜென்மங்களில் புனியம் செய்து இருக்க வேண்டும். உலக விஷயங்களை துறந்து வேதாந்த விஷயங்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்து வேதாந்த சிந்தனையிலேயே வாழ்வை கழிப்பவன் வேதாந்த வித். 
அந்த வேதாந்திகளையும் கிருஷ்ணன் வணங்குகிறார்! இவர்களும் காணக்கிடைப்பது அபூர்வம்.

*(4).ஆயிரம் பிறை கண்ட அபூர்வ சிகாமணி:* சிவனுடைய தலையில் இருப்பது மூன்றாம் பிறைச் சந்திரன். அதை மாதம் தோறும் அமாவாசைக்குப் பின்னர் மூன்றாம் நாளில் காணலாம். அடுத்த முறை காண 29 நாட்கள் காத்திருக்க வேண்டும் 
*இப்படி ஆயிரம் முறை காண 81 ஆண்டுகள் பிடிக்கும்.* *அப்பொழுது அவர்கள் சதாபிஷேகம் செய்து கொள்வார்கள்.* 
*அத்தகையோரையும் கண்ணபிரான் வணங்குவார்.*🙏🙏 இந்த பிறைச் சந்திரனைக் காணும் வழக்கத்தை ஏனைய மதத்தினரும் நம்மிடமிருந்து கற்றனர்.

ஒருவர் ஆயிரம் முறை சந்திரனைக் காணவேண்டுமானால் ஆயிரம் தடவை சிவனை நினைத்திருக்க வேண்டும். அடடா! மேகம் மறைக்கிறதே. இன்னும் சந்திரனைக் காணவில் லையே என்று ஏங்கி சிவனை நினைத்து நிற்பர். இன்னும் பலர் அவர்களது இஷ்ட தெய்வத்தையும் குல தெய்வத்தையும் வேண்டிக் காத்திருப்பர். ஆகையால்தான் கிருஷ்ணன் அவ்வளவு மதிப்பு தருகிறான்.

*(5) மாத உபவாசி:* 
*மாதம் தோறும் இரண்டு ஏகாதசிகளிலும் உபவாசம் – உண்ணா நோன்பு—கடைப் பிடிக்க வேண்டும். அதையும் ஒழுங்காகக் கடைப்பிடிக்க வேண்டும். சுத்த உபவாசம் என்பது நிர்ஜலமாக (தண்ணீர் கூட பருகாமல்) அல்லது தண்ணீர் மட்டுமே பருகி உபவாசம் இருப்பது. இப்படி இருப்போர் கண்ணனால் வணங்கப் படுவர். இது எளிதல்ல.இப்படி இருப்போர் மிகமிகக் குறைவு. அவர்களை நாமும் வணங்குவோம்.*👏

(6)இறுதியாக கண்ணன் கை எடுத்துக் கும்பிடுவது யாரை என்றால் *பதிவ்ரதா விரதம் அனுசரிக்கும் கற்புக்கரசிகளை!!* உலகில் வேறு எங்கும் இல்லாத ஒரு அணுகு முறை இந்து மதத்தில் மட்டும் உண்டு. சாத்திரத்தில் சொல்லபட்ட எல்லா விஷயங்களையும் மூன்று வகையில் அனுஷ்டிக்க வேண்டும். தமிழ் மொழியில் இதற்கு முன்று அற்புதமான சொற்களை படைத்து வைத்துள்ளனர்: *உண்மை,வாய்மை, மெய்மை (மனோ, வாக், காயம்).* இந்த மூன்று உறுப்புகளாலும் வேறு ஒரு ஆடவனையும் நினையாது கனவனை மட்டுமே தெய்வம் போலக் கருதுபவர் “பெய் எனப் பெய்யும் மழை” — என்பான் பொய்யா மொழிப் புலவன் வள்ளுவன் (குறள் 55).

அட! இப்படிப் பத்து கற்புக்கரசிகளைக் கண்டுபிடித்து வறண்ட பகுதிகளில் எல்லாம் மழை பொழியச் செய்துவிடலாமே! அவர்களுக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் போட்டுவிடலாமே என்று சிலர் நினைக்கலாம். இதன் தாத்பர்யம் என்னவென்றால் அவர்களிடம் அவ்வளவு மகத்தான சக்தி இருக்கிறது. ஆனால் அவர்கள் எளிதில் அதைப் 
பிரயோகிக்க மாட்டார்கள்.

அசோகவனத்தில் சீதையைக் கண்ட அனுமன் கெஞ்சுகிறான்: தாயே உங்களைக் காணாமல் ராமன் தவிக்கிறான். என் முதுகில்/ தோளில் ஏறி அமருங்கள். அடுத்த நிமிடம் இராமனிடம் சேர்ப்பிக்கிறேன் என்று. சீதை சிரிக்கிறாள். என் கற்பின் ஆற்றலால் ஈரேழு புவனங்களையும் எரிக்கும் ஆற்றல் எனக்கு உண்டு. ஆயினும் கணவனின் வில் ஆற்றலுக்கு இழுக்கு உண்டாக்கும் எதையும் செய்ய மாட்டேன் என்கிறாள்.

நமக்கும் தெரியும் ராவணன் வதம் — என்பதே இராமாவதாரத்தின் நோக்கம் என்று.

உலகில் ஏழு நாடுகளிடம் அணுகுண்டு உள்ளது. எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண அணுகுண்டைப் பிரயோகிக்கிறார்களா? இல்லையே. இது போல பெண்களிடம் உள்ள மகத்தான ஆற்றலை அவர்கள் அரிதே பயன்படுத்துவர்.

அந்தக் காலத்தில் எல்லா பெண்களும் திரிகரண சுத்தியுள்ள (சொல், செயல், சிந்தனை = மனோ வாக், காயம்) கற்புக்கரசிகளாக இருந்தார்கள். இதனால்தான் மனு சொன்னார்:

*எங்கு பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ, அங்கு தெய்வம் வாழும்.*

*எங்கு பெண்கள் மதிக்கப்பட வில்லையோ அங்கு என்ன நல்லது செய்தாலும் அதற்குப் பலன் இல்லை* (மனு 3-56)

*மரியாதைக் குறைவாக நடத்தப்பட்ட பெண்கள் சாபம் இட்டால் அந்தக் குடும்பங்கள் அடியோடு அழிந்து போகும் (மனு 3-59)*

தந்தைமார்கள், கணவன்மார்கள், மைத்துனன்கள், சகோதர்கள் ஆகியோருக்கு அதிர்ஷ்டம் அடிக்க வேண்டுமானால் பெண்களை மதிப்போடு நடத்துங்கள். அவர்களை ஆடை அணிகலன்களால் அலங்கரியுங்கள் (மனு ஸ்மிருதி ஸ்லோகம் 3-55).

இப்படியெல்லாம் பாரட்டப்பட்ட பதிவிரதைகளை கண்ணன் வழிபடுவதில் 
வியப்பேதும் உண்டோ? 

*கணவனை தெய்வமாக நினைக்கும் பெண் இந்த காலத்தில் அபூர்வம் என்று சொல்லவா வேண்டும்?*

*கண்ணன் வணங்கும் ஆறுவகை மக்களை எங்கெங்கெலாம் நீங்கள் காணுகிறீர்களோ அங்கெங்கெல்லாம் நிலத்தில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கும்பிடுங்கள்!!* உங்களுக்கும்
சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.👏👏👏👏👏👏

ஸ்ரீராமஜயம்.

Tuesday 23 August 2022

நாமமே பலம் நாமமே சாதனம்

ஹரி நாமம்
திருதிராஷ்டிரன் ” நீ இன்னும் ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ணரின் ஸ்வரூபத்தையும் அவருடைய பெயர்களின் ரகசியத்தையும் எனக்கு கூறு என்று கேட்டுக் கொண்டார்.
சஞ்சயன் “நான் மாமுனிவர்களின் வாய் மூலம் ஸ்ரீ கிருஷ்ணரின் பல பெயர்களின் காரணத்தை கேட்டிருக்கிறேன். அவற்றில் எனக்கு நினைவிலிருப்பதைக் கூறுகிறேன், அந்த அனந்தனுடைய பெயர்களும் அனந்தம்(எண்ணற்ற ) உண்மையில் எந்த ப்ரமானத்திர்க்குமான விஷயமல்ல.

“தேவர்களுக்கும் கூட பிறப்பிடமானவராகவும், எல்லாவற்றையும் தன் மாயையினால் மறைத்து விடுவதாலும் அவர் வாசுதேவன் ஆவார்.

எங்கும் நிறைந்த பரம் பொருளாய், பெரியவராய் இருப்பதால் அவரை விஷ்ணு என்று கூறுகிறார்கள்.

மௌன – தியானத்தாலும் யோகத்தாலும் அடையத் தக்க காரணத்தால் அவர் மாதவன் என அழைக்கப் படுகிறார்.

மதுவென்னும் அரக்கனை வதைத்த காரணத்தால் அவருக்கு மதுசூதனன் என்னும் பெயர் வழங்கப்படுகிறது.

க்ருஷ எனும் வினைச் சொல்லின் மூல உருவத்தின் பொருள் இருப்பு என்பதாகும் ‘ண’ ஆனந்தத்தைக் குறிக்கும் சொல். ஆனந்தத்திற்கு இருப்பிடமான காரணத்தால் அவர் யது குலத்தில் அவதரித்த பிரபு கிருஷ்ணனன் ஆவார்.

இதய புண்டரீகமே அவரது நித்யதாம வாசஸ்தலம். ஆகவே அவர் புண்டரிகாஷன்.

துஷ்டர்களை அடக்குவதால் அவர் ஜனார்தனன்.

சத்வ குணத்திலிருந்து அவர் ஒருபோதும் வழுவாதிருப்பதால் அவர் சாத்வதன் ஆவார்.

ஆர்ஷ உபநிஷத்துக்களின் மூலம் ஒளி விட்டு பிரகாசிப்பதன் மூலம் அவர் ஆர்ஷபர் ஆவார்.

வேதங்களே அவரது கண்கள், ஆகவே வ்ருஷபேஷனர் என அழைக்கப் படுகிறார்.

எந்த பிறப்புள்ள பிராணிகளிடமிருந்தும் தோன்றாததால் அவர் அஜர்!

வயிறு முதலான எல்லா இந்த்ரியங்களையும் ஒளி பெறச் செய்பவரும் (பெருமையுடைய ) அவற்றை அடக்குபவருமாதலால் அவரது பெயர் தாமோதரன் என்பதாகும்

வ்ருத்தி சுகமும், ஸ்வரூப சுகமும் ஹ்ருஷீக என பெயர் பெறும். இவற்றின் தலைவனாதலால் அவர் ஹ்ருஷிகேசன் என்று கூற படுகிறார்

தன் புஜங்களாலேயே புவி, ஆகாயம் எல்லாவற்றையும் தரிப்பதால் அவர் மஹாபாஹூ ஆவார்அவர் ஒருபோதும் (அதோ)கீழே இருப்பதில்லை ஆகவே அதோக்ஷஜன் ஆவார்

நரர்களின் அயன ஆச்ரயமாதலால் நாராயணன் ஆகிறார்.

எல்லாவற்றிலும் நிறைந்து எல்லாவற்றிற்கும் புகலிடமாய் உள்ளவரை புருஷன் என்கிறோம். அந்த புருஷனைக் காட்டிலும் சிறந்தவராதலால் அவரது பெயர் புருஷோத்தமன் ஆகும்.

சத் அசத் எல்லாவற்றின் தோன்றல், மீண்டும் லயத்துக்கு இடமான காரணத்தால் அவரே சர்வமும்.

ஸ்ரீ கிருஷ்ணன் சத்தியத்தில் நிலை பெற்றும், சத்யம் அவரில் நிலை பெற்றிருப்பதால் அவரே சத்யர்

உலகில் பரவியிருந்து ஒழுங்கை நிலை நாட்டுவதால் அவரே விஷ்ணு

எல்லோரையும் வெல்வதால் விஷ்ணு

நித்யமாயிருப்பதால் அனந்தன்

“கோ” அதாவது இந்த்ரியங்களை அறிந்தவராதலால் கோவிந்தன்

பீஷ்மர் சொல்லிய நாமங்களோ ஆயிரம்

ராம என்ற இரண்டழுத்தினால் இன்னலும் துன்பமும் பாபங்களும் சிதைந்து ஒழியும் என்கிறான் கம்பன்

பிரகலாதநோ “பகவானின் திருநாமத்திற்கு எத்தனை பாவங்களை போக்கக்கூடிய சக்தி உண்டோ, அத்தனை பாவங்களை நம்மால் செய்ய முடியவில்லை” என்று குறிப்பிட்டான்.

அப்பேர்பட்ட பகவானின் திருநாமங்களை ஜபித்து நாம் நற்கதியை அடைவோமாக.

இயன்ற வரையில் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொண்டே இறைவன் திருநாமத்தை ஜபம் செய்யவேண்டும். நாம ஜபம் கடவுள் சிந்தனையை உள்ளத்தில் தோற்றுவிப்பதற்கு மிகவும் சிறந்த எளிய ஒரு வழியாகும்.

இறைவனும் இறைவனின் திருநாமமும் ஒன்றேயாகும். அவை இணை பிரியாதவை, தனி தனியே பிரிக்க இயலாதவை.

நாம ஜபம் நம் வாழ்வில் அன்றாட வழக்கமாகட்டும்.

நாமமே பலம் நாமமே சாதனம்

ராம கிருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி.