Wednesday, 10 May 2017

பட்டர் கைசிக புராணம் வாசித்தல்


ஸ்ரீரங்கத்தில் கைசிக ஏகாதசியன்று பட்டர் கைசிக புராணம் வாசிக்க வேண்டும். அன்றைய தினம் கைசிக ஏகாதசியன்று பட்டர் வெகு விசேஷமாக, அளவற்ற ஞானத்துடனும், ஒவ்வொரு பதத்திற்கும் இதுவரைக் கேளாத அதிவிசேஷார்த்தங்களை பிரவாகமாக உபதேசித்தருளுகின்றார்.

கூடியிருந்தோரெல்லாம் இவரது வாக்பிரவாகத்தில் கட்டுண்டு கிடந்தனர். அரங்கனின் அந்த அர்ச்சை சொரூபத்தில் கூட மார்பும் தோளும் விரிந்து பூரித்தது. தாம் சாத்தியிருந்த மாலையை கழட்டி சாதிக்கச் சொல்கின்றார். திருப்தியடையாது தம் சாத்தியிருந்த பொன்னாடையைப் போர்த்துகின்றார். அப்பவும் திருப்தியடையவில்லை. தம்முடைய திவ்ய திருவாபரணத்தினையெல்லாம் கழட்டி பட்டரை அணியச் செய்விக்கின்றார். இவ்வளவு செய்தும் அரங்கன் திருவுள்ளம் அப்போதும் திருப்தியடையவில்லை! தாம் எழுந்தருளிய ஒரு சிம்மாசனத்தினைக் கொடுத்து பட்டரை தம் எதிரே அமரச் செய்கின்றார். வேறு பல அரிய பரிசில்களை கொடுக்கின்றார். உஹூம்! அரங்கன் இதனால் எல்லாம் திருப்தியடையவேயில்லை. பட்டரும் இதனால் எல்லாம் மகிழ்ந்து பூரிக்கவுமில்லை! ‘இவர்க்கு இதெல்லாம் விட சிறந்தது எது கொடுப்போம்’ யோசிக்கின்றார். பளீரென்று சொல்கின்றார், ”பட்டரே! உமக்கு மேலே வீடு தந்தோம்” என்று இதுநாள் வரை யாரிடமும் சொல்லாத ஒரு சொல்லைச் சொல்கின்றார். இப்போது பட்டரின் மார்பும் தோளும் சந்தோஷத்தினால் பூரிக்கின்றது.

‘மஹாப்ரஸாதம்’ என்று அங்கீகரித்து அந்த சந்தோஷத்துடனே தண்டன் சமர்ப்பிக்கின்றார். க்ருதக்ஞையோடு நமஸ்கரிக்கின்றார். அரங்கனிடத்துச் சொல்கின்றார். ‘நாயன்தே! தேவரீர் அர்ஜூனனிடத்து ‘மோக்ஷயிஷ்யாமி’ என்று அருளிசெய்தருளினீர். ஆனால் தேவரீர் தாமே உம்முடைய திருவாயினால் என்னைத் தவிர வேறு யாருக்குமே திருவாய் மலர்ந்து அருளப்பெற்றிராத இந்த பேற்றுக்கு, உடையவர் எமக்கு தேவரீர் திருவடிகளில் காட்டிக் கொடுத்த உறவும், எம் தந்தையான ஆழ்வானும், எம்பாருமே’ என்று விண்ணப்பம் செய்கின்றார். கூடியிருந்த வைணவர்களனைவரும் கடல் போன்று கலங்கினார்கள். ‘அரங்கன்தான் உகப்பினால் திருவாய் மலர்ந்தருளினால் நீங்கள் ஏன் அதை அங்கீகரிக்க வேணும்? உம்மைக் கொண்டு இந்த பூமியினைத் திருத்தி விடலாமென்றிருந்தோமே’ என்று கதறுகின்றார். அதற்கு பட்டர், இன்னம் சிறிது நாள் இங்கே அரங்கன் என்னை அடிமைக் கொண்டிருந்தால் பரமபதத்திற்கும் இப்புவிக்கும் ஒரு பாலமே அமைத்திருப்பேன்’ என்கின்றார். திடீரென்று ஒரு கவலைப் பிறந்தது பட்டருக்கு! அரங்கனிடத்து நிவர்த்தி செய்ய கேட்கின்றார் ” ப்ரபோ! அங்கு பரமபதத்திலே அஞ்சேல் என்ற கையும், கவித்த முடியும், புறுவல் பூத்த சிவந்த திருமுகமும், நெற்றியில் கஸ்தூரி திலகமுமாக தேவரீரை பரமபதத்திலே தரிசனம் செய்ய முடியும்தானே? நாம் காணவிட்டால் அங்குள்ள ஒரு மூலையினை முறித்துக் கொண்டு ஸ்ரீரங்கத்திற்கே மீண்டு வருவேன்’ என்று விண்ணப்பம் செய்கின்றார். அரங்கன் எப்போதுதான் முடியாது என்று பட்டருக்குச் சொல்லியிருக்கின்றான்! ஒப்புக் கொள்ள பட்டர் மூலஸ்தானம் சென்று பெரியபெருமாளையும், உற்சவரையும் ஆபாத சூடம் அனுபவிக்கின்றார். கண்ணாரக் கண்டு ஆனந்திக்கின்றார்!.

பெருமாள் தம் பரிசகர்களனைவரையும் பட்டர் கூட அனுப்புகின்றார். ப்ரம்மரதமொன்று தயார் செய்கின்றார். கோயிலுள்ள அர்ச்சகர் உள்பட அனைத்துக் கொத்து கைங்கர்யபரர்களும், அகில ஸ்ரீவைஷ்ணவர்களும், எல்லா ஆச்சார்யர்களும், மற்றுமுள்ள ஸேவார்த்திகளும், மற்றையோரும் பட்டரை சூழ்ந்து அவரை பிரிய சகியாது கூடவே வருகின்றனர். அரங்கன் முற்றம் அங்கே வெறிச்சோடியது. பட்டர் தம் திருமாளிகையினுள் புகுந்து தம் திருத்தாய் ஆண்டாளை ஸேவிக்கின்றார். ஆண்டாள்,
‘நலமந்தமில்லதோர் (என்றும் நலமேயுடைய) நாடு புகுவீர்!’ என்று ஆசீர்வதிக்கின்றார். பட்டரும், ‘அம்மா! அடியேன் வேண்டுவதும் இதே!’ என்று உகந்தருளுகின்றார். (எப்படிப்பட்ட தாயும் மகனும்! நம் வைணவம் பெற்ற பேறு!)பட்டரின் திருமாளிகையில் கூட வந்தவர்கள் அனைவரையும் வயிறார அமுது பண்ணச் செய்தனர்.

அனைவரும் அமுதுண்ட பின், பட்டர் திருமாளிகையின் நடுவில் அமர்கின்றார். திருநெடுந்தாண்டகத்தினை விசேஷமாக விரிவாக வியாக்யானம் செய்கின்றார். அதில் ‘அஞ்சிறைப்புள் தனிப்பாகன்” என்கிறவிடத்திலே, ”பறவையேறு பரம்புருடா நீ என்னைக் கைகொண்டபின், பிறவி எனும் கடலும் வற்றிப் பெரும் பதமாகின்றதால்” என்று இதனை இரண்டு முறை மெய்சிலிர்த்து வியாக்யானம் செய்கின்றார். மேற்கொண்டு பேச முடியவில்லை! திருமேனி பூரித்து மயிர்க்கால்கள் சிலிர்த்து நிற்கின்றது! புன்முறுவல் பூத்தவண்ணம் திருமுடியின் மேல் அவர்தம் இரு கைகளும் குவிந்து நமஸ்கரிக்கின்றது. எழுவதற்கு முயற்சிசெய்து பாதி எழுந்த நிலையில் பின்னாலிருந்த அணையினில் சாய்கின்றார். பட்டரின் சிரக் கபாலம் படீரென வெடிக்கின்றது. அரங்கனையே ஆட்கொண்ட அந்த பறவை சுதந்திரம் பெற்று திருநாட்டுக்கு பறக்கின்றது

பட்டர் பரமபதிக்கும் போது அவரது தாயாரான ஆண்டாள் அருகிலுள்ள ஒரு அறையில் அரங்கனைத் தியானித்த வண்ணம் இருந்தாள். பட்டரின் சீடர்கள் ஆண்டாளிடத்து, ”பட்டர் இளைத்து எழுந்தருளியிருக்கிறார்’ என்று பட்டர்பரமபதித்ததை அறிவிக்கின்றார். அந்த பரம ஸ்ரீவைஷ்ணவிக்கு திருவுள்ளம் கலங்கவில்லை! திருமுகம் கன்றவில்லை! கண்ணீர் மல்கவில்லை! வண்டு எப்படி பூவானது நோகாமல் அதன் மேல் அமருமோ, அதுபோன்று பட்டரது திருமேனியினை அவரது ஹ்ருதயகமலத்தினை அலர்த்தி தன் மேல் சார்த்திக் கொண்டாள். ‘பரமபத நிலையனுக்கும் அங்குள்ள நாச்சிமாருக்கும் பெருவாழ்வும் பெருங்களிப்பும் அடையும்படி இந்த ஆத்மா செல்லுகிறதே! உடையவன் உடைமையைக் கைக்கொண்டால், நாம் வெறுக்கலாமோ?” என்று கூறி தம் மகனை நெஞ்சோடு அணைத்தப்படி அமைதியாயிருந்தாள்! கோயிலார்கள் அனைவரும் அனைத்துமே பறிபோனது போன்று கலங்கி கண்ணீர் வடிக்கின்றனர். நஞ்சீயர் வேரற்ற மரம் போல சோகமே உருவாய் வீழ்ந்து கிடக்கின்றார். கூடியிருந்தோர் கண்ணீர் மழை சொரிகின்றனர்! நம்பெருமாளின் முகம் கன்றி காட்சியளிக்கின்றது. நம்பெருமாளும், தாயாரும், திருமுத்துக்குடை, காளாஞ்சி, திருவெண்சாமரம், திருவாலவட்டம், திருவெண்கொற்றக்குடை, வெண்முத்தின் கலசம், மேற்கட்டு முத்து தாமம் போன்றவற்றினை கோவில் சார்பில் அனுப்பிவைத்து, ‘நம்முடைய அவப்ருதோத்ஸவம்(திருமஞ்சன உத்ஸவம்) கொண்டாடுமாப்போல் பட்டருக்கும் அவப்ருதோத்ஸவங் கொண்டாடுங்கோள்” என்று திருவுள்ளமாய், பெருமாளும் நாச்சிமாருமாய் திருமஞ்சனம் கண்டருளி, ‘நம் புத்ரனை இழந்தோமே!’ என்று வருந்தி வெற்றிலைப் பாக்குக் கூட அமுது செய்யாமல் வருத்தமுடனே தம்மிடத்திற்கு எழுந்தருளினார்.

நஞ்சீயர் உள்ளிட்ட கோயிலார்கள் பட்டருடன் கூடப் பிறந்த வேதவியாசப்பட்டரைக் கொண்டு பட்டருக்கு ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரம் செய்து பள்ளிப்படுத்துகின்றனர். அவப்ருதோத்ஸவமும் நம்பெருமாள் திருவுள்ளப்படிச் செய்து மீண்டு வருகின்றனர். வேதவியாசப்பட்டர் பட்டரது பிரிவினால் வெறிச்சோடிப் போன திருமாளிகையினைக் கண்டு மனம் வெதும்பி சோகித்து அழுகின்றார். ஆண்டாள் பட்டர் பெற்றப் பேற்றினைக் கூறி தம் இன்னொரு மகனை சமாதானப்படுத்துகின்றாள். பட்டருக்கு தீர்த்த திருவத்யயநம் ஆனவுடன் வேதவியாச பட்டர் பெருமாளைத் திருவடித் தொழச் செல்கிறார்.

அரங்கன் சீராமப்பிள்ளையை (வேதவியாசப்பட்டரினை) அருளப்பாடிட்டு அருளுகின்றார், ” பட்டரையிழந்தோம் நாம்! உமக்கு நாம் இருக்கின்றோம்! முசியாதே கொள்ளும்!(வருத்தப்படாதே!)” என்று தேற்றி வேதவியாசப்பட்டருக்குப்ரஹ்மரதம் பண்ணுவித்துத் திருமாளிகையில் கொண்டு சேர்க்கின்றார். பட்டருக்குப் பிறகு வேதவியாசப்பட்டர் பரம சிரத்தையுடனே ஸ்ரீரங்கஸ்ரீயின் தர்ஸநம் நிர்வஹித்து வருகின்றார்.

பட்டர் அதிக திவ்யதேசங்களுக்குச் சென்றதாய் ஏதும் குறிப்புகளில்லை. பட்டரை அதிவிசேஷமாய் ஈர்த்து தம்மிடத்தேயே வைத்துக் கொண்டது அரங்கன்தான்!. நம்பெருமாள் யாரிடமுமே அதிகம் பேச மாட்டார். பெரும்பாலும் கனவில்தான் தோன்றி பேசுவார். பேசினாலும் சுருக்கமாகச் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டு மறைந்து விடுவார். அந்த அரங்கனே பட்டரிடத்தில் அதீதப்ரீயனாய், அந்தரங்கனாய், அதிகம் ஈர்க்கப்பட்டவனாய், அற்புத தந்தையாய், அளவற்ற நேசமுடையவனாய், பரிவுடனிருந்தார். அரங்கன் அதிகம் அளவளாவியது பட்டருடன் மட்டுமே!. பட்டரிடத்து அளவிலாத சந்தோஷத்துடன் மேலே வீடு அளித்தேன் என்று அனுப்பி வைத்தாலும் அர்ச்சையில் கண்டிப்பாக இருதலைக் கொள்ளி எறும்பாய் அவனும் அவதிப்பட்டிருப்பான்!.

பட்டரும் மேல்கோட்டை திருநாராயணபுரம், திருக்கோஷ்டியூர் முதலிய திவ்யதேசங்களில் எல்லாம் தங்கியிருந்தபோதும், எப்போது ஸ்ரீரங்கம் திரும்புவோம் என்றேதானிருந்தார்.

‘நம்பெருமாள் அஞ்சலென்ற கை மறுத்தாலும், அவ்வாசலெழிய வேறெரு போக்கு உண்டோ?’ என்று கூறியபடி திருவரங்கத் திவ்ய தம்பதிகளைத் தவிர மற்றொரு கதியின்றியிருந்தார். அரங்கனிடத்து கைங்கர்யம் செய்பவர்கள் யாருமே இப்படியிருப்பதுதான் நற்கதி! பிறவிப்பயன்! அரங்கன் கற்பக விருட்சம்! நாம் எதை மனதார வேண்டுகின்றோமோ அதை கைவல்யமாக அளிப்பதில் வல்லவன்!. நாமும் பட்டர் எப்படி நம்பெருமாளையும் தாயாரையும் ஆழ்வானும் ஆண்டாளுமாக நினைத்திருந்தாரோ,அதேப் போன்று நம்முடைய தாயாகவும் தந்தையாகவும் போற்றி வணங்க வேண்டும். அந்த மனப்பக்குவத்தினை நன்கு வளர்த்து நம்பெருமாளும் தாயாருமே கதியென்று கிடக்க வேண்டும். நீயே கதியென்று கிடந்தால் நம் விதியை அவன் பார்த்துக் கொள்வான்.

‘எனது நான் எனச் செருக்கி மமதையுற்று அலைந்த என்னை
இனியனாக்கி இணைய வைத்த இன்ப தெய்வமே!
எனதுளத்தில் உனது நாமம் எழுதி வைத்து நடனமாடும்
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நமோ!”

பட்டரிடத்து அரங்கன் மேலே வீடு தந்தோம் என்றவுடனேயே ‘மஹாபிரஸாதம்’ என்று ஏற்றுக்கொண்ட பிறகு பட்டருக்கு ஒரு சந்தேகம். இதேப் போன்று நம்பெருமாள் அங்கு ஸேவை சாதித்தால்தான் போவேன் என்று அடம் பிடிக்கின்றார் அரங்கனிடம்!. நெகிழ்ந்து போனான் அரங்கன்!.

பக்தி என்பது எப்படியிருக்க வேண்டும் என்று நமக்கு உணர்த்துகின்றார்கள்.
பட்டர் நஞ்சீயருக்குத் திருவாய்மொழிக்கு பிள்ளான் என்பவரது உரைப்படி ஆறாயிரமும் நன்றாக உபதேசித்தார். நஞ்சீயரும் அதனை நன்றாக அறிந்து பட்டரை அனுசரித்து அவருடைய அனுமதியைப் பெற்று, திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரம் படியாக ஒருவ்யாக்யானம் அருளிச்செய்தார். ‘அதனைத் தெளிவற பட்டோலை கொண்டு எழுதி தருவார் எவரும் உண்டோ?’ என்று விசாரிக்க, நஞ்சீயரின் சீடர்கள் நம்பூர் வரதராஜன்என்பவரை அறிமுகப்படுத்தினர். நம்பூர் வரதராஜனின் எழுத்து மணி மணியாய் இருந்தது. ஆயினும் நஞ்சீயருக்கு ஒரு சிறிய நெருடல். ‘இது திருவாய்மொழிக்கான வ்யாக்யானமாகையினாலேஒரு விலக்ஷணரைக் (வைஷ்ணவ லக்ஷணம் பூர்ணமாகக் கொண்டவர்) கொண்டு எழுதுவிக்க வேண்டும். வெறும் திருவிலச்சினம், திருநாமம் மாத்ரமுண்டான இவரைக் கொண்டு எழுதுதல் தகுமா? என்று யோசிக்கலானார். வந்தவர் புத்திசாலி. ‘அடியேனையும் தேவரீர் திருவுள்ளத்துக்கு வரும்படியே திருத்திப் பணிகொள்ளலாகாதோ?’ என்று கேட்க, நஞ்சீயர் மிகவும்திருவுள்ளம் உகந்தார். பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்து பூர்ணமாய் பிரபந்நராக ஆக்குகின்றார்.

அவருக்கு ப்ரபந்நநிஷ்டைகளை பூர்ணமாக உபதேசித்து, தாம் எழுதிய திருவாய்மொழிக்கான ஓன்பதினாயிரம் படியையும் ஒரு முறை , தெளிவாக உபதேசித்து அருளுகின்றார். தாம் வியாக்யானம் எழுதிய பட்டோலையை அவர் கையிலே தருகின்றார். வந்தவர், ‘அடியேன்! ஊரிலே போய் எழுதிக்கொண்டு வருகிறேன்!” என்று கூறி அனுமதி பெற்று காவேரியினைக் கடந்து தம் ஊருக்குச் செல்கின்றார். ஓரிடத்தில்காவேரியில் ஆழம் அதிகமிருக்கவே, தம்முடைய தலையில் நஞ்சீயரின் ஓலைப்பிரதிகளைக்
கட்டிக் கொண்டு நீந்துகின்றார். அவ்வோலைப் பிரதிகள் தவறுகின்றன. காவேரியின் பிரவாகத்தில் அடித்துச் செல்லப்படுகின்றது. ‘பட்டோலை போய் விட்டதே! இனி நாம் என்ன செய்யக் கடவோம்” என்று சோகமாகின்றார். பின்னர் ஒருவாறு தேறிநஞ்சீயர் தமக்கு அருளிச் செய்தமையை நினைவுக்குக் கொண்டு வந்து அர்த்தங்களைத் தப்பாமல் பட்டோலைச் செய்கின்றார். அவர் தமிழ் புலமை மிக்கவரானதால் சில பதங்களுக்கு தமக்குதித்த கம்பீரமான பதங்களாலே வியாக்யானம் எழுதுகின்றார். மிக அழகாக நேர்த்தியாகபட்டோலைப் படுத்தி திரும்பவும் நஞ்சீயரிடத்து வந்து அதனைச் சமர்ப்பிக்கின்றார்.நஞ்சீயர் தாம் அருளிச் செய்தமை சிலவிடங்களில் மாறுபட்டு அதியற்புதமான வியாக்யானங்களைக் கண்டு, ‘இதென்?” என்று வினவுகின்றார். நம்பூர் வரதராஜன்நடுங்குகின்றார். பேசாது நிற்கின்றார். ‘நீர் பயப்பட வேண்டாம்! உண்மையைச் சொல்லும்!” என்கிறார் நஞ்சீயர். நடந்ததை கூறுகின்றார் வரதராஜன். நஞ்சீயர் வியந்து, ‘இவருடைய புத்தி விசேஷமிருந்தபடி என்தான்! இவர் மஹா சமர்த்தர்! நன்றாக எழுதியிருக்கின்றார்” என்று புகழ்ந்து மிகவும் திருவுள்ளமிரங்கி வரதராஜனை
வாரியணைக்கின்றார்.‘இவர் நம்முடைய பிள்ளை, திருக்கலிகன்றிதாஸர்” என்று திருநாமஞ்சாற்றி, தம்முடனேயே அவரை அரைக்ஷணம் கூடப் பிரியாது ஸகலவித சாஸ்திரங்களையும்அர்த்த விசேஷங்களையும் அவருக்கு அருளிச் செய்கின்றார். அவரும் ‘சீயரையல்லாது‘தேவுமற்றறியேன்’ என்று எழுந்தருளியிருந்தார். சீயர் நம்முடைய பிள்ளை என்று அணைத்தமையால் அன்று முதல் வரதராஜன் ‘நம்பிள்ளை’ என்றே அழைக்கப்பட்டார்.
_______________________________________________
ஆறாயிரப்படி, ஒன்பதினாயிரம்படி, 32000படி, என்கின்றோமே, இந்த ‘படி’ என்றால் என்ன?

படி என்றால் அளவு. உயிர்மை எழுத்து உயிரெழுத்து ஆகிய இரண்டும் சேர்த்து 
32 அட்சரம் கொண்டது
ஒரு க்ரந்தம்.
ஒரு க்ரந்தம் என்பது தமிழில் ஒரு படி.
6000 க்ரந்தம் கொண்டது விஷ்ணு புராணம்.
குருபரம்பரை ஆறாயிரப்படியும், விஷ்ணுபுராணமும் ஏட்டில் சம அளவில் இருந்தமையால்
‘குருபரம்பரை ஆறாயிரப்படி ‘ என்றழைக்கப்பெற்றது.
இதேப் போன்று இராமாயணம் 24000 க்ரந்தம். இதுவும் பெரியவாச்சான் பிள்ளை 24000 படியும் சம அளவில்
இருந்ததால் பெரியவாச்சன் பிள்ளை 24000படி என்றழைக்கப்பெற்றது.
சுதப்பிரகாசிகை 36000 க்ரந்தம். இதுவும் ஸ்ரீபாஷ்யமும் ஒரே அளவில் இருந்தமையால் ஸ்ரீபாஷ்யம் ஈடு 36000படி என்றழைக்கப்பெற்றது.

இன்று 10.05.2017 மாலை நம் திருக்கோயிலில் ஸ்ரீசத்ய நாராயண பூசை



ஸ்ரீ சத்ய நாராயண பூஜையை நாம் ஒவ்வொரு பௌர்னமியன்றும் செய்தால் மிகவும் நல்லது. அதுவும் பௌர்னமியன்று மாலைப் பொழுதில், சந்த்ரோதய காலத்தில் பூஜையைச் செய்வது மிகவும் உசிதம். ஸ்ரீ சத்யநாராயணர் மகாவிஷ்னுவின் அவதாரம். அவரும், அவர் பேருக்கேற்றார் போல் சத்தியமானவர். நம்பிக்கையுடன் இதனை செய்தால் கண்டிப்பாக கை மேல் பலன் கிடைக்கும்.
இந்த பூஜையின் விசேஷம் என்னவென்றால், ஸ்ரீ சத்யநாராயணரே நாரதரிடம் மனிதர்கள், தங்கள் கஷ்டங்களிலிருந்து விடுபட இப்பூஜையை விளக்கிக் கூறி அதன் மகிமைகளையும் தன் வாய்மொழியாக குறிப்பிட்டுள்ளார். இந்த பூஜையை புரோகிதர் வைத்தும் செய்யலாம், அல்லது ஒரு நல்ல புத்தகத்தைப் பார்த்தும் நாமாகவே கூட செய்யலாம். இந்த பூஜையை பௌர்னமியன்று செய்ய முடியாதவர்கள் அமாவாசை, அஷ்டமி, துவாதசி, ஸங்கராந்தி, தீபாவளி, ஞாயிறு, திங்கள், வெள்ளி, புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மற்றும் அவரவர் ஜாதகத்தில் எப்பொழுது சந்திரன் அனூகூலமாக உள்ளதோ அப்பொழுதும் செய்யலாம்.
இந்த பூஜையை பொது இடங்களிலோ அல்லது வீட்டிலோ தமது சௌகர்யம் போல் செய்துக் கொள்ளலாம். ஆனால் பூஜை செய்யும் முன் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை செய்யும் இடத்தை துடைத்து கோலமிட்டு, அதன் மேல் மணை வைத்து அதில் சுவாமி படத்தை வைத்து பூஜையை தொடங்க வேண்டும். பின் படத்திற்கு முன் கலசத்தை ஒரு நூலில் சுற்றி, அதில் வஸ்திரமோ அல்லது பூவோ வைத்து சுற்றி வைத்து, அந்த கலசத்தில் சுத்தமான நீரை பரப்பி அதில் சிறிது ஏலக்காய் போட்டு அதன் மேல் மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து பூஜையை தொடங்க வேண்டும்.
பின் இப்பூஜை செய்வதற்கு முன் கணபதி பூஜை, நவகிரக பூஜை செய்ய வேண்டும். அதற்கு தனித்தனியாக நிவேதனம் செய்ய வேண்டும். நவகிரக தானியங்களை அந்தந்த சுவாமிக்கு படைக்க வேண்டும். அந்தந்த தெய்வத்தை ஆவாகனம் செய்ய சூரியனுக்கு கோதுமை, சந்திரனுக்கு நெல் அரிசி, அங்காரகனுக்கு துவரை, புதனுக்கு பயறு, குருவிற்கு கடலை, சுக்கிரனுக்கு மொச்சை, சனிக்கு எள்ளு, ராகுவிற்கு உளுந்து மற்றும் கேதுவிற்கு கொள்ளு முதலியவற்றை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை வேலைக்கு செல்வதால் நேரம் குறைவாக இருந்தால் கணபதி பூஜையும், ஸ்ரீ சத்ய நாராயண பூஜையும் மட்டுமாவது செய்ய வேண்டும். இவை இரண்டும் மட்டும் செய்ய நவதானியங்கள் தேவையில்லை. மற்றபடி கணமதிக்கு பாலோ, வெல்லமோ அல்லது பழமோ நிவேதனம் செய்யலாம். அதுபோல் ஸ்ரீ சத்ய நாராயணருக்கு ரவை கேசரியோ அல்லது கோதுமை மாவை சிறிது நெய்யில் வருத்து பின் சர்க்கரை சேர்த்து நிவேதனம் செய்யலாம்.


இந்த பூஜையில் வரும் அஷ்டோத்திரத்தையும், அங்க பூஜையும் கண்டிப்பாக செய்ய வேண்டும். ஒரு வேளை சங்கல்பத்திற்கு தேவையான குறிப்புகள் கிடைக்க வில்லையென்றால் சுபதினே, சுபநக்ஷ்த்ரே, சுபதிதௌ, சுப முஹூர்த்தே என்றும் சொல்லியும் செய்யலாம். இந்த பூஜைக்கு துளசி கிடைத்தால் அதைக் கொண்டு செய்தால் மிகவும் நல்லது, கிடைக்காதவர்கள் மற்ற மலர்களைக்கொண்டும் அக்ஷதைக் கொண்டும் செய்யலாம். மறந்து விடாமல் பூஜையை முடித்துவிட்டு கதை படிக்க வேண்டும். பின் அந்த பிரசாதத்தை தான் முதலில் உண்டு மற்ற எல்லோருக்கும் கொடுக்க வேண்டும். அதே போல் கலத்திலுள்ள தீர்த்தத்தை தாமும் உண்டு மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு பௌர்னமியன்றும் நம்பிக்கையுடன் செய்தால் பலன் கண்டிப்பாக கிடைக்கும்.

நன்றி:http://www.tamiloviam.com/unicode/08080712.asp


Monday, 8 May 2017

"எல்லாவிதமான கடன்களிலிருந்தும் நம்மைக் காக்க"

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ருண விமோசன ஸ்தோத்ரம் ,
தேவதா கார்ய ஸித்யர்த்தம் ஸபா ஸ்தம்ப ஸமுத்பவம்

ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை
கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வர தாயகம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
மகாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களைத் தருபவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
ஹிரண்யகசிபுவின் குடலை மாலையாக அணிந்தவரும், சங்கம், சக்ரம், தாமரை, ஆயுதம் இவைகளை கைகளில் தாங்கியவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ஸ்மரணாத் ஸ்ர்வ பாபக்னம் கத்ரூஜ விஷ நாசநம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
நினைத்த உடனேயே அனைத்து பாபங்களையும் போக்கடிப்பவரும், கொடிய விஷத்தை முறியடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ஸிம்ஹாநாதேந மஹதா திக்தந்தி பயநாசனம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
மிக பயங்கரமான சிம்ஹத்தின் கர்ஜனையால் எட்டுத் திசையிலும் உள்ள திக்கஜங்களுக்கும் பயத்தை போக்கடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ப்ரஹ்லாதவரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரணம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
பக்தனான ப்ரஹலாதனுக்கு அனுக்ரஹம் செய்தவரும், மஹாலக்ஷ்மியுடன் கூடியவரும், அரக்கர் தலைவனான ஹிரண்யகசிபுவை சம்ஹரித்த மஹாவீரருமான,ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
க்ரூரக்ரஹை பீடிதானாம் பக்தாநாம் பயப்ரதம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
உக்ரமும் கோரமும் உடைய கிரஹங்களால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு அபயம் அளிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
வேத வேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
வேதங்கள், உபநிஷதங்கள், யாகங்கள் முதலியவைகளுக்கு தலைவரும், ப்ரம்மா, ருத்ரன் முதலியவர்களால் வணங்கப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ய: இதம் படதே நித்யம் ருணமோச ந ஸம்ஜிதம்அந்ருணீ ஜாயதே ஸ்த்யோ தநம் சீக்ரமவாப் நுயாத்
யார் இந்த ருணமோசனம் என்ற பெயருடைய ஸ்லோகத்தை தினம் படிக்கின்றாரோ அவர் விரைவிலேயே கடனிலிருந்து விடுபட்டவனாகி மேலும் சகல செல்வத்தையும் அடைவார் ,
"ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மம் திருவடிகளே சரணம்"

ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்

பெருமாளின் அவதாரங்களில் இது 4வது அவதாரமாகும்: அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்ததன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டுஅரக்கனைக் கொன்றார். ஸ்ரீஹரி எடுத்த வராக அவதாரத்தில் தன்னுடைய உடன்பிறப்பாகிய ஹிரண்யாட்சனைக் கொன்றுவிட்டார் என்று கேட்டதும் இரண்யகசிபு துயரம் அடைந்தான். அதனால் அவனுக்குப் பரந்தாமன் மீது சொல்ல முடியாத கோபம் ஏற்பட்டது. உடனே சூலத்தைத் தன் கையில் எடுத்தான். தன் அரக்கர் குலக் கூட்டத்தைக் கூட்டி அவர்களிடம், அரக்கர் குலக் கொழுந்துகளே! நீங்கள் என் கட்டளைக்கு கீழ்ப்படிந்து உடனே செயலாற்றுங்கள். எனது தமையனின் இறப்பிற்கு காரணமான ஸ்ரீஹரியையும், தேவர்கள் அனைவரையும் அழிக்க வேண்டும். நீங்கள் உடனே புறப்பட்டுப்போய் அந்தணர்கள், தேவர்கள், பசுக்கள் முதலியவற்றை துன்புறுத்தி கொல்லுங்கள்என்றான். இரண்யகசிபுவின் கட்டளையை ஏற்றஅரக்கர்கள் நோன்பு, விரம் நோற்ற பெரியோர்களையும், அந்தணர்களையும் கொன்று குவித்தனர். யாராலும் வெல்வதற்கரிய வீரத்தைத் தான் பெற்றால் அன்றி ஸ்ரீஹரியை ஒழிக்க முடியாது என உணர்ந்தான். அழியாத ஆயுளையும் மூன்று உலகங்களையும் அடக்கி ஆளும் வல்லமையையும் வேண்டி பரமனை நோக்கித் தவம் செய்யப் புறப்பட்டான். மந்திரமலைச் சாரலுக்கு வந்தான். கால் கட்டை விரலைத் தரையிலே ஊன்றினான். கைகளை மேலே தூக்கினான். விண்ணுலகை நோக்கி நின்றான். ஊழிக்காலத்தில் காணும் சூரியனுடைய ஒளிக்கிரணங்களைப் போல செஞ்சடை விரியக் காட்சி அளித்தான்.உக்கிரமான தவத்தில் பிரம்மதேவனை நோக்கி ஏகாக்ரசித்தத்துடன் ஆழ்ந்தான். நாட்கள் நகர்ந்தன. வருடங்கள் பல ஓடின. இவனுடைய தவத்தால் எழுந்த யோகாக்னியின் தகிப்பை தாங்கமுடியாமல் சகல ஜீவராசிகளும்வருந்தின. தலையிலிருந்து மேகக்கூட்டம் போன்ற புகைமண்டலம் எழுந்தது. மூன்று உலகத்தையும் அது சூழ்ந்தது. ஆறுகளும், சமுத்திரங்களும் கொந்தளித்தன. திசைகள் எங்கும் ஒரே தீப்பொறி கக்கி அனல் எரிந்தது. தேவர்கள் அவனுடைய தவபலத்தினால் தாங்கள் பஸ்பமாகி விடுவோமோ என பயந்தனர். தேவர்கள் உடனே பிரம்மாவிடம் முறையிடச் சென்றனர். பிரம்மாவிடம், தேவ தேவே! உங்கள் பதவிக்கே ஆபத்து தரும் வகையில் இரண்யகசிபு தவம் மேற்கொண்டு இருக்கிறான். அவனது தவத்தால் உண்டாகும் அக்னியை எங்களால் தாங்கமுடியவில்லை. உடனே அவனது தவத்தை நிறுத்த ஏதாவது செய்யுங்கள் என்றனர். தேவர்கள் சொன்னதைக் கேட்ட பிரம்மா மந்திரமலைச் சாரலுக்கு வந்தார். அங்கே இரண்யகசிபு இருந்த இடத்தில் புற்றும், புதர்களும் மூடிக்கிடந்தன. எறும்பு அரித்த தோலும் சதையும் மிஞ்சி எலும்புக் கூடாக இருந்தான். அவனை இந்நிலையில் பார்த்து, இரண்யா! உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்! என்றார். அவன் மீது தன் கமண்டல தீர்த்தத்தை தெளித்தார். கட்டையில் மூண்ட தீயெனக் கசிபுவெளி வந்தான். உருக்கி வார்த்த பொன்மேனியுடன் பிரம்ம தேவனை வணங்கினான். லோக பிதாவே! உங்களுடைய சிருஷ்டி எதனாலும் எனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாது. அதுமட்டுமல்ல, எனக்கு உள்ளும் புறமும், பகலிலும் இரவிலும், விண்ணிலும் பூமியிலும், மரணம் ஏற்படக்கூடாது. எந்தவித ஆயுதங்களாலும் பிராணிகள், மனிதர், தேவர், அசுரர்களாலும் எனக்கு சாவு வரக்கூடாது. தேவர்களாலும் ஜெயிக்க முடியாதபடி நல்ல வல்லமையை, வீரத்தை எனக்குத் தாங்கள் தந்தருள வேண்டும். எனக்கு நிகர் நானாகத்தான் இருக்க வேண்டும். மூவுலகத்தையும் நானே கட்டி ஆள வேண்டும். லோக பாலகருள் தேவரீராகிய தாங்கள் அனுபவிக்கும் பெருமையை நான் அடைய வேண்டும்.யோகம், சமாதி, தவம் முதலியவற்றால் ஏற்படும் சக்திகள் அனைத்தும் எனக்கு வரச்செய்ய வேண்டும் என்று வரம் கேட்டான். பிரம்மாவும் வேறு வழியின்றி அவன் கேட்ட வரத்தைக் கொடுத்து விட்டு மறைந்தார். இரண்யகசிபுவுக்கு இப்படி ஒரு வரத்தை பிரம்மா கொடுத்துவிட்டாரே என தேவர்கள் அனைவரும் வருந்தினர். வரத்தைப் பெற்றுத் திரும்பிய இரண்யகசிபு தன் எண்ணத்தை உடனே நிறைவேற்றிக் கொண்டான். தேவலோகம் சென்று தேவேந்திரனை விரட்டினான். சொர்க்க லோகத்தையும் தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தான். தேவேந்திர சிம்மாசனம் ஏறி அமராவதி பட்டினத்து அரண்மனையில் வாசம் செய்தான். வேள்விகள் மூலம் வரும் அவிர்பாகம் முழுவதையும் அவனே கிரகித்துக் கொண்டான். மூவுலகையும் பல்லாண்டுகள் கொடுங்கோல் ஆட்சி செய்தான். அவனால் இழைக்கப்பட்ட தீமைகள், கொடுமைகளை பெருமாளிடம் சென்று தேவர்கள் முறையிட்டார்கள். காலம் காலமாக அனுபவித்த தேவர்களுடைய தியானத்தினால் ஸ்ரீமந் நாராயணன், அவர்களுக்கு அனுக்கிரஹம் செய்தார். விரைவிலேயே அவனை வதைப்பதாக அவர்களுக்கு அசரீரி மூலம் அறிவித்தார். இந்த அரக்கர்களின் அரக்கனாகிய இரண்யகசிபுவின் கொடுங்கோலாட்சியை நான் அறிவேன். அதற்கு ஆவன செய்கிறேன். கொஞ்சம் பொறுத்திருங்கள். எவன் தேவர்கள், பசுக்கள், வேதங்கள், வேதியர் ஆகியோர் மீதும் என்னிடமும் பகைமை தலைதூக்குமோ, அப்போதே அவன் அழிந்து போவான். இந்த அரக்க ராஜன் தன் மகன் பிரகலாதனைத் துன்புறுத்துவான். அப்போது நான் அவனைக் கொல்லச் சித்தமாவேன் என்றார். இரண்யகசிபுவிற்கு கிலாதன், பிரகலாதன், அனுகிலாதன், சமகிலாதன் என நான்கு புதல்வர்கள் பிறந்தனர். அவர்களில் பிரகலாதன் மட்டும் சிறந்த விஷ்ணு பக்தனாக எப்பொழுதும் ஸ்ரீமந் நாராயணனின் பெயரையே உச்சரித்துக் கொண்டிருந்தான்.அசுரகுரு சுக்ராச்சாரியாருக்கு சண்டன், அமர்க்கன் என இரண்டு பிள்ளைகள். இரண்யகசிபு அவர்களைத் தன் புதல்வர்களுக்கும் மற்றும் அரசியல் அதிகாரிகளுடைய குமாரர்களுக்கும் ஆசிரியராக இருந்து பணியாற்றச் செய்தான். ஒரு நாள் கசிபு தன் செல்வகுமாரனை மடியில் அமர்த்தி கொஞ்சி மகிழ்ந்தான். அது சமயம் குமாரா! நீ இத்தனை நாளும் என்ன கற்றாய்? அவற்றை எனக்குச் சொல் என்றான். அப்பா நான் கற்ற அனைத்தையும் எப்படிக் கூறுவது,ஏதாவது ஒரு கேள்வி கேளுங்கள் நான் பதில் கூறுகிறேன் என்றான். கசிபும் அவ்வாறே மனிதனுக்கு நலம் தருவது எது? என்று வினவினான். எவர் ஆசை, பற்று முதலியவைகளை அறவே விட்டு விட்டு அவைகள் எல்லாம் வெறும் மாயை, மாறாக ஸ்ரீஹரியே மெய்யான பொருள், அவர் திருவடியை சரணடைபவர்கள்பாக்கியம் பெற்றவர்கள் என்றான் பிரகலாதன். பரமவிரோதியான ஸ்ரீஹரியின் பெயரை உச்சரிக்கிறானே என சிறுவனை கடிந்து கொண்டு, அவனுக்கு பாடம் கற்பித்த ஆசிரியரை வரச்சொல்லுங்கள் என்றான். நாங்கள் பலமுறை என்னசொல்லிக் கொடுத்தாலும் காதில் போட்டுக் கொள்ளாமல், எல்லாம் ஸ்ரீஹரியின் செயல் என்று எங்கள் வார்த்தைகளை உதாசீனம் செய்தான். இதைத் தங்களிடம் எப்படிக் கூறுவது என்றே இத்தனை காலம் நாங்கள் தயங்கினோம் என்றார்கள். ஏதோஅந்தணர்கள் இவனுக்கு தவறாக கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள். மற்றபடி சின்னஞ்சிறு பிராயத்தினனாகிய இவனுக்கு இது தெரிய நியாயமில்லை. ஆகவே யாரும் அணுகாதபடி,இனித் தனிமையில் அமர்த்தி பாடம் கற்பியுங்கள் என்று அவன் ஆணையிட்டான். பின்பு பிரகலாதனின் அறிவுக்கூர்மையை பார்த்து அவனிடம் ஆசிரியர்கள் கேட்டார்கள். அப்பனே பிரகலாதா! மற்றவர் யாருக்கும் இல்லாத இந்த மாறான புத்தியை உனக்கு யார் கற்பித்தது? இல்லை உனக்கு தானாக வந்ததா? உண்மையைச் சொல் என்றனர். நான் என்றும், நீ என்றும் பிரித்துப் பார்க்கும் புத்தி வெறும் மாயை. அவன் அருளால் பேதம் என்பது வெறும் பொய், அவனே மெய் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். எனக்குக் கற்பித்தவன், கற்ற பொருள், கற்றதின் பயன் எல்லாம் அந்த ஸ்ரீ ஹரியே அவரைத் தவிர வேறில்லை! என்றான் பிரகலாதன். பிறகு அறம், பொருள், இன்பம் பற்றிப் பாடம் சொல்லிக் கொடுத்து விட்டு அவனது தந்தையிடம் அழைத்துச் சென்றனர். மீண்டும் கசிபு, பிரகலாதனிடம் பிரகலாதா! நீ படித்ததில் மிகவும் சிறப்பானஒன்றைச் சொல் கேட்கிறேன்! என்றான். அதற்கு பிரகலாதன் ஹரியின் கதைகளைக் கேட்க வேண்டும், அவன் லீலைகளை வாயாரப் பேச வேண்டும், ஹரி உருவத்தை நினைக்க வேண்டும், ஹரியின் சேவையே உத்தமம்.ஹரி பூஜையே சிறந்தது. காலம் முழுவதும் ஹரியைப் பின்பற்றவேண்டும் என்று ஹரியைப் புகழ்ந்து பேசினான். அந்தணர்களே! நீங்களே ஆசிரியர்களாக இருந்து இதைத் தான் கற்றுக் கொடுத்தீர்களா? என்று கடுமையான குரலில் கசிபு கர்ஜித்தான். ஆசிரியர்கள் நடுநடுங்கி, அரசே! நாங்கள் இதைக் கற்றுக் கொடுக்கவில்லை என்றனர். உடனே குருமுகமாக அன்றி இதை எல்லாம் நீ யாரிடம் கற்றாய்? என்றான் கசிபு. அதற்கு பிரகலாதன், தந்தையே உலக இன்பங்களில் ஆசைப்பட்டு உழல்பவர்களுக்கு யார் சொல்லியும் பக்தி வராது. தானாகவும் பக்தி ஏற்படாது. ஆனால் முற்றிலும் துறந்த தொண்டர்களுக்கே இறைவனை அறியும் பாக்கியம் கிடைக்கும் என்றான். இப்படி ஹரியின் நாமத்தையே உச்சரிக்கும் இந்தப்பிள்ளை எனக்குத் தேவையில்லை, இவனைக் கொன்றுவிடுங்கள் என்று ஆணையிட்டான். அவனை எப்படி எல்லாமோ கொல்ல முயன்றும் இரண்யனின் ஆட்களால் பிரகலாதனை ஒன்றும் செய்யமுடியவில்லை. உடனே தன் குலகுரு சுக்ராச்சாரியாரிடம் இதைப் பற்றிக் கேட்டே ஆகவேண்டும் என்ற முடிவோடு சிறுவனை ஆசிரியர்களிடம் ஒப்படைத்து விட்டு சுக்கிராச்சாரியாரிடம் சென்றான் இரண்யன். ஆசிரியர்கள் மிகவும் கண்டிப்புடன் அவனுக்கு அசுர தர்மங்களை உபதேசிக்க முயற்சித்தனர். அவனோ தன் சக மாணவர்களுடன் விளையாடச் சென்றான். பிரகலாதன் தன் சகாக்களுக்கு ஸ்ரீஹரியின் பெருமையையும், புகழையும் எடுத்துரைத்துக் கொண்டிருந்தான். அப்போது அந்த மாணவர்கள் பிரகலாதா! குருவிடம் உபதேசம் பெறாமல் இப்படி ஞானம் பேசும் அறிவு உனக்கு எப்படி வந்தது? என்று வினவினர். தோழர்களே! என் தந்தை பிரம்மாவைக் குறித்து அதீத பராக்கிரமும் அழியா வாழ்வும் வளமும் தேடி மகேந்திரகிரிச்சாரலில் உக்ர தவம் இயற்றினார். அது சமயம்அவருக்குப் பயந்து இருந்த தேவர்கள் தைரியத்தோடு தத்தம் இருப்பிடம் வந்து அசுரர்களை தாக்கினர். அசுரத்தலைவராகிய என் தந்தை இல்லாத காரணத்தால் அசுரர்கள் தேவர்களிடம் தோற்று ஓடினார்கள். இந்திரனோ அசுரேந்திர பட்டினத்தை சூறையாடினான். அது சமயம் கர்ப்பவதியாகிய என் தாயாரைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான். வழியில் நாரத மகரிஷி அவனை சந்திக்க நேர்ந்தது. இந்திரனே! நீ கர்ப்பவதியான பெண்ணை, அதிலும் நிராதரவான ஒரு பெண்ணை இப்படி வருத்துவது தகாது. மேலும் இவர் பிறர் ஒருவனுடைய மனைவி அல்லவா? என்று நாரதர் இந்திரனைக் கேட்டார். நாரதரை இந்திரன் வணங்கி, மகரிஷியே!அசுர மகிஷியான இவளுடைய கர்ப்பத்தில் தேவர்களை வதைக்கும் சிசு உருபெற்று வருகிறது. இவளுக்கு நான் தற்சமயம் எந்தக்கேடும் செய்யப் போவது இல்லை.அவள் கருத்தரித்த உடன் எனது எதிரியை முளையிலேயே கிள்ளி விட்டு இவளைப் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பேன் என்றான்.இந்திரனே! நீ நினைப்பது முற்றிலும் தவறு. இவள் கருவறையில் வளரும் சிசு அசுரகுலப் பிறப்பாக இருந்தாலும் அந்த சிசு சிறந்த பாகவத உத்தமனாக விளங்கப் போகிறான். ஸ்ரீஹரியிடம் அளவற்ற பக்தி கொண்டு அனைவராலும்போற்றப்படுவான். அவனால் உனக்கோ, தேவர்குலத்திற்கோ எந்தவிதத் தீங்கும் ஏற்படாது என்றார் நாரதர். இதைக் கேள்விப்பட்ட இந்திரன் மகிழ்ச்சி அடைந்தான். மேலும் நாரதரே! தங்கள் கருத்துப்படி இவளை பாதுகாப்புடன் அவளது இருப்பிடத்திற்கு அனுப்பி விடுகிறேன் என்று கூறி அவளது காலடியை தொட்டு வணங்கினான். அதன் பிறகு என் தாயாரை நாரதர் தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று ரட்சித்தார். என் தாய் கர்ப்பவதியாக இருந்ததால் அவளுக்கு தர்மங்களை உபதேசம் செய்தார். என் தந்தை தவம் முடிந்து திரும்பியதும் அவளை அனுப்பி வைத்தார். அச்சமயம் கேட்ட உபதேசங்களை என் தாயார், தந்தையின் மீதுள்ள பற்றுதலால் மறந்துவிட்டாள். ஆனால் கருவிலிருந்த நான் அவ்வுபதேசங்களை கேட்டேன். அதை மறக்கவில்லை. எனவே தான் நான் பிறக்கும்போதே ஸ்ரீமந் நாராயணனிடம் அளவற்ற பக்தியுடன் பிறந்தேன். எனவே தோழர்களே பிறப்பு, உருவாதல், வளர்தல், இளைத்தால், நசித்தல், இறப்பு முதலிய ஆறும் இந்த உடம்புக்கு மட்டும் உரியவை. ஆத்மாவிற்கு அல்ல என்பதை நீங்கள் மட்டுமே உணர வேண்டும். நாம் நம் பக்தியினால் மட்டுமே நாராயணனை சந்தோஷம் அடையச் செய்ய முடியும். தீயகுணங்களை விட்டுவிட்டு நாள்தோறும் ஹரிபஜனை செய்ய வேண்டும் என்று கூறினான். இப்படி பாடம் கேட்க வந்த பிள்ளைகளிடம் பிரகலாதன் ஹரி பஜனை செய்வதை அறிந்த ஆசிரியர்கள் இரண்யனிடம் சென்று கூறிவிட்டனர். கடும்கோபமடைந்த இரணியன் பிரகலாதனை இழுத்துக் கொண்டு வரும்படி ஆணையிட்டான். பிரகலாதன் வந்ததும் இடி முழங்குவது போல் கர்ஜித்தான்: மூன்று உலகங்களும் என் பெயர் சொன்னாலே நடுநடுங்குகிறது. சகல லோகங்களும் எனக்குள் அடங்கி கிடக்கின்றன. தேவாதி தேவர்கள் எல்லாம் என்னிடம் மதிப்புவைத்து என் பேச்சைக் கேட்டு நடக்கிறார்கள். அப்படி இருக்க பரமவிரோதியான ஸ்ரீஹரி என்னை விட எந்த விதத்தில் மேலானவன் ஆகிவிட்டான்? என்றான். அதற்கு பிரகலாதன் தந்தையை தலை தாழ்த்தி வணங்கியவாறு, தந்தையே! நீங்கள் லோகாதிபதி தான்.தேவர்களும் உங்களுக்குள் அடக்கம்தான். ஆனால் ஸ்ரீஹரி ஒருவரே அனைத்து ஜீவராசிகளிக்கும் ஆதியானவர். அவரே சிருஷ்டி, திதி, சம்ஹாரம் ஆகிய மூன்று தொழிலுக்கும் அதிபதி. அப்படியிருக்க அவரை விட தாங்கள் எந்த விதத்தில்உயர்ந்தவர் என்று சொல்ல முடியும். இதைக் கேட்டு கோபமடைந்த இரண்யன், மடப்பதரே! எங்கும் நிறைந்திருக்கும்உன் ஹரி இப்பொழுது எங்கே இருக்கிறார்? என்று வினவினான்.தந்தையே! அவர் சர்வவியாபி. அவர் இல்லாத இடமேயில்லை என்றான் பிரகலாதன். இதைக்கேட்டு கசிபு கடகடவென்று சிரித்தான். டேய் பிரகலாதா! உன்னால் பிரலாபிக்கப்படும் அந்த ஹரி எங்கும் இருக்கிறான் என்றாய் சரி. இப்பொழுது சொல் இதோ என் எதிரே இருக்கும் ஸ்தம்பத்தில் இருக்கிறானா? இல்லையா? அதைப் பார்ப்போம். இப்போதே நான்உன்னை தலை வேறாகவும், உடல் வேறாகவும் போகும்படி என் உடைவாளால் வெட்டி எறியப் போகிறேன். நீ சரண்புகுந்த அந்தஹரிநாராயணன் உன்னை வந்து காப்பாற்றட்டும், என்று பிரகலாதனை மிரட்டினான். தனது சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து எதிரே இருந்த அந்த தூணைக் குத்திவிட்டு தன் உடைவாளை ஓங்கியவாறு நின்றான். அப்போது அண்டமே பிளந்து விட்டது போன்ற ஓர் பேரரவம் அந்தத் தூணில் எழுந்தது. அவ்வோசை கேட்டு பிரம்ம தேவாதியர், அண்டங்களே அழிந்தது போல அஞ்சி நடுங்கினர். தன் மகனை வெட்டும் வெறியில் நின்ற அசுரேந்திரனுக்கு அப்பேரொலியின் காரணம்தெரியவில்லை. தன்னிடம் அளவிலா பக்திகொண்ட பாலகன் பிரகலாதனின் சொல்லை மெய்யாக்க பரந்தாமன் அந்தத் தூணைப் பிளந்து வெளிவந்தார். அவரது தோற்றத்தைக் கண்ட இரண்யகசிபு அதிர்ந்தான். இது என்ன தோற்றம்? இது மனித உருவிலுமில்லை, மிருக உருவிலுமில்லை. மனித சிங்கம் போல் தெரிகிறதே என நினைத்து திகைத்தான். நரசிம்ம மூர்த்தியாகஅவதாரம் எடுத்த ஸ்ரீமந் நாராயணன் தோற்றத்தைக் கண்ட இரண்யன் அச்சமுற்றான். அந்த நரசிம்ம மூர்த்தியின் தோற்றத்தை உற்று கவனித்தான். விண்ணை தொடுவது போன்ற நீண்டு வளர்ந்த நெடுமேனி, பிடறித் தலை மயிர்களால் தடித்த முகம், வீங்கிய கழுத்து, முகத்தில் உருக்கி வார்த்த பொன் போன்ற கண்கள், பெருமலைக் குலை போல திறந்திருக்கும் வாய், அதில் கோரைப் பற்கள், கூர்ந்த வாள் போல் தொங்கும் நாக்கு, தூக்கி நின்ற காதுகள், விரிந்த மார்பு, குறுகிய இடை, கூரிய ஆயுதம் போன்ற நீண்ட நகங்களுடன் கூடிய கைகள். யாரும் அருகே போகப் பயப்படும்படியான தோற்றம்.ஸ்ரீஹரியின் தோற்றத்தைக் கண்ட அசுரர்கள் நாலாபுறமும் ஓடினர். இதைக் கண்ட இரண்யன் தன்னைக் கொல்ல ஸ்ரீஹரி எடுத்த அவதாரமே இது என உணர்ந்தான். தன் கதையை கையில் ஏந்தி நரசிம்மரை எதிர்கொண்டு மோதினான். எனினும் கதையால்தன்னைப் புடைக்க வந்த கசிபுவை கைகளால் நரசிம்மர் பற்றினார். அவனைத் தன் தொடை மீது வைத்துக் கொண்டு கூர்ந்த தன் நீண்ட நகங்களால் இரண்யகசிபு உடலைக் கீறிக் கிழித்தார். ரத்தம் பீறிட்டுப் பாய்ந்தது. நரசிம்மருடையமுகம் அக்னி பிளம்பாக காணப்பட்டது. அவர் சிம்மாசனத்தில்அமர்ந்திருந்தாலும் அவரது உக்கிரமான கோபம் தணியவில்லை. நரசிம்ம மூர்த்தியின் அகோரத் தோற்றம் கண்டு அவரிடம் நெருங்கவே அனைவரும் அஞ்சினர். ஒவ்வொருவரும் அவருக்கு வந்தனம் செய்தனர். ஸ்ரீஹரியின் சீற்றம் குறையாததால் தேவர்கள் ஸ்ரீதேவியை அங்கு வரும்படி கேட்டுக் கொண்டார்கள். அன்னையும் வந்து அடங்காத கோபத்தைக் கண்டு அஞ்சினாள். அந்நேரம் பிரகலாதனிடம் பிரம்மா சொன்னார். அப்பா! பிரகலாதா! ஸ்ரீஹரிக்கு உன் தந்தை மீது கொண்ட கோபம் இன்னும் தணிந்ததாகத் தெரியவில்லை. நீ அவரருகே சென்று சாந்தப்படுத்து! என்றார். அவனும் அவ்வாறே மெல்ல மெல்ல நடந்து நரசிம்ம மூர்த்தியிடம் சென்றான். கை கூப்பினான். அவர் திருவடி தொட்டு தரையில் விழுந்து வணங்கினான். தன் பாதங்களைப் பிடித்த பிரகலாதனை பார்த்துஸ்ரீஹரி மனம் உருகினார். அவன் தலை மீது தன் தாமரைக்கரம் வைத்து வாழ்த்தினார். பெருமான் திருக்கரம் தீண்டியதும் அவனுக்கு மின்னல் என மெய்யறிவு பிறந்தது. மயிர் கூச்செரியத் தன் மனம் கசிந்து கண்ணீர் மல்கித் துதிபாடினான். அதுபோல பிரகலாதன் தான் அடைய விரும்பும் பதவியை அனைவருக்கும் அனுக்கிரகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை அனைவரும் பாராட்டினர். நரசிம்மரின் மனம் மகிழ்ந்தது. துதித்து நின்ற பாலகனிடம் உனக்கு வேண்டும் வரம் கேள் என்றார். அவனோ, என் மனதில் எந்தவித கோரிக்கையும் எழாமல் இருக்கும்படி தாங்கள் திருவருள் புரிய வேண்டும் என வேண்டினான். மனம் மகிழ்ந்து மாதவன், பிரகலாதனை அசுரேந்திரத்திற்கு அரசனாக இருக்கும்படி அனுக்கிரகித்தார். மேலும், நீ பிறந்த புண்ணியம் உன் தகப்பனோடு இருப்பத்தொரு மூதாதையரும் கடைத்தேறினர் என்று அருளிச் செய்தார். பிரகலாதன் தந்தைக்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளைச் செய்தான். பிரம்மாதி தேவர்கள் முன்னிலையில் முனிவர்கள் ஆசியுடன் சுக்கிராச்சாரியார் பிரகலாதனை அசுரேந்திரனாக முடி சூட்டினார்.
நரசிம்ம மூர்த்தியை தியானம் செய்பவர்கள் தம் பகைவர்களை எளிதில் வெல்ல முடியும். ஸ்ரீஹரியை அனுஷ்டிக்கிறவர்கள் மேன்மை அடையலாம்.
"ஸ்ரீ நரசிம்மர் திருவடிகளே சரணம் "