Sunday, 24 June 2018



ஜீவாத்மாக்கள் கரை சேர திவ்யப்ரபந்தம் அருளசெய்த
*ஶ்ரீமந்நாதமுனிகள் அவதார திருநட்சத்திரம்*
இன்று 25/06/2018


பிறந்த காலம் - கி.பி. 823 - கி.பி. 917
பிறந்த ஆண்டு - சோபக்ருத ஆண்டு
மாதம் - ஆனி
திருநட்சத்திரம் - அனுசம்
திதி - பௌர்ணமி (புதன் கிழமை)
இடம் - காட்டு மன்னார் கோயில் (வீரநாராயணபுரம்)
அம்சம் - சேனை முதலியாரின் படைத்தலைவர் கஜாநனர்.

நாதமுனிகள் யோகவித்தை தேவ கான இசை ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்

இவரது இயற்பெயர்திருவரங்க நாதன் ஆனால் இவர் சிறந்த யோகியாக இருந்ததால் இவரை திருவரங்க நாதமுனிகள் என்று அழைத்தனர்

அதுவே பிற்காலத்தில் மருவி நாதமுனிகள் ஆயிற்று

இவர் தம் குடும்பத்தாருடன் பல வட தேச திருத்தலங்களுக்குச் சென்று எம்பெருமானைத் தரிசித்ததோடல்லாமல் அவருக்குத் தாமே திருத்தொண்டும் புரிந்து கொண்டும் இருந்தார்

ஒரு நாள் காட்டுமன்னனார் கோயிலில் திருவருள் புரியும் எம்பிரான் நாதமுனிகள் கனவில் வந்து வீரநாராயணபுரத்திற்கே மீண்டும் வருமாறு அழைத்தார்

இறைவனின் திருவுள்ளப்படி வீரநாராயணபுரம் திரும்பிய நாதமுனிகள் காட்டுமன்னனார் கோயிலில் மலர் திருவிளக்கு கைங்கரியம் கோயில் நந்தவனப் பராமரிப்பு மடப்பள்ளி தளிகை என இறைத் தொண்டு கைங்கர்யம் செய்து வந்தார்

அவ்வாறு செய்து வருகையில் ஒருநாள் அக்கோயிலுக்கு புனிதயாத்திரை வந்த சில வைணவர்கள்

ஆராவமுதே அடியேனுடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்துகரைய உருக்குகின்ற நெடுமாலே சீரார்செந்நெல்கவரி வீசும் செழுநீர்த்திருக்குடந்தை ஏரார்கோலம் திகழக்கிடந்தாய் கண்டேன் எம்மானே

என்னும் திருவாய்மொழி பாசுரம் தொடங்கி

உழலையென்பின் பேய்ச்சிமுலையூடு அவளை உயிருண்டான் கழல்களவையே சரணாகக்கொண்ட குருகூர்ச்சடகோபன்
குழலின்மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
மழலைத்தீரவல்லார் காமர்மானேய நோக்கியர்க்கே

என்னும் பாசுரம் முடிய உள்ள பத்து பாடல்களையும் அவர்கள் பாடினார்

அவற்றைக் கேட்ட திருவரங்க நாதமுனிகள் அப்பாடல்களில் தன்னை மறந்தார்

அவர்களிடம் நீங்கள் கடைசியாகப் பாடிய பாட்டில் ஓராயிரத்துள் இப்பத்தும் என்று வருகிறதே அப்படியென்றால் உங்களுக்கு அந்த ஆயிரம் பாடல்களும் தெரியுமோ? என்று வினவினார்

அவர்களோ இல்லை சுவாமி எங்களுக்கு இந்த பத்து பாசுரம் மட்டுமே தெரியும் என்று பதிலளித்தனர்

அப்பாடலில் குருகூர்ச்சடகோபன் என்று வருவதால் அவர் திருக்குருகூர் சென்று விசாரித்தால் அவற்றைப் பற்றி அறிய இயலும் என்று திருக்குருகூர் சென்றார்

அங்கு எவரும் இதைப்பற்றி அறியவில்லை

இறுதியில் அவர்மதுரகவியாழ்வாரின் சீடனான பராங்குசதாசரை சந்தித்து அவரிடம் இதைப்பற்றி விசாரிக்கையில்

அவர் திருவாய்மொழியும் பிரபந்த பாடல்களும் சில காலம் முன்னமேயே மறைந்துவிட்டன

தம் குருவான மதுரகவியாழ்வார் தமக்களித்த கண்ணிநுண்சிறுத்தாம்பு என்னும் பிரபந்தம் மட்டும் தம்மிடம் இருப்பதாகவும்

அந்த பாசுரங்களை திருப்புளியாழ்வார் முன் பக்தியுடன் அமர்ந்து பன்னீராயிரம் முறை (12,000 முறை) ஓதினால் நம்மாழ்வார் நம்முன் தோன்றி வேண்டுவன அருளுவார் என்று முன்னோர் அனுசந்த்தித்தனர் என பதிலளித்தார்

அதைக்கேட்ட நாதமுனிகள் மிகுந்த உவகையுடன்

பராங்குசதாசரிடம் கண்ணிநுண்சிறுத்தாம்பு பாசுரங்களை உபதேசமாகப் பெற்று நேரே ஆழ்வாரின் திருப்புளியாழ்வாரிடம் சென்று நம்மாழ்வாரின் திருவடி முன் அமர்ந்து தியானம் புரிந்தார்

பன்னீராயிரம் முறை கண்ணிநுண்சிறுத்தாம்பு பிரபந்தத்தை ஒருமுகமாய் ஓதினார்

இதனால் அகம் மகிழ்ந்த ஆழ்வார்

அசரீரீயாய்த் தோன்றி நாதமுனிகளின் வேண்டுதலை வினவினார்

நாதமுனிகளும் திருவாய்மொழி பிரபந்த பாசுரங்களை அடியேனுக்கு அருளுமாறு வேண்டினார்

நம்மாழ்வார் நாதமுனிகளின் முன் தோன்றி திருவாய்மொழி பிரபந்த பாசுரங்களை மட்டுமல்லாது அரங்கநாதன் விஷயமான மற்ற பிரபந்தங்களையும் சேர்த்து அருளி நாலாயிரம் பிரபந்தங்களையும அவற்றின் ஆழ்பொருளையும அஷ்டாங்க யோக இரகசியங்களையும் அருளினார்

அவற்றைப் பெற்றபின்பும் அவர் யோகசமாதியிலேயே நிலைத்திருந்தார்

மீண்டும் காட்டு மன்னனார் பெருமாள அவரை திரும்ப வருமாறு அழைக்கவே மீண்டும் வீரநாராயணபுரம் புறப்பட்டார்

அங்கு அவர் தான் பெற்ற புதையலை அனைவரும் அறியச் செய்தார்

பிரபந்த பாசுரங்களை இனிய இராகம் தாளம் அமைத்தும் அதற்கேற்ற அபிநயம் பிடித்தும் அரங்கன் முன் ஆடினார் இவ்வாறு அரையர் சேவைக்கு வித்திட்டதோடு அல்லாமல் தம் வழிவந்தோரையும் தொடரச் செய்தார்

அரையர் சேவையை முதன்முதலில் தோற்றுவித்தவரும் இவரே

ஸ்ரீ வைணவ ஆச்சாரியப் பரம்பரையின் முதல் ஆச்சாரியரும் இவரே

*நாதமுனிகள்*வாழி*திருநாமம்*

ஆனிதனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே

ஆளவந்தார்க் உபதேசமருளிவைத்தான் வாழியே

பானு தெற்கிற்கண்டவன் சொல் பலவுரைத்தான் வாழியே

பராங்குசனார் சொல்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே

கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே

கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே

நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே

நலம்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஶ்ரீமந நாதமுனிகள் திருவடிகளே சரணம்

ராம் ராம் 🙏🙏🙏

Saturday, 23 June 2018

பேரும் புகழும் அருளும் பெரிய திருமஞ்சனம்

பேரும் புகழும் அருளும் பெரிய திருமஞ்சனம்!


‘ஜ்யேஷ்ட’ எனும் சொல்லுக்கு ‘பெரிய’ அல்லது ‘மூத்த’ என்று பொருள். நட்சத்திரங்களில் ‘கேட்டை’ எனும் நட்சத்திரம் ‘ஜ்யேஷ்டா’ என்று சம்ஸ்கிருத மொழியில் அழைக்கப்படுகிறது. 

ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில், நம்பெருமாளுக்கு நடைபெறும் சிறப்பு மிக்க பெரிய அபிஷேகமானது ‘ஜ்யேஷ்டாபிஷேகம்' என்னும் பெரிய திருமஞ்சனமாகும்.  வரும் ஆனி மாதம் 13-ம் நாள் (27.6.18), புதன் கிழமையன்று, பெரிய கோயிலில் அருளும் பெருமாளுக்குப் பெரிய திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

மிக அற்புதமான வைபவம் இது.

ஸ்ரீரங்கத்தில், பெரியபெருமாள் சந்நிதியில், ஆனித் திருமஞ்சனத்தன்று அதிகாலையில் காவிரி நீர் கொண்டு, நித்தியப்படி முதற்கால பூஜை மற்றும் பொங்கல் நிவேதனம் கண்டருளப்படும்.

தொடர்ந்து, அனைத்து மூர்த்திகளும் ‘திருவெண்ணாழி - திருப்பாற்கடல்' என்று போற்றப்படும் முதல் பிராகாரத்தில் ஏழு திரைகளுக்குப் பின்னால் எழுந்தருளச் செய்யப்படுவார்கள். பெரிய கோயில் முதல் பிராகாரம் திருப்பாற்கடலுக்கு நிகராகப் போற்றப்படுகிறது.

பட்டத்து யானை, சாமரங்கள், தங்கக் குடை முதலான மரியாதைகளுடன், 28 வெள்ளிக் குடங்கள் மற்றும் ஒரு தங்கக் குடத்தில் புனிதக் காவிரி தீர்த்தம் நிரப்பப்பட்டு, மேளதாளம் முழங்க ஊர்வலமாகக் கொண்டுவரப்படும்.

இந்தத் தங்கக் குடத்தின் எடை 12,515 வராகன் என்ற குறிப்பு உண்டு. இந்தக் குடமானது 1734-ம் வருடம் விஜய ரங்க சொக்கநாத நாயக்கர் என்ற மன்னரால் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தக் குடத்தின் மீது குடம் சில விவரங்கள் உள்ளன. அதாவது, இந்தக் குடத்தைப் பற்றிய தகவல்களும், ஒருமுறை இந்தக் குடம் களவு போக, பிறகு மீட்கப்பட்டு  செப்பனிடப்பட்ட விவரங்களும் தெலுங்கு லிபியில் பொறிக்கப் பட்டுள்ளன. எனவே, இந்த நிகழ்வுகள் யாவும் நாயக்கர்கள் காலத்திலேயே நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

காவிரியிலிருந்து புனித நீர் வருவதற்குள்ளாக நம்பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூமிதேவி ஆகியோரின் கவசங்கள் களையப்பெற்று, அவை உரிய மரியாதையுடன் சேனை முதலியாரின் சந்நிதிக்கு அருகிலுள்ள தொண்டைமான் மேட்டில் எழுந்தருளச் செய்யப்படும். அங்கே, அவற்றின் எடை முதலான விவரங்கள் சரிபார்க்கப்படும். 

மூலஸ்தானம் முழுவதும் சந்தனக் காப்பிடப் படும். பின்னர் திருவெண்ணாழி என்ற முதல் பிராகாரத்தில் எழுந்தருளிய உற்சவ மூர்த்தங் களுக்கு, பக்தர்கள் கொண்டு வந்து கொடுக்கும் பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேக திரவியங்கள், புண்யாஹ ஜலம் சேர்ப்பித்து, வேத கோஷம் முழங்க திருமஞ்சனம் செய்யப்படும்.

கவசங்களை அகற்றிய நிலையில், உற்சவ மூர்த்திகளின் சுயமான திருமேனிக்குச் செய் யப்படும் திருமஞ்சனம் ஏகாந்தமாக நடைபெறும் என்பதால், பக்தர்களால் சேவிக்க முடியாது.

ஆனால், நம்பெருமாளின் கவச ஹஸ்தமும், இரு பாதங்களும் பக்தர்கள் தலையில் சாற்றி ஆசீர்வதிக்கப்படும். மேலும், திருமஞ்சன தீர்த்தப் பிரசாதமும் பக்தர்களுக்குக் கிடைக்கும்.

அன்றைய தினமே ஸ்ரீரங்கநாதர் மூலவர் திருமேனி முழுவதும் புனுகு, அகில், சந்தனம் கொண்டு தயாரிக்கப்பட்ட தைலம் சாற்றப் படும். மேலும் பெருமாளின் திருமேனி, அவரின் திருமுகம் தவிர இதர அங்கங்களைச் சேவிக்கமுடியாதபடி திரையிடப்படும். 48 நாள்களுக்குப் பிறகே மூலவரின் திருமேனி முழுவதையும் நம்மால் தரிசிக்க முடியும். இது, மூலவரின் திருமேனி பாதுகாப்புக்காக ஏற்பட்ட ஒரு விசேஷ ஏற்பாடாகும்.

நம்பெருமாள், உபயநாச்சிமார் ஆகியோரின் கவசங்களின் எடை முதலான விவரங்கள் சரி பார்க்கப்பட்டு, ஏதேனும் பழுது ஏற்பட்டி ருந்தால் சரிசெய்யப்படும். புழக்கத்திலுள்ள மற்ற வட்டில்களும் பழுது நீக்கப்படும். இரவு ஒன்பது மணிக்கு மேல் நம்பெருமாள், உபய நாச்சிமார் திருமேனிகளுக்குக் கவசங்கள் அணிவிக்கப்பட்டு, மங்களஹாரத்தி நடை பெறும்.

திருமஞ்சனத்துக்கு அடுத்த நாள் ‘பெரிய திருப்பாவாடைத் தளிகை’ பெரிய பெருமாள் சந்நிதி வாசலில் சமர்ப்பிப்பார்கள். அந்தப் பிரசாதத்தில் பலாச்சுளை, வாழைப்பழம், மாங்காய், தேங்காய், நெய் ஆகியவற்றை அதிகமாகக் கலந்திருப்பார்கள். அத்துடன் சிறிதளவு உப்பும் சேர்ப்பார்கள். பெருமாளுக்கு ஆராதனைகள் மற்றும் நிவேத்தியம் செய்த பின், அதைப் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள்.

ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் நடைபெறும் திரு மஞ்சனத்தை பக்தர்களால் சேவிக்க முடியாவிட்டாலும், பகவானின் பாதக் கமலங்களை தலையில் தாங்கும் பாக்கியத்தைப் பெறுவதுடன், திருமஞ்சன தீர்த்தப் பிரசாதமும் பெற்று பெருமாளின் அருளுக்குப் பாத்திரர்கள் ஆகலாம். திருவரங் கனின் திருவருளால் பேரும் புகழும் மிக்க பெருவாழ்வு ஸித்திக்கட்டும்!

நன்றி சக்தி விகடன் 19/06/2018

ஸ்ரீசுதர்சன ஜயந்தி சிறப்புப் பகிர்வு 2018

மகாபாரதப் போரின் போக்கையே மாற்றிய கிருஷ்ணர் கை ஆயுதம்! -ஸ்ரீசுதர்சன ஜயந்தி சிறப்புப் பகிர்வு

.
ஸ்ரீசுதர்சனர், சக்கரத்தாழ்வார், ஹேதிராஜன், சுதர்சனாழ்வான், திருவாழியாழ்வான், திருமால் நேயன், சக்கர ராஜன், நேமி, திகிரி, ரதாங்கம் என்றெல்லாம் போற்றப்படுபவர் திருமாலின் திருக்கரத்தில் உள்ள ஸ்ரீசக்கரப் பெருமான். திருமாலின் பஞ்ச ஆயுதங்களில் முதன்மையான ஸ்ரீசக்கரத்தை ஆழ்வாராகவே எண்ணி வழிபடும் வழக்கம் வைணவத்தில் உள்ளது. எல்லா விஷ்ணு கோயில்களிலும் எட்டு அல்லது 16 திருக்கரங்களுடன் கம்பீரத் தோற்றத்துடன் அறுகோண சக்கரத்தில் சக்கரத்தாழ்வார் காட்சியளிப்பார். 32 திருக்கரங்கள் கொண்ட மகா சுதர்சனரையும் சில ஆலயங்களில் தரிசிக்கலாம்.
பெரும்பாலும், திருமாலின் வலக்கரத்தில் காட்சியருளும் ஸ்ரீசக்கரம், திருக்கோயிலூர் போன்ற சில தலங்களில் மட்டுமே இடக்கரத்தில் காட்சி தரும். திருமாலிருஞ்சோலை, திருக்கண்ணபுரம் போன்ற ஆலயங்களில் ஸ்ரீசக்கரத்தைப் பிரயோகிக்கும் நிலையில் திருமால் காட்சிதருகிறார். திருமாலுக்கு உறுதுணையாக சிஷ்ட பரிபாலன துஷ்ட நிக்கிரகத்துக்கு எப்போதும் துணையாக இருப்பவர் ஸ்ரீசுதர்சனர். `அனந்தன்’ எனப்படும் நாகம், ஸ்ரீகருடன், ஸ்ரீசுதர்சனம் ஆகிய இந்த மூவரும் திருமாலை ஒரு கணமும் நீங்காமல் எப்போதும் தொடர்ந்து சேவிக்கும் பக்தர்கள் என்று ஆன்மிக நூல்கள் கூறுகின்றன. ஸ்ரீசக்கரத்தின் பெருமைகளை சுக்ல யஜுர் வேதம் அநேக இடங்களில் புகழ்ந்து கூறுகின்றது. பவிஷ்யோத்தர புராணமும் இவரது பெருமைகளை பலவாறு ஆராதிக்கிறது.

ஆழ்வார்களில் மூத்தவர் என்று ஆராதிக்கப்படும் ஸ்ரீசுதர்சனர், `ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்தவர்’ என்று புராணங்கள் கூறுகின்றன. இதனால் இன்று அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் ஸ்ரீசுதர்சன ஜயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சுதர்சனர் என்றால் 'நல்வழி அருளுபவர்', `காண்பதற்கு இனியவர்' என்று புராண நூல்கள் கூறுகின்றன. சுதர்சனாஷ்டகத்தில், `ஸ்ரீசக்கரத்தாழ்வார் திருமாலுக்கு இணையானவர்’ என்று போற்றப்படுகிறார். ஷோடசாயுத ஸ்தோத்ரம் என்ற நூல் சுதர்சனரின் ஆயுதங்களை விளக்கிக் கூறுகிறது.
`ஷட்கோண சக்கரம்’ எனும் ஆறுகோணங்களின் மத்தியில் ஸ்ரீசுதர்சனர் வீற்றிருப்பதால், யந்திர வழிபாட்டின் முன்னோடியான இவரை வணங்கினால் சகல தோஷங்களும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. பதினாறு திருக்கரங்களில் சக்கரம், கத்தி, வேல், சங்கம், வில், பாசம், கலப்பை, அங்குசம், அக்னி, வஜ்ரம், கதை, உலக்கை, சூலம், மழு, ஈட்டி, தண்டு என சகல தெய்வங்களின் ஆயுதங்களையும் தாங்கி அருள்காட்சி அளிப்பார். ஜுவாலா கேசமும், மூன்று கண்களும் கொண்டு ருத்திர அம்சமாக இவர் விளங்குகிறார். இவருக்கென தனிச் சந்நிதி அமைந்திருப்பதே இவரின் மகிமையை எடுத்துச் சொல்லும். தீயவர்களுக்கு மறச்சக்கரமாகவும், நல்லவர்களுக்கு அறச்சக்கரமாகவும் விளங்குபவர். `உயிர்கள் மீண்டும், மீண்டும் பிறந்து பின்னர் இறப்பது என்ற உலக நியதி ஸ்ரீ சுதர்சனரை ஆதாரமாகக் கொண்டே நடக்கிறது’ என்று வேதங்கள் கூறுகின்றன. வைணவ விழாக்களில் அன்றாடம் காலை, மாலையில் இவர் எழுந்தருளிய பின்பே பெருமாள் புறப்பாடு நடைபெறும் நரசிம்ம அவதாரத்தில் இரணியனை  சம்ஹாரம் செய்ய நகங்களாக இருந்தவர் ஸ்ரீசுதர்சனர். திருமாலின் வாமன அவதாரத்தின்போது தானமளிக்க முன்வந்த மகாபலி மன்னரைத் தடுக்க கெண்டியில் வண்டுருவாக வந்த சுக்கிராச்சாரியாரின் கண்களைக் குத்தி பின்னமாக்கியவர் தர்ப்பை வடிவத்தில் இருந்த இவர்தான் என்று புராணம் கூறுகின்றது. ராமாவதாரத்தில் பரதனாக அவதரித்து பாதுகை சேவை புரிந்ததும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரே. மால்யவான், சுமாலி, சிசுபாலன், பௌண்டரக வாசுதேவன் போன்ற பல கொடியவர்களை அழித்தது இந்த சுதர்சன சக்கரம். முதலையின் வாயில் சிக்கிக்கொண்ட கஜேந்திரனைக் காக்க திருமால் சுதர்சன சக்கரத்தை ஏவியே அருள் செய்தார். மகாபாரதப் போரில் சூரியனை மறைத்து, போரின் போக்கையே மாற்றியதும் இந்த ஸ்ரீசக்கரம்தான். துர்வாசரின் செருக்கை அடக்கி அம்பரீசனைக் காத்ததும் இந்தத் திருமால்ஏவிய ஸ்ரீசக்கரம்தான். திருமழிசையாழ்வார் ஸ்ரீசுதர்சனரின் அம்சமாக அவதரித்தவர் என்று வணங்கப்படுகிறார். ஸ்ரீரங்கத்தில் காவிரியில் மூழ்கி காணாமல் போன ரங்கநாதரை மீட்க கூரநாராயண ஜீயர் என்பவர் சுதர்சன சதகம் பாடி மீட்டார். இந்தச் சதகத்தைப் பாடினால், எல்லாத் துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை சினத்தின் வடிவமாக இவர் கூறப்பட்டாலும் இவர் தீன தயாளன் என்றே பக்தர்களால் போற்றப்படுகிறார். இவரை வழிபடுவதால், எல்லாப் பிறவிகளிலும் செய்த பாவங்கள், தோஷங்கள், தீங்குகள், தீவினைகள், கெடுதிகள் நீங்கும். கடன் தொல்லை, துர்சக்திகளின் துன்பங்கள் யாவும் விலகும். மேலும் எதிரிகள் பயம் நீங்கி அமைதியும் ஆனந்தமும் சேர்ந்த வாழ்வு கிட்டும். சிவப்பு மலர்களால் ஸ்ரீசுதர்சனரை அர்ச்சித்து, ஸ்ரீசுதர்சன காயத்ரி மந்திரத்தை உச்சரித்து இவரது அருளைப் பெறலாம். ஸ்ரீசுதர்சனரை ஆராதிப்பவர்கள் மரண பயமின்றி வாழ்வாங்கு வாழ்வார்கள் என்கிறது புராணம். இன்று ஸ்ரீசுதர்சன ஜயந்தி நாளில் சுதர்சனப் பெருமாளை வணங்கி அவரது ஆசியைப் பெறலாம்

Sunday, 3 June 2018

ஜீயர் ஸ்வாமியின் திருநட்சத்திர வைபவம்

இராமானுசர் வார்த்தைகளை போதிப்பதோடு மட்டுமன்றி செயல்படுத்தி சாதித்துக்கொண்டிருக்கும் இராஜமன்னார்குடி ஸ்ரீமத் பரமஹம்சாத்யாதி  ஸ்ரீசெண்டலங்கார செண்பக மன்னார் சம்பத்குமார ராமானுஜ ஜீயர் ஸ்வாமியின் திருநட்சத்திர வைபவத்திற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கும்
Elangadu Srikannantemple