1. குணசீலம் கோவிலில் நாம் வெளியில் இருந்து வாங்கிக்கொண்டு வரும் பூமாலைகளையோ, புஷ்பங்களையோ சார்த்துவதில்லை. அதேபோல் தான் குங்குமம் பிரசாதம். அங்கிருக்கும் நந்தவனத்தில் மலர்கின்ற பூக்கள் மட்டும் தான் ஸ்வாமிக்கு சமர்ப்பிக்கப்படும். நாம் புஷ்பம் சார்த்த விரும்பினால் திருக்கோவில் அலுவலகத்தில் பணம் செலுத்திவிட்டால் ஒருநாள் நம்முடைய கட்டளையின் பேரில் மாலை சார்த்தப்படும். குங்குமமும் அங்கேயே வாங்கித்தான் கொடுக்கவேண்டும். வெளியில் இருந்து கொண்டு வரும் குங்குமம், மஞ்சள் போன்றவற்றை நம்மிடமே கொடுத்து விடுகிறார்கள்.
கோவிலுக்கு வெளியே ஏகப்பட்ட பேர் “பூ வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கட்டாயப்படுத்துவார்கள். மற்ற கோவில்கள் போலல்லாது, இங்கே கோவில் வாசலிலேயே ”வெளியில் இருந்து வரும் புஷ்பங்கள் சார்த்தப்படமாட்டாது” என்ற போர்டு இருக்கும். அதைக் காண்பித்தாலும், “அதெல்லாம் சும்மா,,, நீங்க வாங்கிட்டு போங்க, போய்ட்டு வந்து பணம் கொடுங்கன்னு சொல்லிடுவாங்க. ஆனால் உள்ளே நிச்சயமாக சார்த்த மாட்டார்கள். அப்படியே ஒரு கூடையில் போட்டுவிட்டு வரவேண்டியதுதான். அங்கு போடாமல், வெளியில் வந்து திருப்பிக் கொடுத்தால், “பூவைத் திருப்பிக்கொடுக்காதீங்கம்மா, ஆகாது, வேற கோவிலுக்குப் போனீங்கன்னா அங்க சார்த்துங்களேன்னு செண்டிமெண்டா பேசுவாங்க”. ஆகவே ஞாபகம் வச்சுக்கோங்க.
2. அதேபோல் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில், நூலால் தொடுத்துத் தரப்படும் புஷ்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. நாரினால் தொடுத்திருக்க வேண்டும். பொடிக்கற்கண்டும் வாங்கிக்கொள்ள மாட்டார்கள். அங்கேயே கவுண்டரில் கற்கண்டு (பெரிய கற்கண்டு) விற்கும். அதை வாங்கித்தரலாம். ஆஞ்சநேயர் கோவில் மாத்திரமல்ல, அங்கே இருக்கும் லக்ஷ்மிநரசிம்மர் கோவிலிலும் ப்ளாஸ்டிக் கூடை, கவர்களில் கொண்டு வந்தால் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். நூலால் கட்டப்பட்ட பூக்களும் அலோ பண்ணமாட்டார்கள்.
3. திருச்சானூர் பத்மாவதி கோவில் வாசலில் அல்லிமலர்கள் நடுவே ஒரு ரோஜாவை செருகி தாயாருக்கு விசேஷம் . வாங்கிக்கொண்டு போங்க என ஒரு நூறு பேர் பின்னாடியே வருவார்கள். நிச்சயமாக அந்த பூக்களை சார்த்த மாட்டார்கள். நம்மிடமிருந்து வாங்கி அங்கே ஒரு கூடையில் போட்டு விடுவார்கள்,. மணம் மிகுந்த மலர்களான மல்லிகை, முல்லை, ரோஜா, செண்பகம், சம்பங்கி, தாமரை போன்றவைதான் சார்த்தப்படும்.
பல மாலைகளில் தற்போது சவுக்கம்புல் அல்லது மந்தார இலையை வைத்து கட்டிவிடுகிறார்கள்,. ஆரம்பகாலங்களில் கதம்பம் கட்டும்பொழுது தவனம் வைத்து கட்டுவார்கள். இப்போது அதற்கு பதில் கன்னாபின்னாவென்று இலைகளை வைத்துக்கட்டித்தருகிறார்கள். நிச்சயமாக புராதனமான எந்த பெருமாள் கோவிலிலும் அந்த மாலையை பெருமாளுக்குச் சார்த்தமாட்டார்கள். ஒன்று தூக்கிப்போட்டுவிடுவார்கள். இல்லை நம்மிடமே திருப்பித்தந்துவிடுவார்கள். நமக்குத்தான் மனசு கஷ்டமாகிவிடும். ஆகவே கூடுமானவரை மாலை வாங்கும்போது இதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
4. காளஹஸ்தி கோவிலில் வாசலிலேயே நவக்கிரக பரிகாரத் தட்டு என்று ஒன்றை நம் தலையில் கட்டிவிடுவார்கள். கபர்தார். ஏனென்றால் கோவில் உள்ளே நுழைந்தபின் தான், வாசலில் வாங்கும் பொருட்கள் ஏற்கமாட்டோம்னு போர்ட் இருக்கும். அங்கே கவுண்டரில் பணம் கட்டித்தான் வாங்கவேண்டும். அதேபோல் பரிகாரம் செய்வதற்கான டிக்கட்டும் அங்கேதான் விற்கப்படும். விஷயம் தெரியாமல் வெளி ஏஜெண்டுகளிடம் பணம் கொடுத்தோமேயானால், பரிகார பூஜை நடக்கும் இடத்திற்குச் சற்றுத்தள்ளி, ஒரு ஸ்க்ரீன் இருக்கும். அங்கே உட்கார வைத்து, அங்கு நடப்பதைப் பார்த்து பண்ணுங்கள் என்று சொல்லிவிடுவார்கள். என்னதான் பரிகார பூஜைக்கு பணம் கட்டினாலும், கடைசியில் தக்ஷிணை கேட்டு வருவார்கள். ஆகவே எப்போதும் உங்கள் பர்சில் பத்து இருபது ஐம்பது நூறு சில்லறை இருக்கட்டும்.
5. பெருமாளுக்குப் பொதுவாக செம்பருத்தி, நந்தியாவர்த்தம் மலர்களைச் சாற்றுவது வழக்கமில்லை. நம் வீடுகளில் பொதுவாக இந்த மலர்கள் அதிகம் பூக்கலாம். அகத்தில் விளைந்ததாயிற்றே என ஆசையோடு கொண்டுபோனாலும் அனுமதி கிடையாது. ஆகவே அம்பாள், சிவன் கோவில்களுக்கு இந்த மலர்களைக் கொண்டு போகலாம். பெருமாளுக்கு துளசிதளம் இருந்தால் அதை ஆய்ந்து எடுத்துக்கொண்டு செல்லுங்கள். அதி விசேஷம். அதேபோல் பெருமாள் கோவிலில் பெரும்பாலும் ஆரத்தி , நெய்விளக்கில் தான் ஏற்றுவார்கள். ஆகவே சிவன் கோவில்களுக்குச் செல்கையில் நல்லெண்ணையும், பெருமாளுக்கு நெய்யும் எடுத்துச் செல்லுதல் நல்லது.
6. ஸ்ரீபெரும்புதூரில் திருவாதிரை நாட்களில் தேங்காய் உடைக்க மாட்டார்கள். ஏனென்றால் அன்று ராமானுஜருடைய அவதார நாள் என்பதால் அவரைக் குழந்தையாக பாவிப்பது வழக்கம். தேங்காய் உடைக்கும் சப்தம் தொல்லையாக இருக்கும் என்பதால் அன்று தேங்காய் உடைக்க மாட்டார்கள்.
7. ரொம்ப அதிகம் புழக்கமில்லாத கோவில்களுக்குச் செல்கையில் தட்டுத்தட்டாக பாதாம் முந்திரி அவசியமில்லை. தளிகைக்குத் தேவையான அரிசியோ, விளக்கேற்ற எண்ணெயோ எடுத்துச் செல்லுங்கள். அதேபோல் கோவில் வரை சென்று வாசலில் விற்கும் வாடிப்போன பூக்களையோ, வதங்கிப் போன பழங்களையோ வாங்குவதற்கு பதில், ப்ளான் பண்ணிச் சென்றீர்கள் என்றால், நல்ல அருமையான மாலைகள், நல்ல பழங்கள் வாங்கிச் செல்லுங்கள், நிச்சயம் காரில் தான் செல்லப்போகிறீர்கள் என்றால் டிக்கியில் அதற்கு ஒரு இடம் ஒதுக்குவது கஷ்டமில்லை. அர்ச்சனை செய்ய உதிரிப்பூக்களும் வாங்கிக்கொண்டு போகலாம். அதே போல் க்ரூப்பாக செல்லும்போது, அதிக பொருளாதாரமில்லாத புராதன கோவில்களில் கைங்கர்யம் செய்பவர்களுக்கு நிச்சயமாக தட்டில் காணிக்கை போடுங்கள். கூட்டம் நிரம்பி வழியும் கோவில்களில் நாம் தராவிட்டாலும் அவர்களுக்கு எப்படியும் வருமானம் வந்துவிடும். ஒருவேளை உங்களிடம் கோவில் போன் நம்பர் இருந்தால், பெருமாளுக்கு வஸ்திரங்கள் தேவையென்றால் அதை வாங்கித்தரலாம்.
8. கோவில்களுக்கு செல்லும்போது அங்கு கொடுக்கப்படும் விபூதி குங்குமத்திற்கு உங்கள் பையில் சிறு கவர்களையோ, பேப்பரோ எடுத்துச் செல்லுங்கள். வீட்டில் கொண்டு வந்து நாம் இட்டுக்கொண்டது போக மிச்சத்தை நீரில் கரைத்து செடிகளில் சேர்க்கலாம்.
9. கோவில்களில் தீர்த்தம் வாங்கிக்கொள்ளும்போது, பலர் தாங்கள் தண்ணீரைக் குடித்துவிட்டு அந்த டிஸ்போசபிள் பாட்டிலை நீட்டுவார்கள். நிச்சயமாக பல கோவில்களில் அதில் தீர்த்தம் தரமாட்டார்கள். என்னதான் இருந்தாலும் அது எச்சில்தான். ஆகவே முடிந்தவர்கள் சிறு வெள்ளிக்கிண்ணமோ, டம்ளரோ கையில் வைத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் பித்தளை டம்ளரோ, கப்போ வைத்துக்கொண்டு அதில் வாங்கிக்கொள்ளுங்கள். பின்னர் உங்கள் வசதிப்படி பாட்டிலில் ஊற்றிக்கொள்ளலாம்.
முடிந்தவரை ப்ளாஸ்டிக் கவர்களைத் தவிருங்கள். மர கப்புகள், மரத்தட்டுகள் விற்கின்றன. ஆரம்பகாலங்களில் எல்லார் வீட்டிலும் நிச்சயமாக ஒரு எவர்சில்வர் பூக்கூடை இருக்கும். சிலர் பித்தளையில் வைத்திருப்பார்கள். அதில் தான் பூஜை சாமான்களை எடுத்துச் செல்வோம். இப்போது தூக்கிச் செல்ல அலுப்புப்பட்டு கவரில் வாங்குகிறோம். நம்மால் இயன்றது ஒரு சின்ன பித்தளைத்தட்டோ, மரத்தட்டோ, பிரம்புத்தட்டோ எடுத்துச் சென்று அதில் வைத்துக் கொடுக்கலாம்.
10. அதேபோல் பல கோவில்களில் சன்னிதிக்குள் ஊதுபத்தி ஏற்றமாட்டார்கள். ஆகவே கேட்டுக்கொண்டு வாங்கிக்கொடுங்கள். வாசலில் இருக்கும் கடையினர் எதையும் நமக்கு சொல்லமாட்டார்கள். அவர்களுக்கு வியாபாரம் ஆகவேண்டுமே…..
11. முக்கியமான ஒரு விஷயம். தற்காலத்தில் தீபம் ஏற்ற என்று பல எண்ணெய் விற்கின்றார்கள். வாசனைக்காக பல கெமிக்கல்கள் கலக்கப்படுகின்றன. அது எரியும்போது கெடுதல் தான். அது மட்டுமல்லாமல் சில தெய்வங்களுக்கு மட்டும் சில எண்ணெய்தான் ஏற்றவேண்டும். எல்லா எண்ணெய்களையும் கலந்து ஏற்றக்கூடாது. வாட்சப் வைத்தியர்கள் போல பலர் இன்ஸ்டண்ட் இன்பர்மேஷன் செண்டர்களாக இண்டர்நெட்டில் வலம் வந்து இஷ்டத்துக்கு இந்த எண்ணெயில் ஏற்றினால் அந்த நன்மை என்று கதை அளக்கிறார்கள். அதையெல்லாம் நம்பவேண்டும். ஆதிகாலத்தில் இருந்தே பெரும்பாலும் நெய்யும் நல்லெண்ணெயும் தான் நாம் விளக்கு ஏற்ற பயன்படுகிறோம். கன்னாபின்னாவென்று கண்ட எண்ணெயில் ஏற்றிவிட்டு, கஷ்டம் வந்தால் கடவுள் மேல் பழிபோட்டு விடுகின்றோம்.
12. நீங்கள் பிரசாதம் விநியோகம் செய்யபோகின்றீர்களா? பெரும்பாலான கோவில்களில் அவர்களே தொன்னை தருவதுண்டு. அப்படி இல்லையெனில் நீங்கள் கொஞ்சம் இலையோ தொன்னைகளோ வாங்கிச் சென்று அதில் விநியோகம் செய்யுங்கள். பல கோவில்களில் ப்ளாஸ்டிக் டிஸ்போசபிள் டம்ளரில் தருகின்ற வழக்கம் உண்டு. கூடுமானவரை தவிருங்கள்.
13. துளசிமாலைகள் பெருமாளுக்கு மட்டுமே சாற்றப்படும். ஆகவே அதைக் கவனத்தில் கொள்ளுங்கள். தாயாருக்கு தாமரை, மல்லிகை, முல்லை, சம்பங்கி, தவனம் போன்றவை அதி விஷேஷம். ஏகாதசி அன்று நெல்லிக்காய் மாலை பெருமாளுக்கு சாற்றுவது செல்வவளம் தரும். அதை நாரில் தான் கோர்க்கவேண்டும். சணலிலோ, கயிற்றிலோ கோர்க்கவேண்டாம்.
14. பலர் பழம் வாங்கிச்செல்வோம். பொதுவாக ஆப்பிள், மாதுளை, ஆரஞ்ச் போன்ற பழங்களில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பார்கள். அதை நகம்படாமல் எடுத்துவிட்டு அப்பழங்களை அலம்பி சமர்ப்பியுங்கள். அதேபோல் திராட்சை முதலானவற்றையும் அலம்பி எடுத்துச் செல்லுங்கள்.
15. ரொம்ப முக்கியமான வழக்கம். பலர் பிரசாதம் வாங்கியவுடன், அப்படியே அதை வாயில் வைத்து கடித்து உண்பார்கள். அதே கையோடு தீர்த்தம், சடாரியும் வாங்குவார்கள். அய்யா, அம்மா, கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். அது எச்சில்தான். ஆகவே பிரசாதம் வாங்கியவுடன், அதை இடதுகையில் மாற்றிக்கொண்டு வலது கையால் வாயில் எடுத்து போட்டு சாப்பிடுங்கள். கூடுமானவரை உங்கள் கை வாயில் படவேண்டாம். பிரசாதம் சாப்பிட்டதும் கைகளை அலம்பிக்கொள்ளுங்கள். தண்ணீர் இல்லையெனில் துணி கொண்டாவது கையை சுத்தமாக துடைத்துக்கொள்ளுங்கள்.
பதிவு :- பிராம்மணர்கள் முகநூல் பக்கம்