கடந்த வாரம் வைகுண்ட ஏகாதசி அன்று அரங்கனைச் சேவித்து, பரமபத வாசலையும் கடந்து ... மணல்வெளியில் காற்றாட சிறிது நேரம் அமர்ந்திருந்தேன்.
*"அதான் சொர்க்க வாசலை தாண்டியாச்சுல்ல.. சரி.. அப்போ வா போலாம்.."*
என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுப் பார்த்தேன்.
அவன்தான்... அந்தக் குட்டிக் கண்ணன் கள்ளச் சிரிப்போடு நின்று கொண்டிருந்தான்.
*'எங்க கூப்பிடற கண்ணா?'*
*"சொர்க்கத்துக்கு... அங்க போகணும்னுதானே இவ்ளோ நேரம் வரிசையில நின்னு கும்பல்ல முட்டி மோதி வந்த... அங்கதான் கூட்டிப்போறேன் வா..!"*
*'விளையாடாத கண்ணா.. எனக்குக் குடும்பம் இருக்கு... பிள்ளைங்க இருக்காங்க.. திடீர்னு இப்படி என்னைக் கூப்பிட்டா... நான் இல்லாம அவங்க என்ன பண்ணுவாங்க?'*
*"இந்த உலகத்தையே பார்த்துக்கிறவன் நான்.. உன் குடும்பத்தைப் பார்த்துக்க மாட்டனா?"*
*'எனக்குன்னு நிறைய கடமைகள் இருக்கு.. நீதானே சொல்லிருக்க.. கடமையை ஒழுங்கா செய்னு.. அப்புறம் இப்படி சொன்னா எப்படி?!'*
*"அப்போ கடமையை செய்யாம, எதுக்கு சொர்க்கத்துக்குப் போகணும்னு இங்க வந்து என்னைக் கேட்ட?? சாகவேணாம்.. ஆனா சொர்க்கம் மட்டும் வேணும்னா அது எப்படி? நீ பக்தியோட கேட்ட.. அதான் நானும் வந்தேன்.. இப்போ சாக்கு சொல்லாதே......வா போலாம்"*
*'பக்தியோட கேட்டது இன்னைக்கு போறதுக்கில்ல.. பின்னாடி வயசானப் புறம் கண்டிப்பா ஒருநாள் சாகத்தான் போறோம்.. அதுக்காக!'*
*"ஓ! எப்போ என்கிட்ட வரணும்கறதையும் நீதான் முடிவு பண்ணுவ... என்கிட்ட வர்றதுக்கு advance booking......... அதை வருஷா வருஷம் renewal வேற பண்ற.. ஆனா, இப்போ நானே வந்து கூப்பிட்டாலும் வரமாட்ட.. அப்படித்தானே..!!"* என்றான் கிண்டலாக!
*'அப்படிதான்! அதைத்தானே எல்லாரும் செய்றாங்க.. என்னை மட்டும் கிண்டல் பண்றியே!'*
*"உன்னை மட்டுமில்ல... எல்லாரையும் சேர்த்துதான் சொல்றேன்...... சரி, சில கேள்விகள் கேட்கறேன் ...........பதில் சொல்லு.."*
*'என்ன? கேளு!'*
*"சொர்க்கத்துக்குப் போகணுமா? பரமனின் பதத்தை அடையணுமா? எது வேணும்?"*
*'குழப்பாதே கண்ணா!'*
*"நான் குழப்பலை... நீங்கதான் குழம்பிப்போய் இருக்கீங்க.."*
*'அப்போ ரெண்டும் வேறயா?!'*
*"அது உன் எண்ணத்தைப் பொருத்தது!"*
*'அப்படின்னா??'*
*"பரமனின் பதத்தை அடைவதே சொர்க்கம்னு நினைக்கறது வேற.... பண்ணின பாவத்துக்கெல்லாம் எமகிங்கரர்கள் எண்ணை சட்டில போட்டு வேக வைச்சுடுவாங்களோன்ற பயத்தில, 'அய்யோ பகவானே மன்னிச்சு இந்திரன் இருக்க சொர்க்கபுரில சேர்த்துடு'ன்னு நினைக்கிறது வேற.."*
*'அப்போ சொர்க்கம் நரகமெல்லாம் நிஜமாவே இருக்கா??'*
*"அது உங்களுக்குத் தான் தெரியும்... நீங்கதானே கலர்கலரா செட் போட்டு புகை பறக்கவிட்டு நாலு பொண்ணுங்களை நாட்டியமாட விட்டு காட்டறீங்க.."*
*'அப்போ அதெல்லாம் எங்க கற்பனை...... நிஜமா ஒண்ணும் இல்லைனு சொல்றியா?'*
*"நான் என்ன சொல்லணுமோ, அதையெல்லாம் கீதைல ஏற்கனவே சொல்லிட்டேன். நீங்க அதைப் படிக்காம, உங்க இஷ்டத்துக்கு எதையோ கற்பனை பண்ணிட்டு அந்த கற்பனை உலகத்தை நிஜம்னு நம்பி வாழறீங்க..."*
*"உங்களுக்கு எது வசதியோ அதை மட்டும் எடுத்துக்கிட்டு மற்றதை விட்டுடறீங்க ..."*
*"ஆனா கஷ்டம் வந்தா மட்டும், 'கண்ணா, பெருமாளே.. உனக்கு கண்ணில்லையா, காதில்லையா'ன்னு என்னை திட்டறீங்க!!!"*
*'அப்போ இந்த விழா, பரமபத வாசல் தாண்டுறது இதெல்லாம் தேவையில்லை.. சொர்க்கம், நரகம் இதெல்லாம் பொய்னு சொல்றியா??'*
*"இல்லை.. இதெல்லாம் தேவைதான்!! ஆனா, நீங்க எதையும் உண்மையான அர்த்தம் புரிஞ்சு பண்லைன்னு சொல்றேன்.."*
*"இந்த உலகத்தில இருக்கிற நீங்க, பார்க்கிறது கேட்கிறது எல்லாமே நான்தான்... கடைசியில நீங்க வந்து சேரப்போறதும் என்கிட்டதான்..."*
*"இடையில நீ வாழற இந்த வாழ்க்கையில உன்னுடைய கர்மாவுக்கேற்ற பலனை அனுபவிச்சு, பின் என்கிட்ட வந்து சேரப்போற.. "*
*"அப்படி என்கிட்ட உன்னை சேர்க்கக்கூடிய பாதையில் நடக்கும்போது நீ பார்ப்பவைதான், அனுபவிப்பவைதான்.. சொர்க்கமும் நரகமும்..."*
*"நீ எதை அனுபவிக்கணும், பார்க்கணும்னு நீதான் தீர்மானம் செய்ற.. உன் கர்மாக்கள் மூலமாக.."*
*"நீ இறந்தபிறகு எங்கு போகணும்னு யோசிக்கறதை விட்டுட்டு, வாழும்போது எப்படி இருக்கணும்னு யோசி.."*
*"சொர்க்கமும் நரகமும் நீ வாழற வாழ்க்கைலதான் இருக்கு.. எங்கோ ஆகாயத்துல இல்லை.."*
*"வாழும்போதே சொர்க்கத்தை அடையும் வழியைதான் நான் கீதையில சொல்லிருக்கேன்..."*
*"அதைப் புரிந்து படி.. உன் எல்லா கேள்விகளுக்கும் அதில் விடையுண்டு.."*
*"அதை ஞாபகப் படுத்ததான் இந்த விழாக்கள்..."*
*"கீதையின்படி, தர்மத்தைப் போற்றி, கர்மத்தை நிறைவேற்றி வாழ்ந்தால்... சொர்க்கம் போன்ற வாழ்வை வாழ்ந்து இறுதியில் என் பதத்தை அடைவாய்..."*
*"உனக்கு நல்வழிகாட்ட பல அவதார ரூபங்களிலும் தோன்றினேன்..."*
*"உனக்கு வழி காண்பித்து பரமபத வாசலை முதலில் கடந்து உன்னை வழிநடத்துகிறேன்.. இதுதான் தத்துவம்!!!"*
*"ஆனால் இது புரியாமல் வருடா வருடம் ஒரு சடங்காக மட்டுமே நீங்கள் இதை செய்கிறீர்கள்.."*
*"பரமபத வாசலைக் கடக்கும்போது இந்த உண்மையை உணர்ந்து.. தன் தவறுகளை சரி செய்ய முடிவெடுத்து.. நான் காண்பித்த வழி பின்பற்ற முடிவெடுத்தவர் எத்தனை பேர்??"*
*"பெரும்பாலானவர்களைப் பொருத்த வரை, வாசலைக் கடந்தால் பண்ணின தப்பையெல்லாம் மன்னிச்சு சாமி சொர்க்கத்தில சேர்த்திடுவார்.."*
*"சிலருக்கு இது மற்றுமொரு சடங்கு.."*
மற்றும் சிலர்,
*'எல்லாரும் போறாங்க நானும் போறேன்!'*
இன்னும் சிலர்,
*'ஏகாதசி திருவிழா சமயத்தில தேவஸ்தான கடையில போடற தோசை சூப்பரா இருக்கும்.. அதோட புளியோதரை, கேசரி சாப்பிட்டுட்டு.. அப்படியே சொர்க்க வாசலையும் மிதிச்சு வைப்போம் ... போனா சொர்க்கம். இல்லாட்டி தோசையாவது கிடைச்சதே...!!!'*
அவ்வளவுதான்!!
*"உண்மையான அர்த்தம் புரிந்து செய்பவர் வெகு சிலரே..."*
*"இன்று உனக்குச் சொன்னேன்! நீ சிலருக்கு சொல்..."*
*"நீங்கள் என் குழந்தைகள்..."*
*"நீங்கள் சரியான வழி நடந்து என்னை வந்தடையும் வரை நான் வழி காட்டிக்கொண்டு தான் இருப்பேன்.."*.
*"உங்கள் கை பிடித்து அழைத்துச் செல்ல காத்திருக்கிறேன்..."*
*"நல்லபடியாக வந்து சேருங்கள்...!!"*
*"சொல்லிவிட்டுப் போய்விட்டான்.."*
ஆயிரங்கால் மண்டபத்தைக் கடந்து வெள்ளைக்கோபுர வாசலை நோக்கி நடந்தேன்.
*"நம்பெருமாள் அபயகரத்தோடு புன்னகையுடன் பக்தர்களுக்குச் சேவை சாதித்துக்கொண்டிருந்தார்!"*