Wednesday, 1 July 2020

ஏன் தாயாரை சேவித்த பிறகே பெருமாளை சேவிக்க வேண்டும்?



 இந்த ஜகம் முழுவதையும் பகவான் ஒருவன்தான் ரக்ஷிக்கிறானே தவிர முதலில் தாயாரை சேவித்த பின் பெருமாளை சேவிக்க வேண்டும்...!!!

முதலில் சீதா பிராட்டியாரையும், தொடர்ந்து லட்சுமணனையும் குகனை ஏற்றுக் கொள்ளும்படியாகச் செய்த பிறகே, குகனை கடாக்ஷிக்கிறாராம் ராமபிரான்.

ஸ்ரீரங்கநாதரிடம் பிரார்த்திக்கும்போது, ஸ்ரீரங்கநாச்சியாரை முன்னிட்டே பிரார்த்திக்கிறார் ஸ்ரீராமாநுஜர்.

ஏன் நாம் நேராக பெருமாளிடம் போய் கேட்டுக்கொள்ளக் கூடாதா? பெற வேண்டியவன் நானாகவும், கொடுக்க வேண்டியவன் பெருமாளாகவும் இருக்கும் போது, நேராக பெருமாளிடமே பெற்றுக்கொள்ளலாமே. இடையில் பிராட்டியார் எதற்கு?

இதற்கு, பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானம் செய்யும்போது சொல்கிறார்:

கொடுப்பவன் பகவானாக இருந்தாலும், அந்த பகவானே உபாயம் என்பதில் நமக்கு உறுதியான எண்ணம் இருக்க வேண்டும் அல்லவா?

அந்த உறுதியான எண்ணத்தை, அதாவது உபாய நிஷ்டையை நமக்கு அருள்பவள்தான் மஹாலக்ஷ்மி பிராட்டியார். மஹாலக்ஷ்மியின் கடாக்ஷத்தால் பகவானிடம் உறுதியான பக்தி ஏற்பட்டுவிட்ட பிறகு நடப்பது நடக்கட்டும் என்று கவலை இல்லாமல் விச்ராந்தியாக இருந்துவிடலாம்.இல்லையென்றால், தினமும் கவலைப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

ஒருவர் இருக்கிறார். அவர் காலையில் எழுந்ததில் இருந்தே எதற்காவது கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார். அதேசமயத்தில் பகவான் கிருஷ்ணர் அருளிய,

ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேஹம் சரணம் வ்ரஜ
அஹம்த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுச:
- என்ற சுலோகத்தையும் சொல்லிக் கொண்டே இருப்பார்.

'உன்னுடைய எல்லா பாவங்களில் இருந்தும் உன்னை நான் விடுவிக்கிறேன். அப்படி இருக்க நீ ஏன் சோகப்படுகிறாய்?' என்ற அர்த்தத்தில், கிருஷ்ணர் அருளிய இந்த சுலோகத்தைச் சொல்லிக்கொண்டே அவர் நாள்முழுவதும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், அவருக்கு பகவானிடத்தில் உறுதியான நம்பிக்கை ஏற்படவில்லை என்றுதான் பொருள்.

காரணம், மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் அவருக்குக் கிடைக்கவில்லை.

நாம் எல்லோரும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்றால், நாம் தான் நம் குடும்பத்தையே காப்பாற்றிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த நினைப்புதான் நம்மை எப்போதும் கவலையில் ஆழ்த்திவிடுகிறது. உண்மையில் நாமா எல்லோரையும் காப்பாற்றுகிறோம்?

கூரத்தாழ்வார் ஒரு சுலோகத்தில், 'நான் போன பிறகு, என் மனைவியை யார் காப்பாற்றுவார்கள் என்று இத்தனைநாள் நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். சட்டென்று ஒருநாள் நான் புரிந்து கொண்டேன். எனக்குப் பிறகு அவர்கள் இன்னும் நன்றாக இருப்பார்கள் என்று அப்போதுதான் நான் புரிந்துகொண்டேன்.

இத்தனை நாளாக நான்தான் அவளை ரக்ஷித்துக் கொண்டிருந்ததாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், பகவான்தான் அவளை மட்டுமல்ல என்னையும் சேர்த்தே ரக்ஷித்துக்கொண்டிருக்கிறார் என்பதை இப்போது நான் புரிந்துகொண்டேன். இதுவரை என்னையும் என் மனைவியையும் ரக்ஷித்து வந்த பகவான், என் மனைவியை நான் போன பிறகும்கூட ரக்ஷிக்கத்தான் போகிறான்' என்கிறார்.

இந்த ஜகம் முழுவதையும் பகவான் ஒருவன்தான் ரக்ஷிக்கிறானே தவிர, கணவன்
ரக்ஷிக்கிறான், மாதா பிதாக்கள் ரக்ஷிக்கிறார்கள், சொத்துக்கள் ரக்ஷிக்கும்
என்றெல்லாம் நினைப்பது அபத்தம். பகவான் மட்டுமே ரக்ஷகர். ஆனால், அவர் அப்படி ரக்ஷிக்க வேண்டுமானால், அவர் திருமகளோடு சேர்ந்து இருக்க வேண்டும்.

அதனால்தான் ஆழ்வார் பாடுகிறார்:
'ஞாலத்தோடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப்பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே
கோலத்திருமாமகளோடு உன்னைக் கூடாதே
சாலப்பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ'

திருமகளோடு சேர்ந்திருந்து இந்த உலக உயிர்களை யுகங்கள்தோறும் காத்து ரக்ஷிக்கும் உன் திருவடிகளை அடையாமல் நான் இன்னும் எத்தனை நாள்தான் துன்பப்படுவது என்று கேட்கிறார்.

எனவே, முதலில் மஹாலக்ஷ்மியையும். பிறகு, பெருமாளையும் சேவிக்க வேண்டும்.

ஒருவரை சேவித்து விட்டு மற்றவரை சேவிக்காமல் இருக்கக் கூடாது. அதாவது, இருவருடைய திருவடிகளையும் ஒருசேரப் பற்றிக் கொள்ள வேண்டும். இருவரிடமும் பற்றுக் கொள்ள வேண்டும்.

Contact our Trustee's Mr.M.Chinna Durai 9942604383 Mr.J.Gopikrishnan 9500264545 Mr.S.P.Purusothaman 8056901601