Tuesday 17 July 2018

விரதம்

*இந்து சமயத்தில் பின்பற்றப்படும் விரதங்கள்*
 
இந்து சமயத்தில் என்னென்ன விரதங்களெல்லாம் பின்பற்றப்படுகின்றன என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோமா...

*1. விநாயக விரதம்*

வைகாசி மாதத்துச் சுக்ல பட்சத்து முதற் சுக்கிர வாரந் தொடங்கிச் சுக்ர வாரந் தோறும் விநாயகமூர்த்தியை எண்ணி விரதமிருப்பது.

*2. விநாயக சஷ்டி விரதம்*

இது கார்த்திகை மாதத்துக் கிருட்டிண பட்சப் பிரதமை முதல் மார்கழி மாதத்துச் சுக்ல பட்ச ஷஸ்டி ஈறாகிய 21 நாள்களும் விநாயகரை எண்ணி அநுட்டிக்கும் விரதமாம்.

இதில் 21 இழைகளாலாகிய காப்பு நாணினை ஆண்கள், பெண்கள் முறையே வல, இடக்கரங்களில் அணிந்து விரத சமாப்தியில் தட்சிணாதிகள் கொடுத்துப் போஜனாதிகள் அருந்த வேண்டும்.

*3. கல்யாணசுந்தர விரதம்*

இது பங்குனி மாதத்து உத்திர நட்சத்திரத்து அநுஷ்டிக்கும் சிவ விரதம்.

*4. சுக்ல விரதம்*

இது தை மாசத்தில் அமாவாசையில் சிவாஸ்திரமாகிய திரிசூலத்தைப் பொன்னால் அல்லது வெள்ளியினால் செய்து சிவமூர்த்திப் பிரதிமையில் சாத்தி ஆராதித்து விரதமிருப்பது.

*5. இடப விரதம்*

வைகாசி மாதத்தில் சுக்ல பட்ச அஷ்டமியில் இடபாரூடராகிய சிவமூர்த்தியை எண்ணி விரதமிருப்பது.

*6. தேவி விரதம் - சுக்கிர வார விரதம்*

இது சித்திரை மாதத்துச் சுக்ல பட்சத்துச் சுக்கிர வாரம் முதல் பார்வதிப் பிராட்டியாரை எண்ணி விரதம் நோற்பது. இதில் சருக்கரை நிவேதனம் செய்தல் வேண்டும். இது சுக்ரகரன் அனுட்டித்தத் தினம்.

*7. ஐப்பசி உத்திர விரதம்*

ஐப்பசி மாதத்து உத்திர நட்சத்திரத்தில் பார்வதி தேவியாரை எண்ணி நோற்பது.

*8. நவராத்திரி விரதம்*

திதி விரதத்தில் கூறினோம். ஆண்டுக் காண்க.

*9. கந்த சுக்ர வார விரதம்*

ஐப்பசி முதற் சுக்கிர வாரந் தொடங்கி பிரதி சுக்கிர வாரந் தோறும் கந்தமூர்த்தியை எண்ணி அநுட்டிக்கும் விரதமாம்.

*10. கிருத்திகை விரதம்*

இது கார்த்திகை மாதத்துக் கிருத்திகை நட்சத்திர முதல் கிருத்திகை தோறும் கந்தமூர்த்தியை எண்ணி அநுட்டிக்கும் விரதம். இதில் உபவாசம் உத்தமம்.

*11. கந்த சஷ்டி விரதம்*

ஐப்பசி மாதம் சுக்ல பட்சப் பிரதமை முதல் சஷ்டி ஈறாகிய ஆறு நாளும் பலாதிகள் மிளகு முதலியன உண்டு விரதமிருப்பது உத்தமம். கூடாதவர் ஒரு போதுணவு கொண்டு சஷ்டியில் உபவாசமிருப்பது நலம்.

*12. வைரவ விரதம் - மங்கல வார விரதம்*

தை மாதத்து முதல் செவ்வாய்க்கிழமை முதல் பிரதி செவ்வாய்க்கிழமையிலும் அநுட்டிக்கும் விரதம்.

*13. சித்திரைப் பரணி விரதம்*

இது சித்திரை மாதம் பரணியில் நட்சத்திரத்தில் வைரவமூர்த்தியை எண்ணி அநுட்டிப்பது.

*14. ஐப்பசிப் பரணி விரதம்*

ஐப்பசி மாதம் பரணியில் வைரவக்கடவுளை எண்ணி அநுட்டிப்பது.

*15. வீரபத்திர விரதம்*

செவ்வாய்க் கிழமை தோறும் வீரபத்திரக் கடவுளை எண்ணிச் செய்யும் விரதமாம்.

*16. நட்சத்த்திர புருஷ விரதம்*

சித்திரை மாதம் சோம வாரங் கூடிய மூல நட்சத்திரத்தில் பொன்மயமான லட்சுமி நாராயண விக்கிரகங்களை ஸ்தாபித்துப் பூஜா தானங்கள் செய்தவர்கள் இஷ்ட சித்திகளை அடைந்து விஷ்ணுலோகம் அடைவர். இது நாரதனுக்கு ருத்திரர் சொன்னது.

*17. ஆதித்தியசயன விரதம்*

அஸ்த நட்சத்த்திரங் கூடிய சப்தமியிலாயினும் ஆதி வாரம் அஸ்த நட்சத்திரங் கூடிய சங்கிர மணத்திலேனும் உமா மகேச்வர விக்ரகத்தைச் சூர்ரிய நாமங்களால் விதிப்படி பூசித்துத் தானாதிகளைச் செய்யின் தங்கள் பிதுர்க்களுடன் சிவலோகத்தை அடைவர். இதுவும் நாரதருக்கு ருத்திரர் சொன்னது.

*18. கிருஷ்ணாஷ்டமி விரதம்*

மார்க்கசீரிஷ மாதம் முதல் 12 மாதத்தில் 12 கிருஷ்ணபட்ச அஷ்டமியில் சங்கரன் முதலியவர்களை விதிப்பிரகாரம் பூசித்துத் தானாதிகளைக் கொடுத்தால் முத்தி அடைவர். இதுவும் நாரதருக்கு ருத்திரர் சொன்னது.

*19. ரோகணி சந்திரசேகர விரதம்*

சோம வாரமாயினும், மிருகசீரிட நட்சத்திரமாயினும் வந்த பூர்ணிமையில் சிவமூர்த்தியை விதிப்படி பூசித்து, விதிப்படி தானாதிகளைத் தரின் முத்தியடைவர். இதுவும் நாரதருக்கு ருத்திரர் சொன்னது.

*20. சௌபாக்கியசயன விரதம்*

சித்திரை மாதம் சுத்ததிரியைப் பூர்வான்னத்தில் உமாமகேச்வர விக்ரகங்களுக்குத் திருக்கல்யாணம் செய்வித்து விதிப்படி பூஜாதானங்களைச் செய்யின் சிவலோகம் அடைவர். இது மச்சமூர்த்தி மநுவுக்குச் சொன்னது.

*21. அனந்த திரிதியா விரதம்*

சிராவண சுத்த திருதியை முதல் 12 திதிகள். இந்த விரதத்தை அநுசரித்துக் கௌரியை விதிப்பிரகாரம் பூஜித்துத் தானாதிகளைச் செய்யின் சிவலோகம் அடைவர். இது பார்வதிக்குச் சிவன் சொன்னது.

*22. ரஸகல்யாண திரிதியா விரதம்*

மாசி மாதம் சுத்த திரிதியை முதல் ஆரம்பித்துக் கௌரியை விதிப்படி பூஜிப்பின் சத்தியுலகம் அடைவர். இது பார்வதிக்குச் சிவன் சொன்னது.

*23. ஆர்த்தானந்த திரிதியா விரதம்*

உத்திராடம், பூராடம், மிருகசீரிடம், அஸ்தம், மூலம், இவற்றுள் எதிலாயினும் வரும் சுக்கில பட்சத் திரிதியையில் ஆரம்பித்து உமாமகேச்வர கல்ப பிரகாரம் பூசிக்கத் தேவி உலகம் அடைவர். இது பார்வதிக்குச் சிவன் சொன்னது.

*24.அட்சய திரிதியா விரதம்*

வைசாக சுத்த திரிதியையில் ஆரம்பிக்க வேண்டும். இதை அனுசரித்தவர்கள் ராஜசூரிய பலத்துடன் புண்ணியலோகத்தை அடைவர். இது பார்வதிக்குச் சிவன் சொன்னது.

*25. சாரஸ்வத விரதம்*

இந்த விரதம் தாராபல சந்திர பல யுக்தமான ஆதி வாரத்தில் ஆயினும், தான் ஏதேனும் விரதத்தைச் செய்யப் புகுந்த சுப தினத்திலாயினும் ஆரம்பிக்க வேண்டும். இதை 13 மாதம் செய்ய வேண்டியது. இதில் சரஸ்தி பூசிக்கப்படுவள். இதனை அபுசரிப்பவர்கள் வித்தியாபி விருத்தியும் பிரமலோக பிராப்தியும் அடைவர். இது மச்சனால் மநுவுக்குச் சொல்லப்பட்டது.

Monday 16 July 2018

கோவிந்தா

பெருமாள் பக்தர் ஒருவர் அதிகாலை நீராடி, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி பெருமாளைத் தரிசிப்பார். ஆனாலும், ஏதோ ஒரு குறையை உணர்ந்தார்.

ஒரு குருவிடம் சென்று, ""குருவே! பெருமாளின் கருணையால் செல்வத்திற்கு குறையில்லை. இருந்தாலும், மனதில் குறை இருப்பதை உணர்கிறேன்'' என்றார்.

குரு அங்கிருந்த ஒரு பக்தனை அழைத்து,""தம்பி! உன் குடும்பம் நலமா? ஏதேனும் உனக்கு குறை இருக்கிறதா?'' என்று கேட்டார்.

அந்த நபரோ, ""பெருமாளின் மகாமந்திரத்தைச் சொல்லும் எனக்கு ஏது குறை...?''என்றார்.

உடனே பெருமாள் பக்தர் ஆச்சரியத்துடன், ""எனக்கு அந்த மந்திரம் தெரியாதே! அதைச் சொல்லேன்!'' என்றார்.
வந்தவர்,""கோவிந்தா! கோவிந்தா!'' என்றார்.

பக்திமான் ஏமாற்றத்துடன்,""இது தானா! நான் தினமும் விஷ்ணு சகஸ்ரநாமமமே சொல்கிறேன். அதை விடவா இது பெரிது?'' என்றார்.
குரு அவரிடம்,""நீ தவறாக நினைக்கிறாய். ஆயிரம் பெயர்களால் விஷ்ணுவை வணங்குவதே சகஸ்ரநாமம். இது பீஷ்மர் அர்ஜூனனுக்கு உபதேசித்தது. இதைப் போல அற்புதம் வேறில்லை. ஆனால், எல்லாரும் பீஷ்மராக முடியுமா? பாமரனும், பெருமாள் அருள் பெற சொல்லப்பட்டதே கோவிந்த நாமம். திரவுபதியின் மானம் காத்தது அதுவே. எந்த மந்திரமும் அறியாதவன் கூட "கோவிந்தா' என்று உளப்பூர்வமாகச் சொன்னால் பெருமாள் ஓடி வருவார்'' என்றார் குரு.
பக்தரின் மனதில் தெளிவு பிறந்தது.
திருப்பாவை முப்பது பாசுரங்கள் பாடினாள் ஆண்டாள்.

அவற்றில் முதல் பத்து, "அவன் திருநாமத்தைச் சொல்லு" என்று உணர்த்துகின்றன. இரண்டாவது பத்து, "உயர்ந்ததான அவன் திருவடியை அர்ச்சனை பண்ணிப்பாரு" என்கிற பாசுரங்கள். மூன்றாவது பத்தோ "அவன் திருவடியிலே ஆத்ம சமர்ப்பணம் பண்ணு" என்று சொல்கின்றன.

ஆக வராஹ மூர்த்தியினிடத்திலே அன்று கேட்ட மூன்று விஷயங்களை முப்பது பாசுரங்களாய்ப் பாடி, ஆண்டாள் அவதாரத்திலே எடுத்துக் காட்டினாள்.
திருப்பாவை என்பது ஒரு நூல் மட்டுமல்ல. அது ஒரு யாகம். ஆண்டாள் பண்ணிய வேள்வி அது. வராஹ மூர்த்தியினிடத்த்திலே பெற்ற உபதேசத்தைக் கொண்டு தனுர் (மார்கழி) மாசத்திலே ஒரு வேள்வி வளர்க்கிறாள்.

வேள்வி செய்வதற்கு கபாலம் என்றொரு பாத்திர சாதனம் உண்டு. அதிலே புரோடாசத்தை வைத்து நெய்யைத் தடவி சமர்ப்பிப்பார்கள். ஆண்டாள் பண்ணிய திருப்பாவையின் மூன்று பத்தும் மூன்று கபால சாதனங்கள் என்றே சொல்லலாம். ஆசாரிய அனுக்கிரஹம் என்கிற நெய்யினால் தடவி அதைச் சமர்ப்பிக்கிறாள்.

வேள்வி பண்ணும்போது ஒவ்வொரு கபாலத்தைச் சமர்ப்பிக்கும் போதும் திரிவிக்கிரமாவதாரனான எம்பெருமானை ஸ்தோத்திரம் பண்ணிச் சமர்ப்பிப்பது மரபு.

திருப்பாவையின் மூன்று பத்தும் மூன்று கபாலங்கள் என்றேன், இல்லையா? ஒவ்வொரு கபாலத்தின் தொடக்கத்திலும் திரிவிக்கிரமனைத் துதிக்கிறாள் ஆண்டாள் என்பதைக் கவனிக்க வேண்டும்.
"ஓங்கி உலகளந்த உத்தமன்" என்று முதல் பத்திலே திரிவிக்கிரமனை நினைக்கிறாள்.

"அம்பர மூடறுத்து ஓங்கி உலகளந்த" என்று அடுத்த பதினொன்று முதல் இருபது வரையிலான பாசுரத்துக்குள்ளே இரண்டாவது முறையாக திரிவிக்கிரம அவதாரத்தைப் பாடுகிறாள்.

"அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி" என்று மறுபடியும், இருபத்தொன்று முதல் முப்பது வரையிலான பாசுரங்களுக்குள்ளே மறுபடியும் திரிவிக்கிரமன் திருவடிகளைப் போற்றுகிறாள்.

ஆகையினாலே, திருப்பாவை ஒரு வேள்வி போன்றது. ஆண்டாள் நமக்கு கீதையின் வழியைக் காட்டி, "நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா" என்று ஆச்ரயித்து, அவனையே திருக்கல்யாணமும் பண்ணிக் கொண்டாள்.