Sunday, 8 December 2019

கைசிக ஏகாதசியன்று ஸ்ரீபராசர பட்டர் கைசிக புராணம் வாசிக்க

கைசிக ஏகாதசியன்று ஸ்ரீபராசர பட்டர் கைசிக புராணம் வாசிக்க

ஸ்ரீபராசரபட்டருக்கு 28 வயது நிரம்புகின்றது. சில நாட்கள் கழித்து அன்று ஸ்ரீரங்கத்தில் கைசிக ஏகாதசி.
கைசிக ஏகாதசியன்று பட்டர் கைசிக புராணம் வாசிக்க வேண்டும். அன்றைய தினம் கைசிக ஏகாதசியன்று பட்டர் வெகு விசேஷமாக, அளவற்ற ஞானத்துடனும், ஒவ்வொரு பதத்திற்கும் இதுவரைக் கேளாத அதிவிசேஷார்த்தங்களை பிரவாகமாக உபதேசித்தருளுகின்றார்.
கூடியிருந்தோரெல்லாம் இவரது வாக்பிரவாகத்தில் கட்டுண்டு கிடந்தனர். அரங்கனின் அந்த அர்ச்சை சொரூபத்தில் கூட மார்பும் தோளும் விரிந்து பூரித்தது. தாம் சாத்தியிருந்த மாலையை கழட்டி சாதிக்கச் சொல்கின்றார். திருப்தியடையாது தம் சாத்தியிருந்த பொன்னாடையைப் போர்த்துகின்றார். அப்பவும் திருப்தியடையவில்லை. தம்முடைய திவ்ய திருவாபரணத்தினையெல்லாம் கழட்டி பட்டரை அணியச் செய்விக்கின்றார். இவ்வளவு செய்தும் அரங்கன் திருவுள்ளம் அப்போதும் திருப்தியடையவில்லை! தாம் எழுந்தருளிய ஒரு சிம்மாசனத்தினைக் கொடுத்து பட்டரை தம் எதிரே அமரச் செய்கின்றார். வேறு பல அரிய பரிசில்களை கொடுக்கின்றார். உஹூம்! அரங்கன் இதனால் எல்லாம் திருப்தியடையவேயில்லை. பட்டரும் இதனால் எல்லாம் மகிழ்ந்து பூரிக்கவுமில்லை! ‘இவர்க்கு இதெல்லாம் விட சிறந்தது எது கொடுப்போம்’ யோசிக்கின்றார். பளீரென்று சொல்கின்றார், ”பட்டரே! உமக்கு மேலே வீடு தந்தோம்” என்று இதுநாள் வரை யாரிடமும் சொல்லாத ஒரு சொல்லைச் சொல்கின்றார். இப்போது பட்டரின் மார்பும் தோளும் சந்தோஷத்தினால் பூரிக்கின்றது.
‘மஹாப்ரஸாதம்’ என்று அங்கீகரித்து அந்த சந்தோஷத்துடனே தண்டன் சமர்ப்பிக்கின்றார். க்ருதக்ஞையோடு நமஸ்கரிக்கின்றார். அரங்கனிடத்துச் சொல்கின்றார். ‘நாயன்தே! தேவரீர் அர்ஜூனனிடத்து ‘மோக்ஷயிஷ்யாமி’ என்று அருளிசெய்தருளினீர். ஆனால் தேவரீர் தாமே உம்முடைய திருவாயினால் என்னைத் தவிர வேறு யாருக்குமே திருவாய் மலர்ந்து அருளப்பெற்றிராத இந்த பேற்றுக்கு, உடையவர் எமக்கு தேவரீர் திருவடிகளில் காட்டிக் கொடுத்த உறவும், எம் தந்தையான ஆழ்வானும், எம்பாருமே’ என்று விண்ணப்பம் செய்கின்றார். கூடியிருந்த வைணவர்களனைவரும் கடல் போன்று கலங்கினார்கள். ‘அரங்கன்தான் உகப்பினால் திருவாய் மலர்ந்தருளினால் நீங்கள் ஏன் அதை அங்கீகரிக்க வேணும்? உம்மைக் கொண்டு இந்த பூமியினைத் திருத்தி விடலாமென்றிருந்தோமே’ என்று கதறுகின்றார். அதற்கு பட்டர், இன்னம் சிறிது நாள் இங்கே அரங்கன் என்னை அடிமைக் கொண்டிருந்தால் பரமபதத்திற்கும் இப்புவிக்கும் ஒரு பாலமே அமைத்திருப்பேன்’ என்கின்றார். திடீரென்று ஒரு கவலைப் பிறந்தது பட்டருக்கு! அரங்கனிடத்து நிவர்த்தி செய்ய கேட்கின்றார் ” ப்ரபோ! அங்கு பரமபதத்திலே அஞ்சேல் என்ற கையும், கவித்த முடியும், புறுவல் பூத்த சிவந்த திருமுகமும், நெற்றியில் கஸ்தூரி திலகமுமாக தேவரீரை பரமபதத்திலே தரிசனம் செய்ய முடியும்தானே? நாம் காணவிட்டால் அங்குள்ள ஒரு மூலையினை முறித்துக் கொண்டு ஸ்ரீரங்கத்திற்கே மீண்டு வருவேன்’ என்று விண்ணப்பம் செய்கின்றார். அரங்கன் எப்போதுதான் முடியாது என்று பட்டருக்குச் சொல்லியிருக்கின்றான்! ஒப்புக் கொள்ள பட்டர் மூலஸ்தானம் சென்று பெரியபெருமாளையும், உற்சவரையும் ஆபாத சூடம் அனுபவிக்கின்றார். கண்ணாரக் கண்டு ஆனந்திக்கின்றார்!.
பெருமாள் தம் பரிசகர்களனைவரையும் பட்டர் கூட அனுப்புகின்றார். ப்ரம்மரதமொன்று தயார் செய்கின்றார். கோயிலுள்ள அர்ச்சகர் உள்பட அனைத்துக் கொத்து கைங்கர்யபரர்களும், அகில ஸ்ரீவைஷ்ணவர்களும், எல்லா ஆச்சார்யர்களும், மற்றுமுள்ள ஸேவார்த்திகளும், மற்றையோரும் பட்டரை சூழ்ந்து அவரை பிரிய சகியாது கூடவே வருகின்றனர். அரங்கன் முற்றம் அங்கே வெறிச்சோடியது. பட்டர் தம் திருமாளிகையினுள் புகுந்து தம் திருத்தாய் ஆண்டாளை ஸேவிக்கின்றார். ஆண்டாள்,
‘நலமந்தமில்லதோர் (என்றும் நலமேயுடைய) நாடு புகுவீர்!’ என்று ஆசீர்வதிக்கின்றார். பட்டரும், ‘அம்மா! அடியேன் வேண்டுவதும் இதே!’ என்று உகந்தருளுகின்றார். (எப்படிப்பட்ட தாயும் மகனும்! நம் வைணவம் பெற்ற பேறு!)
பட்டரின் திருமாளிகையில் கூட வந்தவர்கள் அனைவரையும் வயிறார அமுது பண்ணச் செய்தனர்.
அனைவரும் அமுதுண்ட பின், பட்டர் திருமாளிகையின் நடுவில் அமர்கின்றார். திருநெடுந்தாண்டகத்தினை விசேஷமாக விரிவாக வியாக்யானம் செய்கின்றார். அதில் ‘அஞ்சிறைப்புள் தனிப்பாகன்” என்கிறவிடத்திலே, ”பறவையேறு பரம்புருடா நீ என்னைக் கைகொண்டபின், பிறவி எனும் கடலும் வற்றிப் பெரும் பதமாகின்றதால்” என்று இதனை இரண்டு முறை மெய்சிலிர்த்து வியாக்யானம் செய்கின்றார். மேற்கொண்டு பேச முடியவில்லை! திருமேனி பூரித்து மயிர்க்கால்கள் சிலிர்த்து நிற்கின்றது! புன்முறுவல் பூத்தவண்ணம் திருமுடியின் மேல் அவர்தம் இரு கைகளும் குவிந்து நமஸ்கரிக்கின்றது. எழுவதற்கு முயற்சிசெய்து பாதி எழுந்த நிலையில் பின்னாலிருந்த அணையினில் சாய்கின்றார். பட்டரின் சிரக் கபாலம் படீரென வெடிக்கின்றது. அரங்கனையே ஆட்கொண்ட அந்த பறவை சுதந்திரம் பெற்று திருநாட்டுக்கு பறக்கின்றது
பட்டர் பரமபதிக்கும் போது அவரது தாயாரான ஆண்டாள் அருகிலுள்ள ஒரு அறையில் அரங்கனைத் தியானித்த வண்ணம் இருந்தாள். பட்டரின் சீடர்கள் ஆண்டாளிடத்து, ”பட்டர் இளைத்து எழுந்தருளியிருக்கிறார்’ என்று பட்டர் பரமபதித்ததை அறிவிக்கின்றார். அந்த பரம ஸ்ரீவைஷ்ணவிக்கு திருவுள்ளம் கலங்கவில்லை! திருமுகம் கன்றவில்லை! கண்ணீர் மல்கவில்லை! வண்டு எப்படி பூவானது நோகாமல் அதன் மேல் அமருமோ, அதுபோன்று பட்டரது திருமேனியினை அவரது ஹ்ருதயகமலத்தினை அலர்த்தி தன் மேல் சார்த்திக் கொண்டாள். ‘பரமபத நிலையனுக்கும் அங்குள்ள நாச்சிமாருக்கும் பெருவாழ்வும் பெருங்களிப்பும் அடையும்படி இந்த ஆத்மா செல்லுகிறதே! உடையவன் உடைமையைக் கைக்கொண்டால், நாம் வெறுக்கலாமோ?” என்று கூறி தம் மகனை நெஞ்சோடு அணைத்தப்படி அமைதியாயிருந்தாள்! கோயிலார்கள் அனைவரும் அனைத்துமே பறிபோனது போன்று கலங்கி கண்ணீர் வடிக்கின்றனர். நஞ்சீயர் வேரற்ற மரம் போல சோகமே உருவாய் வீழ்ந்து கிடக்கின்றார். கூடியிருந்தோர் கண்ணீர் மழை சொரிகின்றனர்! நம்பெருமாளின் முகம் கன்றி காட்சியளிக்கின்றது. நம்பெருமாளும், தாயாரும், திருமுத்துக்குடை, காளாஞ்சி, திருவெண்சாமரம், திருவாலவட்டம், திருவெண்கொற்றக்குடை, வெண்முத்தின் கலசம், மேற்கட்டு முத்து தாமம் போன்றவற்றினை கோவில் சார்பில் அனுப்பிவைத்து, ‘நம்முடைய அவப்ருதோத்ஸவம்(திருமஞ்சன உத்ஸவம்) கொண்டாடுமாப்போல் பட்டருக்கும் அவப்ருதோத்ஸவங் கொண்டாடுங்கோள்” என்று திருவுள்ளமாய், பெருமாளும் நாச்சிமாருமாய் திருமஞ்சனம் கண்டருளி, ‘நம் புத்ரனை இழந்தோமே!’ என்று வருந்தி வெற்றிலைப் பாக்குக் கூட அமுது செய்யாமல் வருத்தமுடனே தம்மிடத்திற்கு எழுந்தருளினார்.
நஞ்சீயர் உள்ளிட்ட கோயிலார்கள் பட்டருடன் கூடப் பிறந்த வேதவியாசப்பட்டரைக் கொண்டு பட்டருக்கு ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரம் செய்து பள்ளிப்படுத்துகின்றனர். அவப்ருதோத்ஸவமும் நம்பெருமாள் திருவுள்ளப்படிச் செய்து மீண்டு வருகின்றனர். வேதவியாசப்பட்டர் பட்டரது பிரிவினால் வெறிச்சோடிப் போன திருமாளிகையினைக் கண்டு மனம் வெதும்பி சோகித்து அழுகின்றார். ஆண்டாள் பட்டர் பெற்றப் பேற்றினைக் கூறி தம் இன்னொரு மகனை சமாதானப்படுத்துகின்றாள். பட்டருக்கு தீர்த்த திருவத்யயநம் ஆனவுடன் வேதவியாச பட்டர் பெருமாளைத் திருவடித் தொழச் செல்கிறார்.
அரங்கன் சீராமப்பிள்ளையை (வேதவியாசப்பட்டரினை) அருளப்பாடிட்டு அருளுகின்றார், ” பட்டரையிழந்தோம் நாம்! உமக்கு நாம் இருக்கின்றோம்! முசியாதே கொள்ளும்!(வருத்தப்படாதே!)” என்று தேற்றி வேதவியாசப்பட்டருக்கு ப்ரஹ்மரதம் பண்ணுவித்துத் திருமாளிகையில் கொண்டு சேர்க்கின்றார். பட்டருக்குப் பிறகு வேதவியாசப்பட்டர் பரம சிரத்தையுடனே ஸ்ரீரங்கஸ்ரீயின் தர்ஸநம் நிர்வஹித்து வருகின்றார்.
பட்டர் அதிக திவ்யதேசங்களுக்குச் சென்றதாய் ஏதும் குறிப்புகளில்லை. பட்டரை அதிவிசேஷமாய் ஈர்த்து தம்மிடத்தேயே வைத்துக் கொண்டது அரங்கன்தான்!. நம்பெருமாள் யாரிடமுமே அதிகம் பேச மாட்டார். பெரும்பாலும் கனவில்தான் தோன்றி பேசுவார். பேசினாலும் சுருக்கமாகச் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டு மறைந்து விடுவார். அந்த அரங்கனே பட்டரிடத்தில் அதீதப்ரீயனாய், அந்தரங்கனாய், அதிகம் ஈர்க்கப்பட்டவனாய், அற்புத தந்தையாய், அளவற்ற நேசமுடையவனாய், பரிவுடனிருந்தார். அரங்கன் அதிகம் அளவளாவியது பட்டருடன் மட்டுமே!. பட்டரிடத்து அளவிலாத சந்தோஷத்துடன் மேலே வீடு அளித்தேன் என்று அனுப்பி வைத்தாலும் அர்ச்சையில் கண்டிப்பாக இருதலைக் கொள்ளி எறும்பாய் அவனும் அவதிப்பட்டிருப்பான்!.
பட்டரும் மேல்கோட்டை திருநாராயணபுரம், திருக்கோஷ்டியூர் முதலிய திவ்யதேசங்களில் எல்லாம் தங்கியிருந்தபோதும், எப்போது ஸ்ரீரங்கம் திரும்புவோம் என்றேதானிருந்தார்.
‘நம்பெருமாள் அஞ்சலென்ற கை மறுத்தாலும், அவ்வாசலெழிய வேறெரு போக்கு உண்டோ?’ என்று கூறியபடி திருவரங்கத் திவ்ய தம்பதிகளைத் தவிர மற்றொரு கதியின்றியிருந்தார். அரங்கனிடத்து கைங்கர்யம் செய்பவர்கள் யாருமே இப்படியிருப்பதுதான் நற்கதி! பிறவிப்பயன்! அரங்கன் கற்பக விருட்சம்! நாம் எதை மனதார வேண்டுகின்றோமோ அதை கைவல்யமாக அளிப்பதில் வல்லவன்!. நாமும் பட்டர் எப்படி நம்பெருமாளையும் தாயாரையும் ஆழ்வானும் ஆண்டாளுமாக நினைத்திருந்தாரோ, அதேப் போன்று
நம்முடைய தாயாகவும் தந்தையாகவும் போற்றி வணங்க வேண்டும். அந்த மனப்பக்குவத்தினை நன்கு வளர்த்து நம்பெருமாளும் தாயாருமே கதியென்று கிடக்க வேண்டும். நீயே கதியென்று கிடந்தால் நம் விதியை அவன் பார்த்துக் கொள்வான்.
‘எனது நான் எனச் செருக்கி மமதையுற்று அலைந்த என்னை
இனியனாக்கி இணைய வைத்த இன்ப தெய்வமே!
எனதுளத்தில் உனது நாமம் எழுதி வைத்து நடனமாடும்
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நமோ!”
பட்டரிடத்து அரங்கன் மேலே வீடு தந்தோம் என்றவுடனேயே ‘மஹாபிரஸாதம்’ என்று ஏற்றுக்கொண்ட பிறகு பட்டருக்கு ஒரு சந்தேகம். இதேப் போன்று நம்பெருமாள் அங்கு ஸேவை சாதித்தால்தான் போவேன் என்று அடம் பிடிக்கின்றார் அரங்கனிடம்!. நெகிழ்ந்து போனான் அரங்கன்!.
பக்தி என்பது எப்படியிருக்க வேண்டும் என்று நமக்கு உணர்த்துகின்றார்கள்.
ஸ்ரீமத் பாகவதத்தில் ப்ருது சக்ரவர்த்தி என்றொரு மகாராஜன். மஹாவிவேகி. ஒரு முறை இந்திரனே இவரது பாதத்தினைத் தொட்டு வணங்கி மன்னிப்புப் பெற்றவர். இவருக்கு ஸ்ரீமந்நாராயணனே நேரில் காட்சியளித்தார்.
பட்டரைப்போன்றே இவரும் இரு கைகளையும் மேலே தூக்கி நமஸ்கரித்தார். கண்களிருந்து ஆனந்தக்கண்ணீர் பெருக்கு!. கண்ணீர் பெருக்கெடுத்ததால் பார்க்கமுடியாத ஒரு நிலை!. தழுதழுத்த நெஞ்சினால் பேச்சும் போயிற்று! ஹ்ருதயத்தினால் ஸ்ரீபகவானை ஆனந்தமாக அணைத்துக் கொண்டார். கட்டுண்ட ஸ்ரீபகவான் அவரிடத்து வசமானார். இவரைப் பார்த்து பகவான் கருணைப் பொங்கி வரமொன்றைக் கேட்குமாறு அருளினார். அழியக்கூடிய பொருள்களை வரமாக கேட்கவில்லை. அழியாத அளவற்ற பக்தி ஒன்றினை மட்டுமே பகவானிடத்தில் யாசித்தார்.
ந காமயே நாத ததப்யஹம் க்வசித்
ந யத்ர யுஷ்மச் சரணாம்புஜாஸ்வ:
மஹத்தமாந்தா; ஹ்ருதயான் முகச்யுத:
விதத்ஸ்வ கா;ணாயுதமேஷ மே வர:
தங்கள் சரண கமல பக்தியை உண்டு பண்ணும் கதா ச்ரவணம் (பகவத் கதைகளைக் கேட்கும் பாக்கியம்) இல்லாதது எதுவாயினும், அது மோக்ஷமே ஆயினும் எனக்குத் தேவையில்லை! மஹான்களுடைய உள்ளத்தில் நிரம்பி, அங்கு இடமில்லாது அவர்கள் முகத்தின் வழியாக ததும்பி வெளிவரும் பகவத் குணங்களைக் கேட்பதற்குப் பதினாயிரம் காதுகளைக் கொடுக்க வேண்டும்! இதுவே எனக்கு வேண்டிய வரம்! என்று திட்டவட்டமாக யாசிக்கின்றார்.
இது போன்று பகவத் குணங்களை கேட்க வேண்டும். அதனை அவனது அர்ச்சையில் கண்டு மகிழ வேண்டும்.
வைணவமே அனுபவம்தானே!
கங்கை யமுனை ஆகிய இரண்டு நதிகளின் நடுவிலுள்ள ஒரு புண்யமான இடத்தில் ப்ருது மகாராஜன் விஷயத்தில் பற்று அற்றவராய் வசித்து வந்தார். (இரண்டு புண்ய நதிகள் நடுவே ஒரு க்ஷேத்திரம் இருக்குமாயின் அந்த இடமே மஹா பவித்ரமான இடமாகும். அம்மாதிரி இடங்களில் வசிப்பவர்கள் மஹா பாக்கியவான்கள்! அரங்கனுக்கும் இதுதான் உகப்பு! அயோத்தியில் சரயு, தமஸா ஆகிய இரு நதிகளுக்கிடையேதான் பள்ளிக்கொண்டிருந்தான் – இங்கு கங்கையிற் புனிதமாய காவிரி, கொள்ளிடம் ஆகிய இருகரைக்கு நடுவே!)
ஸத்ரயாகம் என்றவொரு மஹாயாகத்தினை நடத்துகின்றார் இந்த ப்ருது மஹாராஜா. இந்த யாகத்தில் தேவர்களும், ப்ரும்மரிஷிகளும், ராஜரிஷிகளும் கலந்து கொண்டனர். இந்த யாகத்தின் நடுவில் அரசன் மீண்டும் யாசிக்கின்றான்.
தேஷாமஹம் பாத ஸரோஜ ரேணு
மார்யா வஹேயாதி க்ரீடமாயு:
யம் நித்யதா பிப்ரத ஆஸூ பாபம்
நஸ்யத்யமும் ஸர்வகுணா பஜந்தி
குணாயனம் சீலதனம் க்ருதஜ்ஞம்
வ்ருத்தாஸ்ரயம் ஸம்வ்ருணதேனு ஸம்பத:
ப்ரஸீததாம் ப்ரஹ்மகுலம் கவாம் ச
ஜனார்த்தன: ஸானுசரஸ்ச மஹ்யம்!
எந்த பகவானுடைய சரண சேவையில் ருசி வந்தால், பல ஜென்மங்களில் செய்த பாபம் விலகுமோ, அந்த தெய்வத்தை ஒருபோதும் மறக்கக்கூடாது. அந்த தெய்வத்தையே உபாஸித்து வர வேண்டும். (பட்டர் சொல்கின்றார் நம்பெருமாளின் அஞ்சேல் என்ற அபயமளிக்கும் கைகளே தஞ்சம்! அந்த கைகளே மறுத்தாலும் அரங்கன் திருமுற்றத்தினைத் தவிர வேறெரு போக்கு எனக்கு வேண்டாம் என்று! ) வேத வித்துக்களுடையதும், பகவத் பக்தர்களுடையதான சரணரேணுவை(பாதாரவிந்தங்களை) நான் தலையில் உயிருள்ளவரை தரிப்பேனாக!. அந்த பாதரேணுவைத் தரிப்பவனுக்கு எல்லா பாபங்களும் உடனே விலகி, எல்லா குணங்களும் வந்து சேருகின்றன.
நல்ல குணம் உள்ளவனிடத்தில், நல்ல பழக்க வழக்கங்களும், செய்நன்றி மறவாத தன்மையும், பெரியோர்களை அண்டி நிற்பதும் தானே அமையும். அத்தகையவனிடத்தில் நித்யம் சகல சம்பத்துக்களும் தேடி வருகின்றன. ப்ரம்ம குலமும், பசுவின் குலமும், பக்தர்களுடன் கூடின ஸ்ரீமந் நாராயணனும் எனக்கு அனுக்ரஹம் செய்ய வேண்டும்’ என்று வேண்டுகின்றான்! ரங்கா ரங்கா ரங்கா!

Contact our Trustee's
 Mr.M.Chinna Durai 9942604383
 Mr.J.Gopikrishnan 9500264545
 Mr.S.P.Purusothaman 8056901601